மறையும்வரை தொடரும்...
பாலு வீட்டுக்கு வந்தபோது அம்மா மருதாணிச் செடியிடம் நின்றிருந்தாள்.
புவனபாரதி
பாலு வீட்டுக்கு வந்தபோது அம்மா மருதாணிச் செடியிடம் நின்றிருந்தாள். செடியின் ஒவ்வொரு கிளைகளையும் பிரித்துப் பார்த்து, கீழே விழுந்திருந்த அதன் பூக்களை ஒரு கூடையில் போட்டுக் கொண்டிருந்தாள்.
அவ்வப்போது நிமிர்ந்து வானத்தைப் பார்த்துத் தானே சிரித்துக் கொண்டவள், பாலுவைக் கவனிக்கவில்லை. பாலு ஓர் அசதியுடன் உள்ளே நுழைந்தான். எட்டிப் பார்த்த மனைவி ஆனந்தி, 'வந்துட்டீங்களா?' என்றாள்.
Advertisement
Advertisement
'ம்... ம்...'
'என்ன ஆச்சு?' என்றாள்.
மெதுவாக தலை அசைத்தான். பேசப் பிடிக்கவில்லை. மனதின் பாரம் வார்த்தைகளைத் தடுத்து நிறுத்தியது.
'உங்க அம்மாவை வைத்து என் மகளால் சமாளிக்கவே முடியல...' என்றாள் பாலுவின் மாமியார்.
''இன்னைக்கு என்ன ஆச்சு?'
'வழக்கமா நடக்கிறதுதான்.'
என்ன நடந்தது என்று பாலுவுக்குத் தெரியும். பொதுவாக, ஆனந்தியின் அம்மா எதையும் மிகைப்படுத்திச் சொல்வதுதான் வழக்கம். அவர் மகள் வீட்டுக்கு வந்துவிட்டு ஊருக்குப் போன பிறகு ஒரு வாரத்துக்கு மனம் கனமாகவே இருக்கும். சின்ன சின்ன விஷயங்களைக்கூட பெரிதுபடுத்திக் குறை சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனந்திக்குமே அது எரிச்சல் தரும் விஷயம்தான்.
'அதான் தெரிஞ்சதாச்சே... இப்ப என்ன ஆச்சு?' என்று கேட்டான்.
'விடேம்மா...' என்றாள்ஆனந்தி.
'என்ன செஞ்சாங்க ஆனந்தி?'
'நான் கிச்சன்ல வேலையா இருந்தேன். அந்த நர்ஸ் பொண்ணு பின்னாடி போயிருந்திருக்கா. அந்தச் சமயத்துல உங்க அம்மா எங்கேயோ வெளியில போயிட்டாங்க...'
'ஏன், உங்க அம்மா இல்லையா?'
'நான் ராமாயணம் படிச்சிட்டு இருந்தேன்... அதுல உங்க அம்மா போனதைக் கவனிக்கல.'
'அப்புறம்?'
'அதுக்குள்ள நர்ஸ் பொண்ணு பின்னாடியே போயிட்டா. நம்ம தெரு முனையில் போகும்போது நடேசன் சார் பார்த்து அம்மாவைக் கூட்டிட்டு வந்துட்டாரு.'
'அம்மா எங்க போனாங்க?'
'உங்களை ஸ்கூல்ல இருந்து கூட்டி வரப்போயிருக்காங்க?' என்று கூறி, மாமியார் சிரித்தார். பேச்சில் கிண்டல் இருந்தது.
அவனுக்கு மனது வலித்தது. அம்மா இன்னும் அவனின் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறாள். அவளுடைய ஞாபகங்கள் முப்பது வருஷத்துக்கு முந்திய நாள்களோடு நின்று விட்டன. எங்கு அம்மா தடுமாற ஆரம்பித்தாள் என்று தெரியவில்லை. குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் அம்மாக்களின் தள்ளாமை தருணத்தில், அவளின் தடுமாற்றத்தைப் பிள்ளைகள் உணர்வதில்லை. வாழ்க்கைப் போராட்டத்தில் தாய் - மகன் உறவுகள் விலகித்தான் நிற்கின்றன. தாய் தரும் சுயநலமில்லாத, தூய்மையான அன்பை பிள்ளைகள் தருவதில்லை.
அம்மாதான் பாலுவைப் பள்ளியில் இருந்து அழைத்து வருவாள். பெல் அடிப்பதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பே வந்து விடுவாள்.
'ஏம்மா?' என்று கேட்டால், 'இல்லடா, உனக்கு வழி தெரியாமல் எங்கேயாவது போயிட்டா என்ன பண்றது?' என்பாள்.
ஒவ்வொன்றிலும் அவளுக்குப் பயம். அவன் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தபோது கீழே விழுந்து, சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வந்தபோது அம்மாதான் அழுதாள்.
'நீ என்ன பைத்தியமா?' என்றுகூட அப்பா திட்டினார்.
'குழந்தைக்கு வலிக்கும் என்ற உணர்வே என் மனதில் வலியை ஏற்படுத்துகிறது' என்பாள் அம்மா.
'இப்படியே உன் கைக்குள்ள பொத்தி வளர்த்தால் அவன் எப்படி இந்த உலகத்தை எதிர்கொள்வான்?' என்பார் அப்பா.
சிறிது சிறிதாகத்தான் அம்மாவுக்கு ஞாபகங்கள் போக ஆரம்பித்தன. இந்த மூன்று வருடத்தில் மொத்தமாக மாறிவிட்டாள். பிறந்த குழந்தையை விடவும் மோசமாக இருக்கிறாள். 'அல்சைமர் நோய்' என்று டாக்டர் பெயர் சூட்டியிருக்கிறார்.
'கொஞ்சம் கொஞ்சமாக அவங்களுடைய ஞாபகங்கள் எல்லாம் போய்விடும். ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் நீங்கள் செலுத்தும் அன்பும், கொடுக்கும் அனுசரணையும்தான் அவர்களை நன்றாக வைக்கும்' என்று கூறினார்.
பாலுவும், ஆனந்தியும் நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறார்கள். பாசம், பிரியம் என்பதையும் தாண்டி, 'தன் தாய், தன்னைப் பெற்றவள், ஒரே பிள்ளையான தனக்காகவே வாழ்ந்தவள்' என்ற உணர்வு பாலுவிடம் இருந்தது.
ஆனந்தி திருமணமாகி வந்த புதிதில், அம்மா நன்றாகத்தான் இருந்தாள். திடீரென்று அப்பா இறந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாகத் தனக்குள் ஒடுங்கியவள், முழுவதுமாக உள்ளுக்குள் புதைந்து போய்விட்டாள். கவனிக்காமல் விட்டோமோ? ஒரு குற்ற உணர்ச்சி.
நல்லவேளை... ஆனந்தி வேலைக்குப் போகவில்லை என்றாலும், அவளுக்கு ஐந்து மற்றும் இரண்டு வயதில் பெண், ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க வேண்டும். எனவே பாலு அம்மாவைக் கவனித்துக் கொள்ள ஒரு வேலையாளை நியமித்தான். அந்தப் பெண் அம்மா பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு புத்தகம் அல்லது மொபைலில் மூழ்கிப் போய் விடுவாள்.
அவளை ஏமாற்றிவிட்டு அம்மா வெளியே ஓடி விடுவாள். மருதாணி மரம், சாமந்திப்பூச் செடி, தோட்டத்தில் சுண்டைக்காய்ச் செடி, செம்பருத்திப்பூ... என்று ஒவ்வொன்றாகத் தொட்டு தொட்டுப் பார்ப்பாள்.
'என்னம்மா செய்யற? எதுக்கு இங்க வந்தே?' என்று கேட்டால், 'எதுக்கு வந்தேன்னு தெரியலையே?' என்பாள்.
'சரி... உள்ள போய்ப் படுத்துக்கோ...' என்றால், சொல்பேச்சு கேட்டு உள்ளே சென்று படுத்துக் கொள்வாள். சிறிது நேரம்தான். பாலு கணினியுடன் தன் அறைக்குச் சென்றுவிட்டால், ஆனந்தியும் வீட்டு வேலையில் மூழ்கிவிட்டால், அம்மா எழுந்து மீண்டும் வெளியில் போய்விடுவாள்.
'எதுக்குப் போன?' என்று கேட்டால், சொல்லத் தெரியாது. விழிப்பாள்.
'சாப்பிட்டியா? என்ன சாப்பிட்ட?' என்றால், 'நான் நாளைக்கு பூரி சாப்பிட்டேன்' என்பாள்.
'நாளைக்கு இல்லம்மா, இன்னைக்கு என்ன சாப்பிட்ட?'
'காலையில சாப்பிடலையே...' என்பாள்.
'பொய் சொல்றாங்க?' என்றார் மாமியார்.
'நாலு இட்லி சாப்பிட்டாங்க... நான்தான் தட்டுல போட்டுக் கொடுத்தேன்' என்று சொல்லும்போது, அம்மா ஓர் அசட்டுச் சிரிப்புடன் அவளையும் பாலுவையும் மாறி மாறிப் பார்ப்பாள். அது பாலுவின் வயிற்றைப் பிசையும்.
'ஏம்மா, என்னோட நிறுத்திக்கிட்ட? இன்னொரு தம்பி, அக்கா அல்லது அண்ணன் இருந்திருந்தா மாறி மாறி உன்னைப் பார்த்திருப்போம் அல்லவா?' என்று பாலு அம்மாவிடம் ஒருமுறை கேட்டபோது, அம்மா அவன் முகத்தையே பார்த்தாளே தவிர, பதில் சொல்லத் தெரியவில்லை.
பாலுவுக்குக் கூட்டுக் குடும்பத்தின் மீது ஆர்வம். அவன் அந்தச் சூழ்நிலையில்தான் வளர்ந்தான். தாத்தாவோடு பிறந்தவர்கள் ஏழு பேர். சின்ன தாத்தா, அத்தை என்று வீட்டுக்கு வந்துகொண்டே இருப்பார்கள். அப்பாவோடு பிறந்தவர்களும் இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள். பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அப்பா, சித்தப்பா என்று எல்லோருமே தஞ்சாவூர் அருகில் ஒரு கிராமத்தில்தான் ஒன்றாக வாழ்ந்தார்கள். வளர்ந்தார்கள்.
அம்மா எந்நேரமும் சமையலறையில் இயங்கிக் கொண்டிருப்பார். அப்பா, தாத்தா அனைவருமே விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மதியச் சாப்பாட்டுக்கு இருபது பேர் அமர்வார்கள். எங்கே இந்தக் குடும்பம் பிரிந்தது என்றுதான் தெரியவில்லை! யாருக்கு உடல்நலம் சரியில்லை என்றாலும் பார்த்துக்கொள்ள ஆள் இருந்தது.
அப்பாவின் வயதான பாட்டி ஒருத்தி வீட்டில் இருந்தார். அவருக்குத் தலையில் கட்டி கட்டியாக வந்து, அதிலிருந்து செதில் செதிலாக விழும். அவரை அம்மாதான் குளிக்க வைத்து, ஷாம்பு போட்டுத் தலையை அலசி விடுவாள். கடைசி வரை அவர் நினைவில்லாமல்தான் இருந்தார். தலையில் ஏதோ கட்டி உருவாகி, உள்ளே நரம்பைப் பாதித்துவிட்டது என்றார்கள். ஆள் மாற்றி ஆள் பார்த்துக் கொண்டார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக அத்தை, தங்கைகளின் கல்யாணம் என்று நிலங்களை விற்று, சொத்துப் பிரித்து, பிழைப்பைத் தேடி நகரத்துக்கு வந்தவுடன் வீட்டில் கூட்டங்கள் குறைந்துவிட்டன. வயதானவர்கள் இறந்து போனார்கள்; சிறியவர்கள் வேலை தேடி வெளி மாநிலம், வெளிநாடு என்று போனதால் அனைவரது வாழ்க்கையும் வாட்ஸ் அப்புக்குள் முடங்கிவிட்டது. ஆளாளுக்கு தனித்தனித் தீவுகளாக இருக்கிறார்கள்.
அம்மாவுக்குப் பாலு ஒரே பையன். கூடப் பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை. எல்லா நிலங்களையும் விற்றுப் பிழைப்புத் தேடி ஒரு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்தவுடன், அப்பா ஒரு குழந்தை போதும் என்று கூறிவிட்டார். சூழ்நிலையும் மறுகர்ப்பத்தைத் தடுத்துவிட்டது. ஒரே பையன் என்பதால், அம்மாவுக்கு பாலுவின் மீது உயிர். அவனுக்குத் திருமணம் ஆகும் வரை அவனின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வாள். அவன் இன்ஜினீயரிங் முடித்து ஐ.டி. கம்பெனியில் சேர்ந்தவுடன், வீட்டுக்கு வர எவ்வளவு நேரமானாலும் விழித்திருந்து அவள்தான் சாப்பாடு போடுவாள்; அவனுக்கு வேண்டியதை ருசியாகச் சமைத்துக் கொடுப்பாள்.
'நான் என்ன ஸ்கூல் படிக்கிற குழந்தையா அம்மா?' என்று கேட்டால், 'இல்லப்பா, நீ என் இடுப்பில் சுமந்த குழந்தை' என்பார். 'வயிற்றில் சுமந்த குழந்தையை இப்போ நான் நெஞ்சில் சுமக்கிறேன்' என்று அடிக்கடி கூறுவாள்.
அப்படி ஒரு பிரியம் அம்மாவுக்கு. அவர்தான் இன்று அனைத்து ஞாபகங்களையும் இழந்து பொம்மையாக அலைகிறார். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஞாபகங்கள் மழுங்க ஆரம்பித்தன. அதைச் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி பாலுவுக்குள் இருந்தது. அப்பா போன பிறகு, அம்மா சிறிது சுணங்கி, மெல்ல மெல்ல ஞாபகங்கள் போக ஆரம்பித்தன. பேச்சும் நின்றுவிட்டது. எது கேட்டாலும் மலங்க மலங்க விழிப்பாள். இல்லை என்றால் ஓர் அசட்டுச் சிரிப்போடு எல்லோரையும் மாற்றி மாற்றிப் பார்ப்பாள். தன்னைத் திட்டுகிறார்களா, சாதாரணமாகப் பேசுகிறார்களா என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை.
இந்த மூன்று மாதமாக அம்மாவின் நிலைமை மிகவும் மோசமானதால், உதவிக்காக ஆனந்தியின் அம்மா வந்திருந்தார். அம்மாவுக்கு அல்சைமர்; அவளுக்கு எதுவும் புரியாது என்பது தெரியாமல், அவர் ஏதோ ஒரு குறை சொல்லிக்கொண்டே இருந்தார். பாலுவுக்கு யாரையும் குறை சொல்லவோ, அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டவோ பிடிக்காது. எனவே அவன் அமைதியாக இருந்துவிட்டான். அதை அவர்கள் சலுகையாக எடுத்துக் கொண்டனர்.
'நீங்களும் வேலைக்குப் போயிடுறீங்க. ஆனந்திக்கும் வீட்டு வேலைகள் இருக்கிறது, கைக்குழந்தையும் இருக்கிறது. அம்மாவை வைத்துச் சமாளிப்பது கஷ்டம். எனவே அவளை ஒரு ஹோமில் சேர்த்துவிடலாம்' என்றார் மாமியார்.
பாலுவுக்குமே அது நல்லதுதான் என்று தோன்றியது. தனக்கும் விழி பிதுங்கும் வேலை. வீட்டிலிருந்து வேலை. ஆனந்திக்குக் குழந்தைகளைக் கவனிப்பது, சமையல் வேலை. உதவிக்கு வரும் நர்ஸ் சரியில்லை. அம்மாவின் நிலைமையும் மோசமாகத்தான் இருந்தது.
'இப்படி பொம்மை மாதிரி இருப்பவர்களைக் கவனிப்பதற்கென்றே நல்ல இல்லங்கள் இருக்கின்றன' என்று கேள்விப்பட்டிருந்தான். அதில், அம்மாவைச் சேர்த்துவிடலாம் என்றுதான் விசாரித்து வரச் சென்றிருந்தான். அது நல்ல ஹோமாகத்தான் இருந்தது. அவனுடைய பட்ஜெட்டுக்குள்ளும் அடங்கியிருந்தது.
'நாங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம்' என்று கூறிய நிர்வாகியையும் அவனுக்குப் பிடித்திருந்தது.
'என்னுடைய தாயாருக்கும் அல்சைமர்தான். அவரும் இங்குதான் இருக்கிறார். நாங்கள் அவர்களை அன்பாகவும் பரிவாகவும் பார்த்துக்கொள்வதால், அவர்களின் காரியங்களை அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள்' என்று அங்கு ஒருவர் பேசியது பாலுவுக்குத் திருப்தியாக இருந்தது.
'என்ன கேட்கிறாங்க?'- ஆனந்தி.
'எல்லாம் நம்ம பட்ஜெட்டுக்குள்ளதான் வருது.'
'பரவாயில்லை... அம்மாவைப் பத்திரமா பார்த்துப்பாங்களா?'
'பார்த்துக்க என்ன இருக்கு? எதானும் தெரியவா போறது?அவங்க எங்கேயும் வெளியில போகாம இருந்தால் சரி'- மாமியார்.
ஆளாளுக்குப் பேசினாலும் பாலு அமைதியாகவே இருந்தான். அம்மா மெதுவாக உள்ளே வந்தாள். இவனைப் பார்த்ததும் வேகமாக அருகில் வந்து, 'வந்துட்டியா?' என்றாள்.
'ஆமாம்மா?'
'எப்ப வந்த?'
'இப்பதான் வந்தேன்.'
'சாப்பிட்டியா?' - அம்மா கேட்டாள்.
'பாரு... எது ஞாபகம் இருக்கோ இல்லையோ, பையன் சாப்பிட்டானா என்பது மட்டும் ஞாபகத்துல இருக்கு...' என்றாள் மாமியார்.
'தாய்க்கு எப்பவும் பிள்ளையின் வயிறுதான் கணக்கு. வயித்துச் சுமையை மனசை விட்டு எறக்க முடியுங்களா?' என்று வீடு பெருக்கிக் கொண்டிருந்த வேலைக்காரி சொன்னபோது, பாலுவின் நெஞ்சில் 'சொடேர்' என்று அடி விழுந்தது.
'சட்'டென்று எழுந்து அம்மாவின் கையைப் பிடித்துத் தன் அருகில் அமர்த்திக் கொண்டான். அவள் கையின் மெலிந்த எலும்புகளையும், வறண்ட தோல்களையும் தடவிக் கொடுத்தான்.
'அப்பா... உனக்கு பசி தாங்காதேடா...' என்றாள் அம்மா.
அவன் அம்மாவின் முகத்தையே பார்த்தான். எல்லாமே மறந்துபோன அம்மாவுக்குத் தன்னை மட்டும் மறக்கவில்லையா? தன் பசியும் ருசியும் மட்டும்தான் அவள் நினைவில் உள்ளதா? அவன் கண்ணில் நீர்முட்டிக் கொண்டு வந்தது. அவள் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, பொங்கி வந்த அழுகையைக் கட்டுப்படுத்தினான்.
அங்கு என்ன பேசுவதென்று தெரியாமல் மெளனம் நிலவியது.
ஆனந்தி மெல்ல அருகில் வந்து அவன் தோளில் கை வைத்து, 'அம்மா நம்ம கூடவே இருக்கட்டும்...' என்றாள். பாலு உடைந்து அழுதான்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.