நீயும் வாழ்! பிறரையும் வாழவிடு!
சித்திரையே வருக! நலமும் வளமும் தருக! என்று போற்றும் இந்த மாதத்தில் மனித நேய மாண்புகள் செழித்தோங்க அறத் தொண்டாற்றிய பகவான் மகாவீரர் பிறந்த நாளைப் போற்றி நாடெங்கிலும் சமணர்கள்
சித்திரையே வருக! நலமும் வளமும் தருக! என்று போற்றும் இந்த மாதத்தில் மனித நேய மாண்புகள் செழித்தோங்க அறத் தொண்டாற்றிய பகவான் மகாவீரர் பிறந்த நாளைப் போற்றி நாடெங்கிலும் சமணர்கள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மனத்தாலும் சொல்லாலும் உடலாலும் ஒன்றுபட்டு நின்று எந்த உயிர்க்கும் தீங்கு செய்யாதிருத்தல் என்னும் அஹிம்சை நெறிக்கு மறுபெயரே சமணம். ஜைனம் என்றும் அழைக்கப் பெறும் சமணம், கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே இந்தியத் திருநாட்டில் தோன்றி, தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழகத்தில் வேரூன்றித் தழைத்திருந்தது.
எந்தக் கடவுளாலும் இவ்வுலகம் படைக்கப்படாதது என்ற கோட்பாட்டை சமணம் போதித்தது. உயிர்களுக்கு அப்பாற்பட்டு ஒரு தனிக் கடவுள் இல்லையென ஓங்கி ஒலித்த சமணம், ஒழுக்க நெறியும் முயற்சியும் தனி மனித உயர்வுக்குக் காரணமாக அமைகிறது என்ற அறிவியக்கக் கொள்கையை நிலைநாட்டி மனித மனங்களைச் செம்மைப்படுத்தும் நல்லறத் தொண்டினை மேற்கொண்டது. இதற்குச் சான்று பகரும் வகையில்,
நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் - தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் - நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும் - தன்னைத்
தலையாகச் செய்வானுந் தான்! என்ற நாலடியார்
பாடலும்,
தன்னைச் சிறுவனாகச் செய்வானும் தானே -
தன்னை இறைவனாகச் செய்வானும் தானே!
என்னும் அறநெறிச்சாரம் பாடலும் சமண இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை நம்மால் காண முடிகிறது.
இவ்வாறான அறிவியக்கக் கொள்கைக்கு, வரலாற்றுக்கும் எட்டாத காலத்தில் முதன்முதலில் வித்திட்ட சமணச் சான்றோன், ஆதிபகவன்!. இவருடைய இயற்பெயர் விருஷபதேவர். இவர் மனிதராகப் பிறந்து வாழ்ந்த அரச குலத்தவர். மனித குலம் கடைப்பிடித்தொழுக வேண்டிய இல்லறம், துறவறம் ஆகிய இரு அறங்களை இவர் வகுத்தார். பிறப்பினால் அனைவரும் ஒன்றே என்ற சமத்துவக் கொள்கையைப் போதித்தார்.
கி.மு.599 சித்திரைத் திங்களில் பிகாரைச் சேர்ந்த விதேக நாட்டை ஆண்டு வந்த சித்தார்த்த மகாராஜாவுக்கும் பிரியகாரிணி என்கிற திரிசலாதேவி என்னும் மகாராணிக்கும் மகனாக மகாவீரர் பிறந்தார். கருவிலேயே மதிஞானம் (ஐம்புலன்களால் அறியும் புலன் அறிவு), சுருத ஞானம், (நூல்களின் வாயிலாகப் பெறும் அறிவு), மனப்பர்ய ஞானம் (பிறர் மனதில் உள்ள உணர்ச்சிகளை அறிந்து கூறும் ஆற்றல்) ஆகிய மூவகை ஞானத்தை மகாவீரர் பெற்று இப்பூலகில் பிறந்ததாகவும், அத்தகைய தனித்துவமிக்க குணங்களோடு பிறந்த அவரின் பிறந்த நாளைக் கொண்டாட செளதர்மேந்திரன் உள்ளிட்ட பல தேவர்கள் வருகை புரிந்து அறிவிற் சிறந்த அப் பாலகனுக்கு, ஸ்ரீவர்த்தமானன், வீரசாமி என்னும் திருநாமங்களைச் சூட்டி வாழ்த்தி மகிழ்ந்தனர் என்றும் சமண புராணங்கள் கூறுகின்றன.
இவர் அரச குலத்தவர் என்பதால் அறநெறி போற்றி ஆட்சிக் கட்டிலையும் அலங்கரித்தார். இவர் ஆட்சிபுரிந்த காலத்தில் மக்களிடம் சமூக ஒழுக்கமும், பண்பு நலனும், நல்லற நெறியும் குறைந்து காணப்பட்டது. அவ்வாறான நிலை சமூகத்திற்குப் பெரும் தீங்கு விளைவித்து விடும் என்று கருதிய மகாவீரர், ஆதிபகவனின் (விருஷபதேவர்) கொள்கை வழிபோற்றி, அன்பு நெறியைப் போதிக்கும் அறத் தொண்டினை மேற்கொள்ள முடிவு செய்து துறவறம் பூண்டார்.
இவ்வாறு தவநெறி பூண்ட மகாவீரர், கொல்லாமை, பொய்யாமை, கள்ளுண்ணாமை, ஊன் உண்ணாமை, பிறன்மனை விரும்பாமை, மிகுபொருள் விரும்பாமை, பகுத்துண்டு வாழ்தல், சான்றோரை இகழாமை போன்ற நல்ல நெறிகளைக் கடைப்பிடித்து மனிதகுலம் வாழ்தல் வேண்டும் என ஒழுக்க நெறியினைப் போதித்தார்.
வேள்விக்கொலை, உயிர்பலி போன்ற மூட நம்பிக்கைகளை மக்கள் கைவிடவேண்டும் என்ற அகிம்சை நெறியை நாடெங்கிலும் பரப்பினார்.
மனித வாழ்க்கை வேற்றுமையுடன் தொடர்புடையது அல்ல என்பதைப் பகுத்தறிவின் துணை கொண்டு அணுகி, மனிதநேய மாண்பினை மக்கள் தங்கள் மனங்களிலே வளர்த்து நல்லறப் பாதையில் நடைபோட வேண்டும் என்றும், ஏற்றத் தாழ்வுகள் அற்று மனிதர் அனைவரும் ஓர் நிகரென வாழ்ந்து சமூகத்தைச் சமதர்ம சமுதாயமாகச் செதுக்கவேண்டும் என்ற தத்துவத்தை மக்கள் மனங்களிலே விதைத்தார்.
எந்த ஒரு ஜீவனும் துன்பத்தை விரும்பவில்லை. எனவே, உன் உயிரைப் போல் பிற உயிரையும் நேசி, பிற உயிர்களைக் கொல்லாதே, மனதளவில்கூட உயிர்களிடம் வெறுப்புணர்ச்சி கொள்ளாமல், நீயும் வாழ்! பிறரையும் வாழவிடு! எனும் கருத்தாழம் கொண்ட அகிம்சைக் கொள்கையைப் பகன்று மனித மனங்களைத் துப்புரவு செய்தார்.
சமணம் இல்லறத்தார்க்குப் பணித்துள்ள அன்னதானம் (கைம்மாறு கருதாமல் பசித்தோர்க்கு உணவளித்தல்) அபய தானம் (அடைக்கலம் அளித்தல்) மருந்து தானம், கல்விதானம் ஆகிய நான்கு தானங்களையும் இயலாதோரின் நல்வாழ்விற்கு அளித்து உதவ வேண்டிய கடமையில் இருந்து சற்றும் தவறுதல் கூடாது என்று போதித்தார்.
இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகிய நிலையாமைகளை மனதிற் கொண்டு, ஆசையால் நேரும் அழிவினைத் தவிர்த்து வாழ்தல் வேண்டும் எனும் பேரறத்தை வலியுறுத்தினார்.
மகாவீரர் இந்த மண்ணில் 72 ஆண்டுகள் வாழ்ந்து அறத்தொண்டு புரிந்து கி.மு.527-இல் பாவாபுரி நகரில் பரிநிர்வாணமென்னும் வீடு பேற்றை அடைந்தார். பேரறிவாளன் பகவான் மகாவீரரைப் போற்றிக் கொண்டாடும் இந்த மாதத்தில் மனித வாழ்வியல் அர்த்தப்பட, அவர் போதித்த நல்லறங்களை மனதில் கொண்டு அகிம்சை வழி நடப்போம்!