பார் முழுவதும் உண்மையும், அமைதியும், ஒற்றுமையும் ஓங்கி நிற்கவும், பாரதத்தை வாழ்விக்கவும் தன்னை முழுவதுமாகத் தத்தம் செய்த தியாகச் செம்மல் அண்ணல் காந்தியடிகளின் 150 ஆம் ஆண்டு விழா இன்று முதல் தொடங்குகிறது.
காந்தி நினைவு அறக்கட்டளையின் சார்பில் முன்னாள் கல்வியமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் காந்தி நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப் பெற்றன. மறுபதிப்பாக அருட்செல்வர் மகாலிங்கம் 1981-இல் இருபது தொகுதிகளாக வெளியிட்டு ஏறத்தாழ இருபத்திரெண்டாயிரம் பக்கங்களில் வெளிவந்தன.
தமிழ்நாட்டில் காந்தி, காந்தி காதை, காந்தி முன்னோடிகள் என்ற மூன்று நூல்களையும் சேர்த்து அவர் வெளியிட்டார். நூறு ஆண்டுகளுக்கு முன்னர், பண்டிதை அசலாம்பிகை அம்மையார் காந்தி புராணம் என்றே புனைந்துள்ளார். பாரதத்தில் தமிழகத்திற்குத்தான் அப்புகழ் வாய்த்தது. காந்தி பிள்ளைத் தமிழ் நூலை தமிழ்க்கடல் இராய.சொக்கலிங்கம் உருக்கமாக எழுதினார். தமிழ் மக்கள் உள்ளத்தில் காந்தியடிகள் சிறப்பான தனியிடம் பெற்றிருப்பதும் காந்தியடிகளும் தமிழகத்தைத் தனியாகப் போற்றிப் புகழ்ந்தது நமக்குப் பெருமிதமாகும்.
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்பதை ஒரு கட்டுரையாகத் தொடங்கி உரைநடைக் காவியமாகவே வழங்கினார் திரு.வி.க. உலகில் பல நாடுகளில் காந்தியடிகள் என்றால் இந்தியா என்று தான் நினைப்பார்கள். அவருடைய சிலைகள் ஆங்காங்கே அமைந்துள்ளன. ஐ.நா அவையே அக்டோபர் திங்கள் இரண்டாம் நாளை தன்னல மறுப்பின் கொள்கைக்குரிய உன்னத நாளாகப் போற்றி வருகிறது.
அமெரிக்காவில் அண்ணல் காந்தியடிகளின் சிலைகள் ஐந்து இடங்களில் உள்ளன. உலகின் பிற நாடுகளில் 11 சிலைகள் உள்ளன.
மார்ட்டின் லூதர் கிங் ஏசுநாதர் எனது ஆன்மிக வழிகாட்டி காந்தியண்ணல் எனது அரசியல் வழிகாட்டி என்று கூறினார். அண்ணல் காட்டிய வழியில் நடந்தார். சத்தியம், ஆன்ம பலம், பிறருக்குத் தீங்கிழைக்காமை, துணிவு ஆகிய நான்கு நல்லியல்புகளின் துணை கொண்டு நிறவெறியை எதிர்த்துப் போராடியது வரலாறு.
காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கத் தொண்டு தொடங்கிய காலத்திலேயே சத்தியாகிரகம் என்ற கொள்கை பிறந்துவிட்டது. சத்தியாகிரகம் என்னும் உண்மையை உறுதியாகத் தேடும் திண்மை உருவாயிற்று என்று காந்தியடிகளே எழுதினார். தங்கள் போராட்டத்தை அமைதியான எதிர்ப்பு என்றுதான் தொடக்கக் காலத்தில் கூறினார்.
பொருத்தமான ஒரு நல்ல பெயரை இப்போராட்ட முறைக்குக் கண்டுபிடித்துக் கூறும் வாசகருக்கு ஒரு சிறு பரிசு அளிக்கப்படும் என்று இந்தியன் ஒப்பீனியன் இதழில் அறிவித்தார். பலரிடமிருந்து கருத்துகள் வந்தன. இந்தப் போட்டியில் அவர் மகன் மனிலால் காந்தி கலந்து கொண்டார். காந்தியடிகளின் மகனாராகிய அவர் சத்கிரஹ என்ற சொல்லை எழுதியனுப்பினார். சத்கிரஹ என்பது ஒரு நல்ல திட்டத்தில் உறுதி என்று பொருள்படும். அச்சொல் காந்தியடிகளுக்குப் பிடித்தது. ஆனால் அவர் எதிர்பார்த்த முழுப்பொருளையும் அது கொண்டதாக இல்லை. அதை சத்தியாகிரகம் என்று திருத்தியமைத்தார். ஆக்கிரக என்றால் உறுதி. சத்தியாகிரகம் என்றால் உண்மையில் உறுதி என்று பொருள்படும்.
தொடக்கம் முதல் இறுதிவரையில் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தார். அவர் வாழ்வு முழுவதும் சத்தியச் சோதனையாகவே இருந்தது. தன் வரலாற்றுக்கும் சத்தியசோதனை என்று பெயரிட்டார்.
காந்தியடிகள் பிற சமயங்களையும் மதித்துப் போற்றித் தழுவிக் கொண்டார். காந்தி கண்ட ஈசனுக்கு அல்லா என்ற பெயரும் உண்டு. கடவுளே உண்மை என்று சொல்வதை விட்டு, உண்மையே கடவுள் என்று சொல்லி வருகின்றேன். என் மதத்தை இன்னும் நன்றாக விளக்குவதற்காகவே இவ்வாறு சொல்லி வருகின்றேன்.
இப்போது எனக்குக் கடவுளை விளக்க உண்மையைப் போல் வேறு எதுவும் அவ்வளவு பயன்படுவதில்லை. கடவுள் இல்லை என்று கூறப்படுவதை நாம் அறிவோம். ஆனால் உண்மை இல்லை என்று மறுக்கப்படுவதைக் காணோம் இதுவே காந்தியடிகள் கண்ட சமரசம் என்ற உண்மை வழிபாடாகும்.
காந்தியடிகளின் வாழ்க்கையில், இந்திய விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில், அஞ்சி நடுங்கிக் கலங்க வேண்டிய நிலைகள் பல அவருக்கு ஏற்பட்டன.
ஆனால். அருளுணர்வும் அஞ்சாமையும் காந்தியடிகளின் சிறப்பியல்புகளாக இருந்தன. அஞ்சுவதும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை என்ற மன உறுதியோடு நின்றார். அவர் எதிர்கொண்ட மரணத் தாக்குதல்கள் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் ஒன்பது. அனைத்தையும் துணிவோடும் மகிழ்வோடும் எதிர்கொண்டார்.
அரசியலையும் அருளியலையும் ஒன்றாகக் காந்தியடிகள் இணைத்ததைக் கண்டு பாரதியார் இழிபடு போர், கொலை தண்டம் பின்னியே கிடக்கும் அரசிய லதனிற் மன்னுயிர் போற்றும் மாட்சியைப் பிணித்திடத் துணிந்தனை, பெருமான் என முத்தாய்ப்பாகக் கூறி மகாத்மா நீ வாழ்க வாழ்க என்றார்.
உண்மை, தன்னல மறுப்பு, இன்னா செய்யாமை, ஈகம் எனத் தம்மைக் கரைத்துக் கொண்ட கருணைக் கடலை காந்தி என்று அழைத்து வருகிறோம். இன்று தொடங்கி ஓராண்டு முழுவதும் அண்ணலின் பிறந்த நாளை நடுவண் அரசு, சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாழ்க நீ எம்மான் !
கட்டுரையாளர்:
இயக்குநர்,
மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு அரசு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.