விருப்பம்
'இந்தப் புடைவை எனக்குப் பிடிச்சிருக்கு. உனக்கு நல்லா இருக்கும்.
'இந்தப் புடைவை எனக்குப் பிடிச்சிருக்கு. உனக்கு நல்லா இருக்கும். உன் கலருக்கு ரொம்ப பக்காவா இருக்கும். நல்லா இருக்குதான?' என்று கணவன் சதீஷின் குரலில் ஒலித்த தொணி, 'நல்லா இருக்குனு சொல்லியே ஆகணும்...' என்று பட்டது அனுஷாவுக்கு. மஞ்சள் கலரில் மயில் கலர் பார்டர் கலந்து இருந்தது அந்தப் புடைவை. எப்படியும் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும். புடைவை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், அது அவளுக்குப் பிடிக்கிறதா? என்பதுதானே கேள்வி. அழகாய் இருக்கிறது என்பதாலேயே எல்லோருக்கும் பிடித்து விடுகிறதா என்ன? இல்லை பிடிக்க வேண்டும் என்பது என்ன சட்டமா?
அழகாய் இருக்கிறது என்பது விஷயமல்ல. அதை ஒருவர் எப்படிக் கொடுக்கிறார் என்பதுதான் முக்கியம். விலை அதிகமா?, குறைவா? என்பது முக்கியமல்ல. அதை எப்படிக் கொடுக்கிறார் என்பதுதான் முக்கியம். நம் மீது திணிக்கும் எதுவும் வெறுக்கப்படும் என்பதுதான் இங்கு இயல்பான விஷயம். அழகோ, விலையோ ஒரு பொருட்டல்ல.
ஒருவர் மனதைப் புரிந்து கொள்ளாமல் நம் விருப்பத்தை அவர்கள் மேல் திணிப்பதில் எங்கு அன்பு இருக்கிறது? அதிகாரம்தான் அங்கு இருக்கிறது. எவ்வளவு நெருங்கிய உறவிலும் அதிகாரம் என்பது வெறுக்கப்படும். ஏறக்குறைய இதுவும் ஒரு திணிப்புதான் என நினைத்தால் அனுஷா. தன் மேல் கணவன் என்னும் உரிமையில் அவன் காட்டும் திணிப்பு. அவள் மனதை உடைத்து வலி ஏற்படுத்தும் திணிப்பு.
Advertisement
Advertisement
சதீஷின் அத்தை மகளுக்கு இன்னும் இரண்டு வாரத்தில் கல்யாணம். அதற்கு தன்னிடம் நல்ல புடைவை எதுவுமில்லை. புதிதாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவள் அவனிடம் சொல்லவும் செய்தாள்.
'ஸ்வேதா கல்யாணத்துக்குக் கட்டிக்கிட்டு வர நல்ல புடைவை ஒண்ணும் இல்ல சதீஷ். புதுசா ஒண்ணு எடுத்தா பரவால்ல. ஞாயிறு போகலாமா?' என்றாள்.
'ம்... ஏன் இன்னைக்கே போலாமே சாயங்காலம்?'
'இல்ல. இன்னைக்கு எங்க எம்.டி. டெல்லில இருந்து வர்றாரு. சாயங்காலம் எப்போ போவாருனு தெரியாது. அவர் கிளம்பிப் போற வரைக்கும் நான் இருந்தே ஆகணும். இன்னைக்குச் சாயங்காலம் நான் வர லேட்டாகும். நானே உங்கிட்ட சொல்லணும்னு இருந்தேன்...'
'ஓகே...ஓகே... அப்போ சாயங்காலம் சாப்பாடு ஓட்டல்லதானா?'
'ஏன்? வேலைக்காரி சமைச்சு வச்சிட்டுப் போயிருப்பாளே? அதைச் சாப்பிடு...' என்றவள் கிளம்பினாள்.
ஆனால், அன்று மாலையே பார்சலுடன் வந்தான் சதீஷ். அதில்தான் மஞ்சள் கலர் புடைவை. தானும் அவனும் நாலு கடை ஏறி தனக்குப் பிடித்த டிசைனில், தனக்குப் பிடித்த கலரில் எடுக்க நினைத்திருந்தாள் அனுஷா.
'சாயங்காலம் ஆபீஸ் சீக்கிரம் முடிஞ்சுடுச்சு அனு. வர்றப்ப காலையில நீ சொன்னது ஞாபகம் வந்துச்சு. கடையில உள்ளே போய்ப் பார்த்தேன். இந்தப் புடைவை எனக்குப் பிடிச்சிருந்தது. அதான் எடுத்துட்டு வந்தேன்...'
புடைவையை தொப்பென்று கட்டில் மேல் போட்டாள்.
'ஞாயித்துக்கிழமை ரெண்டு பேரும் போகலாம்னு சொன்னேனே... இன்னைக்கே என்ன அவசரம் சதீஷ்?'
அவன் பதில் இல்லாமல் விழித்தான்.
'உனக்குப் பிடிச்சிருந்தது ஓகே... எனக்குப் பிடிச்சிருக்கான்னு பார்த்தியா சதீஷ்? எனக்குப் பிடிக்கறதுதான முக்கியம்? கட்டப் போறது நான்தானே?'
'ஏன் நல்லால்லயா?'
'நல்லா இருக்கறது இல்லாதது முக்கியமில்ல. என் விருப்பத்துக்கு, முடிவுக்கு நீ முக்கியம் கொடுத்திருக்கணும்ல? எனக்குப் பிடிச்சதை நான் எடுத்துட்டு வந்திருக்கேன். உனக்குப் பிடிச்சாலும் பிடிக்காட்டியும் நீ கட்டிட்டு வந்தே ஆகணும்ங்கற ஆணவ, திணிப்பு மனப்பான்மைதான் தெரியுது.'
'ஆசையா எடுத்துட்டு வந்தேன் பாரு... என்னை சொல்லணும்...'
'இதுல ஆசையோ, அன்போ தெரியலை. அதிகாரம்தான் தெரியுது. என் விருப்பத்துக்கு நீ முக்கியத்துவம் தராததுதான் தெரியுது. என்னை அடிமைப்படுத்தும் உன் எண்ணம்தான் வெளிப்படுது. எல்லா விஷயத்துலயும் உன் முடிவுக்கு, விருப்பத்துக்கு நான் கட்டுப்படணும்னு நீ விரும்பறது தெரியுது. இது என் மேல நீ செலுத்தற ஆதிக்கம். உனக்குப் புரியுதா?'
சதீஷ் ஒரு நிமிடம் அவளை எதுவும் பேசாமல் உற்றுப் பார்த்தான். பின்பு அங்கிருந்து போய் விட்டான். அனுஷாவுக்கு ஆயாசமாக வந்தது. அவன் தன் விருப்பங்கள பற்றி கவலைப்படாத ஆயாசம். தன் ஆசைகளை அலட்சியப்படுத்தும் ஆயாசம். தனக்கான முடிவுகளையும், தேவைகளையும் கூட அவனே முடிவு செய்யும் ஆயாசம். தனக்கான மரியாதை, உரிமை மிதிபடும் ஆயாசம். தனது ஆசைகள் புறக்கணிக்கப்படும் ஆயாசம். அவனது ஆணவம் தன் மேல் திணிக்கப்படும் ஆயாசம். அவளுக்கும் மனசு என்ற ஒன்று இருக்கும். அதில் தனக்கான விருப்பம் என்ற ஒன்று இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளாத ஆயாசம்.
அவன் எப்போதும் அப்படித்தான்.
கல்யாணம் ஆன புதிதில் அவள் ஊட்டிக்கு ஹனிமூன் செல்ல ஆசைப்பட்டாள்.
'ஊட்டிக்குப் போகலாம்பா. நான் இதுவரைக்கும் போனதில்லை...' என்றாள்.
ஆனால், அவனோ கொடைக்கானலுக்குப் போகலாம் என்றான்.
'கொடைக்கானல் போகலாம் அனுஷா. நான் நாலைஞ்சு முறை போயிட்டு வந்திருக்கேன்.'
'அதான் போயிட்டியே. அப்புறம் எதுக்கு அங்கேயே போகணும்? போகாத இடம் ஊட்டிக்குப் போலாமே?'
'இல்ல. கொடைக்கானல் நல்லாருக்கும் இந்த கிளைமேட்டுக்கு. சுத்திப் பார்க்கவும் நிறைய இடம் இருக்கு. அங்கயே போவோம்.' என்றான் உறுதியாக.
அந்த உறுதியில், 'நான் முடிவு பண்ணிட்டேன். அங்கதான் போறோம்...' என்ற தொணி இருப்பதைப் பார்த்து திகைத்துப் போனாள். கடைசியில் கொடைக்கானலுக்குத்தான் போனார்கள். அதிலும் அனுஷாவுக்கு ரயிலில் போவது கொள்ளை பிரியம் என்பதால் ரயிலில் போகலாம் என்றாள். சதீஷோ காரில் போகலாம் என்றான். கார் பயணம்தான் கடைசியில். சாப்பாடு போன்ற விஷயங்களிலும் அவன் விருப்பத்துக்கே இவள் இணங்கிப் போகும்படி ஆனது. அவளுக்கு பிரியாணியோ, பரோட்டோவா பிடிக்காது. எங்காவது வெளியில் சாப்பிடச் செல்வதே சுத்தமாகப் பிடிக்காது. காய்ச்சல், உடம்பு சரியில்லை, ரொம்ப பிசியாக வேலை போன்ற எந்தச் சூழ்நிலையிலும் ஹோட்டலுக்கே போக மாட்டாள். ஒரு ரசம் சாதம், அப்பளத்தோடு சாப்பாட்டை முடித்துக் கொள்வாள். ஆனால், கல்யாணத்துக்கு அப்புறம் அவளை வற்புறுத்தி வெளியில் சாப்பிடக் கூப்பிடுவான். இவளும் கணவனின் மனம் நோகக் கூடாதே என்று விருப்பமே இல்லாமல் போவாள்.
'என்ன சாப்பிடறே?' என்று ஒரு நாளும் அவன் கேட்டவனில்லை.
'அனு... இங்க பரோட்டாவும், சிக்கன் ஃப்ரையும் நல்லாருக்கும். ட்ரை பண்ணேன்...' என அவள் வாய் திறக்கும் முன்பே அவளுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணுவான். வேறு வழியின்றி கொறித்து விட்டு வருவாள்.
'இந்த ஹோட்டல்ல மட்டன் பிரியாணி நல்லாருக்கும். ட்ரை பண்ணலாம்...' என்பவன் அவள் பதிலைகூட எதிர்பார்க்காமல், 'ரெண்டு மட்டன் பிரியாணி...' என்று ஆர்டர் கொடுப்பான். அவளுக்கு குமட்டிக் கொண்டு வரும்.
'ம்... நீ அதிர்ஷ்டசாலிதான்டி. உன் புருஷன் பாரு உன்னை தாங்கறாரு. வாரத்துல மூணு நாள் சினிமா என்ன... ஓட்டல் என்ன... வெளிய கூட்டிட்டுப் போறதென்ன..' என்று அவளின் சொந்தங்கள் சொல்லும்போது அவளுக்கு சிரிப்புதான் வரும். சினிமா அவன் விருப்பப்பட்ட படத்துக்குதான் இருக்கும்.அதே போல அவன் விருப்பப்பட்ட இடத்துக்குதான் அழைத்துச் செல்வான். சாதாரண சினிமாவிலிருந்து சாப்பாடு வரை எல்லாம் அவன் விருப்பப்படியே நடந்தது. அவளுக்கு குழந்தை என்றால் கொள்ளை ஆசை. கல்யாணம் ஆன அடுத்த வருடமே இரட்டைக் குழந்தைகளாகப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது அவளது விருப்பமாக இருந்தது.
'நாம மொதல்ல மூணு வருஷம் எந்த டென்ஷனும் இல்லாம லைஃப்ப என்ஞாய் பண்ணணும் அனு. அப்புறம்தான் குழந்தை குட்டிலாம். மூணு வருஷத்துல நமக்கு வயசாகிடுமா என்ன?' என்று அவளின் அந்த ஆசையிலும் அவன் மண் அள்ளிப் போட்டான். பாவம் பார்க்கிறவர்களின் கேள்விகளுக்குதான் இவளால் பதில் சொல்ல முடியவில்லை.
அடுத்த நாள் ஆபீஸில் லன்ச் டைம். மனம் வெறுமையாகக் சுழன்றடிக்க முகம் வாடிப் போய் உட்கார்ந்திருந்தாள். நிரப்ப முடியாத வெறுமை என்று எதுவுமில்லைதான் என்றாலும் நிரம்பி இருக்கும் வெறுமைகள் நம் வாழ்வின் போக்கைக் குலைக்கும். மன நிறைவை, நிம்மதியை இல்லாமலாக்கும்..
'என்ன அனுஷா... முகம் வாடிப் போய் உக்காந்திருக்கே? என்ன விஷயம்?' தன் செக்சன் பூரணி கேட்க, எதுவும் பேசாமல் அவளையே பார்த்தாள் அனுஷா.
'என்ன இப்படி இமைக்காம பார்க்கற? சொல்லு என்ன விஷயம்?'
அனுஷாவுக்கு யாரிடமாவது எல்லாவற்றையும் கொட்டி விட வேண்டும் போலிருந்தது. இல்லாவிட்டால் பைத்தியமே பிடித்துவிடும். வார்த்தைகள் என்பது மனதின் மிகை வெப்பத்தின் வடிகால்கள். மனதின் சூட்டை வெளியேற்றும் வாய்க்கால்கள். எல்லாவற்றையும் கொட்டி விட்டால் தீர்வு கிடைக்காவிட்டாலும் மனதுக்கு ஆறுதலாவது கிடைக்கும். அழும் கண்களுக்கு துடைக்க விரல்கள் தேவைப்படுவது போல அழும் மனதின் கண்ணீர் துடைக்க வார்த்தைகள் என்னும் மந்திரம் தேவையாய் இருக்கிறது.
எல்லாவற்றையும் பூரணியிடம் கொட்டித் தீர்த்தாள் அனுஷா.
'இப்பெல்லாம் இவர் கூட வாழணுமானு தோண ஆரம்பிச்சுடுச்சு பூரணி. டைவர்ஸ் வாங்கிடலாமானு தோணுது. அந்த வீட்ல எனக்கான இடம் என்னனு புரியல. மொதல்ல அது இருக்கான்னு தெரியல.' அவள் சொல்ல தூக்கி வாரிப் போட்டது பூரணிக்கு.
'அவசரப்படாத அனுஷா. இதெல்லாம் அவர் உன் மேல வச்சிருக்கற அன்புனு எடுத்துக்கோயேன்...'
விரக்தியாய் சிரித்தாள் அனுஷா.
'எது அன்பு பூரணி? நம்ம விருப்பத்தை வலுக்கட்டாயமா அடுத்தவங்க மேல திணிக்கிறதா? அட்லீஸ்ட் அவங்க என்ன விரும்பறாங்க, நினைக்கறாங்கன்னு கூட தெரிஞ்சுக்காம இருக்கறதா? அடுத்தவங்க விருப்பம் என்னனு புரிஞ்சுக்கிட்டு அதை நிறைவேத்த பார்க்கறதுதானே அன்பு பூரணி? அடுத்தவங்களுக்கு எது சந்தோஷம் தருமோ அதை மட்டும் தர்றதுதானே உண்மையான அன்பு பூரணி? குறைஞ்சபட்சம் அடுத்தவங்க விருப்பத்தை, ஆசையை மதிக்கவாவது செய்யறதுதானே அன்பு? அடுத்தவங்க உணர்ச்சிகளை மதிக்காம நம்ம விருப்பம் போலச் செய்யறதுல அன்பு எங்க இருக்கு பூரணி? யோசிச்சா இது ஒரு வகை மனநோய் பூரணி...'
பூரணிக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. அவள் வாழ்வதென்பது காலையில் நாலரைக்கு எழுந்து குளித்து, சுப்ரபாதம் கேட்டுக் கொண்டே பூஜை செய்து, கணவனுக்கு பிடித்த டிபனும், லன்ச்சும் செய்து, ஒரே மகளை தயார் பண்ணி ஸ்கூல் வேனில் ஏற்றி விட்டு, கணவனுக்கு டிபன் பறிமாறி, அவனுக்கு லன்ச் கட்டிக் கொடுத்து, தானும் அவசர அவசரமாகக் கொறித்து, இடையில் வாட்ஸ் அப் குட்மார்னிங்களுக்கு பதில் சொல்லி, இடையில் அவசரமாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பார்த்து லைக் பண்ணி, கணவன் பைக்கில் லன்ச்சோடு ஆபிஸில் இறங்குவது. சாயங்காலம் விடியல் பேருந்தில் வீட்டுக்குப் போய் கணவனுக்குப் பிடித்ததை சமைத்துச் சாப்பிட்டு சீரியல் பார்த்து, பதினொரு மணி வரை வீட்டு வேலை பார்த்து, டையர்டாக இருந்தாலும் பன்னிரண்டு மணிக்கு தூங்கிப் போவது...
லன்ச் டைம் முடிந்ததால் எழுந்தார்கள்.
அடுத்த ஞாயிறு மதியம். வீட்டு வேலைகளை முடித்து வந்த வேலைக்காரியின் கழுத்தில் புது செயின்.
'அட புனிதா... செயின் நல்லாருக்கே... எத்தனை பவுன்?' அனுஷா கேட்டதுக்கு வெட்கப்பட்டாள் புனிதா.
'அட நீங்க வேறமா... இது கவரிங் செயின். தங்கத்துல வாங்கறதுக்கு எனக்கு ஏது வசதி? கவரிங் நகைக் கடையில ரெண்டாயிரம் ரூபாய்க்கு என் புருஷன் வாங்கித் தந்தாரு...'
'நல்லாருக்கு...'
'அட, அந்தக் கூத்தை ஏன் கேக்கறீங்க... போட்டுக்க இருந்த ஒரு நகையும் அடமானத்துக்குப் போயிடுச்சி. கழுத்துல போட்டுக்க கவரிங் நகை வேலை முடிஞ்சு வர்றப்ப உனக்கு பிடிச்சத வாங்கிட்டு வாய்யா'னு என் புருஷன்கிட்ட சொன்னேன். அவரோ இதை வாங்க என்னையும் கடைக்கு இழுத்துட்டுப் போனாரு.. உனக்குப் பிடிச்சதை நீதான் தேர்ந்தெடுத்து வாங்கணும். நான் எனக்குப் பிடிச்சதை வாங்கிட்டு வந்து அது உனக்குப் பிடிக்கலைனா அப்புறம் வாங்கறதே வேஸ்ட். போட்டுக்கற சந்தோஷமே இருக்காது. ஒரு பொருளை உபயோகப்படுத்தறப்ப ஒரு சந்தோஷம் இருக்கணும். செலவு பண்ணி வாங்கறதே நம்ம சந்தோஷத்துக்காகத்தான்னு என்னென்னமோ சொல்றாரு...'
அவள் சொல்ல சொல்ல ஏக்கமாய் அவளைப் பார்த்தாள் அனுஷா. ஏனோ அக்கணம் அவள் மேல் சின்னதாய் ஒரு பொறாமை எழுந்தது. மனதில் சீற்றம் எழ ஒரு கொதி நிலை அவளுள் எழ ஆரம்பித்திருந்தது.
'வேலை முடிஞ்சதுமா... கிச்சனையும், அடுப்பையும் துடைக்கணும்... பழைய துணி வேணும்...'
புவனா சொல்லவும் எழுந்தாள் அனுஷா. பீரோவை திறந்தாள். வாங்கி வந்த மஞ்சள் கலர் புதுப்புடைவை பீரோவின் முதல் ரேக்கிலேயே இருந்தது. அதை எடுத்தாள்.
பக்கத்தில் இருந்த கத்தரிக்கோலால் வெட்ட ஆரம்பித்தாள்.
'அது புது புடைவைமா...' புவனா பதறிப் போய் சொல்ல, அவளை இமைக்காமல் தீர்க்கமாகப் பார்த்த அனுஷா சொன்னாள்...
'இது புடைவை இல்லை புவனா... ஆணவம்... மமதை...'
வேகமாய் இரண்டாய், நான்காய், ஆறாய் வெட்ட ஆரம்பித்தவளுக்கு தன் கணவனின் ஆணவத்தை, மமதையை, ஆதிக்க மனப்பான்மையை, அதிகார திமிரை வெட்டுவதைப் போன்ற திருப்தி எழ ஆரம்பித்திருந்தது.
இரண்டு நாள்களுக்குப் பிறகு இரவு வேலைகளை முடித்து விட்டு படுக்கைக்கு வந்தவளிடம் சொன்னான் சதீஷ்.
'அனு... நமக்கு கல்யாணம் முடிஞ்சு மூணு வருஷம் ஆச்சு. குழந்தை பெத்துக்கலாம்னு விரும்பறேன். இன்னைக்கு நல்லா யோசிச்ச பின்னாலதான் இந்த முடிவு எடுத்திருக்கேன்...'
எதுவும் பேசாமல் சில விநாடிகள் அவனை வெறுமையாய் பார்த்தவள் சொன்னாள்...
'இல்ல... இப்ப வேணாம் சதீஷ். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும். என் கேரியர்ல இன்னும் மேல வந்த பின்னால பார்த்துக்கலாம்...'
முதல் முறையாக அவனை மறுத்தபோது அவன் அடைந்த அதிர்ச்சியைப் பார்த்தபோது அவளுக்கு அவ்வளவு சந்தோஷமாக, நிறைவாக இருந்தது. இவ்வளவு நாள் இருட்டில், மூச்சு முட்ட நின்றிருந்தவள் சுதந்திரமாக சுவாசிக்க ஆரம்பித்தவளை போல மனம் லேசாகி, அவள் உடல், மனம் முழுக்க அவ்வளவு நிம்மதி, சந்தோஷம் பரவ ஆரம்பித்திருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.