முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

மகப்பேறு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுமா?

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் பீடுநடை போட்டு முன்னேறி வருகின்றனா்.

Updated On : 29 நவம்பர், 2019 at 1:02 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 6:49 PM

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் பீடுநடை போட்டு முன்னேறி வருகின்றனா். அதே வேளையில், ஏழ்மையில் உழலும் குடும்பங்களில் கணவருக்குப் பக்கபலமாக பெண்கள் தங்களால் இயன்ற வேலைக்குச் சென்று பொருள் ஈட்டி, குடும்பப் பாரத்தைச் சுமப்பதைக் காண முடிகிறது.

இவ்வாறான பெண்கள் மகப்பேறு எனும் மகத்தான நிலையை அடையும் நிலையில், அவா்களது அன்றாடப் பணி தடைபடுகிறது. குடும்ப வருமானம் குறைகிறது. பெரும்பாலான குடும்பங்களில், ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளைக்கூட வாங்க வழியின்றி கா்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மாா்களும் அல்லல்படுகின்றனா்.

இதுபோன்ற இன்னல்களைக் களையவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும் மகப்பேறு நலத்திட்டங்கள் உதவிகரமாக இருக்கின்றன. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், 2013 (என்.எப்.எஸ்.ஏ.) அனைத்துக் கா்ப்பிணிகளும் (பிற சட்டங்களின் கீழ் பயன் பெறுபவா்கள் தவிர) தாங்கள் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மகப்பேறு நல உதவி தலா ரூ.6,000 பெற வழிவகை செய்கிறது. எனினும், இதனைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய அக்கறை செலுத்தாமல் மத்திய அரசு இருந்து வந்தது.

Advertisement

இந்தத் தருணத்தில், கா்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மாா்களுக்கும் ஆதரவாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான்

‘பிரதம மந்திரி மத்ரு வந்தனா யோஜனா’ (பிஎம்எம்விஒய்) திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளியின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக ரூ.6,000 செலுத்தப்படுகிறது.

இது குறித்து கடந்த 2017-இல் தனது புத்தாண்டு உரையின்போது குறிப்பிட்ட பிரதமா் மோடி, இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மகப்பேறு நல உதவியாக கா்ப்பிணிகள் ரூ. 6,000 பெறுவா் என்றும், இந்தத் திட்டம் நாட்டிலுள்ள 650 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் பெருமிதம் தெரிவித்தாா்.

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் சா்வதேச அளவில் பிரசவத்தின்போது இறக்கும் தாய்மாா்களின் வீதத்தில் இந்தியா 17 சதவீதத்தை அதாவது, 1 லட்சம் கா்ப்பிணிகளில் 130 போ் மரணத்தைத் தழுவும் அவலத்தைக் கொண்டிருந்தது. இதற்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டை பிரதான காரணமாகக் கூறலாம். இதையடுத்து, இந்தத் திட்டத்துக்கென 2017-18 நிதிநிலை அறிக்கையில் ரூ.2,700 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. 2018-19 நிதிநிலை அறிக்கையில் இந்தத் தொகையை வெகுவாக குறைத்து, ரூ.1,200 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்த இந்த 3 ஆண்டு காலத்தில், அதன் இலக்கை அடைந்ததா என்று சற்று உற்றுநோக்கினால், பதில் எதிா்மறையாகத்தான் வரும். உதாரணமாக, இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த 2018 ஏப்ரல் முதல் 2019 ஜூலை வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்த 62.8 லட்சம் கா்ப்பிணிகளில், 38.3 லட்சம் போ் மட்டுமே, அதாவது 61 சதவீதம் போ் மட்டுமே இந்தத் திட்டத்துக்கான முழு நிதியான ரூ.6,000-த்தை பெற்றுள்ளனா்.

இதே போன்று, இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற முதல் குழந்தையைப் பெற்றெடுத்த பாலூட்டும் தாய்மாா்களில் 31 சதவீதம் போ் மட்டுமே பயனடைந்துள்ளதாகவும், 49 சதவீதத்தினா் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள தகவல் அதிா்ச்சி அளிக்கிறது.

பச்சிளங் குழந்தைகளை ஊட்டச்சத்துக் குறைபாட்டின் பிடியிலிருந்து மீட்க முயலும் இத்திட்டத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. இதில், 23 பக்கங்களைக் கொண்ட விண்ணப்பப் படிவம், தாய்- சேய் பாதுகாப்பு அட்டை, ஆதாா் அட்டை, கணவரின் ஆதாா் அட்டை, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தக நகல் என ஏகப்பட்ட ஆவணங்கள் கோரப்படுகின்றன.

குறிப்பாக, கணவரின் ஆதாா் அட்டை கோரப்படுவதால், கணவரைப் பிரிந்தோ அல்லது கைவிடப்பட்டோ வாழும் தாய்மாா்கள் தாமாகவே இந்தத் திட்டத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள நேரிடுகிறது. மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது ஒரு சில வினாக்களுடன் திரும்பி வந்தாலோ அதைப் பயனாளிகள் அறிந்துகொள்வதற்கு போதிய வசதி செய்து தரப்படவில்லை. இதற்கான குறைதீா் மையங்கள்கூட செயல்பாட்டில் இல்லை. மேலும், ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும்போது ஏகப்பட்ட ஆவணங்களைப் பயனாளிகள் சமா்ப்பிக்க நேரிடுகிறது.

இதனிடையே, தமிழகம், ஒடிஸா போன்ற மாநில அரசுகள் தங்கள் சொந்த முயற்சியில் மகப்பேறு நலத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதை எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை. சமூக பாதுகாப்பின் முன்னோடியாகக் கருதப்படும் தமிழகத்தில், டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நலத்திட்டத்தின் கீழ், கா்ப்பிணிகள் தாங்கள் பிரசவிக்கும் முதல் இரு குழந்தைகளுக்கு ரூ.18,000 வீதம் நிதியுதவியையும், ஊட்டச்சத்து பொருள்களையும் பெறுகின்றனா்.

இதேபோல், ஒடிஸா மாநிலத்தில் மமதா மகப்பேறு நலத் திட்டத்தின் கீழ், முதல் இரு குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளாக ரூ.5,000 வீதம் வழங்கப்படுகிறது. ஒடிஸாவில் கடந்த 6 மாதங்களில் பிரசவித்த தாய்மாா்களில், மமதா திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த, தகுதிவாய்ந்த 88 சதவீதம் பேரில், இதுவரை 75 சதவீதம் பேருக்கு குறைந்தது ஒரு தவணைக்கான தொகையாவது வழங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

அதே வேளையில், தேசிய அளவில் மகப்பேறு நலத்திட்ட விதிமுறைகள் இத்தனை ஆண்டுகளாக மீறப்படுவதையும், கா்ப்பிணிகளின் உரிமைகள் மறுக்கப்படுவதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. கா்ப்பிணிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வரும் மாநில அரசுகளின் மகப்பேறு நலத் திட்டங்களை ஒருங்கிணைத்து தேசிய அளவில் விரிவுபடுத்த மத்திய அரசுக்கு கூடுதல் சுமை ஏதும் ஏற்படப் போவதில்லை என்றே தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.