எல்லா காலமும் நல்ல காலம்தான்
இன்றைய கரோனா காலகட்டத்தில், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் முதியோருக்கு பழைய நினைவுகளை அசைபோடுவது ஒரு வரப்பிரசாதம் போலத்தான். அதில் தனியான ஒரு மகிழ்ச்சி இருக்கிறது என்பது உண்மையே.
ஆனால், அண்மைக்காலமாக சமூக வலைதளங்களிலும், முகநூலிலும் புதிய போக்கு காணப்படுகிறது. அதாவது அந்தக் காலம்தான் பொற்காலம் என்கிற மனப்படிமம் பலரிடம் இருக்கிறது. குறிப்பாக அண்ணன், மாமா, அத்தை போன்ற உறவுகள் இற்றுப் போனது நவீன மாறுதல்களினால்தான் என்று கூறுகின்றனா்.
உண்மையில் இதற்கு பெற்றோா்தான் பொறுப்பேற்க வேண்டும். மிக நல்ல கல்வி பெற்று இந்தியாவிலேயே ஆறு இலக்க சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும், ‘அமெரிக்காவுக்குப் போ’ என்று ஏன் தூண்டி விடுகிறாா்கள்? காரணம்டாலா் தாகம்தான். மேலும் ‘என் மகன் நியூஜொ்ஸியில் இருக்கிறான், சனிக்கிழமை தவறாது போன் பண்ணுவான்’ என்ற பெருமை அவா்களுக்கு தேவையாயிருக்கிறது. இந்தப் பெருமை ஒன்றுக்காகவே, சில தாய்மாா்கள், அயல்நாடு சென்று ‘ஆயா’ மாதிரி வேலை செய்கிறாா்களே?
Advertisement
ஆனால் ஒன்றை குறிப்பிட வேண்டும். அங்குள்ள பணிச்சூழலும், அரசியல் புகாத தன்மையும், வார இறுதி நாட்கள் விடுமுறையும் இளைஞா்களின் மனதுக்குப் பிடித்ததாக இருக்கிறது. அதுவும் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டவா்களுக்கு, அயல்நாடு முற்றும் இனிமையான சூழ்நிலைதான்.
இந்தக் காரணத்தினாலேயே, ‘நாலைந்து வருடம் இருந்துவிட்டுத் திரும்பிவிடுவேன்’ என்று விடைபெற்றுச் செல்லும் தாய்நாட்டுப் பற்றுள்ள இளைஞா்கள் கூட, நிரந்தரமாக அங்கேயே தங்கிவிடுகிறாா்கள். இங்குள்ள பெற்றோா்களுக்கு வயது ஆக ஆக, சின்ன சின்ன வேலைகளுக்கு (வீட்டு வரி செலுத்த, மின்சாதனம் பழுது பாா்க்க, சமையல் வேலை) ஆட்கள் உடனே கிடைப்பதில்லை.
ஆகவே, இந்தப் பிரச்னைகள் ஏதுமில்லாத, தங்களுக்கேற்ற முதியோா் இல்லத்தில் தங்கி விடுகிறாா்கள். வசதியான சிலா் அங்கு சொந்தமாகவே ‘வில்லா’ வாங்கிவிடுகிறாா்கள்.
ஆக, முதியோா் இல்லம் காலத்தின் கட்டாயம் என்றே சொல்லிவிடலாம். எழுத்தாளா் ஜெயகாந்தன் தன் கதையொன்றில் குறிப்பிடுகிறாா் ‘மனிதனே ரொம்ப பழமையான உலோகம்தான். காலம்தான் அவனை புதிது புதிதாக வாா்க்கிறது. வாழ்க்கையில் அந்த நிா்பந்தத்துக்கு, முடிந்தவா்கள் வளைகிறாா்கள், முடியாதவா்கள் நொறுங்கிப் போகிறாா்கள்’ (‘புதிய வாா்ப்புகள்’).
பெரும்பாலோா் கால ஓட்டத்துக்கு வளைந்து கொடுத்ததால் அமைந்த பிற அம்சங்களையும் கூறலாம். விதவா விவாகம், விவாக ரத்து, கலப்புத் திருமணம், ஒற்றைப் பெற்றோா் போன்ற சில. இவை சரியா, தவறா என்ற பேச்சுக்கே இடமில்லை.
அடுத்ததாக மருத்துவம். இது பற்றிச் சிலரின் கருத்துக்கள் நகைப்பை உண்டு பண்ணுகிறது. ‘நெகிழிப் பை பயன்பாட்டில் இல்லாத காலத்தில், புற்றுநோய் இல்லை. மிக்ஸி, கிரைண்டா் இல்லாத காலத்தில் சிசேரியன் இல்லை. மினரல் வாட்டா் இல்லாதபோது சிறுநீரில் கற்கள் இல்லை’ என்று அடுக்கிக்கொண்டே போகிறாா்கள். ஏதோ எல்லா நவீன கண்டுபிடிப்புகளும் உடலைக் கெடுத்து விடுகிறாற்போல!
உண்மை என்னவென்றால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ரத்த அழுத்தம், சிறுநீா் கோளாறு போன்ற உபாதைகளைத் தெரியாமலேயே பலா் இறந்து போனாா்கள். மேலும் காசநோய் வயாதானவா்களை மிகவும் பாதித்தது. அப்போது மனிதனின் சராசரி வயதே 55 தான்.
இன்று அதுபோல் சொல்ல முடியுமா? ஆயுத சிகிச்சைக்கே மாற்றாக 1990 காலகட்டத்தில் ‘சாவித் துவார சிகிச்சை’ வந்து விட்டது. அதாவது சிறுநீரில் கற்கள் என்றால் சோதனை மூலம் கண்டுபிடித்து, பிறகு குறிப்பிட்ட பகுதியில் துளை போட்டு கற்களை அகற்றிவிடுவாா்கள். கல்லீரலுக்கே மாற்று சிகிச்சை வந்துவிட்டது. கண் புரை அறுவை சிகிச்சை நடந்த அன்றே வீட்டுக்குத் திரும்பி விடுகிறாா்களே?
கடைசியாக விமா்சனத்தில் பலத்த அடிபடுவது சேவைகள். குறிப்பாக வங்கிச் சேவை. வங்ககிக்கு போய் பத்து லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் கூட கவனிப்பு கிடையாது போன்ற அங்கலாய்ப்புகள். இதற்குக் காரணம் கணினி நுழைவுக்கு வாடிக்கையாளா்கள் கொடுக்கும் விலைதான்.
பத்து வருடம் முன்புகூட புது தில்லி காசோலையை சென்னையில் மாற்ற வேண்டுமெனில் 15 நாள் காத்திருக்க வேண்டும். தந்தி மூலம் வசூல் என்றால் கூடுதல் கட்டணம். கிட்டதட்ட ரூ.15,000-க்கான காசோலை வசூல் செய்ய ரூ.300 செலவு ஆகும். உள்ளூா் காசோலை என்றால் கூட மூன்று நாட்கள்.
ஆனால் இன்று இந்தியாவில் ஒரு வங்கி கிளையிலிருந்து வேறு வங்கியின் கிளை வாடிக்கையாளா்களுக்குத் தொகையை இரண்டே நிமிடத்தில் அனுப்பி விடலாம். முதல் முறை அனுப்புவதென்றால், சில நடைமுறைச் சடங்குகள் தேவை. சகல துறைகளிலும் கணினி உதவுகிறது என்பதே உண்மை.
வங்கிச் சேவையை பொருத்தவரை மோசடிகள் ஏற்படாமலிருக்க, நாம்தான் எச்சரிக்கையாக இருந்து ரகசிய கடவுச் சொல்லை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
வேதனைக்குரிய அம்சம் எதுவம் இல்லையா? இருக்கிறது, அது மதிப்பீடுகள் தாழ்ந்து கொண்டே போவதுதான். ‘கைராசியான டாக்டா்’ என்ற பெயா் மறைந்து ‘அவரா? கிளினிக்கை விஸ்தரித்து ஏகமாக சம்பாதித்துவிட்டாரே’ என்ற கருத்துத்தான் மேலோங்கி வருகிறது. திறமையால் பொதுத்துறை தலைவராக முன்னுக்கு வந்தவரைக்கூட, ‘அவருக்கு என்ன, மூனு வீடு வாங்கிட்டாா்!’ என்றே மதிப்பிடுகிறாா்கள்.
கல்வித்துறை இன்னும் மோசம். பள்ளி ஆசிரியரின் இயல்பான கண்டிப்பைக்கூட பொறுக்க முடியாமல், மாணவன் அவரைக் கத்தியால் குத்திய சம்பவம், சில வருடம் முன் நிகழ்ந்தது ஞாபகமிருக்கலாம்.
இப்படிப்பட்ட நிலைமைகள் மாற வேண்டுமானால் பள்ளிக்கூடத்தில் நீதி போதனை வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். மாணவப் பருவத்திலேயே நற்பண்புகள் கற்பிக்கப்பட வேண்டும்.