நடுப்பக்கக் கட்டுரைகள்

சங்ககாலக் காதலும் நவீன காதலும்

போற்றி ராஜா


சங்க இலக்கியங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, அகம் சார்ந்த இலக்கியங்கள். அதாவது, ஓர் ஆணும் பெண்ணும் தம் உள்ள உணர்வுகளால் ஒன்றுபட்டு, பின் காதல் வயப்பட்டு தங்களின் உணர்வுகளையும், தங்களுக்குள் நடந்த ஊடல்களையும், கூடல்களையும் பிறருக்கு வெளிப்படையாகக் கூற முடியாது; இவை பொதுவாக அகம் சார்ந்த இலக்கியங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஒரு மன்னனின் வீரம், படைபலம், ஆட்சி, கொடை முதலியவை குறித்துப் பேசுவது புறம் சார்ந்த இலக்கியங்கள் ஆகும்.

இவற்றுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை ஆகிய ஐந்து நூல்கள் அகம் சார்ந்த இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியங்களில் புற நூல்களைக் காட்டிலும் அக நூல்கள்தான் அதிகம். இதிலிருந்து சங்க காலத்தில் காதலுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை நம்மால் உணர முடிகிறது.

சங்க இலக்கியங்களில் காதல் உணர்வுகள் மிகைப்படுத்தப் பட்டிருப்பதாக சிலர் வாதிடலாம். ஆனால், இன்றைய பெரும்பாலான இலக்கியங்கள் நம் சமகால வாழ்க்கையைப் பிரதிபலிப்பவையாகவே இருக்கின்றன. அதேபோல அன்றைய இலக்கியங்களும் இருந்திருக்கும் என்று நாம் தீர்க்கமாக நம்பலாம்.
எடுத்துக்காட்டாக, இன்றைய நவீன காதலில் ஒருவரை முதன்முதலாகப் பார்த்த மாத்திரத்திலேயே தோன்றும் காதலை ("லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்'), அந்தக் காலத்தில் "இயற்கைப் புணர்ச்சி அல்லது தெய்வீகப் புணர்ச்சி' என்று கூறினர். அவ்வாறு காதல் வயப்பட்ட பின்பு ஒருவரை ஒருவர் மீண்டும் சந்திக்க பெரும்பாலான காதலர்கள் தாங்கள் முதலில் சந்தித்துக் கொண்ட இடத்தையே தேர்வு செய்வர்.அதை சங்க காலத்தில் "இடந்தலைப்பாடு' என்று வழங்கியுள்ளனர். 

தேர்வு செய்யப்பட்ட அந்தக் குறிப்பிட்ட  இடத்துக்குப் பெரும்பாலும் ஆண்களே முதலில் வருவர். அவ்வாறு வந்தவுடன் தாங்கள் வந்ததை காதலியிடம் தெரிவிப்பதற்காக இக்காலத்தில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துகின்றனர்;  ஆனால், சங்க காலத்தில் காதலன் ஒருவன் தனது வருகையைத் தெரியப்படுத்த அந்த இடத்தில் இருக்கும் மரத்தின் மீது கல் எறிகிறான்; உடனே, மரத்தில் இருக்கும் பறவைகள் ஓசை எழுப்பிக் கொண்டு நாலா புறமும் பறந்து செல்கின்றன. அந்தப் பறவைகளின் ஓசையை தன் காதலன் வந்ததற்கான குறியீடாகக் காதலி கருதுகிறாள். இந்தக் குறியீட்டை "இரவுக் குறி" என்று அந்தக் காலத்தில் வழங்கியுள்ளனர்.

ஒரு வேளை அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குக் காதலன் வரவில்லை என்றால் இன்று பிரளயமே ஏற்பட்டுவிடும்.  காதலன் வராததால் வரும் இந்த ஏமாற்றத்தையும் அதனால் காதலி ஒருவர் புலம்பித் தவிக்கும் நிலையையும் அந்தக் காலத்தில் "அல்லக் குறி'படுதல் என்று வழங்கியுள்ளனர்.

பொதுவாக காதலிப்பது எளிது. ஆனால், காதலிக்கும் விஷயத்தை இடம் பொருள் ஏவல் அறிந்து, சமயம் பார்த்து பெற்றோரிடம் தெரிவிப்பது சவாலான ஒன்று. இன்றும் பெரும்பாலான காதலர்கள், தங்களின் உள்ள உணர்வுகளைப் பெற்றோரிடம் தெரிவிக்க மனதுக்குள் ஒரு போராட்டமே நடக்கும். ஒரு வேளை நேரடியாகக் கூற முடியவில்லையெனில், பெற்றோருக்கு அபிமானமான ஓர் உறவினரின் மூலம் மத்தியஸ்தம் செய்யலாம். நண்பர்கள் பெரும்பாலும் இது போன்ற விஷயங்களில் பெற்றோரிடம் மத்தியஸ்தம் செய்வதில்லை. ஆனால், சங்க காலத்தில் பெண்கள் தங்களின் காதலை தோழி மூலம் பெற்றோருக்குத் தெரியப்படுத்தினர். அவ்வாறு  தோழி எடுத்துரைப்பதை "அறத்தொடு நிற்றல்' என்று வழங்கினர்.

ஒரு வேளை காதலைப் பெற்றோர்கள் ஏற்கவில்லை எனில், காதலர்கள் தங்களின் வீட்டை விட்டு வெளியேறி ஏதேனும் காவல் நிலையத்திலோ அல்லது நண்பர்களின் புடைசூழ ஏதேனும் கோயிலிலோ இன்று திருமணம் செய்கின்றனர். சங்க காலத்தில் காதலின் பொருட்டு ஒரு பெண் இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறுவதை "உடன் போக்கு' என்று கூறினர்.

"சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்
பிறப்புப் பிறிது ஆகுவதாயின்
மறக்குவேன் கொல் என் காதல் எனவே'


அதாவது, தலைவனைப் பிரிந்த தலைவி ஒருத்தி, தன் தோழியிடம் "நான்  சாவதற்கு அஞ்சவில்லை; ஒரு வேளை நான் இறந்துவிட்டால் மறுபிறவியில் நான் பிறக்கக் கூடும். அவ்வாறு பிறக்கும்போது என் காதலனை மறந்து விடுவேனோ என்றுதான் அஞ்சுகிறேன்' என்று ஒரு நற்றிணை பாடல் ஒரு காதலின் ஆழம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் நாம் உச்சத்தைத் தொட்டாலும் மனித உயிர்கள் பரிணமிக்க அடிப்படை ஆதாரமாக இருக்கும் இது போன்ற உன்னதமான காதல் உணர்வுகளால்தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.சங்க காலத்திலும் சரி இன்றைய காலத்திலும் சரி காதல் என்ற உணர்வு ஒன்றுதான். அதை வெளிப்படுத்தும் கருவிகள் மட்டுமே மாறியிருக்கின்றன.

காதல் என்பது ஒருவரின் மேல் ஏற்படும் அற்புதமான உணர்வு. அது  காமம், மரியாதை, இனம் புரியாத ஈர்ப்பு, அவரின்பால் உள்ள நம்பிக்கை என்று எத்தனையோ கூறுகளை உள்ளடக்கியது.  
பெண்களும் சரி, ஆண்களும் சரி அப்படிப்பட்ட காதல் உணர்வை  பரஸ்பரம் நயமாக வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவர் ஒரு முறை தீர்க்கமாக மறுத்து விட்டால் மீண்டும் மீண்டும் தன்னைக் காதலிக்க வற்புறுத்துவது அறியாமை. இதைச் சங்க இலக்கியத்தில் "கைக்கிளை' (ஒருதலைக் காதல்) என்று கூறினர்.

அதே போல ஒருவர் தனக்குக் காதல் கடிதம் கொடுத்து விட்டாலோ அல்லது அவர்களின் காதலை வேறு விதமாக நயமாகச் சொன்னாலோ அந்தக் காதலை அவர் நம் மீது வைத்திருக்கும் அளவற்ற மரியாதையாக எண்ண வேண்டுமே ஒழிய அது தன் அழகுக்கோ திறமைக்கோ கிடைத்த உச்சபட்ச அங்கீகாரமாக எண்ணி மனதளவில் கர்வம் கொள்வது அதைவிட அறியாமை.
காதலை வெளிப்படுத்துவது எவ்வளவு  நயமாக இருக்க வேண்டுமோ, அதைவிட காதலை மறுப்பதும், கோபப்படாமல் அதை ஏற்றுக் கொள்வதும் நயமாக இருப்பது முக்கியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT