மனதின் தடங்கள்
நேசன் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் அவனை. ஒரு நீளமான பெரிய கடப்பாக்கல்.
நேசன் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் அவனை. ஒரு நீளமான பெரிய கடப்பாக்கல். அதில் ஒரு சிறிய வெண் குன்று. அது மைதா மாவுக் குன்று. அதன் உச்சியில் ஜப்பான் எரிமலை வாய் மாதிரி ஒரு குழி இருந்தது.
பக்கத்தில் இருந்த பெரிய தூக்கு வாளி. அதில் ஏதோ ஒரு எண்ணெய். நல்ல தேன் கலரிலிருந்தது. கசடுகள் மிதந்து கொண்டிருந்தன. அதில் ஒரு மக்கை விட்டு எண்ணெய்யை எடுத்து அந்தக் குழியில் விட்டான் அவன். அதன் பிறகு தான் வேலையையே ஆரம்பித்தான். இரண்டு கைகளாலும் மாவை பிசைய ஆரம்பித்தான். ஏதோ முரட்டு ஆசனம் போடுவது மாதிரி இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த நேசனுக்கே மூச்சு முட்டுவது மாதிரி இருந்தது.
அந்த மைதா குன்று இப்போது ஒரு வெள்ளை யானைக் குட்டியாக மாறி சாதுவாகப் படுத்து இருந்தது. ஆணழகன் போட்டியில் கலந்துக்கப்போகிறவன் மாதிரி பளபளப்பாகவும் இருந்தது. அவ்வளவு எண்ணெய்.
Advertisement
Advertisement
அவன் கொஞ்சம் அழுக்கோடு இருந்த ஒரு மெல்லிய துணியால் அதை மூடிவிட்டு இவனிடம் வந்து, 'என்ன வேணும்?' என்றான்.
'எண்ணெய் வேணும்' என்று வாய் வரை வந்து விட்டது.
'நகைச்சுவைக்கு இது நேரம் இல்லை' என்று நினைத்துக் கொண்டவன், 'பரோட்டா எப்ப ரெடி ஆகும்?' என்றான்.
'கொஞ்சம் நேரம் ஆகும்' என்றவன், 'வேற ஏதாவது சாப்பிடுகிறீங்களா... பஜ்ஜி சூடா இருக்கு!' என்று சொன்னவன், இவன் பதிலுக்குக் காத்திராமலே ஒரு சின்னத்தட்டில் ஒரு வாழை இலைத்துண்டை வைத்து கொஞ்சம் தண்ணிச்சட்னி ஊற்றி நீட்டவே இவனால் மறுக்க முடியவில்லை.
பஜ்ஜி நன்றாகவே இருந்தது.
வெளியே நன்றாக உப்பலாய் உள்ளே தகடான வாழைக்காய்.
அவன் உயிருக்கு உயிராய் காதலித்து அவனை விட்டு ஓடிப்போன சுதாவுக்கும் பிடித்தது வாழைக்காய் பஜ்ஜிதான்.
எல்லா காதலிகளும் திருநெல்வேலி அல்வாவும் மதுரை மல்லிப் பூவும் கேட்டால் இவள் வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய்ச் சட்னியும் கேட்பாள்.
இவனும் வாங்கிக் கொண்டு போவான். இவனுக்கும் சேர்த்து கூட இரண்டு வாங்கிச்செல்வான். ஆனால் படபட என்று எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுவாள்.
திடீரெனெ இவன் ஞாபகம் வந்து, 'ஓ சாரிப்பா... உன்ன மறந்தே போய்ட்டேன்' என்று குளக்கரையில் இருந்து எண்ணெய்ப் பேப்பரை உருண்டையாக்கி தண்ணீரை நோக்கி எறிவாள்.
எப்பவும் பஜ்ஜி புராணம்தான். பஜ்ஜியின் சூட்சுமம் அதன் மாவில் இருக்கிறது என்பாள். அளவான நீர், கடலை மாவு, உப்பு ,சோடா உப்பு எல்லாம் சொல்வாள்.
நேசன் சொல்வான்:
'நீ போன பிறவில ஒரு பஜ்ஜி மாஸ்டருக்கு பொண்டாட்டியா இருந்திருப்பே போல...'
அவள் முகம் சட்டென்று மாறிவிட்டது.
'ஏய்... நான் சொன்னது ஜோக்பா...'
அவள் பதில் அளிக்காமல் இருந்தாள்.
இத்தனைக்கும் சிரித்துக் கொண்டே மிக இயல்பாகத்தான் சொன்னான். அவள் பேசவில்லை.
'ஏய் எதாவது பேசு...' உலுக்கினான்.
அப்போதுதான் கவனித்தான். அந்தி வெளிச்ச அரை இருளில் அவள் கண்களில் கண்ணீர் இமைப் பாத்திகளில் தழும்பிக் கொண்டு இருந்தது. திடுக்கிட்டான்.
'ஏய் இனிமே நான் ஜோக்கே சொல்ல மாட்டேன்...போதுமா?'
'அதுக்கில்லைப்பா...'
'பின்ன எதுக்கு?'
'நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வாழைக்காயும் பஜ்ஜி மாவுமா சந்தோஷமா இருப்போம். வயசாகும்போது எது முதல்ல காலியாகப் போவுதோ தெரியல. மாவா வாழைக்காயான்னு...'
திடுக்கிட்டான் நேசன். இதை எதிர்பார்க்கவில்லை.
'ஏய் என்ன இது இப்படில்லாம் பேசற... போய் வாயைக்கழுவு...'
அவள் அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள்.
பார்த்துக் கொண்டே இருந்தாள்.
சட்டென்று அவள் சோகம் மறைந்து எழுந்தாள்.
கலகலவென்று சிரித்தாள்.
அந்த சிணுங்கல் சிரிப்பை பார்ப்பதற்கோ என்னவோ சில மீன்கள் நீரை விட்டு வெளியே வந்து துள்ளிவந்து மறைந்து போயின.
சிரித்தவாறே 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்' பாடலை முணுமுணுத்தாள்.
அது அவளுக்கு எப்போதுமே பிடித்த பாடல்.
'சரி வரேன்... அம்மா தேடுவாங்க...' என்று பாடலை பாதியில் நிறுத்திவிட்டு அவன் கன்னத்தை ஒரு தட்டு தட்டிவிட்டுக் கிளம்பினாள்.
'ஏய்... ப்ளீஸ் இன்னும் ஒரு வாட்டி பாடேன்...'
'நோ'
அப்படியெல்லாம் பேசியவள் மனது எப்படி மாறியதென்று தெரியவில்லை.
அப்பாவுக்கு பணி நிமித்தம் மாற்றல் வந்து போனவள்தான். மறந்து விட்டாள்!
'அவுட் ஆஃப் சைட் அவுட் ஆஃப் மைண்ட்' என்பார்கள். அது நடந்து விட்டதோ?
போனில் வாட்ஸ் அப்ஸ் சேட்டிங் குறைந்து ஒரு ஸ்டேஜில் நின்றே போய்விட்டது.
முகவரி உத்தேசித்து மதுரையில் இருந்து கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றான். கண்டுபிடிக்க முடியவில்லை. திரும்பிவிட்டான்.
'ஆணைப்போல் அல்ல பெண். ஒருவனை மனதில் வரித்து விட்டால் ஜென்மத்துக்கும் அவன்தான்' என்பதெல்லாம் ஹம்பக்.
இன்றேல் இப்படி ஒருத்தி இருப்பாளா?
ஏன் இருக்கக் கூடாது?
இது டிஜிடல் உலகம். சேனல்கள் சடக் சடக் என்று மாறுகின்றன.தெளிவை ஃபிக்சல்கள் தீர்மானிக்கின்றன.
வேகம்... வேகம்.
'சார் பஜ்ஜி எப்படி இருந்துச்சி? இப்பத்தான் போட்டேன்... நீங்கதான் முதல் போணி' சிரித்தான் அவன்.
சிரிப்பில் ஒரு அழகு இருந்தது.
பஜ்ஜியை சாப்பிட்டு முடித்தான்.
வெளியே மூலையில் ஒரு நீல நிற பிளாஸ்டிக் டிரம். எச்சில் இலைகள் கிடந்தன.
அதில் இலையைப் போட்டு விட்டு பிளாஸ்டிக் தட்டை அருகில் இருந்த மேடைமேல் வைத்து, சற்று தள்ளி இருந்த ஒரு சின்ன வாஷ் பேசினில் கைகழுவிய பின்பெஞ்சில் அமர்ந்தான்.
பஜ்ஜி காலியாகும் வரை சுதாவைத்தானே நினைத்துக் கொண்டிருந்தான்.
'தீவிரமா யோசிச்சிட்டு இருக்கீங்க போலிருக்கு?'
'சே... சே அதெல்லாம் இல்லை. பஜ்ஜியின் சுவையில் என்னையே மறந்து விட்டேன்...'
'உண்மையாகவா சார்?'
'சத்தியமாக...'
'இப்படி யாரும் சொன்னதே இல்லீங்க...'
'சொன்னா நீங்க விலைய ஏத்திட்டீங்கன்னா?'
சிரித்தான் நேசன்.
அது கேட்டு அவனும் சிரித்தான்.
'நீங்க பாராட்டுறீங்க. பஜ்ஜியை விடுங்க... இந்த உலகத்துல யாரும் யாரையும் லேசுல பாராட்டுறது இல்லை சார். ஆனா குறை சொல்றதுக்கு கும்மாளம் அடிச்சிட்டு வருவாங்க.'
அவன் முகம் இனிமையாகவும் கனிவாகவும் இருந்தது போல் தோணிற்று. அவனிடம் பேசவேண்டும் போலிருந்தது.
'உங்க பேர் என்ன?'
'வினோதன்' என்றான், அந்த பெரிய மைதா மாவு மலையை கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்க்கத் துவங்கியவாறே.
ஓ... பரோட்டா வேலை துவங்கிவிட்டது.
இதைப் பார்த்த நேசன் மெல்ல தன் செல்லை எடுத்தான். ஆன் செய்தான்.
படம் பிடிக்கத் துவங்கினான். வினோதன் அதை முதலில்
கவனிக்கவில்லை.
பெரிய மாவு மலையை குட்டி குட்டி உருண்டைகளாக்க ஆரம்பித்திருந்தான்.
மாவு உருண்டைகளைப் பாம்பு போலாக்கி உருட்ட அது நத்தைகள் போல் ஆயிற்று.
அந்த நத்தைகளை ஒருவித ஸ்டைலுடன் சற்று தள்ளி வீசினான்.
இப்போது நேசன் சற்று தள்ளிப் போய் படம் பிடித்தான்.
இப்போதுதான் அவன் செல்லில் படம் பிடிப்பதைப் பார்த்தான் வினோதன்.
திடுக்கிட்டான். முகம் சட்டென மாறியது.
இத்தனை நேரமும் இருந்த இனிமையான முகத்தில் கோபத்தீ பற்றிக்கொண்ட மாதிரி இருந்தது.
'சார்... சார்... படம் பிடிக்கிறீங்களா?' என்று பரபரப்பாய்க் கேட்டான்.
'ஆமாம்...' சிரித்துக் கொண்டே முதுகை பின்னால் வளைத்து எடுத்தான் நேசன், விபரீதம் உணரவில்லை!
'செல்லை பார்க்காம இயல்பா இருங்க...'
மறுகணம் அவன் எதிர்பாரா விதமாக மாவுக்கையுடன் ஓடிவந்து வெடுக்கென செல்லைப் பிடுங்கினான் வினோதன். திடுக்கிட்டான் நேசன்.
'என்னாச்சுங்க? ஏன் செல்ல இப்படி வெடுக்குனு பிடுங்கிட்டீங்க? என்னங்க... எடுக்கக் கூடாதா?'
வினோதன் அவனையே பார்த்தான்.
முகத்தில் கோபம் இல்லை. ஆனால் , ஒரு பரபரப்பு. எதிலிருந்தோ தப்பித்து ஒரு நிம்மதி தெரிந்த மாதிரி இருந்தது. அவனை சமாதானப் படுத்தும் முயற்சியாய் பேசினான் நேசன்:
'இல்ல பிரதர்... பரோட்டா எப்படி உருவாகிறது என்று யூ டியூபில் போடப்போறேன். எனக்கு நிறைய ஃபாலோயர்ஸ்... கேட்காமல் எடுத்தது தப்புதான்... சாரி!'
அவன் சமாதானமாகாமல் தன் அதிருப்தியை முகத்தில் காட்டினான். ஆனாலும் கோபப் படாமல் பேசினான்.
'அழிச்சிருங்க...' என்று செல்லை நீட்டியவன் என்ன நினைத்தானோ அவனே செட்டிங்ஸ் போய் நேசன் எடுத்த வீடியோவை அழித்துவிட்டு செல்லை நீட்டினான்.
மைதாமாவு துகள்கள் ஒட்டியிருந்த செல்லை வாங்கிக் கொண்ட நேசன், தோளில் தொங்கிக் கொண்டிருந்த பையில் இருந்து ஒரு கைக்குட்டையை எடுத்து செல்லை துடைத்தான்.
'நீங்க என் மூஞ்சியை யூ டியூப்ல காண்பிச்சிருவீங்க. எங்க ஊர்ல யாரும் பார்த்து என்னோட அப்பாட்ட போட்டுக்கொடுத்துட்டா போச்சு... என் உயிர் போயிரும். என் உயிர் போனா பரவாயில்ல என்ன நம்பி வந்த பொண்டாட்டி உயிரும் போயிரும்!'
'என்ன சொல்றீங்க?'
'ஆமா... லவ் மேரேஜ். இரண்டுபேர் வீட்லயும் ஒத்துக்கல. தெரியாம ஓடிவந்துட்டோம்...'
'அடக் கடவுளே!'
நேசனுக்கு சட்டென்ற இந்தக் காதல் மீது எரிச்சல் வந்தது. எங்கு போனாலும் பிரச்னை.
படபடப்பு அடங்காத வினோதன் தொடர்ந்தான்:
'எங்க அப்பா பேரு சீனிச்சாமி. தூத்துக்குடியில எங்க பரோட்டா ஸ்டால் பிரபலம். அவர் மகனான எனக்கு பரோட்டா போட வராம இருக்குமா. அதுதான் இப்ப கை கொடுக்குது...' சொல்லி விட்டுச் சிரித்தான் வினோதன்.
நேசனுக்கு அவன் பேச்சும் சொல்லாடல்களும் வியப்பாக இருந்ததன.
'என்ன படித்திருப்பான்?'
எது எப்படியோ வினோதனின் வேகம் பிடித்து இருந்தது.
காதலித்து கட்டியவளை இழுத்து வந்து குடும்பம் நடத்தும் வேகம்.
அதனால் விளைந்த வேலைகள் பரோட்டா மாவு பிசைவதிலும் பஜ்ஜி சுடுவதிலும் ஏற்படாத சலிப்பு.
'வாடிப் பெண்ணே... எப்படியாவது சமாளிச்சிறலாம் ஓடி...' என்று வாழ்க்கையைத் துவங்கிவிட்ட ஒரு தில்.
'உங்களுக்கு தில்லே இல்லீங்க. வாங்க போயிறலாம். நல்லா சம்பாதிக்கலாம். இது நாள் வரை என்னத்த சம்பாதிச்சீங்க? இத்தனை நாள் நட்புல நீங்க வாங்கிக் கொடுத்தது ஒரு பாம்பு டிசைன் கொலுசு மட்டும். அதுவும் நான் கேட்டு கேட்டு கொத்திக்கிட்டே இருந்தேன். வெட்கமாயில்ல? வாங்க போயிறலாம்...' என்றாள் சுதா ஒரு நாள்.
மறுத்தான்.
'யார் மனசும் நோகாம நம்ம கல்யாணம் முறைப்படி நடக்கணும்...'
'கிழிஞ்சிது போங்க. எனக்கும் அதான் ஆசை. ஒரு வேளை முடியாமப் போனா... எதுக்கும் துணியணும். நோகாம நுங்கு திங்க ஆசைப்படாதீங்க. வாழ்க்கைங்கறதே ஒரு பனை மரம்... ஏறினா நுங்கு விழுந்தா சங்கு'
இப்படியெல்லாம் சொன்னவள் தானே சுதா.
சொல்லி சொல்லிப் பார்த்து அலுத்துவிட்டாளோ?
பஜ்ஜிக்கான காசைக் கொடுத்தான்.
'பரோட்டா ரெடியாயிரும் சார்... சால்னா உள்ள சூடா ஏற்கெனவே தயார்...'
'உண்மைய சொன்னா நான் பரோட்டா சாப்பிடவே வரல. அதைச் செய்யும் போது படம் எடுக்கத்தான் வந்தேன்...'
அவன் திடுக்கிட்டு அவனைப் பார்த்தான். பிறகு நார்மலுக்கு வந்தான்.
இப்போது சில கஸ்டமர்கள் வர ஆரம்பித்தார்கள். பஜ்ஜி வியாபாரம் சூடு பிடித்தது.
'கொஞ்சம் பிசினஸ் டெவலப் ஆனதும் ஒரு அஸிஸ்டண்ட் போடலாம்னுஇருக்கேன். அதுவரை என் மிசஸ்தான் ஹெல்ப்...'
கொஞ்சம் நட்பாகிவிட்ட மாதிரி இருந்தது.
'அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேன்...'
கிளம்பிய நேசனை அவசரம் அவசரமாகத் தடுத்தான் வினோதன். கோபம் எல்லாம் ஆறிப்போயிருந்தது.
'சார்... இவ்வளவு நேரம் இருந்திட்டீங்க. சாப்பிட்டுப் போயிருங்க...'
அவனது இயல்பான அன்பு நேசனுக்குப் பிடித்திருந்தது. தன்னைப் பற்றியும் சொல்ல வேண்டும் போலிருந்தது. பிறப்பு, வளர்ப்பு, காதல், அதில் கண்ட தோல்வி, தனிமை, அன்பான வீட்டில் இருந்து பிரிந்து இன்னும் எதுவும் சாதிக்காதது, நிலையற்ற வருமானம்... எல்லாம் எல்லாம்.
'சரி... பரோட்டா மணமே அசத்துது. சாப்பிடறேன்...'
'அப்பாடி சந்தோஷம்...'
'இங்க எங்காவது ரெஸ்ட் ரூம் இருக்கா? போயிட்டு வந்திடறேன்...'
'நம்ம வீட்டுப் பின்னாடியே இருக்கு சார்...' என்று கை காண்பித்தான்.
நேசன் அவன் காண்பித்த இடத்தை நோக்கிப் போனான்.
வெளிச்சமே இல்லை. அழுது வழிந்த ஒரு சின்ன எல்.இ.டி. பல்ப். வழியெல்லாம் குப்பை.
மைதா மாவு மூட்டைகள், உரித்த வெங்காயம், பூண்டு, தக்காளி, மிளகாய் நிறைந்த முறம், அழுக்கேறிய ஒரு பழைய ஃப்ரிட்ஜ்...
தாவித் தாவி போகவேண்டியிருந்தது. கூடம் கடந்த போது கொடியில் புடைவை, வேட்டி, உள்ளாடைகள் தொங்கிக் கொண்டு இருந்தன.
தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருந்த புடைவை ஒன்று வழி மறிக்க, குனிந்து கையால் விலக்கி முன்னேறினான்.
ஒரு வழியாய் கொல்லைப்புறம் வந்து விட்டது.
இருளைக் கிழித்து ஒரு சின்ன பல்ப். அதுவும் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. சற்று தள்ளி இரண்டு ஷெட் மாதிரி ரூம் தெரிந்தது. முதலில் இருப்பது பாத்ரூம் போலும்.
சோப் நுரை தண்ணீர் ஓசையுடன் வெளிகுழாய் வழியாக விழும் சத்தம். ஒரு பாத்தி வழியாக அங்கிருந்த தென்னை மரம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
அந்தக் குளியலறையில் முக்கால் கதவு. கதவில் டவல், புடைவை, பாவாடை இத்யாதிகள் தொங்கிக் கொண்டிருந்தன. மேலே விளக்கெரிந்து கொண்டிருக்க மைசூர் ஸாண்டல் சோப் மணம் வியாபித்திருந்தது.
நேசன் காதுகள் சட்டென்று விடைத்தன. இனிய பாடல் முணுமுணுப்பு தேனாக.
'மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி...'
படபடத்த அவன் இதயம் பரோட்டா மாவு போல் பிசையப்பட்டது. நெஞ்சைஅழுத்திப் பிடித்துக் கொண்டான்.
இன்னும் இரண்டு அடி எடுத்து வைத்த போது கதவின் கீழே இரண்டு அழகிய பாதங்கள் இரண்டு வெண்புறாக்கள் சல்லாபம் செய்வது போல் வலது பாதம் இடது பாதத்தையும் இடது பாதம் வலது பாதத்தையும் தேய்த்துக் கொண்டிருந்தன.
இப்போது அவன் கண்கள் உறைந்தன. கால்களில் பாம்பு டிசைன் கொலுசுகள்.
அதைப்பார்த்த நேசன் மார்பை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். இன்றேல் இதயம் வெளியே வந்து விழுந்து விடும் போலிருந்தது.
ரெஸ்ட் ரூம் கூட போகாமல் சட்டென்று வெளிப்பாதை வழியாக ஓடிவந்தான்.
'ஸாரிங்க... ஆர்டர் கேன்சல்' என்றான் படபடப்பாக வினோதனிடம்.
'என்னாச்சு சார்?'
'வயிறு சரியில்ல...'
சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
இத்தனை நாள் மனக் கூட்டுக்குள் கதகதப்பாக வைத்திருந்த ஒரு வண்ணப் பறவை வெளியே பறந்தோடி விட்ட மாதிரி இருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.