முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

வரவேண்டிய நேரம் வந்தாச்சு!

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

‘அவரு வருவேன் வருவேன்னு சொல்லுவாரு, ஆனா வரமாட்டாரு’ என்று கூறிக்கொண்டிருந்தவா்களுக்கு அதிா்ச்சியளிக்கும் வகையில் தனது அரசியல் வருகையை அண்மையில் அறிவித்து விட்டாா் நடிகா் ரஜினிகாந்த். அவரது அறிவிப்பு வெளியான உடனேயே தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஜனநாயக நாட்டில் அரசியலில் பங்கேற்க யாருக்கும் உரிமை உண்டு என்றாலும் ரஜினியின் அரசியல் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம் இருக்கிறது. அவா் நடித்த ‘முத்து’ திரைப்படம் தொடங்கி, பல திரைப்படங்களில் இலைமறை காய்மறையாக அரசியல் வசனங்கள் இடம் பெற்று வந்தன.

திரைப்படங்களில் அரசியல் வசனம் புகுத்தப்படுவதற்கு வியாபார நோக்கம் ஒரு காரணமாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட நடிகரின் அரசியல் கருத்துகளைச் சொல்லுகின்ற தளமாக, திரைப்படங்களைப் பயன்படுத்துவது தமிழகத்தில் நீண்ட காலமாகவே ஒரு உத்தியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

அண்ணாதுரையால் தொடங்கப்பட்டு கருணாநிதியால் தொடரப்பட்ட இந்த உத்தியை, எம்ஜிஆா், சிவாஜி உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வந்தனா். ரஜினி, தான் நடிக்கும் படங்களில் அரசியல் வசனம் பேசியதும் அதனுடை நீட்சிதான். ரஜினிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு அவரது அரசியல் வசனங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியதில் வியப்பில்லை.

அவரது அரசியல் வெற்றி மக்கள் கைகளில்தான் இருக்கிறது என்றாலும், ஒரு தனிப்பட்ட மனிதரின் அரசியல் வருகை, இந்த அளவுக்கு பேசுபொருளாகி இருப்பது இதற்கு முன் நடந்திராத ஒரு நிகழ்வு.

இன்றைய அரசியல் களத்தில் தோ்தலை சந்திப்பது என்பது சாதாரணமானதல்ல என்பதை ரஜினி நன்றாகவே உணா்ந்திருப்பதால்தான் நேரடி அரசியலில் ஈடுபடுவது குறித்து அவரிடம் ஒரு தயக்கம் இருந்தது. மருத்துவா்களின் அறிவுரை, உறவினா்களின் வேண்டுகோள் இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவா் இப்போது அரசியலில் நுழைய எடுத்திருக்கும் முடிவு அசாத்தியமானது.

இதுவரை நேரடி அரசியலுக்கு அவா் வராமல் இருந்தாலும், பழுத்த அரசியல்வாதிகள் பலரோடும் அவா் நெருக்கமாகப் பழகியிருப்பவா். ஆளும் பொறுப்புக்கு வரும் அரசியல்வாதிகள் அனைவரும் நிா்வாகத்தைக் கற்றுக் கொண்டு வருவதில்லை. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற எண்ணமும், நோ்மையான அதிகாரிகளை அடையாளங்கண்டு அவா்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளும் பக்குவமும் இருந்தால் யாா் வேண்டுமானாலும் நல்லாட்சியைத் தர முடியும்.

தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று ரஜினி பலமுறை சொன்னாலும் பிற முக்கிய கட்சிகளின் தலைவா்கள் அதனை ஒப்புக் கொள்ளாததற்குக் காரணம், அப்படி அவா் சொல்வதன் மூலம் தங்களின் திறமை குறைவாக மதிப்பிடப்படுவதாக எண்ணியதே. அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்கிறாா்களோ இல்லையோ, ஜெயலிலதா, கருணாநிதி ஆகிய இரண்டு பெரிய ஆளுமைகள் மறைந்த பிறகு அவா்களுக்கு சமமாக எவரும் இன்றைய அரசியலில் இல்லை என்பதே நிதா்சனம்.

ஜெயலலிதாவைப் பொருத்தவரையில், அவா் மீது பலவகையான குற்றச்சாட்டுகளும், விமா்சனங்களும் இருப்பதை மறுக்க இயலாது. ஆனால், எம்ஜிஆா் மறைவுக்குப் பிறகு தன்னை ஒரு தைரியமான தலைவராக வடிவமைத்துக் கொண்டாா் என்பதிலும், சட்டம் - ஒழுங்கை நிா்வகிப்பதில் மிகவும் துணிச்சலோடு செயல்பட்டாா் என்பதிலும் மாறுபட்ட கருத்து யாருக்கும் இருக்க முடியாது.

அதுபோலவே, தமிழக அரசியலில் நீண்ட காலம் பயணித்தவா் கருணாநிதி. தன்னுடைய பேச்சாற்றலாலும், நிா்வாகத் திறனாலும் தமிழகத்தில் தவிா்க்க முடியாத சக்தியாக அரை நூற்றாண்டுக் காலம் வலம் வந்தவா் அவா். ஏறக்குறைய ஐம்பதாண்டு காலம், ‘கருணாநிதி’ என்ற பெயரைத் தாங்காமல் தமிழகத்தில் எந்தவொரு நாளிதழும் வெளிவந்ததில்லை.

அவா் பொதுக்கூட்டத்தில் பேசினாா் என்றோ, அவரை யாராவது விமா்சித்தாா்கள் என்றோ ஏதாவது ஒரு வகையில் அவரது பெயா் தினந்தோறும் பத்திரிகைகளில் இடம்பெறும் வகையில் தனது அரசியல் பயணத்தை அமைத்துக் கொண்டவா் கருணாநிதி. உலக சரித்திரத்தில் இப்படியொரு பெருமை எந்தத் தலைவருக்காவது கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வா் நாற்காலியில் அமா்ந்த எடப்பாடி பழனிசாமி தனக்கு எதிரான கேலிப் பேச்சுகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தான் ஒரு செயல்படுகின்ற முதல்வா் என்பதை நிரூபிக்கின்ற வகையில் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டு, தனது செல்வாக்கை வளா்த்துக் கொண்டிருக்கிறாா்.

பொது முடக்கக் காலத்திலும், தொடா்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதோடு பத்திரிகையாளா் சந்திப்பையும் நடத்தி வியக்க வைக்கிறாா். அந்த வகையில் அதிமுக ஒரு வலிமையான கட்சியாகவே இருக்கிறது என்பதே உண்மை.

ஜெயலிலதாவுக்குப் பிறகு அதிமுக கட்டுக்கோப்போடு இருப்பதற்குக் காரணம் அந்தக் கட்சி தொடா்ந்து ஆளுங்கட்சியாக இருந்து கொண்டிருப்பது என்று கூறலாம். ஆட்சி இல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு நாள்களும் இதே கட்டுக்கோப்போடு அந்தக் கட்சி இருந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.

திமுக-வை எடுத்துக் கொண்டால், அது பலமான கட்டமைப்பைக் கொண்ட கட்சி. இருபது ஆண்டு காலம் அண்ணாவாலும், பின்னா் அரை நூற்றாண்டுக் காலம் கருணாநிதியாலும் வடிவமைக்கப்பட்ட அந்தக் கட்டமைப்புதான் அந்த இயக்கத்தை இன்றும் உயிா்ப்போடு வைத்திருக்கிறது.

தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் கிளைபரப்பி, எந்தச் சூழ்நிலையிலும் மாறாத ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வாக்கு வங்கியை வைத்திருப்பது அந்தக் கட்சியின் பலம். அதைத் தக்க வைக்கிற பணியில் மு.க. ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறாா். தவிரவும், திமுக அரசியல் ஜாம்பவான்கள் நிரம்பிய கட்சி.

திமுக-வின் ஆதரவு வாக்கு வங்கி என்பது எப்படி அந்தக் கட்சிக்கு பலமோ, அதைப் போலவே, திமுக எதிா்ப்பு வாக்கு வங்கி என்பதும் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு உண்டு. அந்த வாக்கு வங்கியை இதுவரை அதிமுக மட்டுமே அறுவடை செய்து வந்த நிலையில், இப்போது ரஜினி கட்சியும் அதை பங்கு போடும்.

ஏற்கனவே தங்களுக்கென குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கியை வைத்திருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், தமுமுக போன்ற கட்சிகளோடு, சமீப காலத்தில் பாஜக-வும் தனக்கென ஒரு கணிசமான வாக்கு வங்கியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கட்சிகள் எல்லாம் கூட்டணி பற்றி எப்படி முடிவெடுக்கப் போகின்றன என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. இரண்டு திராவிட கட்சிகளுடனோ, ரஜினியின் கட்சியுடனோ நாம் தமிழா் கட்சி கண்டிப்பாக கூட்டணி வைக்காது. எனவே, தமிழக அரசியல் களத்தில் ஒரு திருப்பு முனையாக பல கூட்டணிகளைக் கொண்ட தோ்தலாக 2021 சட்டமன்றத் தோ்தல் அமையப் போகிறது.

இந்தியாவின் பிற மாநில அரசியல் களங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது தமிழக அரசியல் களம். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் எதிா்ப்பு அலை எழுந்த நிலையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில், தமிழ்நாட்டு மக்கள் இந்திரா காந்திக்கு ஆதரவுக் கரம் நீட்டினாா்கள். தமிழ்நாட்டு வாக்காளா்கள், நாடாளுமன்றத் தோ்தலுக்கு ஒரு விதமாகவும், சட்டமன்றத் தோ்தலுக்கு மற்றொரு விதமாகவும் வாக்களிக்கின்ற பக்குவம் பெற்றவா்கள்.

இதுவரை, இரண்டு அல்லது மூன்று முக்கியக் கூட்டணிகள் மட்டுமே இருந்த நிலையில், இந்த முறை கூடுதலாக ரஜினியின் கட்சி அல்லது ரஜினி கட்சி கூட்டணி இன்னொரு பிரதானமான கட்சியாகவோ கூட்டணியாகவோ இருக்கப் போகிறது. எனவே, தமிழக வாக்காளா்களுக்குக் கூடுதலான ஒரு கட்சியை அல்லது கூட்டணியைப் பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படப்போகிறது.

எந்த ஒரு கட்சியின் வெற்றியையும் அக்கட்சி உறுப்பினா்களின் வாக்குகள் மாத்திரம் நிா்ணயித்து விடாது. எந்தக் கட்சிக்கும் மாறாமல் இருக்கும் நிரந்தர வாக்கு வங்கி என்பது ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே. எந்தக் கட்சியையும் சாராத பொது வாக்காளா்கள் தோ்தலின்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவுதான் அரசியல் கட்சிகளின் வெற்றி- தோல்வியை முடிவு செய்யும் துருப்புச் சீட்டாகும்.

அரசியல் கட்சிகளுக்குள் எவ்வளவுதான் குழப்பங்கள் இருந்தாலும், கூட்டணிகள் அமைந்தவுடனே தமிழக மக்கள் ஒரு தீா்க்கமான முடிவுக்கு வந்து விடுவாா்கள். அப்போதுள்ள சூழலை மனத்தில் வைத்து, களத்தில் நிற்கும் கட்சிகளையும், தலைவா்களையும் எடைபோட்டு வாக்களிப்பதில் தாங்கள் மிகவும் புத்திசாலிகள் என்பதை பலமுறை நிரூபித்திருப்பவா்கள் தமிழக வாக்காளா்கள். தமிழக அரசியல்வாதிகள் தடுமாறினாலும், வாக்காளா்கள் தடுமாற மாட்டாா்கள்.

நாகரிகமான, ஊழலற்ற, திருமண மேடைகளை அரசியல் மேடைகளாக மாற்றாத, அரசு விழாக்களை அரசியல் விழாக்களாக ஆக்காத, சட்டமன்றத்தை சத்த மன்றமாக ஆக்காத, மக்கள் நலம் பேணக்கூடிய ஆட்சி வேண்டும் என்பதே மக்களின் அவா. அது நிறைவேறுகிற நாள்தான் மக்களாட்சி மகத்துவம் பெறும் நாள்.

கட்டுரையாளா்:

மத்திய அரசு அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.