தேவதைகள் தேவை!
உணவகத்துக்குள் நுழைந்த மாத்திரத்தில், என் கண்கள் சரஸ்வதியைத் தேடின.
பெ.நாயகி
உணவகத்துக்குள் நுழைந்த மாத்திரத்தில், என் கண்கள் சரஸ்வதியைத் தேடின. வழக்கமாய் அமரும் மேசையின் அருகே சென்று அமர்ந்தேன். ஒரு வாரத்துக்குப் பின்னர் வருகிறேன். வெளியூரில் மகன் வீட்டுக்குப் போயிருந்தேன். முந்தைய நாள் இரவுதான் வந்தேன். மாலை நடைப்பயிற்சி என்கிற பெயரில் நேராக அந்த உணவகத்துக்குத்தான் சென்றேன். சரஸ்வதியின் பரிவான வார்த்தைகளைக் கேட்காத இந்த நாள்களே எனக்குப் பெரிய இடைவெளி போல் பட்டது. பார்த்த மாத்திரத்தில் விழிகள் விரிய, ஒரு புன்னகையுடன் தூரத்தில் இருந்தால் கூட, 'எப்படி இருக்கீங்க ஐயா?' என்று சைகையிலேயே கேட்கின்ற அவளுடைய பரிவு ஈடு இணை இல்லாதது. இன்று அந்தப் பார்வை உபசரிப்பு இல்லாமல் உணவகத்தின் உள்ளே போய் அமர்வதே கூட அழையா விருந்தாளியாக ஒரு வீட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது.
'இது என்ன விதமான உணர்வு' என்று எனக்குள் சிரித்துக் கொண்டேன். இது ஒன்றும் உறவினர் வீடு அல்ல; அந்தப் பெண்ணும் எந்த வகையிலும் உறவு இல்லை. ஏதோ தேவைக்கு இங்கு வந்து காஃபியும், சிற்றுண்டியும் சாப்பிட்டுவிட்டுப் போகப் போகிறேன்; அதுவும் இலவசம் அல்ல. காசு கொடுத்துவிட்டுத் தான் வெளியே நகர முடியும். அப்புறம் விருந்தாளி என்கிற எண்ணத்துக்கு எங்கே இடம்?
Advertisement
Advertisement
ஒரு பணிப்பெண்ணின் பரிவான புன்னகைக்கும், இதமான நான்கு வார்த்தைகளுக்கும் இவ்வளவு சக்தி இருக்குமா? இருக்கிறது என்று காட்டுகிறதே இன்றைய வெறுமை.
பவ்யமாய் வந்து தம்ளரில் தண்ணீர் ஊற்றி அருகே வைத்தாள் வேறு ஒரு பெண்.
'அம்மா, இங்கே சரஸ்வதின்னு ஒரு பொண்ணு இருக்குமே? அது எங்கே காணோம்?' என்று கேட்டேன்.
'வேலையைவிட்டு நின்னுடுச்சிங்கைய்யா...'
'ஐயோ, ஏன் என்னாச்சு?' என்று கேட்டேன் கொஞ்சம் பதற்றமாக.
அந்தப் பெண் அவசரமாக ஒருமுறை சுற்றிலும் பார்த்துக்கொண்டு, 'அவளை வேலையை விட்டு எடுத்துட்டாங்கய்யா...' என்றாள் மெதுவாக. இன்னும் நின்றால் தொடர்ந்து ஏதாவது கேட்பேனோ என்று பயந்தது போல், அவசரமாக அந்த இடத்தை விட்டு அகன்றாள். ஏதோ நடந்திருக்கிறது. என்ன பிரச்னை என்று தெரியவில்லை. யாரிடமும் கேட்கவும் முடியாது. பணியாள்கள் யாரும் விவரம் சொல்லவும் மாட்டார்கள்.
உணவு பரிமாறும் இன்னொருவர் வந்து, 'என்னங்க வேணும்?' என்று கேட்டார். எனக்கு எதுவும் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணமே விடுபட்டுப் போயிருந்தது. அப்படியே எழுந்து போய் விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், அதற்கு தைரியம் இல்லாமல், 'ஒரு காஃபி' என்றேன்.
'சுகர் நார்மலா போடலாமா? சீனியா? நாட்டுச் சர்க்கரையா?'
சரஸ்வதி இப்படியெல்லாம் எப்போதுமே கேட்டது கிடையாது. சட்டென்று பதில் சொல்லத் தெரியவில்லை எனக்கு. 'சுகர் கொஞ்சம் கம்மியா போட்டுக் கொடுப்பா' என்றேன் ஏதோ சொல்ல
வேண்டுமே என்பதற்காக.
அன்றைய காஃபி நிஜமாகவே எனக்குச் சுவைக்கவில்லை. எழுந்து போக மனமில்லாமல் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். ஏதோ ஒரு விதமான வெறுமை. 'சரஸ்வதிக்கு என்ன ஆயிற்று' என்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும். அவள் நிச்சயம் ஏதும் தவறு செய்திருக்க வாய்ப்பில்லை. பிறகு ஏன் அவளை வேலையில் இருந்து நீக்கினார்கள்?
பில் எழுதிக் கொடுத்து பணம் வாங்கும் மேசைக்கு அருகில் நின்றிருந்தபடி எல்லோரையும் கண்காணித்துக் கொண்டிருந்தவர்தான் மேனேஜர் அல்லது முதலாளியாக இருக்க வேண்டும். எழுந்து மெல்ல அவரிடம் சென்றேன்.
'சார், இங்கே சரஸ்வதின்னு ஒரு பொண்ணு வேலை பார்த்துச்சே. அது எங்கே?'என்று கேட்டேன்.
அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். 'எதுக்குக் கேட்கிறீங்க? நீங்க அதுக்கு உறவா?' என்றார்.
'அப்படியில்லை சார். நான் போன இரண்டு மூணு மாசமா இங்கே ரெகுலராக வருகிறவன். போன வாரம் வந்திருந்தபோது அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அப்புறம் வெளியூர் போயிருந்து இன்னிக்குத்தான் வந்தேன். அதைக் காணவில்லையே. பரிவா பாசமாப் பேசும். அதற்காகக் கேட்டேன்.'
'பாசமாப் பேசுவாளா? நீங்கதான் அப்படிச் சொல்றீங்க. சொன்ன வேலையை விட்டுட்டு கண்டதையும் பண்ணிட்டு இருந்தா. கஸ்டமர்ஸ் கொஞ்சம்பேர் கம்ப்ளெயின்ட் பண்ணுனாங்க. அதான் வேலையை விட்டு எடுத்துட்டோம்' என்றார். அதற்கு மேல் அவருடைய கவனம் திரும்பி விட்டது. மேற்கொண்டு என்னிடம் பேசுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.
'அந்தப் பொண்ணோட முகவரி கிடைக்குமா சார்?' என்று கேட்டேன்.
அவர் மீண்டும் என்னை சந்தேகக் கண்களோடு பார்த்து, 'இல்லை, சார், அதெல்லாம் இல்லை' என்றார். கொஞ்சம் இடைவெளி விட்டு, 'ஏன், உங்ககிட்ட எதாவது கடன் வாங்கி இருந்தாளா? எதுவும் பாக்கி இருக்கா?' என்றார்.
'இல்லை, சார். நான்தான் அவளிடம் எமோஷனலாகக் கடன்பட்டிருக்கிறேன்' என்று சொல்லவில்லை நான். வெளியே வந்து கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு மரத்தின் அடியில் சிறிது நேரம்
நின்றிருந்தேன்.
உணவகத்தில் எனக்குத் தண்ணீர் வைத்த பெண் திடீரென்று அங்கே ஓடி வந்து என் கையில் ஒரு காகிதத்தை அவசரமாகத் திணித்துவிட்டு, 'இதில் அவளுடைய முகவரி இருக்கிறது. போய்ப் பாருங்க...' என்று மட்டும் சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.
முகவரியைப் பார்த்தேன். என்னுடைய வீட்டிலிருந்து சுமார் ஏழெட்டுத் தெரு தள்ளித்தான் அந்த வீட்டின் முகவரி. சில நிமிட தயக்கங்கள் மறைந்து ஓர் உத்வேகம் வந்து நேராக அந்த வீட்டை நோக்கி நடைபோட்டேன்.
மனைவியை இழந்தவன் பணி ஓய்வுக்குப் பிறகு உடல் தெம்பும் மன தைரியமும் இருக்கும் வரை, 'எங்க கூட வந்து இருங்கப்பா' என்று சொல்லும் பிள்ளைகளிடம் வீம்புடன், 'நான் கட்டிய வீட்டை விட்டு இந்த ஊரை விட்டு எங்கும் வந்து யாருக்கும் சுமையாகவோ தொந்தரவாகவோ இருக்க மாட்டேன். யாருக்குத் தோன்றுகிறதோ நேரம் ஒத்துழைக்கிறதோ அவர்கள் வந்து என்னைப் பார்த்துச் செல்லுங்கள்' என்று வசனம் பேசிக் கொண்டிருக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிலையில் இருந்து கொஞ்சம் தடுமாற்றம் வந்து ஆறு மாதங்களுக்குள் இரண்டொருமுறை மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்ட பின் வீம்பெல்லாம் கொஞ்சம் தளர்ந்து விடுகிறது.
மூடு வரும்போது மட்டும் செய்கிற நடைப்பயிற்சி தினசரிக் கடமை ஆகிறது. அவ்வப்போது மகன் வீட்டுக்கும், மகள் வீட்டுக்கும் ஒருவாரம், பத்து நாள்கள் என்று போய்த் தங்கி பேரப் பிள்ளைகளைப் பார்த்து வரும் ஏக்கம் லேசாக வந்து விடுகிறது.
அப்படி நடைப்பயிற்சியைக் கட்டாயமாக்கிக் கொண்டபிறகு கண்களில் பட்டது தான் புதிதாகத் திறந்திருந்த அந்தப் பெரிய உணவகம். எளிமையான காஃபி, டீயில் இருந்து வடநாட்டு, மேல்நாட்டு இறக்குமதிப் பண்டங்கள் வரை சகலமும் சுத்தமாகக் கிடைக்கும் வண்ணம் பேணப்பட்டதால் நிறைய போக்குவரத்துப் பயணிகளையும் கார்களில் குடும்பம் குடும்பமாக வந்து செல்லும் உள்ளூர் வாடிக்கையாளர்களையும் கவர்ந்து விட்டிருந்தது அந்த உணவகம். நான் நடைப்
பயிற்சி போகும் போது ஒரு நாள் அங்கே சென்று காஃபி அருந்தினேன். மிகவும் நன்றாக இருந்தது. மெதுவாக அதனுடன் வடை, பஜ்ஜி, பரோட்டா என்று நாக்கு இழுக்க ஆரம்பித்திருந்தது. அப்போது தான் சரஸ்வதியின் அறிமுகம்.
நான் வழக்கம் போல் பஜ்ஜிக்கும் காஃபிக்கும்
ஆர்டர் செய்ய, 'ஏன் தாத்தா, இந்த வயதில் பஜ்ஜி? எவ்ளோ எண்ணெய் தெரியுமா? ஏன் உடம்பு ஆரோக்கியத்துடன் விளையாடுறீங்க? அது செமிக்கறதுக்கு ஓடி ஆடுகின்ற வயசா உங்களுக்கு? அதுக்குப் பதிலா குழிப் பணியாரம் சாப்பிடுங்களேன். நல்லா இருக்கும்' என்றாள்.
அதிர்ந்து போனது போல் அவளைப் பார்த்தேன். இருபது வயது இருக்கும். புன்னகை மலர்ந்திருந்த முகம். அப்படியே மனதில் பதிந்து போனது.
'உன் பேர் என்னம்மா?'
'சரஸ்வதி.'
'சரிம்மா, உனக்கு எது சரின்னு படுதோ அதே கொண்டு வா...' என்றேன் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப் பட்டது போல்.
அப்படி ஆரம்பித்தது எங்களுக்கிடையே ஆன பெயர் சொல்ல முடியாத நட்பு. இந்த மூன்று மாதங்களில் மனதளவில் ரொம்பவே ஒட்டிக் கொண்டுவிட்டாள்.
மகன் வீட்டில் சொன்னபோது முதலில் கேலி செய்தார்கள். ஆனால், போனமுறை என்னைப் பார்த்தபோது இருந்த களைப்பும் கால் வலியும் இந்த முறை என்னிடம் இல்லாததையும் என் ஆரோக்கியம் கொஞ்சம் மேலிட்டிருப்பதையும் கவனித்ததாகச் சொன்னார்கள்.
'அந்த ஓட்டலில் சாப்பாடு ஐட்டங்களின் டேஸ்ட் பார்ப்பதைவிட உங்கள் சரஸ்வதியைப் பார்ப்பதற்காகவாவது அங்கே வரவேண்டும்' என்றார்கள்.
அவர்கள் சொன்னது நிஜம். சரஸ்வதி சொன்ன உணவுமுறை மாற்றங்களால் என்னுடைய ஆரோக்கியம் கொஞ்சம் மேம்பட்டிருப்பது எனக்கே தெரிந்தது. படிகள் ஏறினால் மூச்சு வாங்கும் வேகம் குறைந்திருந்தது. இந்த வயதில் சாப்பாட்டில் புளியைக் கூடுமானவரை தவிர்க்கச் சொன்ன சரஸ்வதியின் அறிவுரையைத் தீவிரமாகக் கடைப்பிடித்ததில் நீட்டி மடக்கும் போது கை, கால் முட்டுகளில் முன்பு இருந்த வலிகள் கணிசமாகக் குறைந்திருந்தது நிஜம்.
இந்த நன்றி உணர்வுகளின் வேகம்தான் இன்று அவளுடைய வீடு தேடி என்னை விரைய வைத்திருந்தது.
முகவரியை உறுதி செய்து கொண்டு கதவைத் தட்டினேன். திறந்த கதவின் வழியே வீட்டின் ஏழ்மை, பின்னணியில் தெரிய, என்னை எதிர்கொண்டு பேசியது சரஸ்வதியின் அம்மாவாக இருக்க வேண்டும். முகஜாடை அப்படியே இருந்தது.
'சரஸ்வதி...' என்று இழுத்தேன்.
'அவ வேலைக்குப் போயிருக்கா ஐயா, நீங்க?' என்று கேட்டாள் அந்தப் பெண். இருபது வயது மகளைத் தேடி ஓர் எழுபது வயதுக் கிழவன் வந்திருப்பது அவளை வியப்படையச் செய்திருக்கும்.
'சரஸ்வதிக்கு தெரிஞ்சவன் தான். வேலைக்கா? எங்கே?'
'டாக்டர் சண்முகம் ஆர்த்தோ கிளீனிக்கில் வேலைக்குப் போறா ஒருவாரமா...' என்றாள்.
அவளைப் பார்த்தே தீர வேண்டும் என்கிற வேகம் என்னை விரட்ட, அந்த மருத்துவமனைக்குச் சென்றேன். நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டு எண் சொன்னார்கள். குறிப்பிட்ட அறையின் வாசலில் நின்றேன். உள்ளே சரஸ்வதியின் குரல் கேட்டது. சிகிச்சையில் இருக்கும் நோயாளியின் உடன் வந்தவர்களிடம், அவள் பேசிக் கொண்டிருந்தாள்.
'பிசியோதெரபிங்கறதெல்லாம் விபத்தில் உடல் உறுப்புகள் பாதிப்பாகி, ஆபரேஷன் செஞ்சு சரிப் பண்ணுவாங்க பாருங்க அவங்களுக்கு ரொம்ப அவசியம். ஆபரேஷனுக்கு அப்புறம் காயங்கள் குணமானப்புறம், இறுக்கம் ஆகி இருக்கற தசைகளை சகஜ நிலைக்குக் கொண்டுவர்றதுக்கு செஃபிஸியோதெரபி செஞ்சாகணும். உங்க பிரச்னை, வயசானதால வந்திருக்கற பலகீனம் மட்டும்தான். இதுக்கு நீங்க சத்தான சாப்பாடு எடுத்துக்கிட்டு, கைகால் எல்லாம் அசைச்சு உடற்பயிற்சிகள் செஞ்சாலே போதும். பிசியோதெரபிக்கு செலவழிக்கறதை பழங்கள், காய்கறிகள்னு செலவழிங்க. ஒரு மாதத்தில் அவ்வளவு தெம்பா ஆயிடுவீங்க' என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
எனக்கு சிரிப்பு வந்தது. சரஸ்வதி மாறவே மாட்டாள்.
அறைக் கதவைத் திறந்து வெளியே வந்தவள், என்னைப் பார்த்ததும் வியப்பு மேலிட, 'தாத்தா, எப்படி இருக்கீங்க? இங்கே எப்படி வந்தீங்க? உடம்பு நல்லாத்தானே இருக்கு? பிரச்னை ஏதும் இல்லையே?' என்றாள் கொஞ்சம் பதற்றத்துடன். கவுன்ட்டரில் சொல்லி அனுமதி பெற்று, என்னுடன் வெளியே வந்தாள். 'ஓட்டல்ல உன்னைக் காணலை. வேலையைவிட்டு எடுத்துட்டதா சொன்னாங்க. மனசு கேக்கலை. அதான் தேடி வந்தேன்' என்றேன்.
சிரித்தாள்.
'என்னம்மா ஆச்சு? கஸ்டமர்கள் கம்ப்ளெயின்ட் பண்ணினார்கள்னு மேனேஜர் சொன்னார். நீ அப்படிப்பட்ட பொண்ணு இல்லையே. சொல்லும்மா...' என்றேன்.
'உங்களுடன் எப்படி தாத்தா எனக்கு பழக்கம் ஏற்பட்டுச்சு? நான் உங்க வயசுக்கு எண்ணெய்ப் பலகாரமெல்லாம் சாப்பிடாதீங்கன்னு சொல்லி, அதற்குப் பதிலாக ஆவியில் வேகுற பதார்த்தங்கள் சாப்பிடுங்கன்னு சொன்னேன். கேட்டுக்கிட்டீங்க. உங்களுக்கு மட்டுமில்ல, அங்கே சாப்பிட வர்றவங்கள்ல அறுபது வயசு கடந்த எல்லோருக்குமே சொன்னேன். ஏற்கெனவே கொழு கொழுன்னு ஒபிசிட்டியுடன் இருக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் ஜன்க் ஐட்டமெல்லாம் வாங்கித் தர்றதைக் குறைங்கன்னு சொன்னேன். அது பிடிக்காத சிலர் மேனேஜர்கிட்ட புகார் பண்ணிட்டாங்க. கோபமான மேனேஜர் என்னை வேலையில் இருந்து தூக்கிட்டார்' என்றாள் எந்தவித புகார்ச் சாயலும் இல்லாத குரலில்.
'இப்படி செய்தால் எந்த முதலாளி உன்னை வேலையில் வைத்திருப்பார்?' என்றேன் லேசான கண்டிப்புடன்.
'மனசாட்சி ஒத்துக் கொள்ளவில்லை தாத்தா' என்றாள். 'கொஞ்சம் வயதில் மாரடைப்பில் என்னுடைய அப்பா இறந்ததால் எங்கள் குடும்பம் பட்ட கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன்' என்றாள் கொஞ்சம் குரல் கலங்கி. 'பரவாயில்லை தாத்தா, எல்லாம் நன்மைக்கே. சொல்லப்போனால், அங்கேவிட இங்கே நிஜமான நோயாளிகளுக்கு சேவை செய்ய முடியுது. இது ஒரு வகையில் திருப்தியாகத்தான் இருக்குது. சந்தோஷமாவும் இருக்குது.'
'நீ நர்சிங் படித்திருக்கிறாயா?' என்று கேட்டேன்.
'இல்லை தாத்தா. இங்கே உதவியாளராகத் தான் வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி வேலைக்குப் படிப்பைவிட அக்கறையும் பாந்தமும் தானே முக்கியம்?'
'வாஸ்தவம்தான்' என்றேன். அவளைப் பகுதி நேரக் கல்வியிலாவது சேர்த்துவிட்டு நர்ஸிங் படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். ஒரு நிமிடம் கழித்து சிரித்தேன். 'இங்கும் உன்னை நீண்ட காலம் வச்சிருக்க மாட்டாங்கன்னு தோணுது. ஆர்த்தோ ஆஸ்பத்திரில உள்நோயாளியா இருக்கறவர்கிட்ட, ஃபிசியோதெரபி வேண்டாம்; வெறுமனே எக்ஸர்சைஸ் செய்ங்கன்னு நீ சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டேன்.'
நான் சொன்னதன் உள்ளர்த்தம் புரிந்து சிரித்தாள் சரஸ்வதி. 'எல்லோரிடமும் அப்படிச் சொல்ல மாட்டேன் தாத்தா. இவங்க வசதி இல்லாதவங்க. பாச உணர்வுல கடன் வாங்கி செலவு செய்யறாங்க. அவங்களுக்கு அதிகப்படி செலவைக் குறைக்க சொல்ல வேண்டாமா?' என்றாள்.
'உன்னை நம்பி ஒரு வீடு இருக்கே சரஸ்வதி. உங்கம்மா...'
'பரவாயில்லை தாத்தா. இங்கே இருந்தும் தூக்கிட்டாங்கன்னா ஒரு முதியோர் இல்லம் இருக்குது. அங்கே போய் வேலைக்குச் சேர்ந்துக்குவேன். உணவுக் கட்டுப்பாடு இல்லாதவங்களும், உடல்நலம் பேணாதவங்களும், வயசான பிறகு என்ன ஆவாங்க? அவங்கவங்க குடும்பத்துக்காரங்க அவங்களை எல்லாம் அங்கே தானே கொண்டு வந்து சேர்த்துவிடப் போறாங்க? அவங்களை நல்லா கவனிச்சுக்கிட்டாப் போச்சு!'
தேவதைகளின் தேவை எல்லா இடங்களிலும் இருக்கிறது.
சரஸ்வதி சீக்கிரம் மருத்துவமனையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று உள்ளூர வேண்டிக் கொண்டேன். அவள் முதியோர் இல்லத்தில் வேலைக்குச் சேர்ந்தால் சில குடும்பங்களையாவது நிச்சயம் ஒன்று சேர்ப்பாள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.