முகப்பு
செய்திகள்

அந்த நாள் ஞாபகம்! எம்ஜிஆரின் பெருந்தன்மை!

தமிழக அரசியல் களத்தில் 1980-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் சுவாரஸ்யமானது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 1:20 AM
எம்ஜிஆர் - கருவூலத்திலிருந்து...
பகிர்:

சி.ஆர்.எம். சபரி

தமிழக அரசியல் களத்தில் 1980-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் சுவாரஸ்யமானது. சேலம் மாவட்டத்தில் அப்போதைய தாரமங்கலம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட செம்மலை, 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தார்.

அந்தத் தேர்தல் குறித்து முன்னாள் அமைச்சர் செம்மலை நம்மோடு பகிர்ந்துகொண்டது: 1972-இல் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, நானும் அவரோடு இணைந்து பயணித்தேன். 1977 தேர்தலில் முதல்முறையாக தாரமங்கலம் தொகுதியில் போட்டியிட எம்ஜிஆர் எனக்கு வாய்ப்பு தந்தார். அப்போது, காங்கிரஸ் வேட்பாளர் குட்டப்பட்டி ஆர். நாராயணனிடம் வெறும் 19 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தேன். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டேன்.

Advertisement

மறு எண்ணிக்கைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நீதிபதி முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது, அதே 19 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டேன். தீர்ப்பு வெளியான அன்றே, சட்டப்பேரவைக்கு சென்று, பேரவை உறுப்பினராகப் பதவியேற்று, அடுத்த நாளே முதல் பேரவை விவாதத்திலும் பங்கேற்றேன். ஒரு மாத இடைவெளியில் உச்ச நீதிமன்றத்தில் எதிர்தரப்பு மேல்முறையீடு செய்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தடையாணை பெற்றது.

இந்நிலையில், 1980-ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டது. அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தாரமங்கலம் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கேட்டேன். அப்போது, தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

தாரமங்கலம் தொகுதி மக்களின் வற்புறுத்தல் காரணமாக சுயேச்சையாக களமிறங்க சம்மதித்தேன். அந்தத் தேர்தலில், "விமானம்' சின்னத்தில் போட்டியிட்ட நான், கட்சி பேதமின்றி தொகுதி மக்களின் ஏகோபித்த ஆதரவால், 22,383 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.

என்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் பெருமாள் வைப்புத்தொகையை இழந்தார். இதில், குறிப்பிட்ட அம்சம் என்னவென்றால், கட்சி பேதமின்றி சுயேச்சையாக நின்ற எனக்கு தொகுதி மக்களிடம் ஆதரவு இருப்பதை அறிந்த எம்ஜிஆர், அப்போதைய கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் வற்புறுத்தி கேட்டுக்கொண்டபோதிலும், என்னுடைய தொகுதிக்கு பிரசாரம் செய்ய வரவில்லை. அதுவும் எனது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

தேர்தலில் எனக்கு விமானம் சின்னம் ஒதுக்கப்பட்டது. வெற்றி பெற்றால், நேராக ராமாபுரம் தோட்டத்தில்தான் விமானம் தரையிறங்கும் எனக் கூறி வாக்கு கேட்டேன். வெற்றி பெற்றதும், எம்ஜிஆரை சந்தித்தேன். என்னை அவர் கட்டியணைத்து ஆரத்தழுவிக் கொண்டார். எம்ஜிஆரின் தயாள குணத்துக்கு இதுஒரு சான்று என்றார் செம்மலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments