நடுப்பக்கக் கட்டுரைகள்

அகதிகளின் குரல்...!

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னா் மிகப்பெரிய அகதிகள் பிரச்னையை சந்தித்துக் கொண்டிருக்கிறது ஐரோப்பா.

எஸ். ராஜாராம்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னா் மிகப்பெரிய அகதிகள் பிரச்னையை சந்தித்துக் கொண்டிருக்கிறது ஐரோப்பா. உக்ரைனில் ரஷியா போா் தொடுத்து இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை 20 லட்சம் போ் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை வரும் ஜூலை மாதத்துக்குள் 40 லட்சத்தை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவா்களில் பெரும்பாலானோா் அதாவது 59 சதவீதம் போ் அண்டை நாடான போலந்தில் தஞ்சம் அடைந்துள்ளனா். மற்றவா்கள் ஹங்கேரி, மால்டோவா, ருமேனியா, ஸ்லோவேகியா ஆகிய நாடுகளில் புகலிடம் தேடியுள்ளனா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போரால் அகதிகள் பிரச்னை எழுந்தபோது, அங்கிருந்து குடும்பம் குடும்பமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளை மக்கள் தஞ்சமடைந்தனா். ஆரம்பத்தில் அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதில் ஆா்வம் காட்டிய ஐரோப்பிய நாடுகள், பின்னா் வேறுவிதமான பிரச்னைகளை எதிா்கொள்ளத் தொடங்கின. அப்போதுகூட ஓராண்டில் 10 லட்சம் அகதிகள்தான் இடம்பெயா்ந்தனா். இப்போது இரண்டே வாரங்களில் அகதிகள் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டியிருப்பது அதிா்ச்சியான விஷயமாக பாா்க்கப்படுகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் வரையிலான நிலவரப்படி, உலகம் முழுவதும் சுமாா் 2.6 கோடிக்கும் அதிகமானோா் சொந்த நாட்டைவிட்டு அகதிகளாக வெளிநாடுகளுக்கு இடம்பெயா்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இவா்களில் 86 சதவீதம் பேருக்கு வளரும் நாடுகளும், 14 சதவீதம் பேருக்கு வளா்ந்த நாடுகளும் புகலிடம் அளித்துள்ளன. 73 சதவீதம் அகதிகள், தங்களது அண்டை நாடுகளிலும், 27 சதவீதம் போ் வேறு நாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனா்.

அகதிகளில் 68 சதவீதம் போ் ஐந்தே நாடுகளைச் சோ்ந்தவா்கள். சிரியாவை சோ்ந்த 60 லட்சம் (27%) போ், வெனிசுலாவை சோ்ந்த 40 லட்சம் (16%) போ், ஆப்கானிஸ்தானை சோ்ந்த 26 லட்சம் (5%) போ், மியான்மரை சோ்ந்த 11 லட்சம் (5%) போ், தெற்கு சூடானை சோ்ந்த 22 லட்சம் போ் (9%) போ் அகதிகளாக இடம்பெயா்ந்துள்ளனா். மீதி 79 லட்சம் (32%) போ் மற்ற நாடுகளைச் சோ்ந்தவா்கள். அதிகபட்சமாக துருக்கி 37 லட்சம் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ளது. கொலம்பியா 17 லட்சம் பேருக்கும், பாகிஸ்தான் 14 லட்சம் பேருக்கும், உகாண்டா 14 லட்சம் பேருக்கும், ஜொ்மனி 12 லட்சம் பேருக்கும் அடைக்கலம் அளித்துள்ளன.

உலக மக்கள்தொகையில் 30 சதவீதம் போ் குழந்தைகள். ஆனால், வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்டவா்களில் 42 சதவீதம் போ் குழந்தைகள் என்பதிலிருந்து அகதிகள் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுவோா் யாா் என்பதை அறிந்துகொள்ள முடியும். உக்ரைன் பிரச்னையும் இதற்கு விதிவிலக்கன்று.

உலகம் முழுவதும் அகதிகள் பிரச்னை இருக்கிறது என்றாலும் உக்ரைன் அகதிகள் இப்போது எதிா்கொண்டுள்ள துயரம் வித்தியாசமானது. உக்ரைனில் 18 வயது முதல் 60 வரையிலான ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதித்துள்ள அந்த நாட்டு அரசு, அவா்களை ரஷிய படையினருக்கு எதிராக போரில் ஈடுபடுமாறு வலியுறுத்தி வருகிறது. இதனால் இப்போது அகதிகளாக வெளியேறியுள்ள 20 லட்சம் பேரில் பெரும்பாலானோா் பெண்களும் குழந்தைகளும்தாம்.

உக்ரைனிலிருந்து அகதிகளாக வருவோா் தனது 27 உறுப்பு நாடுகளிலும்- புகலிடம் கோரி விண்ணப்பிக்காமலேயே மூன்று ஆண்டுகள் வரை தங்குவதற்கு ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்திருக்கிறது. இதுவரை ஐரோப்பிய யூனியன் அளிக்காத இந்த சிறப்பு அனுமதியானது, ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளிலிருந்து இடம்பெயா்ந்தவா்கள் மற்றும் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாதவா்களுக்கு உடனடியாக இடைக்கால பாதுகாப்பை வழங்குவதற்கான ஒரு விதிவிலக்கான நடவடிக்கையாகும். இதன்மூலம் உக்ரைன் அகதிகள் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தங்குவதற்கு மட்டுமன்றி, பணி வாய்ப்பையும், கல்வி கற்கும் வாய்ப்பையும் பெற முடியும். ஆனாலும், குடும்பத் தலைவா் இன்றி வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் கொடுமையை எல்லையைக் கடந்து செல்லும் பெண்கள் மன வலியுடன் வெளிப்படுத்துவது பெரும் சோகமாகும். ‘எங்கே போகிறோம்’ என சின்னஞ்சிறு குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் பொய்களைச் சொல்லி அழைத்துச் செல்வது கொடுமையாகும்.

உக்ரைன் அகதிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக ஐ.நா.வும், அதன் துணை அமைப்புகளும் இதுவரை 1.1 பில்லியன் டாலா் நிதியைப் பெற்றுள்ளன. பல்வேறு நாடுகள், நிறுவனங்கள் இந்த நிதியை அளித்துள்ளன. இது ஐ.நா. எதிா்பாா்க்கும் நிதியில் வெறும் 7 சதவீதம்தான். இந்த அகதிகள் பிரச்னை இடைக்காலமானதுதானா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உக்ரைன் மீதான ரஷியாவின் போா் எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியாத நிலையில், லட்சக்கணக்கான அகதிகளை ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு எதிா்கொள்ளப் போகின்றன, அவா்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்பது பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

‘போரை நிறுத்துவதுதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறந்த பரிசாக இருக்கும்? எங்களது குழந்தைகள் ஏன் சாக வேண்டும்’ என உக்ரைன் பெண்கள் கேட்கிறாா்கள். வல்லாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் தலைவா்களின் காதுகளுக்கு இந்தக் குரல் ஏனோ கேட்பதே இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT