அண்மையில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் இஜாஸ் அகமது ஷா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது, ""ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துவிட்டது. காஷ்மீரில் ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய அரசு விதித்துள்ளது. இதனால், மருந்து, உணவுப் பொருள்கள் வாங்கக்கூட மக்கள் வெளியே வரமுடிவதில்லை என்று சர்வதேச சமுதாயத்திடம் நாம் (பாகிஸ்தான்) கூறி வருகிறோம். ஆனால், அதனை உலக நாடுகள் நம்பவில்லை. அதே நேரத்தில் காஷ்மீர் நிலவரம் குறித்து இந்தியத் தரப்பு கூறுவதை உலக நாடுகள் முழுமையாக நம்புகின்றன. முக்கியமாக, காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; இந்த உண்மையை நம் நாடு (பாகிஸ்தான்) ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஜமாத்-உத்-தாவா போன்ற அமைப்புகளுக்கு நாம் பல கோடி ரூபாயைச் செலவிட்டு வருகிறோம். ஆனால், அவர்கள் பாதையை மாற்றுவதாகத் தெரியவில்லை. இதுபோன்ற அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள பல அமைப்புகள் பாகிஸ்தானை பின்னோக்கி இழுப்பவையாக உள்ளன'' என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமான உள்துறை அமைச்சரே இவ்வாறு கூறியிருப்பது உண்மையை மறைக்க முடியாது என்பதைக் காட்டுகிறது.
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் முக்கியக் குற்றவாளி ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீது ஆவார். சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்ததையடுத்து ஜிகாதி அமைப்புகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு இப்போது சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் அந்த நாட்டு நீதிமன்றத்தில் சில வழக்குகளை ஹஃபீஸ் சயீது எதிர்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அரபு நாட்டு தொலைக்காட்சிக்கு அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அளித்த பேட்டி:
"ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான்-இந்தியா இடையே இருக்கும் கருத்துவேறுபாடுகளை அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள பாகிஸ்தான் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அதற்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை. பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) தடைப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்க்க இந்தியா முயற்சிக்கிறது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றால் பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். அதன் மூலம் பாகிஸ்தானை நெருக்கடியான நிலைக்குத் தள்ளி பின்னடைவை ஏற்படுத்த இந்தியா முயற்சிக்கிறது.
பாகிஸ்தானுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதே இந்திய அரசின் கொள்கை என்பதைப் புரிந்து கொண்டுள்ளோம். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்ட நிலையில், இனியும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை. இத்தகைய சூழலில் இந்தியாவுடனான நேரடிப் போருக்கு வாய்ப்புகள் இருப்பதாக உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை நேரடிப் போர் ஏற்பட்டால் அதில் பாகிஸ்தான் பின்னடைவைச் சந்திக்கலாம். போர் வந்தால் சரணடைவதைக் காட்டிலும் நாங்கள் சாகும் வரை போரிடுவோம். பாகிஸ்தான் எந்தச் சூழலிலும் போரை முதலில் தொடங்காது. அணு ஆயுதம் வைத்துள்ள இரு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் அது அணு ஆயுதப் போராக மாறும் வாய்ப்பு உள்ளது. அதன் தாக்கத்தால் ஏற்படும் பேரழிவு இந்திய துணைக் கண்டத்தை தாண்டிய வகையிலும் இருக்கும். எனவேதான், அதைத் தடுக்கும் வகையில் ஐ.நா. சபை உள்பட அனைத்து சர்வதேச அமைப்பையும் அணுகுகிறோம்' என்றார் பிரதமர் இம்ரான் கான்.
இந்தியாவின் அப்போதைய பிரதமர் நேருவின் சாதுர்யமற்ற நடவடிக்கையால் ஜம்மு-காஷ்மீர் பிரச்னை நீண்டு வந்தது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மதச்சார்பற்ற நாடாக இருந்து வருகிறது. சிறுபான்மை மக்கள் சர்வ சுதந்திர முறையில் எல்லா நலன்களையும், உரிமைகளையும் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த நாட்டின் சிறுபான்மையினர் நாட்டின் உயர் பதவிகளுக்கு பல முறை தேர்வு செய்யப்பட்டுள்னனர். ஆனால், விடுதலை பெற்ற நாளிலேயே தன்னை ஓர் இஸ்லாமிய நாடாக பாகிஸ்தான் பிரகடனம் செய்து கொண்டது. அங்கே உள்ள சிறுபான்மை மக்களின் மதச் சுதந்திரம் பல வழிகளில் பறிக்கப்பட்டு வருவதை உலகம் நன்கறியும்.
உலகமே வெறுக்கும் கொடூரம் மிகுந்த பயங்கரவாதக் குழுக்களான ஹர்கத்-உல்-ஜிகாதி, அல்-இஸ்லாமி, ஹர்கத்-உல்- முஜாகிதீன், ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, அல்பதர் போன்றவை அந்த நாட்டின் செல்லக் குழந்தைகளாக வளர்க்கப்படுகின்றன. இவற்றுக்கு வன்முறைப் பயிற்சி, ஆயுதம், பணம் ஆகியவற்றை அரசே வழங்குகிறது. இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்துவது, காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானோடு இணைப்பது போன்றவைதான் இவற்றின் நோக்கம்.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த பயங்கரவாதக் குழுக்களை தடை செய்துள்ளன.
உலகையே உலுக்கிய நியூயார்க் இரட்டை கோபுர வர்த்தக மையத்தைத் தகர்த்த ஒசாமா பின்லேடனை தன் நாட்டின் ராணுவ முகாம் ஒன்றின் அருகிலேயே அடைக்கலம் தந்து காப்பாற்றி வந்தது பாகிஸ்தான். அந்தக் கொடியவனை அமெரிக்க ராணுவம் அதிரடியாகச் சுற்றிவளைத்து கொன்று சடலத்தை பெருங்கடலின் ஆழத்தில் ஆழ்த்தியது. ஆனால், 2005-ஆம் ஆண்டு புது தில்லி மார்க்கெட் பகுதிகளில் வெடி வைத்து 63 பேர் பலியாகவும், 200 பேருக்கு மேல் காயம் அடையவும் காரணமாக இருந்த லஷ்கர்-இ-தொய்பா குழுவினர் குடியிருப்பதும் பாகிஸ்தான்தான். இதே குழுவினர்தான் 2006-இல் புறநகர் ரயில்களில் வெடிகுண்டு வைத்து 180 பயணிகளின் உயிரிழப்பை ஏற்படுத்தினர்; 800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடையச் செய்தனர். லஷ்கர்-இ-தொய்பா குழுவில் பயிற்சி பெற்றவர்கள்தான் மும்பை தாஜ் ஹோட்டல், ரயில் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி 170 பேரைக் கொன்றனர்; 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களை காயம் அடையச் செய்ததையும் மறக்க முடியாது.
தொடர்ந்து கடந்த 2016-இல் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ள உரியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நான்கு பேர் தாக்குதல் நடத்தி 19 வீரர்களைக் கொன்றனர். இந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதியன்று இந்திய ராணுவ வாகனத்தைத் தகர்த்து 40 வீரர்களைப் பலியாக்கினர். இந்த வகையான தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ. மற்றும் பாகிஸ்தான் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் இந்தியா பொறுமையிழந்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலாடியாக, வான் வழி துல்லியத் தாக்குதல் நடத்தியது. 1947-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் பயங்கரவாதிகளால் இந்தியா பாதிக்கப்பட்டு வருவதை சர்வதேச நாடுகள் உணர்ந்ததால்தான் இன்றைக்கு பாகிஸ்தானுக்கு துணை நிற்கவில்லை. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு ஒட்டு மொத்தமாக இந்தியாவை ஆதரிக்கிறது. உலக வல்லரசுகளான அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா போன்ற நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றன.
உலக இஸ்லாமிய நாடுகள்கூட பாகிஸ்தானை நம்பவில்லை. பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது, இந்தியாவில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர் என்ற முறையில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுப்பப்பட்ட இந்தியப் பிரதிநிதியை அனுமதிக்காது திருப்பி அனுப்பினர். ஆனால், இன்று அதே இஸ்லாமிய கூட்டமைப்பினர் இந்தியாவை சிறப்பு அழைப்பாளராக அழைத்தனர். அதை எதிர்த்து தான் கலந்து கொள்ளாமல் மாநாட்டை பாகிஸ்தான் புறக்கணித்தது.
இப்போது இந்தியாவின் மதிப்பு அதன் வெளியுறவுக் கொள்கையால் உலக அரங்கில் பல மடங்கு உயர்ந்து நிற்கிறது. பல சர்வதேச அமைப்புகள் இந்தியாவை விரும்பி அழைக்கின்றன. சவூதி அரேபியா, பஹ்ரைன் போன்ற இஸ்லாமிய நாடுகள் பிரதமர் மோடியை வரவேற்று உயரிய விருதுகளை வழங்கி மகிழ்கின்றன.
பாகிஸ்தான் உருவான நாளில் இருந்தே தன் சக்தியையும், வளத்தையும் நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பாதைக்குச் செலவிடாமல், உலக அரங்கில் உயர்த்திடாமல் அண்டை நாட்டை (இந்தியா) அழிக்க நாளும் சதி வேலைகளில் ஈடுபடுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பதை எப்படி உலகம் ஏற்றுக்கொள்ளும்?
பல நேரங்களில் பயங்கரவாதத்தால் மிகக் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாவதை இந்தியா போன்று சர்வதேச நாடுகளும் உணர்ந்துள்ளன. இலங்கையில் இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று (ஏப்.21) அப்பாவி மக்களை ரத்த வெள்ளத்தில் ஆழ்த்திய இயக்கத்தையும் அதற்குப் பின்பலமாக இருக்கும் நாட்டையும் யாரேனும் நம்புவார்களா?
கலிங்கப் போரில் துயரச் சம்பவங்களைக் கண்ட உடனேயே போரைக் கைவிட்ட பேரரசன் அசோகன் வாழ்ந்த மண்ணில், அண்டை தேச பயங்கரவாதிகளின் பயங்கரவாதச் செயல்கள் இனியும் தொடரக் கூடாது. அணு ஆயுதம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுவதால் வடகொரியா, ஈரானைப் போன்று பாகிஸ்தானையும் அமெரிக்கா கண்காணிக்க வேண்டும். முரடர்களிடம் கொலைக் கருவிகள் இருப்பது மனிதகுலத்துக்கு நல்லதல்ல.
கட்டுரையாளர்:தலைவர், திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.