தினமணி கதிர்

கண்டடைந்தது...

'ஹலோ... நீங்களா? பேசறதுக்கு நிறைய இருக்கு... மொத்தமாப் பேசிடுவோமா?' எடுத்த எடுப்பில் குரலில் அத்தனை கோபம் காண்பிக்க வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தார்.

உஷாதீபன்

'ஹலோ... நீங்களா? பேசறதுக்கு நிறைய இருக்கு... மொத்தமாப் பேசிடுவோமா?' எடுத்த எடுப்பில் குரலில் அத்தனை கோபம் காண்பிக்க வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தார்.

சண்முகநாதனுக்கு அவரை மீறி வெடித்து விட்டது.

'சார்... என்ன சொல்றீங்க... புரியல...!' என்றார் சம்பந்தி.

'புரியும்தான்... ஆனால் புரியாததுபோல் பேசுகிறான் அந்த ஆள். என்ன கீழ்த்தரமான ஆள்? அறுபது தாண்டியவனின் செயலா இது?'

அடுத்த வார்த்தையைப் பேசும் முன் அருகில் வந்து நின்றாள் நாராயணி. தடுக்கத்தான் வருகிறாள்!

'வேண்டாம்... சொன்னாக் கேளுங்க...' என்பதற்குஅடையாளமாய் சைகை செய்தாள்.

'என்னை ஏத்தி விடுறதுபோல எப்பப் பார்த்தாலும் வந்து புலம்பித் தள்றது... நானா பேசி ஒரு தீர்வு காணுவோம்னு கிளம்பும்போது முன்னே வந்து தடுக்கிறது... இதான் உன் வேலயா? என்னை என்ன கிறுக்கன்னு நினைச்சீங்களா?' போனின் வாயைப் பொத்திக் கொண்டே கோபமாய்க் கேட்டார். பிறகு என்னவோ தோன்ற லைனை கட் பண்ணினார்.

'திடீர்னு கட் பண்ணிட்டீங்க... மூஞ்சில அடிச்சாப்ல...?' - திடுக்கிட்டாள் நாராயணி.

மறுபடி போன் வரும் என்று எதிர்பார்த்தார்...

'அந்தாளா பேசுபவன்? கல்லுளிமங்கனாச்சே!' அப்போதைக்கு விஷயம் முடிந்தது என்று அடுப்படியை நோக்கி நகர்ந்தாள் நாராயணி.

ஒரு வாரமாகவே இவர் மனது புகைந்து கொண்டுதானிருந்தது. 'நிம்மதியில்லாமல் ஆக்கி விட்டானே இந்த ஆள்? பெண்ணைக் கட்டிக் கொடுத்தோமா, பொறுப்பு விட்டதா என்றில்லாமல்? எத்தனை நாளைக்குத்தான் இந்த வேதனையை அனுபவிப்பது? இந்தாள் அங்கிருந்து இந்தப் பெண்ணைத் தூண்டித் தூண்டி விடுவான்... அது கிளிப்பிள்ளை போல் சொன்னதைச் சொல்லிக் கொண்டிருக்கும். புரியாமலேயே ஒரு சண்டை. அர்த்தமில்லாத, எடுத்தெறிஞ்ச பேச்சு... யாரையும் மதிக்காத தன்மை..! திமிர் பிடிச்சு அலையுதே..!' -இதை எப்படி ஒடுக்குவது என்று தீவிரமாய்ச் சிந்திக்க ஆரம்பித்திருந்தார் சண்முகநாதன்.

'புகுந்த வீட்டுல நடக்கிறதையெல்லாம் பொறந்த வீட்டுக்குச் சொல்லக் கூடாதும்மா... அது தப்பு. அப்படிப்பட்டவ ஒரு பொம்பளையே இல்ல. அதக் கேட்டுட்டு 'இப்படிச் செய்... அப்படிச் செய்'யுன்னு ஒரு அப்பன் தூண்டி விட்டான்னா ... அவன் நல்ல தகப்பன் இல்லை...! இத அந்தாள் தன் பெண்கிட்ட ஒருவாட்டியாவது கேட்டிருப்பானா? '

'என்ன நீங்க... அவன் இவன்ங்கிறீங்க? அப்படியெல்லாம் பேசாதீங்க...'

'இப்போ இதுதான் கெட்டுப் போச்சாக்கும்?' என்றார் எரிச்சலுடன்.

தொடர்ந்து, 'இப்படி உன்கிட்டே சொல்றதுக்கே உனக்கு உறைக்குதே... அந்தாள்ட்டப் பேசினேன்னா கெதி என்னாகும்? இந்த பாஷைல பேசுறதுக்குத்தான் அவன் தகுதியானவன். புகுந்த வீட்டுல எப்படிப் பொறுப்பா நடந்துக்கணும்னு பாடம் சொன்னா அவன் பொறுப்பான அப்பன்! நல்லதே கத்துக் கொடுக்கல்லியே அந்தப் பெண்ணுக்கு?'

'எல்லாம் நம்ம தலவிதி... அவசரப்பட்டுட்டோம்...!'- நாராயணியின் சோகம் புரிந்தது.

'நிதானமா அவங்களோட அன்றாட நடவடிக்கைகளைக் கவனிச்சு ஒரு பெண்ணோட கல்யாணத்தை முடிவு பண்ணனும்னா குறைஞ்சது ஆறு மாசமாவது அவுங்க வீட்டுல நாம டேராப் போடணும்... அது சாத்தியமா? இதுக்குத்தான் சுய புத்தியே இல்லையே? அந்தாள் மண்டையைப் போட்டாத்தான் இது சரி ஆகும்... ஒரே தீர்வு அதுதான்...' என்றாள் நாராயணி.

சிரிப்புத்தான் வந்தது அவருக்கு.

'ஒரு பெண் இப்படிப் பேசலாமா? வாயை மூடு!' என்றார் ஆவேசமாக.

'ஒரு பேச்சுக்குத்தான் சொல்லியிருப்பாள். மனதாரச் சொல்வாளா என்ன? அந்தளவுக்கு அந்த மனுஷன் படுத்தறானே? ஒருவர் இருப்பதும் இறப்பதும் நம் கையிலா இருக்கிறது? அது ஆண்டவன் சித்தம். யாருக்குத்தான் இருப்பு நிரந்தரம்? ஏன் நானே அடுத்த நிமிடம் போகக் கூடாதா? இவள் தலை கவிழக் கூடாதா? இந்த உலகத்திலேயே நிச்சயமானது மரணம் ஒன்றுதான். அதையும் மறைத்து வைத்து விட்டான் இறைவன். இறந்து விடுவோமோ என்று தோன்றலாமே தவிர... இறந்து விட்டோம் என்பதை இருப்பவர்கள்தானே சொல்லியாக வேண்டும்.' என்று நினைத்துக்கொண்டார்.

'அந்தப் பெண் இந்தக் குடும்பத்திற்கேற்றாற்போல் மாற வேண்டும் என்று கடவுளைத்தான் பிரார்த்தனை பண்ண வேண்டும். அந்த அளவுக்கு வயித்தெறிச்சலைக் கொட்டிக்கிறான் அந்த ஆள். அதனால சொன்னேன். எனக்கென்ன வந்தது? அவர் இருந்தா என்ன... போனா என்ன? அது யார் கைல இருக்கு? அநாவசியமா நம்ப குடும்ப விஷயத்துல தலையிடுறாரேங்கிற கோபம்தான். இங்க நடக்கிறது ஒவ்வொண்ணையும் இந்தப் பொண்ணு அவர்ட்ட வரி விடாம போன்ல சொல்லிட்டேயிருக்கு. உட்கார்ந்தது, எந்திரிச்சது, என்ன சமைச்சோம், சாப்பிட்டோம், என்ன பேசினோம்ங்கிறது முதற்கொண்டு எல்லாத்தையும் தப்பாவே பார்த்து தப்பாவே திரிச்சுத் திரிச்சு விபரீதமா நினைச்சு அவன் அப்பனுக்குச் சொல்றது.

அந்தாளும் கேட்டுட்டு... மேலும் தப்புத் தப்பாச் சொல்லிக்கொடுக்கிறான்... எடுத்த எடுப்புல முதல்ல இப்படி வெளில சொல்றதை நிறுத்துன்னுல்ல ஒரு அப்பன் சொல்லணும்... என் பொண்ணா இருந்திட்டு நீ இப்படிப் பேசலாமா?ன்னுல்ல நல்ல மனுஷனாயிருந்தாக் கேட்பான்? எல்லாத்தையும் அந்தாளும் தப்பாவே எடுத்திட்டு விபரீதமாச் சொல்லிக் கொடுக்கிறான். அதக்கேட்டுட்டு சண்டைக்கு நிற்குது இது. சுயமாச் சிந்திக்கும் திறனில்லை...' என்று தனக்குத்தானே நாராயணி சமாதானம் செய்துகொண்டாள்.

'நீ வேணுங்கிறதை வெளில ஆர்டர் பண்ணி இஷ்டம்போல வாங்கிச் சாப்பிடு... யாரு கேட்கிறது? நீ வேலைக்குப் போறே, சம்பாதிக்கிறே... ஃபினான்ஷியல் இன்டிப்பன்டென்ஸ் வேணும் பெண்ணுக்கு... அதான் பெண்ணுரிமை! அதை யாரும் தடுக்க முடியாதாக்கும்... அது இதுங்கிறான்... நல்லதே சொல்லித் தரமாட்டாம் போலயிருக்கு..! நீ ராணியாக்கும்... உனக்கு எல்லாம் கிடைக்கும். அதுக்கு நான் கியாரண்டின்னு உளர்றான். இதுவும் அப்பா சொல்றது அத்தனையும் வேத வாக்குன்னு கெடக்கு.!

நீ இன்னிவரைக்கும் அந்தப் பொண்கிட்ட என்ன சம்பளம் வாங்குறேன்னாவது நாம ஒரு வார்த்தை கேட்டிருப்பமா? இல்ல அவன்தான், சம்பளப் பணத்தை என்கிட்ட மாதா மாதம் கொடுத்திரணும்னு சொல்லியிருப்பானா? அதுதான் வச்சிண்டிருக்கு... தனக்குத்தான் செலவு பண்ணிக்கிறது... இந்த நியாயத்தை யார் சொல்றது? மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா அப்டியெல்லாம் இல்லப்பா... அவுங்க என்கிட்டே எதுவுமே கேட்கிறதில்லே... இதுவரை கேட்டதுமில்லேன்னுல்ல அங்க சொல்லியிருக்கணும்? தின்னு தின்னு உடம்பை வளர்த்திருக்கே தவிர... மண்டைல மசாலாதான் இருக்கு அதுக்கு... எல்லாம் நம்ம தலைவிதி..!' என்று புலம்பினாள் நாராயணி.

இந்தப் புலம்பலில் அவளுக்கு ஏதும் நோய் நொடி வந்து படுக்கையில் விழுந்துவிடாமல் இருக்க வேண்டுமே என்று இவர் பயப்பட்டார். தன்னிடம் கொட்டித் தீர்ப்பதுதான் அவளுக்கு ரிலீஃப் என்ன கோமாளித்தனம் இது? எல்லாம் காதுல விழறதே... ஸ்பீக்கர்ல! அந்தாளே ஒரு ஓட்டாண்டி... ஒரு சேமிப்பில்ல... அத்தனையும் கைவீசிச் செலவு பண்ணி வீணடிச்சிருக்கான்..! ஜாலியா இருந்து கழிச்சிருக்கான்... சிக்கனமாக் குடும்பம் நடத்தணும்னு அவன் அகராதியில் இல்ல போலிருக்கு... அதே பழக்கத்தைத் தன் பெண்ணுக்கும் கத்துக் கொடுத்திருக்கான்...

அப்பப்ப இதுகிட்டப் பணம் வாங்கிப்பான் போலயிருக்கு? அதுவும் எனக்குச் சந்தேகமாத்தான் இருக்கு...

அப்படியிருந்ததுன்னா அதை நம்ம பிள்ளைதான் தடுக்கணும். உதவி செய்யலாம் தப்பில்லை... அதை அவனுக்குத் தெரிவிச்சிட்டுக் கொடுக்கணும். அதான் முறை... இவனுக்கு ரோஷம் வேணுமே! இவன் கேட்கலை, கண்டுக்கலைன்னா இவன்தான் ஏமாளி.

குடும்பத்தின் அதிகாரம் ஆண் கையில் இருந்தால்தான் குடும்பம் விளங்கும். ஆனால், அந்த ஆண் பொறுப்பானவனாய், நேர்மையானவனாய், நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்த்துச் செயல்படுபவனாய் இருத்தல் வேண்டும். சண்முகநாதன் தன் வாழ்க்கையில் அப்படித்தான் இயங்கி வந்திருக்கிறார். இல்லையென்றால், இத்தனை சேமிப்புகள் என்று கைவந்திருக்க முடியுமா? மனிதனின் தேவைகள் மிகக் குறைவு என்கிற எண்ணம் கொண்டவர். அநாவசியச் செலவுகள் எட்டிப் பார்த்ததேயில்லை. மாதத்தின் முதல் செலவே சேமிப்பு என்றுதான் வாழ்ந்து கழித்திருக்கிறார்.

ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப் போனார் சண்முக

நாதன். நாராயணியின் புலம்பலை நிறுத்தவே முடியவில்லையே! வேறு யாரிடம் மனக்குறைகளைச் சொல்லிப் புலம்புவாள் அவள்?

'அவுங்க அப்பா இருக்கிற தைரியத்துல இதுவும் அடங்காப்பிடாரியா நடந்துக்கிறது. இங்க யாரு என்ன சொல்றாங்க அவளை? ஏதாச்சும் குத்தம் குறை சொல்றமா? காலைல பத்துக்குத்தான் எழுந்திருக்கிறா... ஒரு நாளாச்சும் ஏதாச்சும் சொல்லியிருக்கனா? அடுப்

படிப் பக்கம் லீவு நாளாச்சும் எட்டிப் பார்த்திருக்கா? துரும்ப நகர்த்துறதில்ல... சொகுசா தின்னுட்டுத் தின்னுட்டு மொபைல் பார்த்துட்டு, தூங்கிண்டு... பாத்ரூம் போயிண்டு காலங்கழிக்கறச்சே... இம்புட்டுத் திமிரு இருந்தா... நாள் பூராவும் வேலை செய்ற எனக்கு எப்படியிருக்கும்? நன்றி வேணாம்? காலைல அஞ்சுக்கு எழுந்திருந்து ராத்திரி வரைக்கும் இவ்வளவு வேலை செய்றாளேங்கிற கரிசனம் வேண்டாம்? என்ன வளர்த்திருக்காங்க பொண்ணை? தனிக்குடித்தனம் வச்சா விளங்கினாப்லதான்... எம் பையன் பாடு படு திண்டாட்டமாயிடும்... நல்ல சாப்பாடு கூடக் கிடைக்காது அவனுக்கு. இதுக்கு சமைக்கத் தெரியுமோ என்னவோ... நான் செய்றேன்... நான் செய்றேன்னு அந்தாள் வந்து நிப்பான்? நம்ம வீட்ல வந்து அவன் நிர்வாகம் பண்றதா? அப்படி ஆள்தான் அந்தாளு? உள்ளே விட்டோம்னா நம்மளையே அதிகாரம் பண்ணி முழுங்கிடுவான்' -பொரிந்து தள்ளினாள் நாராயணி.

தேமே என்று கேட்டுக் கொண்டிருந்தார் சண்முகநாதன்.

இருவருக்கும் மனசு ஆறுதலடைய மாட்டேனென்கிறது. பரஸ்பரம் கொட்டித் தீர்த்துக் கொண்டால்தான் வேதனை குறைகிறது.

'அட... வேலதான் செய்ய வேண்டாம். அன்பா நாலு வார்த்தை... மரியாதையா ஒரு சொல்... வேண்டாமா? அப்படியென்ன பேரழகியா இது? பணக்கார ஃபேமிலியா? சாதாரண மிடில் கிளாஸ்தானே? அதிபுத்திசாலியா? நூறு நூத்தம்பது பவுனோட வந்து இறங்கியிருக்கா? அவர் தன் பொண்ணுக்குப் போட்டதைவிட நாமதான் அதிகமாப் போட்டு வச்சிருக்கோம். எதுக்காக? எல்லாம் நம்ம பையனுக்காக. இவளுக்காகவா?' என்றாள்.

'சரி...சரி... போதும் நிறுத்து... நாம பேசறதோட சாராம்சமாவது அவருக்குத் தெரிய வேண்டாமா? அப்பத்தானே கொஞ்சமாவது சொரணை வரும்? அதையும் தடுத்திட்டியே நீ?'

'நான் எங்கே தடுத்தேன்... நீங்கதானே போனை ஆஃப் பண்ணினீங்க?'

'ஆமா... அவர் கூடப் பேச ஆரம்பிச்ச வேளைல குறுக்க புகுந்தா? நியாயம் மனசுல பெருக்கெடுக்கிற போது அப்படியே கொட்டிடணும். உண்மை வேகமாத்தான் வெளில வரும். அது உஷ்ணமாத்தான் இருக்கும். அதை நாமளே பொருட்படுத்தலைன்னா எப்படி?'

அமைதியானார் சண்முகநாதன். ஒரு நல்ல சந்தர்ப்பம் நழுவிவிட்டதாய் உணர்ந்தார். சூடு, சொரணை என்று எதுவுமே இல்லாதவனுக்கு எது சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் உறைக்காதுதான். இந்த ஆள் அந்த ரகம்! சிந்தனை இந்த திசையில் போக... தலை மூர்ச்சைக்கு வந்தது சண்முகநாதனுக்கு.

'ஆள விடு...' என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார். அவர் மனது அமைதியைத் தனிமையை நாடிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுபோல் இங்கே அன்றாட நிகழ்வுகள் நடக்கின்றன.

கீழே கேட் திறக்கும் சத்தம். அவன்தான் வந்துவிட்டான். காரை பார்க்கிங் ஏற்றிவிட்டு வந்து சேரப் பத்து நிமிஷம் ஆகும். அதற்குள் பள்ளிக்குச் சென்றிருக்கும் பேரன் வந்து விடுவான். பிறகு ஆறு மணிக்கு அவனை டியூஷனுக்குக் கொண்டு விட வேண்டும். எட்டு மணிக்குத் திரும்பக் கூட்டி வர வேண்டும். காலையில் அவனைக் குளிப்பாட்டி, பல் தேய்த்து விட்டு, யூனிபார்ம் அணிவித்துக் கிளப்புவதும் அவன்தான். அதற்குத்தான் தினசரி தவறாமல் அஞ்சுக்கு எழுந்து டிபன் தயார் செய்கிறாளே நாராயணி.

ஒரு நாள் ஒரு பொழுதாவது அந்தப் பெண் எதுவும் செய்ததில்லை. அதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதுபோல் தூங்கிக் கொண்டிருக்கும். சின்னஞ்சிறுவன் ஆறுக்கெல்லாம் எழுந்து பள்ளிக்குத் தயாராகிவிடுகிறானே என்கிற உறுத்தல் கூட இல்லை. தினசரி காலை எட்டு வரைக்கும் வீடு அல்லோல கல்லோலப்படுகிறதே என்கிற தாக்கம் சிறிதுமில்லை. நாமும் எழுந்து நம் பங்குக்கு ஏதாவது செய்வோம் என்கிற எண்ணமில்லை. கும்பகர்ணத் தூக்கம் போட்டால்? அசிங்கமாயில்லை. இதைச் சொல்லப் புகுந்தால் சண்டை! ஓவென்ற அழுகை. எடுத்தெறிந்த பேச்சு!அப்பனிடம் புகார்! என்று சண்முகநாதன் மனது குமைந்தது.

'பிள்ளை பெறுவது மட்டும் ஆண்மையில்லப்பா... ஆளுமைத் திறனோட ஒரு ஆண் இருக்கிறதுதான் ஆண்மை. குடும்பத்துல அது ரொம்ப முக்கியம்.'-பலமுறை சொல்லிவிட்டார்தான். உறைத்தால்தானே? இவருக்கோ மனசு புழுங்கியது.

'அவுங்க பிள்ளை... அவுங்க வாழ்க்கை... தனியா வாழட்டுமே! நாம ஏன் குறுக்கே நின்று கொண்டு?' எத்தனையோ முறை சொல்லித் தீர்த்து விட்டார்.

நாராயணி கேட்பதாயில்லை.

'நான் இருந்துக்கிறேன்... நீங்க வேணும்னா போங்க...' என்றாள் நாராயணி இறுதியாக.

'இப்படியொரு சொல் சொல்லலாமா? நீயா சொல்றீயா? இல்லை... உன் புள்ள இப்படி சொல்லவச்சிருக்கானா? மூத்த தலைமுறைக் குடும்பப் பெண்ணுக்கு அழகா அது? வயதானால் எல்லாப் பெண்களுக்கும் வாய் நீண்டு விடுகிறது. காதுவரை கிழிகிறது. எல்லாக் கடமைகளையும் சீரும் சிறப்புமாய் செய்து முடித்தவன் கடைசிக் காலத்தில் தனியாய்ப் போய் இருந்து கஷ்டப்பட வேண்டுமென்று தலையெழுத்தா என்ன?

'மழுங்குணி மாங்கொட்டையாய் ஒருவன் இருந்தால்தான் இந்த வாழ்க்கையைப் பிரச்னைகள் இன்றி ஓட்ட முடியும். கண்ணையும், காதையும் பொத்திக் கொள்ள வேண்டும். மொழி மறந்து போகும் அளவுக்கு வாயை மூடிக் கொள்ள வேண்டும். அப்படியெல்லாம் இருக்கப் பழகினால்தான், அன்றாடங்களை பிரச்னையின்றிக் கடந்து செல்ல முடியும்.

இதுதான், தான் இத்தனை வருஷ வாழ்க்கை அனுபவத்தில் கண்ட பேருண்மை!' என்று நினைத்துக்கொண்டார் சண்முகநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-ஆவது முறையாக பெலிண்டா கிளார்க் விருது வென்ற சதர்லேண்ட்..! மற்ற விருதாளர்கள் விவரங்கள்!

மூணாரில் காரை தாக்கிய காட்டு யானை: காயமின்றி தப்பிய இருவர்!

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்தின் அறிவிப்பு!

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தினர் 15 ஆவது நாளாக போராட்டம்!

உன்னதமான நேரம் இது!

SCROLL FOR NEXT