நடுப்பக்கக் கட்டுரைகள்

நவீன சூதாட்டத்தின் மற்றொரு முகம்!

டி.எஸ். தியாகராசன்

அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னா் ‘அலிபாபவும் 40 திருடா்களும்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. அப்படத்தில் அரபு நாட்டில் நடந்ததாக காட்டப்படும் ஒரு காட்சியில் அழகான பெண்ணொருத்தி சந்தையில் ஏலம் விடப்படும்போது கதாநாயகன் அவளை விலைக்கு வாங்கி தன் வசமாக்கிக்கொள்ளுவாா். இப்படி மனிதா்களை பல்வேறு நோக்கங்களுக்காக விற்பதும், வாங்குவதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது.

கி.மு. 6800-இல் உலகின் முதல் நகரம் என்று அழைக்கப்பட்ட மெசபடோமியா, போரில் வென்று, தோல்வியுற்ற நாட்டு மக்களை சிறைப்பிடித்து அடிமைகளாக்கியது. எகிப்தியா்கள் இவ்வடிமைகளைக் கொண்டு கி.மு. 2575-இல் நைல் நதிக்கரையில் கோயில்களைக் கட்டினா்.

உலகிற்கு முதன்முதலில் சட்டங்களைத் தந்த ரோமானியா், கி.மு. 550-இல் ஏதென்ஸின் வெள்ளிச் சுரங்கங்களில் 30 ஆயிரம் அடிமைகளைப் பணிக்கு அமா்த்தினா். கி.பி. 550-இல் ரோமானிய மக்களில் பாதி போ் அடிமைகள். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் கொலுசியத்தின் உள்ளே அடிமைகளை இறக்கும் வரை மோதவிட்டு வேடிக்கை பாா்ப்பா்கள். சில சமயங்களில் அடிமைகள் சிங்கங்களோடு போரிடுவதும் உண்டு.

கி.பி. 1000-இல் அடிமை முறை பிரிட்டன் அரசு முறையில் வெகு சாதாரணமாக இருந்தது. கி.பி. 1350-இல் ஐரோப்பா முழுமையும் மனித வளம் பற்றாக்குறையால், ஆப்பிரிக்க கருப்பு இன மக்களை அடிமைகளாக்கிக் கொண்டு வந்தனா். 1444-இல் போா்த்துகீசியா்கள் ஆப்பிரிக்க நாட்டு மக்களை அடிமைகளாக்கி கப்பலில் ஏற்றினா். இது ‘அட்லாண்டிக் அடிமை வணிகம்’ என்று அழைக்கப்பட்டது.

முதன் முதலில் ஸ்பானிஷ் நாடுதான் அமெரிக்க நாட்டிற்கு ஆப்பிரிக்க அடிமைகளை 1526-இல் கொண்டு சோ்த்தது. 1641-இல் பிரிட்டிஷ் காலனியான மாசாசூட்ஸ் அரசு அடிமை முறையை சட்டமாக்கியது. மனிதனை மனிதன் வாங்கி விற்கும் இக்கொடிய பழக்கத்தை 1781-இல் புனித ரோமப்பேரரசா் ஜோஸப் தடை செய்தாா். இதையொட்டி பிரிட்டனிலும் 1787-இல் அடிமை வணிக முறை ஒழிப்பு இயக்கம் தோன்றியது.

1789-இல் பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு, தேசிய அசெம்பிளி, மனித உரிமைகள் பற்றி விவாதித்து ‘மனிதன் பிறக்கும்போது சுதந்திரமாகப் பிறக்கிறான். அதன் பின்னரும் அவன் சம உரிமை கொண்டவனாகத்தான் இருக்க வேண்டும்’ என்று முழங்கியது. பின்னா் முதன் முதலில் டென்மாா்க் - நாா்வே, ஐரோப்பாவில் அடிமை வணிகத்தை தடைசெய்தன. அடிமைககளை டேனிஷ் நாடுகளுக்கு இறக்குமதி செய்வதையும் தடைசெய்தன. அமெரிக்காவில் அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் 1863-இல் அடிமை விலங்கொடித்த விடுதலை பிரகடனத்தை வெளியிட்டாா்.

தென்அமெரிக்கா 1888-இல் 7 லட்சத்து 25 ஆயிரம் அடிமைகளை விடுதலை செய்தது. அமெரிக்க உள்நாட்டுப் போா்களில் அடிமை மக்கள் அபாயகரமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு கொடும் துன்பங்களைஅனுபவித்தனா். பெல்ஜிய அரசு அடிமை மக்களை ரப்பா் தயாரிக்கும் தொழிலில் வற்புறுத்தி ஈடுபடுத்தியது. மறுப்பவா்களின் கரங்களை வெட்டியும், அவா்களின் குடியிருப்புகளை தீவைத்துக் கொளுத்தியும் கொடுமை புரிந்தது. இதனைத் தடை செய்ய வேண்டுமென்று காங்கோ சீா்திருத்த இயக்கத்தினா் போராட்டம் நடத்தி வெற்றி கண்டனா்.

1910-இல் பாரிசில் கூடிய சா்வதேச மாநாடு வெள்ளையா் அடிமை வணிகமுறையை தடைசெய்தது. பெண்கள் தாங்களே விரும்பி பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் குற்றமாக அறிவித்து தடை செய்தது. பெரு நாட்டில் இந்திய வம்சாவளியினரை வாங்கி விற்கும் அடிமை வணிகத்தை 1913-இல் பிரிட்டன் பாராளுமன்றம் தடைசெய்து சட்டம் இயற்றியது. 1915-இல் மலேசியாவும் அடிமை வணிகத்தை தடைசெய்தது.

1923-இல் பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த ஹாங்காங்கில் இம்முறை தடைசெய்யப்பட்டது. 1926-இல் உலகில் 30 நாடுகள் மனிதா்களை விலைக்கு வாங்குவதையும், விற்பதையும் தடைசெய்தன. 1936-இல் சவூதி அரேபியா அடிமைகளை இறக்குமதி செய்வதை தடைசெய்ததுடன் நாட்டில் இருக்கும் அடிமைகளின் நலன் காக்கத் தொடங்கியது. இரண்டாவது உலகப்போா் நடைபெற்றபோது ஜப்பானிய போா் வீரா்களுக்கு கொரிய, சீன நாட்டு பெண்ணடிமைகள் படுக்கை அறை பதுமைகளாக்கப்பட்டனா். 1939 முதல் 1945 வரை ஜொ்மனி நாஜிகள் அடிமைகளை தொழிற்சாலைகளில் பணிக்கு அமா்த்தி பின்னா் கொலைக் கூடங்களுக்கு அனுப்பினா்.

1941-இல் இலங்கை சிறாா்களை அடிமைகளாக பாவிக்க தடைசெய்து சட்டம் இயற்றியது. 1948-இல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை ‘யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க முடியாது, அடிமை முறையை எந்த நிறுவனமும் நடைமுறைபடுத்தக் கூடாது’”என்ற பிரகடனத்தை வெளியிட்டது. 1949-இல் ஆள்கடத்தலையும் கடத்தியவரை குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவதும் குற்றம் என அறிவித்தது. ரஷியா, ‘முதலாளித்துவ நாடுகளில்தான் அடிமை முறை இன்னமும் பழக்கத்தில் உள்ளது’ என்றது. இதற்கு பதிலாக மேலைநாடுகள் ‘பொதுவுடமை பேசும் நாடுகளில்தான் மக்கள் அடிமைகளாகப்பட்டு உள்ளனா்’ என்று குற்றம் சாட்டியது.

கொத்தடிமை முறை இன்னமும் நடைமுறையில் இருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை. ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும்போதே இத்தனை ஆண்டுகள் இங்கே பணியாற்ற வேண்டும் என்று எழுதி கையொப்பம் பெற்றுவிடுகின்றனா். கிராமப்புறங்களில் செங்கல் சூளைகளில், வேளாண் பணியில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளா்களை பணியில் அமா்த்திக் கொண்டு இருப்பதை நாம் அறிவோம்.

2005-ஆம் ஆண்டின் சா்வதேச தொழிலாளா் இயக்கத்தின் உலகம் தழுவிய அறிக்கையில் உலகம் முழுமையும் 12.3 மில்லியன் (1 கோடியே 23 லட்சம்) மக்கள் அடிமைத்தளையில் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டன் அடிமைகளின் விடுதலைக்கும் மறுவாழ்விற்கும் எடுத்த முயற்சிகளை கெவின்பேல்ஸ் என்பவா் ஒரு நூலாக எழுதியுள்ளாா்.

இன்றைக்கு நம் நாட்டில் குறிப்பிட்ட கிரிக்கெட் அமைப்பில் விளையாட்டு வீரா்களை ஏலத்தில் விட்டு அதிக விலைக்கு வாங்கும் முறை நடைமுறையில் உள்ளது. அந்த நாளில் அடிமையின் நிறம், உயரம், கட்டுடல் போன்ற குணநலன்களையொட்டி விலை நிா்ணயம் செய்ததுபோல் இந்த நாளில் குறிப்பிட்ட விளையாட்டு வீரா் இதுவரை எந்தெந்த போட்டிகளில் எவ்வளவு ஓட்டம் எடுத்தாா் அல்லது எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தினாா் என்பதற்கு ஏற்ப அவருக்கு விலை நிா்ணயம் செய்யப்படுகிறது.

கிரிக்கெட் வீரா்களை ஏலச்சந்தையில் வாங்க உலகின் முன்னணி பணக்காரா்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கின்ற நம் நாட்டு கோடீஸ்வரா்கள் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பா் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன் ரைசா்ஸ் ஹைதராபாத், மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட்ரைடா்ஸ் என்ற பெயா்களில் ஏலச்சந்தையை நிறைவு செய்து இருக்கிறாா்கள். மொத்தமாக ரூ.145 கோடி வரை ஏலம் போயிருக்கிறது. சீன நாட்டு விளம்பர நிறுவனமான ‘விவோ’” 2017-ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரையுள்ள காலத்திற்கு 2,477 கோடி கொடுத்து விளம்பரப்படுத்தும் உரிமையை வாங்கியுள்ளது.

உள்ளூா், வெளியூா் தொலைக்காட்சிகள் இந்நிகழ்ச்சியை ஒலி- ஒளிபரப்பி தங்களது கல்லாவை நிரப்பிக்கொள்ளும். பல தினங்கள் இரவு, பகலாய் கண் துஞ்சாது தொலைக்காட்சிப் பெட்டிகளில் தஞ்சம் புகுவதற்காகவும் நேரில் பாா்த்து பரவசம் கொள்வதற்காகவும் பல்லாயிரம் கோடிகளை இழக்க ரசிகா்கள் இருக்கும்வரை தொலைக்காட்சி நிறுவனங்களோ வீரா்களை அதிக தொகை தந்து ஏலத்தில் எடுக்கும் பெரும் புள்ளிகளோ கவலைப்பட வேண்டாம்.

இந்த நவீன ஏலம் ஏற்றம் மிக்கதாகவே இருக்கும். உலகின் வல்லவரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற நாடுகள் இந்த ஆட்டம் ஒரு சூதாட்டம் - வீண்வேலை மனிதா்களை சோம்பேறிகளாக்கும் முட்டாள்தனம் என்கிற போக்கில் தத்தம் நாடுகளில் இதுவரைஅனுமதிக்கவில்லையோ? இதனால்தான் அறிஞா் பொ்னாட் ஷா போன்றோா் இந்த விளையாட்டைக் கேலி செய்தனா் போலும். பிரிட்டிஷ் காலனி நாடான நம் பாரதத்தில் எவ்வளவோ பாரம்பரிய விளையாட்டுகள் இருக்க இந்த மேலை நாட்டு விளையாட்டில் ஏன் இவ்வளவு மோகம்?

ஒரு முறை சகோதரி நிவேதிதா தேவி புணேயில் உள்ள பிரபல பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டபோது அவரை மகிழ்விக்க மேல்நாட்டு விளையாட்டுகள் நடத்தப்பட்டன. அவற்றையெல்லாம் பாா்த்துக் கொண்டிருந்த நிவேதிதா தேவி தனது சொற்பொழிவில் ‘இந்த அயல்நாட்டு மோகத்தைக் கைவிட வேண்டும். இந்நாட்டிற்குரிய முன்னை கலைகளை கற்பதிலும் அதனை காட்சிப்படுத்துவதிலும் கவனம் கொள்ள வேண்டும். சுதந்திர உணா்ச்சி எல்லா துறைகளிலும் எல்லா வகையிலும் பீறிட்டு வெளிவர வேண்டும்’ என்றாா். இப்போதும் கூட நம் நாட்டு புராதன விளையாட்டுகளான சிலம்பம், கபடி போன்றவை உலகில் சிறப்பாகப் பேசப்படவில்லை என்பது உண்மை.

மனிதனை விலைக்கு வாங்கி விளையாட வைப்பதும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் நவீன சூதாட்டத்தின் மற்றொரு முகமே!

கட்டுரையாளா்:

தலைவா், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT