நடுப்பக்கக் கட்டுரைகள்

தன்னையே கொல்லும் சினம்

முனைவர் என். மாதவன்.

கோபம் வருகிறது என்று சொன்னால் அதன் விளைவுகளை எண்ணிப் பாருங்கள்என்று சொல்கிறார் சீன மேதை கன்பூசியஸ். இரு மனிதர்களுக்கு மத்தியில் ஏற்படும் காரசாரமான விவாதங்கள் அவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் பகைவர்களாகவே வாழும்படியானதாக மாற்றிவிடக் கூடிய வாய்ப்புகள் கூட உள்ளன.

மனவெழுச்சியின் ஒரு வகையாக கோபம் வகைப்படுத்தப்படுகிறது.

நகைச்சுவை, அழுகை, இகழ்வுறுதல், வியப்பு, அச்சம், பெருமிதம், வெகுளுதல் (கோபம்), உவகை என்று எட்டு வகையான மெய்ப்பாடுகளாக மனிதர்கள் கொள்ளும் மனவெழுச்சிகளை தொல்காப்பியம் பகிர்கிறது. எட்டு வகை மனவெழுச்சிகளிலும் கோபத்திற்கு இருக்கும் தாக்கம் என்பதே தனி.

ஒருவரின் சினம் என்ற மனவெழுச்சி அவருக்கும் பிறருக்கும் பாதிப்பை அளிக்கக் கூடிய ஒன்று. அதேநேரம் யாருக்கு யார்மேல் கோபம் வருகிறது? யார்யார் மேல் கோபம் கொள்ள இயல்கிறது? எது சரியானது? என்று பார்க்கும்போது வள்ளுவர் துணைக்கு வருகிறார்.

ஒருவர் தம்முடைய கோபம் எங்கு செல்லாது என நினைக்கிறாரோ அந்த இடத்தில் கோபப்படாமல் இருப்பது பெருமை அல்ல.

மாறாக ஒருவருடைய கோபம் எங்கு செல்லுமோ அந்த இடத்தில் கோபப்படாமல் இருப்பதே சிறந்தது என்று வள்ளுவர் வழிகாட்டுகிறார். மேலும், சினத்திலிருந்து தன்னை ஒருவன் காத்துக்கொள்ளாவிட்டால், அது அவனையே அழித்துவிடும் என்று எச்சரிக்கிறார்.

கோபத்தை யாரால் கட்டுப்படுத்த முடிகிறதோ அவரே வாழ்நாளில் எளிதாக வெற்றி பெறுகிறார். ஒருமுறை போர்முனையில் நெப்போலியன் தொடர் தோல்விகளால் மிகவும் சோர்வாக இருந்தான். அந்த நேரத்தில் ஒரு ஒற்றன் வந்து, "அரசே நாம் நான்கு திசைகளிலும் பகைவர்களால் சூழப்பட்டு இருக்கிறோம்' என்று கூறுகிறான்.

நியாயமாக அந்த நேரத்தில் நெப்போலியன் கோபப்பட்டு இருக்கலாம். உடனடியாக சமயோசிதமாக நெப்போலியன், "நல்லதாகப் போய்விட்டது, நமது

வீரர்களை நான்கு திசைகளிலும் சென்று போரிடச் சொல்லலாம்!' என்று சொன்னானாம். அந்தப் போரில் நெப்போலியன் வெற்றி பெற்றதாக வரலாறு கூறுகிறது.

சோர்ந்தும் தளர்ந்தும் போயிருந்த நெப்போலியன் அந்த நேரத்தில் வேறு மாதிரி எதிர்வினையாற்றி, சினம் கொண்டிருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

உண்மையில் ஒருவர் மற்றொருவர் மேல் சினம் கொள்வதற்கு பல நேரங்களில் புரியாமை ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. யாரால் கோபப்பட இயலுமோ அவர்கள் பெரும்பாலும் உயர் பதவியிலோ வயதில் மூத்தவர்களாகவோ இருந்துவிடுகிறார்கள். இந்த இரண்டு காரணிகளுமே மன அழுத்தம் கொண்டவர்களாக அவர்களை மாற்றும் தன்மையானவை. ஆனால், மூத்தவர்களாகவும் பதவியில் உயர்வாகவும் இருப்பவர்களில் நல்ல அனுபவங்களோடும் சிறப்பான மனித உறவு நெறிகள் அறிந்தவர்களுமாக இருந்தால் அதனை கையாளும் விதமே தனி சிறப்பானதாக இருக்கும்.

ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இயங்குகின்ற இடங்களில் பொதுவாக கோபப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் காணப்படுகிறது. எங்கெல்லாம் வார்த்தைகள் மூலமாக புரிதல்களை ஏற்படுத்த வேண்டி இருக்கிறதோ அங்கெல்லாம் வார்த்தைகளின் உபயோகம் கவனத்துடன் அமைய வேண்டும்.

ஒரு மனிதருக்கு கோபம் ஏற்படுகிறது என்று சொன்னால் அதற்காக பின்னணியில் அவருக்கு நாம் சொல்ல வரக் கூடிய விஷயம் புரியாமல் இருக்கலாம் என்று அனுமானத்தில் அணுக முடியும். ஆனால் அதே நேரம் புரிய வைக்கிறேன் என்ற பெயரில் ஒவ்வொன்றுக்கும் குழந்தைக்குச் சொல்வது போல் விளக்கங்கள் அளித்துக்கொண்டிருக்கக் கூடாது. இது மனிதர்களின் சகிப்புத்தன்மையை சோதிப்பதாகவும் அமையலாம். அந்த விதத்தில் நாம் கோபம் என்பது ஒரு தவிர்க்க வேண்டிய மனவெழுச்சி என்ற புரிதலோடு அணுக வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இயல்பாக இருக்கக் கூடிய மனிதர்கள் கோபப்படும்போது அவருடைய நரம்புகள் கூடுதலாக முறுக்கேறி பலவீனமடைகின்றன. அந்த வகையில் உடல் நலன் கருதியும் அனைவரும் கோபப்படுவதைத் தவிர்க்கவேண்டும். ஒரு விஷயம் புரிகிறது என்று சொன்னால் அதனை புரிந்து கொண்டு செயலாற்றுவதும், அந்த விஷயம் புரியாதபட்சத்தில் அதற்கான புரிதலை கூடுதல் ஆக்கிக் கொள்வதும் கோபத்தை நெருங்கவிடாமல் செய்யும் காரணிகள்.

இதற்கான பொறுப்பை இருதரப்பும் மேற்கொண்டால் புரியாமை என்ற விஷயமே இராது. புரிதலை மேம்படுத்திக் கொண்டு கோபத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடவேண்டும். மற்றொரு கோணத்தில் தவறான புரிதலும் கோபத்திற்கான தோற்றுவாயாக அமையலாம்.

அந்த வகையில், ஒருவருக்கு இன்னொருவரைப் பற்றி தவறான புரிதல் இருக்கிறது என்று சொன்னால் அதனை சரியாகப் புரிய வைப்பதற்கான பொறுப்பை இருவரில் ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான முயற்சி இயல்பான சூழலில், இயல்பாக நிகழ வேண்டும். மாறாக, இதில் செயற்கைத் தன்மைகள் புகும்பட்சத்தில் புரியாமை அதிகரிக்கவே செய்யும்.

கோபத்தால் எந்த தரப்பும் பாதிக்கப்படாமல் இருக்க ஒரு வழி உள்ளது. அது தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர் பின்பற்றிய வழிமுறை. அவருக்கு கோபம் வந்தபோதெல்லாம் யாரிடமும் பேசாமல் இருந்துவிடுவாராம். இதனால் வார்த்தைகள் மூலம் உடனிருப்போர் காயமடையும் வாய்ப்பை அவர் தவிர்த்திருக்கிறார். இந்த தகவலை அவரது மாணவர் கி.வா.ஜகந்நாதன் "எனது ஆசிரியர்பிரான்' என்ற நூலில் பகிர்ந்துள்ளார்.

இந்த உத்தி சிறப்பானதாகவும் அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறதுதானே? முயற்சிப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

62 வயது டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் 4-வது திருமணம்?

இந்தியா-பாக். போட்டியை கண்டு ரசித்த தேசத் துரோகிகள்– உத்தவ் தாக்கரே

10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65% அதிகரிப்பு! ஏன்?

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

SCROLL FOR NEXT