நமது புராணத்தில், அனுமன் கடலினைத் தாண்ட வேண்டிய ஒரு சூழல்; ஆனால் அவரோ, தயக்கம் காட்டுவார்; ஜாம்பவான் என்பவர், அனுமனிடம், நீ மேரு மலையினைவிடப் பெரும் சரீரம் எடுக்கும் திறமையும், மழைத் துளிகளுக்கு இடையே செல்லக்கூடிய சிறிய உரு எடுக்கும் திறமும் ஒருங்கே பெற்றவன்; இந்தப் பூமியையே தூக்கக் கூடிய வலிமையையும் சூரியனை நேராகச் சென்று தொடவல்ல ஆற்றலும் பெற்றவன் என்று அவரது திறமையையும் வலிமையையும் எடுத்துக் கூறி நம்பிக்கை ஊட்டி, கடலினைத் தாண்டச் செய்வார்.
நமது வாக்காளர்களிலும்கூட பெரும்பாலானோர் ஏறத்தாழ அந்த நிலையில் உள்ளதாகக் கருதலாம். அவர்களுக்குத் தங்களது வலிமையும் அவர்கள் வசமிருக்கும் வாக்குரிமையின் வலிமையும் சரிவரத் தெரியவில்லை என்றே கொள்ளலாம்.
தேர்தல் நெருங்கிவிட்ட இந்தத் தருணத்தில், எவரேனும் இருவர் சந்தித்துக் கொள்ளும்போது தங்களது தொகுதி நிலவரம் குறித்துப் பேசிக் கொள்வது இயற்கை.
அந்த சமயம், தங்களது பிரச்னைகள் மற்றும் பல தளங்களில் நிலவும் ஊழல், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் போன்ற பல விஷயங்களைப் பற்றிப் பேசித் தீர்த்து விட்டு, என்னதான் இருந்தாலும், சராசரி மனிதர்களின் எந்தப் பிரச்னைகளையும் தேர்தல்கள் தீர்க்காது என்ற ரீதியில் அவநம்பிக்கையோடு பேசிவிட்டுப் பிரிவது அவ்வப்போது காணக்கடிய ஒன்றாகும்.
தேர்தலில் ஒரு தொகுதியில் ஒருவரைத் தவிர மற்ற எல்லா வேட்பாளர்களும் தோல்வி அடைவது இயற்கை. ஆனால், இத்தகைய மனோபாவம் கொண்ட வாக்காளர்களும் தோற்று விடுகிறார்கள். அதிலும் விசித்திரமாக, இவர்கள் தேர்தலுக்கு முன்னரே தோற்று விடுகிறார்கள். அது மட்டுமல்ல, இந்த நம்பிக்கையற்றவர்கள், அவநம்பிக்கை என்னும் நச்சுக் காற்றுப் பரவுவதற்குக் காரணமாக உள்ளவர்கள் ஆவர்.
உண்மையில், மக்கள் எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கு அவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் வாக்குசீட்டுதான். இந்த வாக்குகள், தோட்டாக்களைவிட, அரசு அச்சடிக்கும் ரூபாய் நோட்டுக்களைவிட வலிமையானதும் பலம் வாய்ந்தனவும் ஆகும்.
மக்களுக்குத் தேவையான சட்டங்களை விவாதித்து இயற்றுவது, அவற்றைச் செயல்படுத்த வேண்டிய நிர்வாக இயந்திரத்தினை உருவாக்குவது, நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஒழுங்காகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்று கண்காணிப்பது, நிர்வாக இயந்திரத்தினை முடுக்கி விடுவது, வளர்ச்சித் திட்டங்களை வகுப்பது, செயல்படுத்துவது போன்ற எல்லா நல்ல விஷயங்களையும் செயல்படுத்தக்கூடிய, ஒழுங்குபடுத்தக்கூடிய பொறுப்பு மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளுக்கு இருக்கிறது.
அதற்கான திறன்மிக்கவர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வலிமை மக்களின் வாக்குகளுக்கு இருக்கிறது. வாக்காளர்களில் பலர், முழுமையாய் புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் ஒன்று உண்டு. அதாவது, வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பது அவர்களது பிரதிநிதிகளைத்தான்-எஜமானர்களை அல்ல என்பதுதான்.
ராமாயணத்தின் அனுமன் போல, பல வாக்காளர்கள் தங்களது வாக்குசீட்டின் வலிமை தெரியாது, அவநம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இந்த வாக்குகளின் மகத்துவம் புரியும்போது, வாக்காளர்கள் எவ்வளவு அதிகாரம் பெற்றவர்கள் என்ற புரிதல் ஏற்படும்.
இந்த நாடு கடந்த 70 ஆண்டுகளாகப் பல்வேறு தேர்தல்களைச் சந்தித்து விட்டது; ஒவ்வொரு சிற்றூரின் முக்கியப் பிரமுகர் சொல்படி, அந்த ஊர் மக்கள் வாக்களித்த காலம் ஒன்றிருந்தது . அதன் அடுத்தகட்டமாக அரசியல் கட்சிகள், பெரும் விளம்பரங்கள், மக்களிடையே நேரடியான பிரசாரங்கள் போன்றவற்றின் மூலம் தங்கள் சாதனைகள் அல்லது வாக்குறுதிகள் இவற்றை எடுத்துச் சொல்லி மக்களின் வாக்குகளைப் பெற்றன.
ஆனால், தற்போது கணிசமான வாக்குகளை, வாக்காளர்களின் பலவீனமான மனநிலையையும், எளிமையான பொருளாதாரப் பின்னணியினையும் பயன்படுத்தி, அவர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுத்து, அவர்களைத் தங்களுக்கு வாக்களிக்கச் செய்யும் முறை பரவி வருவதையும் மறுப்பதற்கில்லை.
பின்தங்கிய, வளர்ச்சியற்ற சில ஆப்பிரிக்க நாடுகளில் நிகழ்வதைப்போல, இங்கும் இவ்வாறு சிலர் வாக்குகளின் அருமை புரியாது, அதன் வலிமை தெரியாது, அதைப் பணத்துக்கு விற்பனை செய்யும் அவல நிலையை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு வாக்குகளுக்குப் பணம் பெறுவது என்பது, தங்களின் அடிப்படை உரிமையை விற்று விடுவதற்குச் சமமாகும். இந்த நாட்டின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு காணக்கூடிய ஒரே ஆயுதத்தை, வாக்குகளை பணத்துக்கு விற்பது என்பது அறியாமையின் உச்சம் என்றே சொல்ல வேண்டும் .
வாக்குகளை விலைக்கு நேரடிக் கொள்முதல் செய்யவோ அல்லது சாதி மத அடிப்படையில் வாக்கு வங்கிகளை உருவாக்கி விற்க முற்படும் முகவர்களையோ எந்தக் காரணத்தைக் கொண்டும் வாக்காளர்கள் அனுமதிக்கக் கூடாது. மேலும், வாக்காளர்கள் பணம் பெற மறுக்கும்போதுதான் திறமையானவர்களும், நேர்மையானவர்
களும் இன்னும் பெருமளவில் அரசியலில் ஈடுபடவும், தேர்தலில் போட்டியிடவும் முன்வருவர்.
சுதந்திரம் பெறுவதற்காக, பலர் தங்களது உயிரினைத் தியாகம் செய்தனர். பலர் தங்களது எதிர்காலத்தினை இழக்க முன்வந்தனர். ஏராளமானோர் சிறைத் தண்டனை ஏற்றனர். இவர்களுடைய அரும்பெரும் தியாகங்கள் மூலம் பெற்ற வாக்குரிமையினை பணத்துக்கு விற்கும் அவலம் கூடாது.
ஏழை மக்களில் சிலருக்கு, தங்கள் வீட்டுக்குத் தேடி வந்து பணம் கொடுக்கப்படும்போது, அதை மறுப்பதற்குரிய மனத் துணிவு இல்லாதிருக்கலாம். இவர்களுக்கு, வாக்குகளை விற்பதன் கேடுகளை எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்தி, என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற முடிவுக்கு வரச் செய்ய வேண்டிய சமுதாயப் பொறுப்பு ஒவ்வொரு நல்ல குடிமகனுக்கும் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.