நடுப்பக்கக் கட்டுரைகள்

கருப்பு ஞாயிறு...பின்னணி என்ன?

இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த புனித நாளான ஈஸ்டர் பண்டிகையை இலங்கையில் கிறிஸ்தவர்கள்  அண்மையில் (ஏப்.21ஞாயிற்றுக்கிழமை)

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்


இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த புனித நாளான ஈஸ்டர் பண்டிகையை இலங்கையில் கிறிஸ்தவர்கள்  அண்மையில் (ஏப்.21ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடியபோது, கொழும்பில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், கடலோர நகரமான நீர் கொழும்பிலுள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு நகரில் உள்ள புனித சியோன் தேவாலயம் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. பயங்கரவாதிகள் நிகழ்த்திய இந்தக் கொடூர சம்பவத்தில் 253 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தத் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த 42 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக இந்தியாவைச் சேர்ந்த 11 பேரும், சீனாவைச் சேர்ந்த 4 பேரும் பலியாகியுள்ளனர். உயிரிழந்த வெளிநாட்டவர்களில் 12 பேரின் உடல்களை இன்னமும் அடையாளம் காண முடியாத நிலை தொடர்கிறது.
தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு தேவாலயங்களில் பொது பிரார்த்தனைக் கூட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது நிலைமை சீரடைந்துள்ளதைத் தொடர்ந்து தேவாலயங்களில் பொதுப் பிரார்த்தனைக் கூட்டங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 3 பேரின் வீடுகளில் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) அண்மையில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று பாதுகாப்புத் துறை செயலர் ஹேமசிறீ பெர்னாண்டோ, இலங்கை காவல் துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தர ஆகியோர் ராஜிநாமா செய்துள்ளனர். குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக இந்தியா முன்கூட்டியே  எச்சரித்தும்கூட, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைஎடுக்காததால் அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவின் அடிப்படையில் இவர்கள் ராஜிநாமா செய்துள்ளனர். மேலும், குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு இலங்கையில் உள்ள தனது துணைத் தூதரகத்தை மூடிவிடலாமா என அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது.
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பாரீஸ் நகரின் ஈபிள் டவரில் நள்ளிரவு 12 மணிக்கு அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு பொதுமக்கள் அண்மையில் அஞ்சலி செலுத்தினர். இதற்கு முன்பு, பாரீசில் கடந்த 2017இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரிட்டன் மற்றும் ஈபிள் டவரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி. என்.கே.இலங்கக்கூன், சட்டம்ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மஸ்ரீ ஜெயமன்னே ஆகியோரைக் கொண்ட சிறப்புக் குழுவை  அதிபர் மைத்ரிபால சிறீசேனா அமைத்துள்ளார். இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையை விரைவில் அளிக்க வேண்டுமென்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா  உத்தரவிட்டுள்ளார்.
மற்றொரு சூழலில் வங்கக் கடலிலும், இந்தியப் பெருங்கடலிலும், மன்னார் வளைகுடாவிலும், பாக் ஜலசந்தியிலும் கச்சா எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இந்திய எல்லை வரை  ஆய்வுகள் நடத்துகின்றன. யாழ்ப்பாணம் முதல் திரிகோணமலை வழியாக மட்டகளப்பு கிழக்குக் கடலில் கச்சா எண்ணெய் வளம் குறித்து ஆய்வு செய்ய இலங்கை உரிமம் வழங்கியிருக்கிறது. கச்சா எண்ணெய் வளத்தை ஆய்வு செய்ய சீன கப்பல் நிறுவனத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அங்கு அமைந்துள்ள 13 எண்ணெய் கிணறுகளுக்குக்கூட காவிரிப் படுகை, மன்னார் படுகை என தமிழ்ப் பெயர்களே இலங்கையின் சர்வதேச ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
ஏற்கெனவே வர்த்தகப் பாதையை இந்தியப் பெருங்கடலில் பெருக்கிக் கொண்டும், ஹம்பன்தோட்டா துறைமுகத்தை நீண்டகால குத்தகைக்கு எடுத்துக் கொண்டும் தன் ஆதிக்கத்தை நித்தமும் சீனா நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் தென்கிழக்கு ஆசியாவின் புவியரசியலுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் நேரடி பாதுகாப்புக்கும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படலாம். எண்ணெய் வளம் அதிகமாக உள்ள இந்தக் கடற்பகுதிகளை அபகரிக்க மேலே குறிப்பிட்ட நாடுகளுக்குள்ளேயே போட்டிகள் உள்ளன.
இந்தியாவிடம் கலந்தாலோசிக்காமலேயே இந்தியப் பெருங்கடலிலும், வங்கக்கடலிலும் தன்னுடைய ஆதிக்கத் தொலைவை அதிகரிக்க வேண்டுமென்று இந்த நாடுகள் இலங்கையிடம் மனு அளித்து அவை நிலுவையில் உள்ளன. திரிகோணமலை துறைமுகத்தைக் கைப்பற்ற இந்த நாடுகள் மறைமுகமாகத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்தியாவுக்கு போர் அபாயம் எதிர்காலத்தில் வந்துவிடுமோ என்ற அச்சம்  ஏற்பட்டுள்ளது.


அதுமட்டுமல்லாமல் சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சியும் நடைபெறுகிறது. இதிலும் அவர்களிடையே போட்டிகள் கடுமையாக உள்ளன. ஜே.எஸ்.5, ஜே.எஸ்.6 என்று திரிகோணமலை பகுதியில் எண்ணெய் வளத்தை ஆக்கிரமிக்க நினைக்கும் அந்நியர்களின் வன்மம் எதிர்காலத்தில் எப்படி இருக்குமோ என்பது பெரிய வினாவாகும். 
ஏற்கெனவே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீகோகார்சியா தீவில் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளும் அதனருகே உள்ள மற்றொரு தீவில் பிரான்ஸ் போன்ற உலக நாடுகளும் தங்களுடைய ராணுவத் தளங்களை அமைக்கப் போட்டியிடுகின்றன. இலங்கையை பகடைக்காயாகப் பயன்படுத்தி கச்சத்தீவு வரை சீனா நெருங்கிவிட்டது. மாலத்தீவிலும் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இலங்கைக்கு  மிக அருகில் தமிழகம் உள்ளதையும் கருத்தில் கொண்டு இத்தகைய அந்நிய நாடுகளின் ஆதிக்கம் குறித்து இந்தியா கண்காணிப்புடன் இருப்பது அவசியம்.
ஈழத்தில் பிரச்னைகள் இன்னும் தீரவில்லை. ஈழ இறுதிப் போர் 2009இல் முடிவுற்றபோது, லட்சக்கணக்கில் தமிழர்கள் கொடுமையாகச் சாகடிக்கப்பட்ட துன்பியல் சம்பவத்தை இன்னும் மறக்க முடியவில்லை. இறுதிப்போரில் தமிழர்கள் மீது ஏவப்பட்ட இனஅழிப்பு, மனித உரிமை மீறலுக்காக சர்வதேச அளவிலான சுதந்திரமான புலனாய்வும், விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை. இந்த நீண்டகாலக் கோரிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையும் பாராமுகமாக இருக்கிறது.
இப்படி இலங்கையின் உள்நாட்டிலும் கலவரங்கள், குழப்பங்கள், மனித உயிர்கள் பலியாகும் கொடூரத் தாக்குதல்கள், மற்றொருபுறம் ஆதிக்க அந்நிய நாடுகளின் அத்துமீறிய அளவிலான கடல் அபகரிப்புகள் எல்லாம் வேதனை அளிக்கின்றன. இதனுடைய தாக்கம் எதிர்காலத்தில் இலங்கையை மட்டுமல்லாமல், இந்தியாவையும் பாதிக்காமல் இருக்க பன்னாட்டு அரசியலில்  கவனமாக காய்களை நகர்த்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.
இலங்கையில் மட்டுமல்ல, இப்படியான குண்டுவெடிப்புச் சம்பவங்கள் உலகில் எங்கும் நடக்கக் கூடாது. பிறந்தோம், வளர்ந்தோம், இயற்கையின் மண்ணில் மடிவதுதான் நடைமுறை. ஆனால், எதிர்பாராத இழப்புகள், சூழ்ச்சி, வஞ்சனைகளில் சாகடிப்புகள் என்பது இயற்கை நீதிக்கு மாறானது. பல்வேறு தேசிய இனங்களும், மொழிகளும், கலாசாரங்களும் கொண்ட பூமிப் பந்து உலகம். எனவே, உலக அளவில் ஒற்றுமை அவசியம்.

கட்டுரையாளர்:
வழக்குரைஞர்,
செய்தித் தொடர்பாளர், திமுக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT