நடுப்பக்கக் கட்டுரைகள்

தேவை எரிசக்தி சிக்கனம்

என்.எஸ். சுகுமார்

அடுத்த  உலகப் போர் என்று வந்தால் அது தண்ணீருக்காகத்தான் மூளும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். அதனுடன் மற்றொரு போரும் ஏற்படக்கூடும் . அது பெட்ரோல், டீசல், நிலக்கரி தட்டுப்பாட்டால் ஏற்படும் போராகத்தான் இருக்கும் என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

மனித வாழ்க்கையில் எரிசக்தி இன்றியமையாததாகி விட்டது. ஒவ்வொரு மனிதனின்  வாழ்க்கையும், மின்சாரம், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிசக்தி ஆதாரங்களை வைத்தே நகர்கின்றன. ஒரு நாளின் 24 மணி நேர பயன்பாட்டிலும் எரிசக்தியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மனிதனின் முதல் தேவையான உணவுக்கு நிகராக எரிசக்தி விளங்கி வருகிறது. அடுத்த 50 ஆண்டுகளில் கடும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஆனால்,  உற்பத்தியைவிட அதிக அளவு எரிசக்தி செலவழிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொருளாதார பாதிப்பு, சூழல் சீர்கேடு உள்ளிட்டவற்றை எதிர்நோக்கும் நிலை உள்ளது. எனவே, எரிசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்தவும், சேமிக்கவும் வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 14-ஆம் தேதி தேசிய எரிசக்தி சேமிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எரிசக்தி ஆதாரங்கள் இன்றியமையாததாகிவிட்ட நிலையில், சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டாலும் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் முதலான அனைத்து இடங்களும் ஸ்தம்பித்து விடும் நிலை உள்ளது. மின்னாக்கி (ஜெனரேட்டர்) மூலம் தற்காலிக மின்சாரம் பெறும் வசதி இருந்தாலும், மின்னாக்கி இயங்க எரிசக்தியான டீசலின் தேவை உள்ளது.
இந்தியாவில் பெருமளவு மின் உற்பத்தி அனல் மின் நிலையங்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. அனல் மின் நிலையங்களில்மின் உற்பத்திக்கு நிலக்கரி முக்கிய ஆதாரமாக உள்ளது.

உலக அளவில் எரிசக்தி பயன்பாட்டில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. உலக எரிசக்தி ஆதாரங்களில் இந்தியா சுமார் ஒரு சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், உலக மக்கள் தொகையில் 16 சதவீதத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் தேவையில் 75 சதவீதம் இறக்குமதியையே இந்தியா நம்பியுள்ளது. இந்நிலையில், எரிசக்தியைக் குறைத்து பயன்படுத்துவது, எரிசக்தியை வீணாக்காமல் சேமிப்பது போன்றவற்றை மேற்கொள்வது எரிசக்தி தட்டுப்பாட்டையும், அவற்றுக்கான செலவையும் குறைக்க வழிவகுக்கும்.

சேமிக்கப்பட்ட எரிசக்தி, புதிய எரிசக்தியை உற்பத்தி செய்வதற்குச் சமம். ஒரு யூனிட் மின்சாரத்தைச் சேமித்தால் அது 2 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குச் சமம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், எரிசக்தியானது பல்வேறு வகைகளில் விரயம் செய்யப்பட்டு வருகிறது. எரிபொருள் அதிகளவில் விரயமாவதற்கு போக்குவரத்து நெரிசலும் முக்கியக் காரணமாக உள்ளது. தனிநபர் வாகனப் பயன்பாடு அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  முன்பு பெருநகரங்களில் மட்டும் இருந்து வந்த போக்குவரத்து நெரிசல், தற்போது சிறிய நகரங்களிலும் அதிகரித்து விட்டது. 

போக்குவரத்து நெரிசலாலேயே பெருமளவு எரிபொருள் இழப்பு ஏற்படுகிறது. நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் இழப்பானது, இறக்குமதியாகும் பெட்ரோலியப் பொருள்களில் கணிசமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மறைமுகமாகக் குறைந்து வருகிறது. அதேசமயம் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் எரிபொருளின் இழப்பானது, தனிநபரின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தனிநபர் வாகனப் பயன்பாட்டை போதிய அளவுக்குக் குறைத்துக் கொள்வது, பேருந்து, ரயில் பயணங்களை மேற்கொள்வது, குறைந்த தொலைவு பயணத்துக்கு சைக்கிள்களைப் பயன்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள முயற்சிக்கலாம். இதே போன்று வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேவையின்றி விளக்குகள் எரிவது, மின்விசிறிகள் இயங்குவது முதலானவற்றைத் தவிர்ப்பது போன்ற முயற்சிகளை மேற்கொள்வதால் கணிசமான அளவு எரிசக்தி சேமிக்கப்படும்.

மின்சார ரயில்களில் பயணிகள் குறைவாகச் செல்லும் பெட்டிகளில் தேவையின்றி அதிக அளவில் மின்விசிறிகள் இயங்குவதும், விளக்குகள் எரிவதும் தொடர்கதையாக உள்ளது. இவற்றை ரயில்களில் பயணம் செல்பவர்கள் கண்டு கொள்ளாமல் விழிப்புணர்வின்றி பயணிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. மின்சார ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பெருமளவு மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. எனவே அதைத் தவிர்க்கும் வகையில், அறிவிப்புகளும், விழிப்புணர்வு வாசகங்களையும் வைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்த மின் சக்தியில் எரியும் மின் விளக்குகள், வீட்டு உபயோகப் பொருள்கள், சூரிய சக்தியில் இயங்கும் வீட்டு உபயோகப் பொருள்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதும் எரிசக்தி சிக்கனத்துக்கு வழிவகுக்கும். நிலக்கரியை எரித்து மின் உற்பத்தி,  பெட்ரோலியப் பொருள்களின் பயன்பாடு போன்றவற்றிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவால் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
காற்று மாசு அதிகரிப்பதில் எரிசக்தி பயன்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. புவி வெப்பமயமாதலால்  கடல் மட்டம் உயரும் ஆபத்து உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், எரிசக்தி சேமிப்பை மேற்கொள்வது புவிவெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாக விளங்கும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வழிவகுக்கும்.

(இன்று தேசிய எரிசக்தி சேமிப்பு தினம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT