கணக்கெடுப்பில் கவனம் தேவை
அனைவரும் முழுமையான எழுத்தறிவைப் பெற வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அனைவரும் முழுமையான எழுத்தறிவைப் பெற வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக, கல்வித் துறையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி செல்லும் வயதில் உள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
வரும் கல்வியாண்டில், இடைநின்றவர்கள் தங்களின் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்ந்து கல்வியைத் தொடரவேண்டும் என்ற நோக்கில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணியைத் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.
இது வழக்கமாக ஆண்டுதோறும் நடக்கக்கூடிய பணி என்றாலும் தற்போதைய கணக்கெடுப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். கரோனா பரவலின் தாக்கம் இன்னும் முடியவில்லை. அண்மையில் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மாணவர்கள் பங்கேற்காததற்கு பெருந்தொற்று தாக்கமும் ஒரு காரணமாகும்.
கிராமப்புறங்களைப் பொறுத்தவரை ஆசிரியர் - பெற்றோரிடையே சுமுக உறவு இருப்பதால் சிரமம் இருக்காது. ஆனால் நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை பள்ளி செல்லாத சிறார்களைக் கண்டறிவது சற்று சிரமமானதாக இருக்கும்.
அவ்வாறான பகுதிகளில் அந்தந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், சுகாதார பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரை இப்பணியில் ஈடுபடுத்தலாம். அப்போதுதான் இலக்கை எட்ட முடியும்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார ரீதியாக குடும்பத்திலுள்ள
அனைவரும் பாதிக்கப்பட்டதால் பள்ளி சென்ற சிறார் தங்களின் உடற்திறனுக்கேற்றவாறு ஏதேனும் ஒரு வேலைக்குச் சென்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் சொற்ப அளவே என்றாலும் குடும்பத்தின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்தது.
அதனால் பள்ளி திறக்கப்பட்ட பின்னர் தங்கள் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. பெருந்தொற்றுக்குப் பின்னர் வருமான நோக்கில் குடும்பத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் இடம்பெயர்ந்த இடத்தில் தங்கள் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டவில்லை.
இங்கு மற்றொரு விஷயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கரோனா பரவலின் போது அதனால் பாதிப்படைந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது கரோனா பரவல் காரணமாக தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்தை குழந்தைகள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் தாக்கல் செய்தது.
அதில், இந்திய அளவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆதரவற்றவர்களாகி உள்ளனர் என்றும், 26,176 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர் என்றும், 3,621 குழந்தைகள் தாய் - தந்தை இருவரையும் இழந்துள்ளனர் என்றும், 274 குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இவர்களில், 15,620 பேர் சிறுவர்கள்; 14,447 பேர் சிறுமியர்.
இவ்வாறு ஆதரவற்றவர்கள் தற்போது யாருடைய பராமரிப்பில் வளர்கின்றனர், அனைவரும் மீண்டும் பள்ளி செல்கின்றனரா என்பதை உறுதிப்படுத்துவதுடன் அவர்கள் தொடர்ந்து பள்ளி செல்வதைக் கண்காணிக்க வேண்டும். இப்பணிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சுகாதார பணியாளர்களை ஈடுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.
கிராமங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவோர் ஓரிடத்தில் இருந்து அங்குள்ளவர்கள் மூலம் ஒரு தெருவில் உள்ள அனைத்து குடும்பங்களின் தகவல்களையும் சேகரிப்பதுண்டு. அவ்வாறான தகவல்கள் துல்லியமாக இல்லாமல், பல்வேறு தகவல்கள் தவறாக இருப்பதுண்டு.
ஆனால், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பின்போது வீடுதோறும் சென்று கணக்கெடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆர்வத்துடனும், அக்கறையுடனும் இப்பணியில் ஈடுபடவேண்டும். தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கும் பெற்றோரிடம் எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வருவாய் தேடி குடும்பத்துடன் புலம் பெயர்ந்திருந்தால் அவர்கள் புலம்பெயர்ந்த இடம், பணிபுரியும் இடம் ஆகியவற்றை அறிந்து அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களது குழந்தைகள் பள்ளி செல்கின்றனர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். கிராமங்களைப் பொறுத்தவரை சிறுமியர்களை விட சிறுவர்களே அதிகளவில் இடைநிற்றலுக்கு ஆளாகின்றனர்.
அதுபோன்று சொந்த கிராமத்தில் இருந்து அன்றாடம் வெளியூர் சென்று வியாபாரம் செய்வோர் விடுமுறை நாளில் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்கின்றனர். நாளடைவில் வியாபாரத்திற்கு உதவியாக தொடர்ந்து அழைத்துச் செல்கின்றனர். அதுபோன்றோரை கண்காணித்து அவர்களிடையே கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கிராமங்களில் அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வம் கொண்ட பட்டதாரிகள் போன்றோரையும் இப்பணிகளில் ஈடுபடுத்தலாம்.
சிறு நகரங்கள், பெருநகரங்களில் பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்டறிவது சிரமமான ஒன்றாகும். இப்பகுதிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றையும் ஈடுபடுத்தலாம். நகரங்களைப் பொறுத்தவரை அறிமுகமில்லாத நபர்களைக் காட்டிலும் அந்தந்த பகுதிளைச் சேர்ந்த நபர்களையும் இப்பணியில் ஈடுபடும்போது பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது எளிதாகும்.
இப்பணியில் ஈடுபடுவோர், "அன்ன யாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' எனும் மகாகவி பாரதியாரின் கூற்றை மனத்தில் கொண்டு, அக்கறையுடனும், ஆர்வத்துடனும் இப்பணியில் ஈடுபட வேண்டும்.