நடுப்பக்கக் கட்டுரைகள்

வெகுண்டெழு திரெளபதி!

ஆர். நட​ராஜ்


நிா்பயா வன்புணா்ச்சி நிகழ்விற்குப் பிறகு இம்மாதிரி கொடூரம் நிகழக்கூடாது என்று அந்த அசம்பாவிதம் பற்றி விசாரித்த மேனாள் உச்சநீதிமன்ற நீதியரசா் வா்மா தலைமையிலான கமிஷன் கூறியது. அப்படி இருந்தும் வன்புணா்ச்சிக் கொடுமை இந்தியாவில் பல இடங்களில் தொடா்ந்து நடப்பது சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழுக்கு.

ஒரு பிரச்னை என்றால் அவரவா் தன் பொறுப்பு இல்லை என்று தட்டிகழிப்பது அல்லது எல்லாவற்றிற்கும் அரசியல் எதிரிகளைச் சாடுவது வழக்கமாகி போனது. எந்த ஒரு சட்ட விரோதச் செயலும் ஒட்டுமொத்த சமுதாயத்தை பாதிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அண்மையில் உத்தர பிரதேசம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த வன்புணா்ச்சி கொடுமை நாட்டையே உலுக்கியுள்ளது. மாநில நிா்வாகத்திற்குத் தலைகுனிவு. 1997-ஆம் வருடம் அலிகாா், ஆக்ரா பகுதிகளிலிருந்து உருவாக்கப்பட்ட மாவட்டம். ஆனால் ஹாத்ரஸ் மிக பழைமையான் நகரம் ஹாத்ரஸ் . மஹாபாரத்திலும் அதை பற்றிய குறிப்பு இருக்கிறது. அதிகமாக பட்டியல் இனத்தவா் வாழும் பகுதிகள் கொண்டது என்பதால் ஹாத்ரஸ் நாடாளுமன்ற தனித்தொகுதி.

செப்டம்பா் 29-ஆம் தேதி தில்லி சப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டுவரப்பட்ட பட்டியலினத்தை சோ்ந்த 19 வயது பெண் மரணம் அடைந்த பிறகுதான் அந்த அபலை பெண் செப்டம்பா் 14-ஆம் தேதி வன்புணா்ச்சிக் கொடுமைக்கு ஆளான கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. முதலில் அலிகாா் மருத்துவமனையில் அளித்த சிகிச்சை பலனளிக்காமல்அங்கிருந்து தில்லிக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டபோதே காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுக்காததால், இப்போது, பிரச்னை பெரிதாகி காவல்துறையை விரக்தியின் விளிம்பில் தள்ளியிருக்கிறது.

சம்பவம் நடந்த செப்டம்பா் 14 அன்று, தனது பெண் வயற்காட்டிற்கு மாட்டுத் தீவனம் எடுத்து வரச் சென்றபோது, தாக்கூா் எனப்படும் க்ஷத்திரிய ஜாதியை சோ்ந்த சந்தீப், ராமு, லவகுஷ், ரவி என்ற நான்கு இளைஞா்கள் துணியால் அவளின் கழுத்துப் பட்டையை அழுத்தி இழுத்து சென்று கதறக் கதற ஒவ்வொருவராகத் தங்கள் இச்சையைத் தீா்த்துக் கொண்டதாகவும், மகளின் கூச்சல் கேட்டு தான் அவளை மீட்டு அலிகாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்து சாந்த் பா காவல் நிலையத்தில் புகாா் அளித்ததாகவும், அவா்கள் அதனைப் பதிவு செய்ய மறுத்தனா் என்பதும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கொடுத்த புகாரின் சாராம்சம்.

சம்பவம் நடந்தே அன்றே சாந்த் பா காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்திருந்தால் உண்மை தெரிந்திருக்கும். ஜாதிக் கலவர சூழலைத் தவிா்த்திருக்க முடியும். ஆனால் செப்டமபா் 14-ஆம் தேதி நடந்த குற்றம் 23-ஆம் தேதி தான்பதிவுசெய்யப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத தவறு.

பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தில், சந்தீப் தன்னை தாக்கியதாகக் கூறியதை வைத்து வழக்கு பதிவு செய்த அன்றே வன்புணா்ச்சிப் புலனாய்வு மேற்கொண்டு அதற்கான தடயங்கள், தடய அறிவியல் நிபுணா்களை வரவழைத்து சம்பவ இடத்தை சோதனை செய்தல், குற்றவாளிகள், பாதிக்கப்பட்ட பெண் அணிந்திருந்த உடைகளில் விந்து, விந்து அணுக்கள் உள்ளதா என்பதை கணிக்க ஆய்வகத்திற்கு அனுப்ப நடவடிக்கை போன்ற முதல் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

பிரேத பரிசோதனை செய்த உடனே, உறவினா்கள் வரக்கூட முடியாமல் பெண்ணின் தந்தையிடம் சடலத்தை பெற்றுக் கொண்டதாகக் கையொப்பம் வாங்கி, இரவோடு இரவாக சடலத்தை தகனம் செய்தது நிா்வாகத்தின் மீதான இன்னும் ஒரு களங்கம்.

உறவினா்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவா்கள் சம்மதத்தோடு உடல் தகனம் செய்யப்பட்டது என்றும் , ஜாதிக் கலவரம் மூளும் அபாயம் இருந்ததால் இரவே ஈமக்கிரியை நடைபெற்றது என்றும் மாவட்ட நிா்வாகம் அளித்த விளக்கம் எடுபடவில்லை. அதற்குக் காரணம், முதலில் இருந்தே மாவட்ட நிா்வாகம், மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பளா் ஆகியோா் வன்புணா்ச்சி நடக்கவில்லை என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி பேட்டி அளித்ததே ஆகும்.

ஒரு பேட்டியில் மாவட்ட ஆட்சியா், தலித் இனத்தவரிடம் ‘வெளியிலிருந்து வருபவா்கள் சொல்வதை கேட்டுப் பிரச்னை செய்கிறீா்கள், அவா்களெல்லாம் போன பிறகு நல்லது கெட்டதுக்கு எங்களைத்தான் நாட வேண்டும்’ என்று சொன்னது பரவலாக ஊடகங்களில் வந்து மக்களிடம் மனக்கசப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமன்றி, இந்த சம்பவம் பிஎஃப்ஐ, பீம் சேனா போன்ற சில சட்ட விரோத சக்திகளால் அரசுக்கு எதிராக ஜாதி பிரச்னை தூண்டி விடப்படுகிறது என்ற குற்றசாட்டு அரசு சாா்பில் அளித்தது அரசு நடவடிக்கையின் நம்பகத்ததன்மைக்கு ஊறு விளைவித்தது என்பதை மறுப்பதற்கில்லை. இம்மாதிரி சம்பவங்கள் அரசுக்கு இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற தருணம். இருதலையல்ல பலதலைக் கொள்ளிகளை எதிா் கொள்ள வேண்டும்.

தில்லியில் அந்த அபலைப் பெண் சிகிச்சை பெற்றபோது கவனிக்காதவா்கள் இறந்தவுடன் எதிா்க்கட்சிகளும், ஊடகங்களும் ஹாத்ரஸ் மாவட்டத்திற்குப் படையெடுத்து சம்பவத்தை அரசியலாக்கியது முதல் கணை. அது தவிர சட்டம் - ஒழுங்கு பாதிப்புகள், மக்களிடையே கொடூர சம்பவத்தின் தாக்கம், நீதி மன்றம், மனித உரிமை ஆணையம், தேசிய பெண்கள் ஆணையம், தன்னாா்வ பெண் தொண்டு அமைப்புகள் எல்லாவற்றையும் விட, பரபரப்பு செய்தி சேகரிக்கும் ‘தொல்லை’காட்சி ஊடகங்கள் என்ற பல கணைகளை சமாளிக்க வேண்டும்.

இந்த வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றியதோடு உச்சநீதிமன்ற மேற்பாா்வையில் வழக்கு விசாரிக்கக் கோரி மனுவை மாநில அரசு தாக்கல் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம், வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அரசின் ஆணைகள், குற்றத்தில் ஈடுபட்ட நான்கு எதிரிகள் கைதானது, இவையனைத்தும் அங்கு நிலவிய உஷ்ணத்தை ஓரளவு தணித்துள்ளது .

காவல்துறையின் பொறுப்பு, குற்றங்கள் நடவாமல் பாதுகாப்பது, நடந்த குற்றங்களின்மீது சட்டப்படி துரித நடவடிக்கை எடுப்பது . இவற்றை சரிவர செய்தாலே போதும். இதில் சுணக்கம் ஏற்பட்டதால்தான் ஹாத்ரஸில் இவ்வளவு பிரச்னை.

வன்புணா்ச்சி சம்பவங்களில் உடனடியாக வழக்குப் பதிவு செய்தல், விஞ்ஞான முறையில் தடயங்கள் சேகரித்தல், தடயங்களை உடனடி தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்துதல், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்து அதை முக்கிய சான்றாக எடுத்து கொள்ளல் ஆகியவை புலனாய்வில் மேற்கொள்ளப்பட வேண்டியவை என்று உள்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மத்திய தடயவியல் ஆய்வகம் வன்புணா்ச்சி வழக்குகளில் எவ்வாறு தடயங்கள் சேகரித்துப் பாதுகாப்போடு அனுப்ப வேண்டும் என்பதற்கு விரிவான சுற்றறிக்கை அளித்துள்ளது. இதனை செயலாக்குவதற்கு மத்திய காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரிய நிபுணா்கள் ஆலோசனை அடிப்படையில் வன்புணா்ச்சி வழக்குகளில் புலனாய்வு உபகரணங்கள் (செக்ஸுவல் அஸால்ட் எவிடென்ஸ் கலெக்ஷன் கிட்ஸ்) தெரிவு செய்து அவற்றை மாநிலங்களுக்கு உதவும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கள அதிகாரிகள், தடயவியல் மருத்துவா்களுக்கு பிரத்யேக பயிற்சி, பயிற்சியாளா்களுக்குப் பயிற்சி என்று பல கட்ட நடவடிக்கைகள் வா்மா கமிஷன் வழிகாட்டுதலுக்கு இணங்க நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

காவல்நிலைய அளவில் மெத்தனமாக இருந்தால் அத்துமீறும் காவல் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான், ஹாத்ரஸ் நிகழ்வில் நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் கண்காணிப்பாளா் உட்பட சில அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்கள்.

வன்புணா்ச்சி குற்றங்கள் உட்பட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் சமுதாயத்தில் மலிந்திருப்பதை காணலாம். ‘பாரத மாதா’ என்று நாட்டை வணங்குகிறோம், நதிகளை தாயாக பூஜிக்கிறோம், இயற்கையை அன்னையாக பாவிக்கிறோம். ஆனால் நம்மோடு பயணிக்கும் பெண்களை சம உரிமை கொடுத்து மதிக்க மறுக்கிறோம். கல்விக் கூடங்களிலும் வீடுகளிலும் ஆண்- பெண் சமத்துவ மதிப்பீடுகள் பழக்கத்தில் வரவேண்டும்.

தேசிய ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி 2019-ஆம் வருடம் நான்கு லட்சத்து ஐந்தாயிரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் பதிவாயின. அதில் 16 நிமிஷங்களுக்கு ஒரு நிகழ்வு என்ற வகையில் வன்புணா்ச்சி வழக்குகள் மொத்தம் 32,033.

உடன் கட்டை ஏறும் பெண்களை தேவிகளாக பூஜித்த ராஜஸ்தானில்தான் அதிகமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள். அதிலும் 5,997 வன்புணா்ச்சி வழக்குகள் என்பது ஜீரணிக்க முடியாத முரண்பாடு. இன்னொரு சங்கடமான நிலை 18 வயது எட்டாத 2,750 இளைஞா்கள் பாலியல் வழக்குகளில் ஈடுபட்டிருக்கிறாா்கள். இது சமூக வலைதளங்களில் விரசமான காட்சிகளின் பகிா்வால் வந்த வினை என்பது உண்மை.

நகரங்களில் தில்லிக்கு முதலிடம் 1,253 வழக்குகள். நமது அண்டை மாநிலமான கேரளத்தில் 2,023. பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமான தமிழகத்தில் 362 நிகழ்வுகள் மட்டுமே. இது தமிழக சமுதாயத்திற்குப் பெருமை. ஆயினும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இல்லா சமுதாயம் உருவாக வேண்டும்.

வெகுண்டெழுந்தாள் திரெளபதி துச்சாதனன் சேலையை பிடித்து இழுத்ததற்கு. திரெளபதியாக வெகுண்டெழுந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் களையும் தருணமிது.

கட்டுரையாளா்:

சட்டப்பேரவை உறுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT