வெங்காயம் படுத்தும் பாடு!
மாநில அரசு முதல் மத்திய அரசு வரை வெங்காயத்தின் விலை அவ்வப்போது முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது வரலாற்று உண்மை.
மாநில அரசு முதல் மத்திய அரசு வரை வெங்காயத்தின் விலை அவ்வப்போது முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது வரலாற்று உண்மை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஆளும் அரசாங்கத்தை அவ்வப்போது மிரட்டும் தொனி வெங்காயத்திடம் உண்டு. அவ்வளவு ஏன், வெங்காயத்துக்குப் பிறகுதான் எதிர்க்கட்சி எல்லாம் என்று கூறும் அளவுக்கு வெங்காயத்தின் கெடுபிடி அரசியலில் தாண்டவமாடியுள்ளது. 1980, 1998, 2015 எனப் பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட முக்கியக் காரணிகளுள் ஒன்றாக வெங்காயத்தின் விலை உயர்வு இருந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையும் அத்தகைய ஒன்றுதான். வெங்காய சாகுபடிக்கு பெயர்போனது மகாராஷ்டிர மாநிலம். அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஹரியாணாவிலும் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அதிகரித்து வரும் வெங்காய விலையின் தாக்கம் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது. இதனால்தான் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த ஒரு புதிய அறிவிப்பை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. அதாவது, வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் சில்லறை வியாபாரிகள் 100 குவின்டால் (10,000 கிலோ), மொத்த விற்பனையாளர்கள் 500 குவின்டாலுக்கு (50,000 கிலோ) மேல் கையிருப்பு வைத்திருக்கக் கூடாது எனவும் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
எனவே, வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்தால், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது அரசாங்கத்தின் கணக்கு. ஆனால், இது தவறான முன்னுதாரணம் என்பதை கடந்த கால ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் நாம் அறியலாம். அதாவது, 2017-ஆம் ஆண்டு பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 26 நாடுகளில் விவசாயம் தொடர்பாக நடத்திய ஆய்வறிக்கையின்படி, இந்தியா உள்பட மூன்று நாடுகளில் விவசாயம் லாபகரமானதாக இல்லை. அதிலும் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாகவே விவசாயம் நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உணவுப் பொருள்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே முக்கியக் காரணம் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
மேலும், விவசாய வருமானம் 2000-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரை சராசரியாக 14 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தது என்றும், 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் இது ஆண்டுக்கு 6 சதவீத சரிவைச் சந்தித்தது என்றும் கூறுகிறது. அதிலும் 2000-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரையான காலத்தில் இந்திய விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களுக்கு சர்வதேச சந்தையில் மிகக் குறைவான விலையையே பெற்றுள்ளனர். ஏற்றுமதிக்கு தடை விதித்தது, சர்வதேச அளவில் உணவுப் பொருள்களின் விலை குறையும்போது அதைப் பரிசீலிக்காதது, முக்கியமாக விவசாயத்தில் முதலீடுகளை அதிகரிக்காமல் மானியத்தையே அரசு தொடர்ந்து வழங்கி வந்தது போன்றவை இதற்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
இதில் தற்போது கவனிக்கத்தக்க ஒன்று, ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு டன் வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை 850 டாலராக (ரூ.60,512) கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் நிர்ணயம் செய்து அறிவித்தது. அப்படி இருந்தும் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனைத் தொடர்ந்துதான் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும், இத்தகைய வெங்காய ஏற்றுமதித் தடை காரணமாக வங்கதேசம் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில், வெங்காயத்தின் தேவைக்கு இந்தியாவை நம்பியுள்ள நாடுகளில் வங்கதேசம் முக்கியமான நாடாகும்.
இப்படி விலையேற்றம், ஏற்றுமதி வருவாய் போன்ற காரணிகள் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏற்றதொரு பலனை கொடுக்கும்; ஆனால், ஏற்றுமதி தடை நிச்சயம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. நுகர்வோர் நலனில் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை; அதற்குமுன் விவசாயிகளின் நலனையும் அரசு கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் ஏற்றுமதிக்கு தடை விதித்ததைவிட, வெங்காயத்தை பதப்படுத்திக் கொடுக்க விவசாயிகளை அறிவுறுத்தியிருக்கலாம். அதற்கான உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை விவசாயிகளிடத்தில் அரசாங்கம் கொண்டு சேர்த்திருந்தால் விவசாயிகளுக்கும் லாபம் கிடைத்திருக்கும்.
மேலும், வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடையும்போது இத்தகைய பதப்படுத்தும் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அப்போது மட்டும் எதுவும் பேசாமல் அரசு மெளனியாகி விடுகிறது. என்ன செய்வது? விவசாயிகளின் வாழ்வு, போராட்டம் நிறைந்ததாகவே இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதிபோலும்.
இதற்கிடையில்தான் ஒரு பதிவு அதிகம் யோசிக்க வைத்தது. அன்றாடம் நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் பொருள்களுக்கு நல்ல விலை இல்லாமல் போகும்போது செவிமடுக்காத மத்திய அரசு, முதலாளித்துவ மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்கு உதவி என்னும் பெயரில் உடனடியாக சலுகைகளை அறிவிப்பது ஏன்? பூர்வீகத் தொழிலைக் காக்க மனமில்லை, ஆனால் கரியமில வாயுவை உற்பத்தி செய்யும் வாகனங்களை மட்டும் பாதுகாக்க வேண்டும். என்ன ஒரு சித்தாந்தம்?