மனித வரலாற்றில் கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என்று வழங்கியதைப் போன்று, இன்று பாலிமர் காலம், அல்லது பாலிமர் யுகம் என்றால் அது மிகையில்லை.
மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பாலிமர் பன்கூறுப் பொருள்கள் பற்பல. கடைச்சாமான்கள் வாங்கும் பையாகவும், மினரல் தண்ணீர் பாட்டில்களாகவும் நம் கைக்கு வருகிறது பாலி எத்திலீன்; தண்ணீர்க் குழாய்கள், வாளிகள், கோப்பைகள், கழிவறைக் கதவுகள், மின்கம்பிப் காப்புறைகள், மேஜை, நாற்காலிகள் என வாழ்வோடு ஒட்டியே வருகிறது பி.வி.சி. எனப்படும் பாலி வினைல் குளோரைடு ; படுக்கை மெத்தையாக, செயற்கைப் பஞ்சாக உதவுகிறது பாலியூரித்தேன்; சட்டைத் துணியாக டெரிலீன் வடிவில் நம்மை நெருங்கி விட்டது பாலி எஸ்டர், குளிர்பதனப் பெட்டியில் தண்ணீர் பாட்டில்களாக, பாலி - கார்பனேட்டு; குளிர்பதனப் பெட்டிகளில் தெர்மோக்கோல் என்ற பெயரில் வெப்பத் தடுப்பு, காப்புக் கவசங்களாக வருவது பாலிஸ்டைரின் ; அடுப்படிதோறும் புழக்கத்தில் உள்ளது - செயற்கை வாணலி, தோசைக் கல் சட்டுவம், கரண்டி ஆகிய பல வடிவங்களிலான டெஃப்ளான் எனப்படும் பாலி டெட்ரா ஃபுளூரோ எத்திலீன்; நைலான் மற்றும் கெவ்லார் போன்ற பாலி அமைடுகள், செயற்கை ரப்பர் என எங்கும் எதிலும் பாலிமர்.
கிரேக்கத்தில் பாலி என்றால் பல என்று பொருள். மெரோஸ் என்றாலே கூறுகள் என்பது பொருள். அதாவது ஒரு மூலக்கூறு பல படிகளாகத் தொகுத்துப் பன்கூறுப் பொருள் ஆயிற்று. 1833- ஆம் ஆண்டு ஜான்ஸ் ஜேக்கப் பெர்சீலியஸ் என்ற வேதியியலார்இந்தக் கலைச்சொல்லை உருவாக்கினார் என்பது வரலாறு.
பாலிதின் 1932-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் இம்பீரியல் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் எம்.டபிள்யு. பெர்ரின் மற்றும் ஜே. சி. ஸ்வால்லோ ஆகியோரின் பரிசோதனையில் தயாரிக்கப்பட்டது.
1933-ஆம் ஆண்டு உல்ப் என்னும் ஜெர்மானியரால் பாலிஸ்டைரீன் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில், செல்லுலோஸ் என்னும் மரப் பொருளுடன் அசெட்டிக் அன்ஹைடிரைடு சேர்த்து 1869-ஆம் ஆண்டு செல்லுலோஸ் அசெட்டேட் தயாரித்தவர் பால் ஷூட் ùஸன்பெர்க்கர் என்னும் ஜெர்மானியர்.
இது வார்னிஷ், வர்ண பெயிண்ட்டுகள், பிளாஸ்டிக் மற்றும் புகைப்படத் தட்டு ஆகியவற்றில் கையாளப்படுகிறது. அசெட்டிக் அன்ஹைடிரைடு என்றால், அசெட்டிக் அமிலத்திலிருந்து நீரைப் பிரித்தால் பெறப்படும் அதன் நீரிலி மூலக்கூறு.
அது சரி. செல்லுலோஸ் அசெட்டேட் வேறு எதற்குப் பயன்படும் என்று தானே கேட்கிறீர்கள். ஒரு காலகட்டத்தில் பிரெஞ்சு நாட்டில் பட்டு ஜவுளித் துறை மோசமான நிலைக்குச் சென்று விட்டது.
காரணம், பட்டுப் புழுக்களுக்கு ஒருவிதக் கொள்ளை நோய். இனி பட்டு ஆடை தயாரிக்க என்ன வழி?
விஞ்ஞானி லூயி பாஸ்டர் அதற்கு மாற்றுப் பொருள் தேடிக் கொண்டிருந்தார். ஒருநாள் அவருடன் பணியாற்றிய ஹிலெயர் டி சார்தோன்னெட் என்னும் இளைஞர் புகைப்படம் கழுவும் இருட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தவறுதலாக கொல்லாடியான் (செல்லுலோஸ் நைட்ரேட் கலவை) கரைசல் புகைப்படத் தகட்டில் சிந்திவிட்டது.
சற்று நேரத்துக்குள் அதிலிருந்து ஆல்கஹால் முழுவதும் ஆவியாயிற்று. அந்தத் தட்டைத் துடைக்க முற்பட்ட இளம் விஞ்ஞானியின் கையில் பசை மாதிரி ஒட்டியது. அது இழை இழையாகப் பிரிந்தது. அதாவது, புதிய செயற்கை நூல்.
இந்த ஆராய்ச்சி ஆறு ஆண்டுகள் நீடித்தது. கடுமையாக உழைத்துச் செயற்கைப் பட்டு இழை தயாரித்தார் சார்தோன்னெட். பொதுவாக, பட்டுப் புழுக்களுக்கு உணவான மல்பரி இலைகளையே ஈத்தர், ஆல்கஹால் கரைசலில் இட்டு ஊற வைத்து நூல் இழை நெய்தார்.
இந்தப் புது இழை 1891-ஆம் ஆண்டு பாரீஸ் பொருட்காட்சியில் மக்கள் கவனத்தை ஈர்த்தது. பொருளாதார ரீதியிலும் ஆதரவு பெருகிற்று. எனினும், இது தீப்பற்றும் தன்மை கொண்டது. அதனால் நைட்ரேட் செயற்கைப் பட்டுக்கு மதிப்பு குறைந்தது. இதற்கு மாற்றாக அசெட்டேட் செயற்கைப் பட்டு பயன்படுத்தலாம் என்று கருதினார் சார்லஸ் கிராஸ் எனும் பிரெஞ்சு நிபுணர். தொடர்ந்து 1891-ஆம் ஆண்டு இவருடன் எட்வர்ட் ஜே. பீவான் என்னும் பிரிட்டன் நாட்டு விஞ்ஞானியும் இணைந்து இந்த செல்லுலோஸ் அசெட்டேட்டினை தொழிற்சாலையில் உற்பத்தி செய்தனர்.
1894-ஆம் ஆண்டு இதற்கான பதிவு உரிமமும் பெற்றனர். செயற்கை இழைகள் உற்பத்தித் தொடங்கியது. 1911-ஆம் ஆண்டு இது செயற்கைப் பட்டு என்ற அந்தஸ்தைப் பெற்றது. 1924-ஆம் ஆண்டு இதற்கு ரேயான் எனப் பெயர் சூட்டப்பட்டது.
பாலிமர் பசைப் பொருளுடன் சில வேதிமங்கள் சேர்த்து அதனைச் சற்றே கடினமானதும், நெகிழித் தன்மை உடையதுமாக வடிவமைத்திட நெகிழிகள் (பிளாஸ்டிக்குகள்) பிறக்கின்றன. பாலிமர் அல்லது ரப்பர் பொருள்களுக்கு ஒரு குறிப்பிட்ட விசை ஊட்டியதுமே, அதன் நீட்சித் திறன் வெளிப்படும்.
ஆனால், நெகிழிக்கு அந்த நீட்சித் திறன் வெளிப்படுவதற்குச் சற்றுக் கூடுதலான விசை செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஒரு குறித்த விசைக்குக் கூடுதலானால் மட்டுமே நெகிழி (பிளாஸ்டிக்) நெகிழ்ந்து கொடுக்கும்.
அதிலும், இன்றைக்கு நெகிழிப் பொருள்கள் என்றதும், பாலிதின் பைகள் மட்டுமே நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், நெகிழி (பிளாஸ்டிக்) என்பது, பலதர செயற்கைப் பாலிமர் பொருள்களின் பொதுப் பெயர். அவற்றில் நெகிழித் தன்மை உடையவை நெகிழி (பிளாஸ்டிக்) என்றாலும், இயற்கை ரப்பர் பாலில் இருந்து தயாரிக்கப்படும் வாகனச் சக்கரங்களின் டயர்கள்கூட ஒருவகையில் நெகிழிதான்.
நெகிழிப் பொருள்கள் இறுக்கமான அல்லது உறுதியான கலன்கள், பாண்டங்கள், பாத்திரங்களாகவும் இருக்கலாம். பிளாஸ்டிக் பொருள்கள், ரப்பர் வளையங்கள், மின் கம்பி உறைகள், சுவிட்சுகள், செல்லிடப்பேசி சார்ஜர்கள் (மின்னூட்டிகள்), குழல் மின்விளக்குத் தாங்கிகள், விசைப் பலகைகள் எனப் பல்வேறு அவதாரங்கள் எடுத்து வருகின்றன.
ஈரத் துணிகளை உலரப்போடும் கொடிக் கயிறுகள், கிளிப்புகள், காயப் போடும் நைலான், பாலி எஸ்டர் உடைகள், மழைக் கோட்டுகள், சட்டைத் துணிகள் என அனைத்தும் நெகிழி மயம்.
செயற்கைக்கோள்கள், கணிப்பொறிகள் எனப் பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்களில் நெகிழிகள் கையாளப்படுகின்றன. உந்து எரிபொருள்களில் இன்றைக்கும் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் பறந்து செல்லும் ஏவுகலன்களில் எரிபொருள்களும்கூட இதே நெகிழிகள் வகைதாம். அவை நெகிழிகளை விடச் சற்றே கூடுதலான நீட்சித் திறன் கொண்டவை.
அண்டவெளிக்குள் பறந்து செல்லும் நெகிழிகள் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால், அன்றாடம் கையாளும் மினரல் தண்ணீர்ப் பாட்டில்கள், பால் உறைகள், நெகிழி வாளிகள், நெகிழ்தன்மை கொண்ட பற்பசைக்கூடுகள் என எங்கும் எதிலும் நெகிழியின் ஆதிக்கம் பன்மடங்காகப் பெருகி வருகிறது என்பது உண்மை.
பிரம்மாண்ட அந்நிய முதலீட்டு மாளிகைக் கடைகளிலும், தெருவோர மளிகைக்கடைகளிலும், பெட்டிக் கடைகளிலும் பிரபல துணிக் கடைகளிலும், நெகிழிப் பொருள்களில் புழக்கம் அதிகமாகவே பரவி விட்டது. அவற்றின் தற்காலிகப் பயன்பாடுகள், பக்க விளைவுகள் ஒருபுறம் இருக்க, உடனுக்குடன் கழிவுப்பொருள்களாக வீசி எறியப்படும் நெகிழி குப்பைகளினால் எழும் பிரச்னைகள் குறித்து மட்டுமே இன்று விவாதிக்கப்பட்டு வருகின்றன.
பாலி எத்திலீன், பாலி புரொப்பைலீன் போன்ற நெகிழி தொடர்புடையவற்றை எரித்தால் கரியமில வாயுவும், நீராவியும்தாம் வெளிப்படும் என்பது உண்மை. ஆனால், நிலபுலன்களிலும், வயல்வெளிகளிலும் படிந்தால் பயிர்வளம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், மாதவிலக்கு நாள்களில் பெண்கள் பயன்படுத்தும் பொருள்கள், கைக் குழந்தைகளுக்கு உரிய உள்கழிவு ஏந்தும் உடுப்புகள் உள்பட எதில்தான் இல்லை நெகிழியின் ஆதிக்கம்? அவற்றில் இடம்பெறும் நீர் உறிஞ்சி ஜெல்கள் சோடியம் பாலி அக்ரிலேட்டுகள் ஆகும்.
ஸ்டார்ச்-அக்ரிலோ நைட்ரைல் இணைப் பாலிமரை நீரால் பகுத்திட்ட ஜெல், தனது கன அளவினைக் காட்டிலும் 30-60 மடங்கு நீரை உறிஞ்ச வல்லது. எடை அளவில் இது கிட்டத்தட்ட 300 மடங்கு . ஆனால், இந்த நீர் உறிஞ்சிக் கூழ்மப் பொருள்கள் காய்ச்சல், தோல் அரிப்பு, தடிப்பு, போன்ற தோல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
ஒரு கிலோ பாலி-அக்ரிலேட்டிலிருந்து 0.3 கிராம் அக்ரிலிக் அமிலம் வெளிப்பட்டால்கூட தோலில் அரிப்பு எடுக்கும்.
அதனால், மேலை நாடுகளில் 1980-ஆம் ஆண்டுகளில் பாலி-அக்ரிலேட் தடை செய்யப்பட்டு விட்ட நிலையில் இந்தியப் பெண்களும் குழந்தைகளும் பருவந்தோறும் இதனை உபயோகித்துத்தான் வருகின்றனர்.எனவே, வெளிப்படையாகத் தெரியும் எதிரியைக் காட்டிலும், அருகில் உறவு போல இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்சவேண்டும் என்று
எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.
வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
இந்த திருக்குறள் உட்பகைவருக்கு மட்டுமல்ல, இன்றைய பாலிமருக்கும் பொருந்தும்!
கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.