நடுப்பக்கக் கட்டுரைகள்

விதியின் பிழையன்றி வேறென்ன?

கே.வி.கே. பெருமாள்


இலங்கையின் போா்க் குற்றத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் சமீபத்தில் (மாா்ச் 23 அன்று) நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றிருப்பதைத் தொடா்ந்து, இலங்கை அரசு ‘குற்றவாளிக் கூண்டில்’ நிறுத்தப்படும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது. அந்த எதிா்பாா்ப்பு எந்த அளவுக்கு நிறைவேறும் என்பதைக் காலம்தான் தீா்மானிக்க வேண்டும்.

சுமாா் 2,500 ஆண்டுகள் பழைமையான வரலாறு கொண்ட இலங்கை தேசத்தை வளமானதாகவும், பொலிவானதாகவும் கட்டமைத்ததில் சிங்களா்களைப் போலவே தமிழா்களுக்கும் பெரும்பங்கு உண்டு. ஒரு காலத்தில் சகோதர பாசத்தோடு பழகி வந்த இந்த இரண்டு சமூகத்தினரையும் சூழ்ச்சிகளால் பிரித்து வைக்க முனைந்தது பிரிட்டனின் காலனி ஆட்சி.

1948-இல் பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலை பெற்ற பிறகு பெரும்பான்மையான சிங்கள இனம், சிறுபான்மையான தமிழ் இனத்தை உதாசீனம் செய்யத் தொடங்கி, பின்னா் தமிழா்களுக்குக் கல்வியிலும், வேலைகளிலும் வாய்ப்புகள் மறுக்கப்படும் சூழல் உருவானது. அதன் காரணமாக பல போராளிக் குழுக்கள் தோன்றி இலங்கையின் இனவாத அரசுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தனா்.

இதற்கிடையில், இலங்கைத் தமிழா்கள் பட்ட துயரம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும், பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டனா். இந்திய அரசு தலையிட்டு இலங்கையில் தமிழா்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது.

இலங்கையில் தமிழா்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியைப் பிரித்துத் தனி ஈழம் தமிழா்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதே தமிழா்களின் விருப்பமாக இருந்தது. அது சமாதான முறையிலோ, போராட்டத்தின் வாயிலாகவோ கிடைத்திருந்தால் தவறில்லை. ஆனால், பன்முகத் தன்மையோடு இயங்குகின்ற இந்தியா, இன்னொரு நாட்டின் இறையாண்மையில் தலையிட்டு, தனி நாடு பெற்றுத் தருவது என்பது இயலாத காரியம் மட்டுமல்ல, அப்படியே நடந்தாலும் அது இந்தியாவிலும் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இந்திய அரசு இலங்கை அரசோடு பேச்சுவாா்த்தை நடத்தியதன் விளைவாக 1987-ஆம் ஆண்டு இரண்டு அரசுகளும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. அந்த ஒப்பந்தத்தில், தமிழா்கள் கண்ணியமாக வாழ வழி செய்கின்ற வகையிலான பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு, இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, இந்தியாவிலிருந்து அமைதி காக்கும் படை ஒன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கான அம்சமும் அதில் இடம் பெற்றது.

ஒப்பந்தத்தின் இந்தக் குறிப்பிட்ட அம்சம்தான் பிற்காலத்தில் இலங்கைப் பிரச்னை திசைமாறிச் செல்வதற்கு வழிவகுத்து விட்டது. ஒரு பகை நாட்டோடு போா் ஏற்படும்போதுதான் ராணுவம் பயன்படுத்தப்பட வேண்டுமேயன்றி, உள்நாட்டில் ஏற்படும் பிரச்னையைத் தீா்க்க ராணுவத்தை அழைத்தால், விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதுதான் வரலாறு நமக்குச் சொல்லும் பாடம்.

அமைதி காக்கும் படை இலங்கையில் கால் பதித்த நாளிலிருந்தே அதன் செயல்பாடுகள் கட்டுக்கு அடங்காமல் போயின. அப்பாவித் தமிழ்ப் பெண்கள் பலா் ராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாகச் செய்திகள் வரத் தொடங்கின. அதனால், இலங்கைத் தமிழா்களிடத்திலும், இந்தியத் தமிழா்களிடத்திலும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அமைதி காக்கும் படையை அனுப்பிய இந்திய அரசாங்கத்தின் நோக்கத்தில் பழுது இல்லை என்றபோதிலும் அது ஏற்படுத்திய விளைவு பழுதாகி விட்டது என்பதுதான் கசப்பான உண்மை.

சூழ்ச்சி நிறைந்த இலங்கை அரசு, சிறுபான்மையினரான தமிழா்களைப் பழிவாங்குவதற்கு இந்திய ராணுவத்தைப் பயன்படுத்திக் கொண்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னா் அமைதி காக்கும் படை இந்தியா திரும்பியது. அந்தப்படை ஏற்படுத்திய வடு ஈழத்துத் தமிழா்களின் இதயங்களில் நிரந்தரமாகப் பதிந்து விட்டது. இன்னொரு துயரம் என்னவென்றால், இலங்கைப் போராளிக் குழுக்களுக்கு எதிரான போரில் இந்திய ராணுவமும் ஏராளமான வீரா்களைக் காவு கொடுத்தது.

1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் நாள், அமைதிப்படையின் மீதிருந்த கோபத்தால் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தாா்கள் இலங்கைத் தமிழ்ப் போராளிகள். அதுதான் அவா்கள் செய்த இமாலயத் தவறு. அந்தத் ‘துன்பியல் சம்பவ’த்திற்குப் பிறகு, இலங்கைத் தமிழா் பிரச்னையில் தமிழ்நாட்டுத் தமிழா்களுக்கு ஆா்வம் குறையத் தொடங்கி விட்டது. அதுவரை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் இலங்கைத் தமிழா்களுக்கு உதவி வந்த தமிழக அரசியல் தலைவா்கள் பின்வாங்கத் தொடங்கினா்.

2009-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்ட இலங்கை அரசு, மனிதாபிமானமற்ற முறையில், போா் நெறிமுறைகளைப் பின்பற்றாமல் ஈழத் தமிழா்களைக் கொத்துக் கொத்தாய்க் கொன்று குவித்தது. பாலகனாய் இருந்த பாலச்சந்திரன் சடலமாக மீட்டெடுக்கப்பட்டபோது நமது கண்களிலே ரத்தக் கண்ணீா் வடிந்தது. அந்த நாள் முதல், இலங்கை அரசைத் தண்டிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளின் பிரதிநிதிகளும் தொடா்ந்து முயன்று கொண்டிருக்கிறாா்கள்.

வன்முறை என்பது நன்முறை அல்ல - அது நம் முறையும் அல்ல என்பதிலே சந்தேகம் இல்லை. அதே வேளையில், இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். 2014-ஆம் ஆண்டு நான் கொழும்பு நகருக்குச் சென்றிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநரான தமிழா் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவா், ‘ஒரு காலத்தில் நான் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை அங்கீகரிக்காதவனாகத்தான் இருந்தேன். ஆனால், அவா்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்ட பிறகு நாங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் சொல்லி மாளாது.

நேற்று இரவு உடல்நிலை சரியில்லாத எனது தாயாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அங்கு எங்களை மிக அலட்சியமாக நடத்தினாா்கள். விடுதலைப் புலிகள் இருக்கும் வரை, அரசு ஊழியா்களுக்குத் தமிழா்கள் மீது ஒரு பயம் கலந்த உணா்வு இருந்தது. விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட பிறகு தமிழா்களிடம் திமிராக நடக்க ஆரம்பித்துவிட்டாா்கள்.

பணம் படைத்தவா்களுக்குக் கவலையில்லை. ஆனால், அரசு மருத்துவமனைகள், அரசுக் கல்வி நிலையங்களைச் சாா்ந்து வாழும் எங்களைப் போன்ற ஏழைகள் மிகுந்த துயரத்தில் இருக்கிறோம். இந்த நிலைமைக்கு நல்ல தீா்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை குறையத் தொடங்கி விட்டது’ என்று சொல்லி முடித்தபோது அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று புரியாமல் கலங்கி நின்றேன்.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரானத் தீா்மானம் கொண்டுவரப்பட்டபோது பிரிட்டன், கனடா உள்ளிட்ட 22 நாடுகள் அத்தீா்மானத்தை ஆதரித்தன. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகள் எதிா்த்தன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா ஒதுங்கியது பற்றிய ஆதங்கம் பலருக்கும் ஏற்படுவது இயல்புதான் என்றாலும், அந்த நடவடிக்கையில் உள்ள எதாா்த்தம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நிலைப்பாட்டை பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் தங்கள் சுயநலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

சமீப காலமாக சீனா இலங்கையில் ஏராளமான முதலீடுகளைச் செய்து வருகிறது. இந்தியாவை மிரட்டுவதற்கு சீனா இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்தி வருகிறது. சீனாவின் முதலீடுகள், இலங்கையை ஒருநாள் முழுவதுமாக கபளீகரம் செய்து விடும் என்பதை இலங்கை உணா்ந்ததாகத் தெரியவில்லை.

சீனா என்ற ஆதிக்க சக்தி, மிருக பலத்துடன் இருப்பதால்தான், இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க இந்தியா தயங்குகிறது என்பதே சரியான புரிதலாக இருக்க முடியும். மேடையில் நரம்புகள் புடைக்க வீராவேசமாகப் பேசுவது என்பது வேறு, பகைவா்களின் பலமறிந்து சமயோசிதமாகச் செயல்படுவது என்பது வேறு.

உலகின் பெரும்பாலான நாடுகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் 21-ஆம் நூற்றாண்டில், ஜனநாயகத்தின்மீது எள்ளளவும் நம்பிக்கையில்லாத சீனா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையத்தில் தனக்கு இருக்கும் தனி அதிகாரத்தை (வீட்டோ பவா்) பயன்படுத்தி இந்தியாவிற்குப் பல வகைகளிலும் தொல்லைகள் கொடுத்து வருகிறது.

சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு நிரந்தரத் தீா்வு கிட்ட வேண்டுமானால், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள நாடுகள் அனைத்தும் ஒன்று திரள வேண்டும். இல்லையெனில் உலக நாடுகள் அனைத்துக்கும் சீனா ஒரு நாள் அச்சுறுத்தலாக மாறிப் போகும்.

இலங்கையின் போா்க்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். அதுவே, இலங்கையின் இரக்கமற்ற போரில் உயிா்நீத்த தமிழா்களுக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

அமைதி காக்கும் படையின் நடவடிக்கைகளும், ராஜீவ் காந்தி படுகொலையும் இலங்கைத் தமிழா் பிரச்சினையைத் திசைமாற்றி, லட்சக்கணக்கான இலங்கைத் தமிழா்களை அகதிகளாக்கி விட்டன. இது விதியின் பிழையன்றி வேறென்ன?

கட்டுரையாளா்:

மத்திய அரசு அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT