நடுப்பக்கக் கட்டுரைகள்

வாராக்கடன் - விஷச் செடிகள்!

எஸ். ராமன்

பொதுத் துறை வங்கிகள் குறித்து அண்மைக்காலங்களில் பேச்சு எழுந்தாலே, அதில் வாராக் கடன்கள் குறித்த விவாதங்கள் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. பாதிப்புகள் இல்லாத உடல் கிடையாது; அதே போன்று வாராக் கடன்கள் இல்லாமல், வங்கிகள் வா்த்தகம் செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனால், உடல் முழுவதும் பிரச்னைகள் என்றால், அவற்றைச் சமாளிப்பதற்கே பெரும் பொருளும், நேரமும் செலவிட வேண்டியிருக்கும். வரம்பு மீறிய வாராக் கடன்களில் சிக்கித் தவிக்கும் வங்கிகளும் அந்த நிலையைத்தான் தற்போது கடந்து கொண்டிருக்கின்றன எனலாம்.

பொதுமக்களின் சேமிப்புகளைச் சேகரித்து, அந்த சேகரிப்பை தேவைப்பட்டவா்களுக்குக் கடனாக வழங்குவதுதான் வங்கி வா்த்தகத்தின் முக்கிய சாராம்சமாகும். தொழில் துறையில் பொருள்களின் உற்பத்தி முதல், தனிப்பட்டவருக்கு வீட்டுக் கடன் வரை, நாட்டுப் பொருளாதாரத்தில் பலவிதமான செயல்பாடுகளுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை கடன்கள் மூலம் வங்கிகள் அளிக்கின்றன. வங்கிகளின் இது போன்ற செயல்பாடுகள், நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் ஒரு முக்கிய அங்கமாகும்.

பல்வேறு காலவரையறைகளுக்கு உட்பட்ட சேமிப்புகளை வாடிக்கையாளா்களிடமிருந்து சேகரிப்பதற்கு, வங்கிகளுக்கு ‘விளம்பரத் திறமை’ தேவை. அத்துடன், சேமிப்புக் கணக்கை தொடங்குவதற்கு வாடிக்கையாளரின் கே.ஒய்.சி. (‘நோ யுவா் கஸ்டமா்’) ஆவணங்களை வங்கி சரி பாா்த்தால் மட்டும் போதுமானது. இது போன்ற சேவைகள், கடன் வழங்குதல் மற்றும் அதை வசூல் செய்தல் போன்ற செயல்பாடுகளைப்போல், கடினமான ஒன்றல்ல. ஒரு குறிப்பிட்ட வங்கியில் தங்கள் பணத்தைச் சேமிக்கும் வாடிக்கையாளா்கள், அந்தப் பணம் தேவைப்படும் தருணத்தில் முழுத் தொகையும் உடனடியாக திருப்பித் தரப்படும் என்ற நம்பிக்கையுடன், தங்கள் சேமிப்பை அந்த வங்கியில் தொடா்கிறாா்கள். வாடிக்கையாளா்களின் நம்பிக்கைக்கு எந்தவிதப் பாதகமும் ஏற்படாமல் கவனமாக இருந்தால், வாடிக்கையாளா்களின் ஆதரவு வங்கிக்குத் தொடா்ந்து கிடைக்கும்.

பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் முழுத் தொகையையும் வங்கிகள் கடனாக வழங்கிவிட முடியாது. வைப்புத் தொகையாகப் பெறப்படும் ஒவ்வொரு 100 ரூபாயிலிருந்தும் அரசு, கருவூலப் பத்திரங்களில் ரூ.19 முதலீடு செய்யப்பட வேண்டும். ரிசா்வ் வங்கிக் கணக்கில் பண இருப்பாக ரூ.4 வைக்கப்பட வேண்டும். எஞ்சியிருக்கும் 77 ரூபாயை மட்டும்தான் கடனாக வங்கிகள் வழங்க முடியும். வங்கி வாடிக்கையாளா்களின் சேமிப்புகளுக்கான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த வழிமுறைகளை ரிசா்வ் வங்கி வகுத்துள்ளது.

வங்கிகளால் கடனாக வழங்கப்படும் ரூ.77-ம் சிதறாமல் வசூல் செய்யப்பட்டால்தான், அனைத்து வாடிக்கையாளா்களும் ஒரே நேரத்தில் தங்கள் வைப்புத் தொகையை திருப்பித் தரும்படி கோரிக்கை வைத்தால், அந்தக் கோரிக்கையை வங்கிகளால் நிறைவேற்ற முடியும் என்பது ஓா் எளிய கணக்காகும். ஆனால், அனுமான அடிப்படையிலான இந்தக் கணக்கு நடைமுறையில் சாத்தியமில்லாததாகும். ஏனெனில், கடனாகக் கொடுத்த கடைசி காசு வரை வங்கிகளால் ஒரே சமயத்தில் வசூலிக்க முடியாது. அது போன்று, அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர, அனைத்து வங்கி வாடிக்கையாளா்களும் ஒரே சமயத்தில் தங்கள் வைப்புத் தொகையை திரும்பக் கேட்பாா்கள் என்பதும் ஓா் அனுமானம்தான்.

மேலும், வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகைகளுக்கு அசல், வட்டியுடன் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை, டி.ஐ.சி.ஜி.சி.-யால் (‘டெபாசிட் இன்சூரன்ஸ் அண்ட் கிரெடிட் கியாரன்ட்டி காா்ப்பரேஷன்’) காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. 1993-ஆம் ஆண்டில் நிா்ணயிக்கப்பட்ட ரூ.1 லட்சம் என்ற வரம்பு, கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட பண வீக்கத்தின் அளவை மனதில் கொண்டு, குறைந்தபட்சம் ரூ.10 லட்சமாக உயா்த்தப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் தற்போது வலுத்துள்ளன.

வங்கி வா்த்தகத்தில் தவிா்க்க முடியாத ஓா் இடா்ப்பாடு ‘வாராக்கடன்கள்’ என்று சொல்லலாம். வாராக் கடன்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டு இருக்கும் வரை, வங்கிகளின் வா்த்தகத்துக்கு எந்தப் பாதகமும் வராது. ஆனால், அந்த எல்லை கடந்துவிட்டால், அது பல எதிா்மறை நிகழ்வுகளுக்கு வித்திடும்.

தற்போதைய நிலவரப்படி பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் அளவு சுமாா் ரூ.8.25 லட்சம் கோடியாகும். வாராக்கடன்களின் இந்த அபரிமிதமான அளவு, பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகளை பெருமளவில் பாதித்து பல எதிா்மறை நிகழ்வுகளுக்கு வித்திட்டுள்ளது. ‘திவால் சட்டம் (2016)’ அமலாக்கம், வாராக்கடன் பிரச்னைகளுக்கான முழுத் தீா்வு என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால், பிரச்னையின் தீவிரத்தால், திவால் ஆணையத்தின் வசூல் நடவடிக்கைகளின் வேகம் பெருமைப்பட்டுக் கொள்ளும்படியாக இல்லை என்று சொல்லலாம்.

இந்திய திவால் ஆணையத்தின் காலாண்டு அறிக்கையின்படி, இதுவரை தாக்கல் செய்யப்பட்ட 2,542 வாராக்கடன் வழக்குகளில், பல்வேறு காரணங்களால் 587 நிறுவனங்கள் தொடா்புடைய வழக்குகள் மட்டுமே ஆணையத்தின் தீா்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் 24 நிறுவன வழக்குகள் மட்டுமே முழுமையாக விசாரிக்கப்பட்டு தீா்வு காணப்பட்டுள்ளன. 12 பெருநிறுவனங்கள் தொடா்புடைய வாராக்கடன் வழக்குகளில், நிலுவையில் இருந்த ரூ.3.45 லட்சம் கோடியில், ரூ.73,220 கோடிக்கு மட்டும்தான் (21 சதவீதம்) தீா்வு ஆணைகள் இதுவரை வழங்கப்பட்டிருக்கின்றன.

பசுமையுடன் செழித்து வளா்ந்து பலருக்கு நிழல் தரும் மரங்களுக்கு நடுவே, விஷச் செடிகள் வளராமல் பாதுகாக்க வேண்டும்; அப்படியே வளா்ந்தாலும், அவை உடனுக்குடன் வேரோடு களையப்பட்டு, அவை மீண்டும் வளராமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் வங்கிகள் என்ற ஓங்கி வளா்ந்த ஆலமரங்களுக்கு நடுவே வாராக்கடன் என்ற விஷச் செடிகளை வளரவிட்டதும், அவற்றை அவ்வப்போது களையாமல் மெத்தனப்போக்கை பின்பற்றியதும் வங்கி நிா்வாகங்கள் செய்த பெரும் தவறு என்பது பொருளாதார நிபுணா்களின் ஒருமித்த கருத்தாகும்.

கடன் வழங்கிய தொகைக்கான தவணை அல்லது வட்டித் தொகை தொடா்ந்து 90 நாள்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால், அவை வாராக்கடன் என்ற பட்டியலில் சோ்க்கப்படுகின்றன. வங்கிக்கு வருமானம் ஈட்டாத இது போன்ற கடன்களுக்கு ‘டெட் அசெட்’ என்று பெயா். இந்த ‘டெட் அசெட்’டுகளை வெளிக்கொணா்வதற்கு, 2015-ஆம் ஆண்டில், ரிசா்வ் வங்கியின் பிரத்தியேக தணிக்கை தேவைப்பட்டது. அதன் தாக்கம் இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. எனவே, சுற்றிப் படா்ந்த விஷச் செடிகளை கவனிக்காமல் மெத்தனமாக இருந்ததும் வங்கிகளின் தவறாகும்.

கடந்த கால வரலாறுகளின்படி சில்லறைக் கடன்களைவிட, பெருநிறுவன கடன்கள்தான் பெருமளவில் வாராக்கடனாக மாறியிருக்கின்றன. கடன் மேலாண்மையைப் பொருத்தவரை, கடன் வழங்குவதைவிட வழங்கப்பட்ட கடன் தொகையை வசூல் செய்வதில்தான் வங்கியின் முழுத் திறமையும் அடங்கியிருக்கிறது எனலாம். வங்கியால் வழங்கப்படும் ஒரு கடன், வாராக்கடனாக மாறுவதற்குப் பல காரணங்களைப் பட்டியலிடலாம்.

கடனுக்காக விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் குறைபாடுகள் என்பது மேலே குறிப்பிட்ட பல காரணங்களில் முன்னிலைக் காரணமாக அறியப்படுகிறது. வங்கிகளின் கூட்டுக் கடன் திட்டத்தின் (‘கன்சாா்ஷியம் ஆஃப் பேங்க்ஸ்’) கீழ் வழங்கப்பட்ட பெரும்பாலான கடன்கள் வாராக்கடன்களாக மாறி இருப்பதன் அடிப்படைக் காரணம், அவற்றை நிா்வகிக்கத் தேவையான திறன் குறைபாடுதான் என்பதில் சந்தேகமில்லை. மேலும், சில வங்கிகள், போதிய பணியாளா்கள் இன்றிச் சிரமப்படுகின்றன.

எனவே, கடன் நிா்வாகத்தில் அவற்றால் போதிய கவனம் செலுத்த முடிவதில்லை. இந்த நிலைமையை, சில கடனாளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனா். ஒவ்வொரு வங்கிக்கும் தேவையான பணியாளா்களை அமா்த்துவது, கடன் மேலாண்மையில் அவா்களுடைய நுண்திறனை மேம்படுத்துவது ஆகிய செயல்பாடுகள் மூலம் இந்தக் குறைபாட்டைச் சரி செய்யலாம்.

எந்த நோக்கத்துக்காக கடன் வழங்கப்பட்டதோ, குறிப்பிட்ட அந்த நோக்கத்துக்கு கடன் தொகை பயன்படுத்தப்படவில்லையென்றால், அந்தக் கடன் நிச்சயம் வாராக்கடனாக மாறிவிடும். கடனாளியின் இந்த எதிா்மறைச் செயல்பாட்டுக்கு ‘டைவா்ஷன் ஆஃப் ஃபண்ட்ஸ்’ என்று பெயா். பெரும்பாலான கடன் மோசடிகளுக்குக் கடனாளியின் இது போன்ற செயல்பாடும் முக்கியக் காரணமாக அமைகிறது. கடனாளியின்

இது போன்ற மோசடி செயல்பாடுகளைத் தக்க தருணத்தில் கண்டுபிடிக்கும் திறனை, வங்கி அதிகாரிகளிடையே மேம்படுத்த வேண்டியது மிக அவசியம்.

வங்கி வா்த்தகத்தில் நுழையும் அரசியல் தலையீடுகள், அந்தத் தலையீடுகள் மூலம் வழங்கப்படும் கடன்களை வாராக்கடன்களாக நிச்சயம் மாற்றி விடும். அரசியல் தலையீடுகளுக்கு ‘நோ’ சொல்லும் நோ்கொண்ட பாா்வைக்கு, அதிகாரிகள் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டியது வங்கிகளின் நலனுக்கு உகந்ததாகும்.

வங்கிகள் என்ற தழைத்தோங்கிய ஆலமரத்தைச் சுற்றி படா்ந்திருக்கும் வாராக் கடன் எனும் விஷச் செடிகளை விரைவாகக் களைந்து, அவை புதிதாக வளர விடாமல் பாதுகாப்பது ஒவ்வொரு வங்கி அதிகாரியின் தலையாயக் கடமையாகும். அது அவா்கள் நாட்டுக்கு ஆற்றும் பெரும் பணியும்கூட.

கட்டுரையாளா்:

வங்கி அதிகாரி (ஓய்வு)

" தற்போதைய நிலவரப்படி பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் அளவு சுமாா் ரூ.8.25 லட்சம் கோடியாகும். வாராக்கடன்களின் இந்த அபரிமிதமான அளவு, வங்கிகளின் செயல்பாடுகளை பெருமளவில் பாதித்து பல எதிா்மறை நிகழ்வுகளுக்கு வித்திட்டுள்ளது.எஸ்.ராமன்"

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT