சமீபத்தில், "குடும்பம் என்பது ஆணாதிக்க அமைப்பு முறை' என்றொரு வாசகத்தைக் கேட்க நேர்ந்தது. குடும்பம் என்பது இங்கே மனிதரின் ஆரோக்கிய வாழ்க்கைக்கான அடித்தளம் அல்லவா? ஆதிக்கம், அடிமைத்தனம் போன்ற எண்ணங்களை மனித மனம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு அன்பு, தயை, காதல் போன்ற மென்னுணர்வுகளை, இன்பத்தை அடைவதற்கான வழிதானே குடும்பம்.
பாரத தேசத்தைப் பொறுத்தவரை இங்கே ஆணும் பெண்ணும் கூடி வாழ்தல் என்பது அறம். தமிழர் வேதமாம் திருக்குறள் இல்லறம் என்றே அதனைக் கூறுகிறது. இல்லறவியல், ஆணும் பெண்ணும் கூடி வாழ்ந்து ஆற்ற வேண்டிய கடமைகளைப் பட்டியலிடுகிறது. அப்படியிருக்க, குடும்பம் என்பது ஆணாதிக்க அமைப்புமுறை என்ற கருத்து ஏன் முன்வைக்கப்படுகிறது?
ஒரு குருவியின் கூடு அந்த ஒற்றைக் குருவியின் அறிவும் உழைப்பும் மட்டுமல்ல. அது பல்லாயிரம் ஆண்டுகால அனுபவத்தின் தொடர்ச்சி. அதுபோலவே நம்முடைய குடும்ப அமைப்பு என்பதும், பல நூறு தலைமுறை மாந்தரின் அனுபவத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறப்பான பாதுகாப்பு அமைப்பு.
யாருக்கான பாதுகாப்பு என்ற வினா இன்றைக்கு எழலாம். ஆண், பெண், சமூகம், கலாசாரம், பண்பாடு, மொழி, அறம் என அனைத்தின் பாதுகாப்பும் குடும்பம் என்ற அமைப்பின் வழியாகவே தொன்றுதொட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையை உடைத்துவிட்டால், அல்லது சிதைத்துவிட்டால் இனத்தையே முழுமையாக இல்லாமல் செய்துவிடல் சாத்தியமாகிவிடும்.
பெண்ணியம் என்ற கருத்தாக்கத்தை நம்புவோர், குடும்பம் என்பது ஆணாதிக்க அமைப்பு முறை என முன்வைக்கின்றனர். பெண் போகத்திற்கானவள், அதற்கான வாய்ப்பு இல்லாவிடில் அவளைத் துறந்து அடுத்தொரு பெண்ணிடம் தன்னுடைய உறவைப் புதிதாகத் தொடங்கி கொள்ளலாம் என்ற மேற்கத்திய சிந்தனையில் இதற்குப் பொருள் இருக்கலாம்.
பாரத தேசத்திலோ திருமணம் என்பது பல ஜென்மங்களாகத் தொடர்ந்து வரும் ஆணுக்கும் பெண்ணுக்குமான பந்தம். பெண் போகத்திற்கானவள் அல்ல. அவள் சகதர்மிணி, அர்த்தாங்கினி, இல்லாள், இல்லத்தரசி.
"வித்யாமித்ரம் ப்ரவாசேஷு பார்யாமித்ரம் க்ருஹஸ்சஸ
வ்யாதித ஒளஷதம் மித்ரம் தர்மோ
மித்ரம் ம்ருதஸ்யச'
என்கிறது ஒரு சம்ஸ்க்ருத சுபாஷிதம். அதாவது, அயல்தேசத்தில் கற்ற கல்வியும், இல்லத்தில் மனைவியும், நோயுற்றால் மருந்தும், மரணத்தில் தர்மமுமே நண்பர்கள். இங்கே, ஆணின் சிறந்த நட்பாகப் பெண் இருக்கிறாள்.
பெண்ணும் ஆணும் இணைந்து வாழ வேண்டியதே இயற்கையின் விதிமுறை. ஒருவரின்றி மற்றவர் வாழ்க்கை முழுமையடையாது என்ற அடிப்படையிலேயே வாழ்வியல் முறைகளை நன்கு உணர்ந்த நம் முன்னோர் நமக்கு வகுத்துத் தந்திருக்கின்றனர். ஆண், பெண்ணின் துணையோடுதான் தர்ம காரியங்களில் ஈடுபடல் சாத்தியம் என்ற விதிமுறையே, பெண்ணுக்குரிய சரிபாதி உரிமை இடத்தை வழங்குவதற்கானதே.
"பெண்ணின் இன்றைய நிலையை உணர்ந்து கொள்ளாமல், அதற்கான தீர்வுகளைப் பற்றிப் பேசாமல், வேத காலத்தில் பெண்கள் இப்படி இருந்தார்கள். தெய்வமாக வணங்கப்பட்டார்கள் என்று வேத காலப் பெண்களையும், ஒளவையாரையும் எத்தனை காலத்திற்கு உதாரணமாகக் கூறி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளப் போகிறீர்கள்? பெண்களுக்கெதிரான வன்முறைகள், பாலியல் தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காணுங்கள்' என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மைதான் என்றாலும், வள்ளுவப் பேராசான் நமக்குக் கற்றுக் கொடுத்ததை மனதில் கொண்டு அணுகலாம். "நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'. இன்றைய பிரச்னையின் மூலகாரணம் யாது எனத் தெரிந்து அதனை சரிசெய்து கொள்வது தீர்வாக இருக்கும். அதைவிடுத்து ஆணுக்கு எதிர் நின்று போராடுவது எப்படித் தீர்வாக இருக்க முடியும்?
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இங்கே பெண்களுக்கெதிரான மனநிலையும் கொடுமைகளும் தொடர்வதாகச் சொல்லும் கருத்தின் உள்நோக்கம் என்ன? சிந்திக்க வேண்டும். லட்சுமி கிருஷ்ணன், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தவர். நம்மோடு இருப்பவர். இன்றைக்குக் கேள்விப்படுவதைபோல அன்றைக்கு எவ்விதத் தொந்தரவும் இருக்கவில்லை. மாறாக, பெண்களின் பங்களிப்பு இல்லாமல் நாம் எதையும் சாதிக்க முடியாது என்ற நம்பிக்கையே இருந்தது என்கிறார்.
பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் இன்றும் தீவிர செயற்பாட்டாளராக இருக் கிறார். அவர், பூதான இயக்கத்திற்கென வினோபா பாவே அவர்களுடன் நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்ட காந்தியவாதி. தங்கள் போராட்டங்களில் ஆண் - பெண் பேதமற்ற செயல்பாட்டோடு, லட்சியமே பிரதானமாக இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். ஆக, பல்லாயிரம் ஆண்டுகால அடிமைத்தனம் என்பதில் உண்மையில்லை.
சில பத்தாண்டுகளுக்கு முன் பெண் பொருளாதார சுதந்திரம் அடைந்து தனக்குத் தொல்லை தரும் குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறி தனித்து வாழ்வதே புதுமைப் பெண்ணின் அடையாளம் என்ற தீவிரமான பிரசாரம் அழுத்தமாக இருந்தது. என்றாலும், பிரச்னை தீரவில்லை. இன்றைக்குப் பொருளாதார சுதந்திரம் சாத்தியமாகியிருக்கிறது, பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது. பெண்ணியவாதிகளேகூட எதிர்பார்த்திராத சிக்கல், உளவியல் ரீதியாக ஏற்பட்டிருக்கிறது. மனதில் தனிமை பெரும் சுமையாக மன அழுத்தமாக உருவெடுத்திருக்கிறது.
இதற்கான தீர்வு மறுமணம், கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்ற இன்னொரு முறையைப் பற்றியும் பேசுகிறார்கள். நல்லவேளையாக நம் முன்னோர்கள் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் ஒழுக்க சிந்தனைகளால் நம் குடும்பத்துப் பெண்கள் அத்தகைய முறைகளைப் புறந்தள்ளுகிறார்கள். மறுமணம் என்பது மீண்டும் குடும்ப அமைப்புக்குள் வருவதுதான். குடும்ப அமைப்பைப் புறந்தள்ளினால் குழந்தைகளின் மனநிலையில் தோன்றும் சிக்கல்களுக்கு யார் விடை சொல்வது?
ஒரு நடைமுறை அமைப்பை வேண்டாமென உதறுவதற்கு முன், அதை உதறிவிட்டு நாம் கைகொள்ளப் போகும் அமைப்பு யாது? அந்த அமைப்பு தற்போதைய அமைப்பைவிட மேம்பட்டதா என்று சிந்தித்து முடிவு செய்வதே அறிவுடைமையாக இருக்கும்.
அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவருக்கு மனநலப் பிரச்னை இருப்பதாக "மெண்டல் ஹெல்த் அமெரிக்கா' என்ற அமைப்பு கூறுகிறது. 46 சதவீத அமெரிக்கர்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் மனநல சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கிறது. இத்தகைய நிலை செல்வ வளம் கொழிக்கும் ஒரு தேசத்தில் ஏன் ஏற்படுகிறது? சுகம் துய்ப்பதும், ஆடம்பரமான பொருள் சேர்க்கும் சொகுசு வாழ்க்கையும் தேடும் மேற்கத்திய கலாசாரம் ஏன் இப்படித் தடுமாற வேண்டும்?
ஏனெனில், அவர்களுக்கு எதிர்பார்ப்பற்ற அன்பு கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. குடும்பம், தாய், தந்தை, உடன் பிறந்தோர், தாத்தா, பாட்டி என்ற உறவுகள் அவர்களை அரவணைப்பதற்கு இல்லை. குழந்தைகளின் சிறு வயதிலேயே பெற்றோர் இருவரும் தத்தமது வழிகளில் பிரிந்து சென்று புதிய வாழ்க்கைத் துணையோடு தங்கள் வாழ்வைத் தொடர்கின்றனர். இந்த நிலையிலிருந்து விடுபட்டு நிறைவான வாழ்க்கை வாழ அவர்கள் ஆன்மிகம் மற்றும் யோக வகுப்புகளை நாடிப் பெருமளவில் வருகின்றனர்.
நம்முடைய பெரியோர்கள் சுகம் துய்ப்பது மட்டுமே வாழ்க்கையல்ல, அது அறவழிப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தியிருக்கும் வாழ்வியல், நம் தேசத்தை இன்றளவும் காத்து வருகிறது. அன்பின் அடிப்படையில் இருவரும் இணைந்து அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டும், முந்தைய தலைமுறையைப் பாதுகாக்க வேண்டும். அதாவது, கூடி வாழ்தல்.
இந்தக் கூடி வாழ்வதில் விட்டுக்கொடுத்தல், அனுசரித்து நடந்து கொள்வது போன்ற வளைந்து கொடுக்கும் தன்மை கட்டாயமாகிறது. இது பெண்களுக்குத்தான் என்பதில்லை, இருபாலருக்கும் பொருந்தும். தன் குடும்பத்திற்காக இளமைக் காலம் முதல் இறுதி வரை உழைக்கும் ஆண்களே இன்றும் நம் நாட்டில் பெரும்பான்மை.
பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் களைய பல சட்டங்கள் இருக்கின்றன. அவை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கட்டும். அதே நேரத்தில், பெண்ணியம் போன்ற இரவல் சித்தாந்தங்கள் நம்முடைய கலாசாரத்தில் பொருத்தமற்றவை. தீர்வுகளைவிட சிக்கல்களையே அதிகம் ஏற்படுத்தக்கூடியவை என்ற புரிதல் அவசியம்.
"பெண் என்பவள் தாயாகவே பிறக்கிறாள்' என விவேகானந்தர் சொன்னதை நினைவில் கொள்வோம். ஒவ்வொரு தாயும் ஆண் குழந்தைகளுக்குப் பெண்களை எப்படி மரியாதையோடு நடத்த வேண்டும் என்றும், பெண் குழந்தைகளுக்கு சக ஆண்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தால் போதும். இப்படியான புதிய தலைமுறை எல்லாக் குடும்பத்திலும் உருவானால், விரும்பும் ஆரோக்கியமான மாற்றம் சாத்தியமாகி விடும்.
குடும்பம் என்ற பாதுகாப்பான அமைப்புக்குள் இருந்து கொண்டு அதில் காலத்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை செப்பனிட்டு சரி செய்து கொள்வதும், புதிய தலைமுறையின் மாற்றங்களைப் பாரம்பரிய நெறிமுறைகளோடு எதிர்கொள்வதும் மட்டுமே தீர்வு. என்னுடைய விருப்பம் என்பதைத் தாண்டி, நம்முடைய வருங்காலம் என்று நம் பார்வையை விசாலப்படுத்திக் கொண்டால் இருபாலரின் வாழ்வோடு அவர்கள் குழந்தைகளின் வாழ்வும் சிறக்கும்.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.