சமூக மேம்பாட்டுக்கான மக்கள் பங்கேற்பு
சமூக மேம்பாட்டுக் கோட்பாட்டின் ஒரு முக்கியக் கூறு மேம்பாட்டுச் செயல்பாடுகளில் மக்கள் பங்கேற்பது. இந்த பங்கேற்பு என்பதை மக்கள் எங்கு கூடினாலும் அதையே பங்கேற்பாகக் கருதுகின்றனர் பேசுகின்றனர்.
இந்தச் சொல்லுக்கு ஒரு ஆழமான கருத்து இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் "டெவலப்மெண்ட் எங்கேஜ்மெண்ட்' என்று கூறுவார்கள். அதையே "பார்ட்டிசிபேஷன்' என்று எளிமைப்படுத்தியும் கூறுவது உண்டு. இந்த இரண்டு சொற்களுக்குமே அடர்த்தியான வரையறைகள் உண்டு.
மேம்பாட்டுக்கான பங்கேற்பு என்பது யார் மேம்பட வேண்டும், முன்னேற வேண்டும், வளர்ச்சியடைய வேண்டும் என்று விரும்புகின்றார்களோ அவர்கள் எவரையும் சார்ந்து வாழும் தன்மையைக் கைவிட்டு அனைத்து மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் தங்கள் பங்களிப்பை கடமையாகவும், உரிமையாகவும், பொறுப்பாகவும் செய்வதாகும்.
Advertisement
சமூக மாற்றம், சமூக மேம்பாடு பற்றிய சிந்தனைகளை விதைத்தவர்கள் மற்றும் கோட்பாட்டாளர்கள் அத்தனை பேரும் வலியுறுத்துவது மக்களின் விழிப்புணர்வையும் ஈடுபாட்டுடன் கூடிய பங்கேற்பையும்தான். உலகில் எந்த சமூகமும் அரசால் மட்டுமே மேம்பட்டுவிடவில்லை. சமூக மேம்பாட்டிற்கு மக்கள் செயல்பட அரசு வழிவகை செய்யும் அவ்வளவுதான். அரசு உருவாக்கும் கொள்கைகளையும், திட்டங்களையும் சமூகம் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்.
சுதந்திரம் அடைந்த நாடு சுதந்திரமாகச் செயல்படவும், மக்களாட்சி நடைபெறும் நாட்டில் மக்களாட்சி செயல்படவும், பொருளாதாரத்தில் மேம்படவும் அடிப்படையாகத் தேவைப்படுவது மக்களின் பங்கேற்பு. அந்தப் பங்கேற்பு என்பது எல்லாத் தளங்களிலும் நடைபெற வேண்டிய ஒன்று.
அது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும், ஆட்சியாக இருந்தாலும், நிர்வாகமாக இருந்தாலும், கல்வியாக இருந்தாலும் கலாசாரமாக இருந்தாலும் அனைத்துத் தளங்களிலும் மக்கள் தங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சமூகம் அனைத்து நிலைகளிலும் மேம்படும்.
ஒரு சமூகம் விடுதலை பெற வேண்டும் என்றால் அது போராட வேண்டும். அது போராடி விடுதலை பெற முதலில் மக்களை விடுதலைக்கான சிந்தனையை உருவாக்கத் தயார் செய்திட வேண்டும். அந்த விடுதலைச் சிந்தனை என்பது ஒரு குறிப்பிட்ட பூகோள எல்லையை விடுவிப்பது மட்டுமல்ல. அந்த விடுதலை என்பது அந்த பூகோள எல்லைக்குள் வாழும் மக்களுக்கும்தான். அங்கு நடைபெறும் ஆட்சிக்கும்தான். அங்கு நடைபெறும் நிர்வாகத்திற்கும்தான், அவர்களின் தொழிலுக்கும்தான், மக்களின் சிந்தனைக்கும்தான், மக்களின் கலாசாரத்திற்கும், மக்களின் மொழிக்கும் என அனைத்துக்குமான விடுதலைதான்.
ஒரு பூகோள எல்லையில் உள்ள நிலங்களை விடுதலை அடையச் செய்துவிடலாம். ஆனால் அந்த நிலத்தில் வாழும் மக்களை விடுதலை அடையச் செய்ய வேண்டும். அது சாதாரண நிகழ்வல்ல. அந்த மக்கள் தன் சிந்தனையில் விடுதலை அடைய வேண்டும். தன் செயல்பாட்டை சுதந்திரமான மனிதருக்குண்டானவையாக மாற்ற வேண்டும். அதேபோல் தன் செயல்பாடுகள் அனைத்தையும் சுதந்திர நாட்டில் எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பாடுகளை வடிவமைத்துச் செயல்பட வேண்டும்.
விடுதலை அடைந்த நாட்டில் மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதற்கான அடையாளம் அவன் வேர்களைக் கண்டுபிடித்து அவற்றை உயிர்பிடிக்க வைத்து அதை வளர்த்து அதில் அவர்கள் வாழ வேண்டும். அவர்களுக்கான கல்வி, பண்பாடு, இலக்கியம், இசை, கலை, பொருளாதாரம், உணவு, வாழ்வியல், அறிவியல், தொழில்நுட்பம், மொழி, அனைத்தும் நாடு விடுதலை பெறும்போது விடுதலை அடைந்து விடுவதாக நாம் கருதுகிறோம்.
உண்மை அதுவல்ல. அதற்கு தொடர்ந்து மக்கள் போராடி விடுதலை அடையச் செய்ய வேண்டும்.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததும் மக்களை அவரவர் வேர்களைத் தேட அனுமதித்து அவரவர் கல்வியைத் தேடுங்கள், விவசாயத்தைத் தேடுங்கள், கலாசாரத்தைத் தேடுங்கள், மொழியின் உன்னதத்தைத் தேடுங்கள், இலக்கியத்தைத் தேடுங்கள், இசையைத் தேடுங்கள், கலையைத் தேடுங்கள், உணவைத் தேடுங்கள், ஆட்சியைத் தேடுங்கள், அரசியலைத் தேடுங்கள், நிர்வாகத்தைத் தேடுங்கள் என மக்களை செயல்பாட்டுக் களத்தில் இறக்கிவிட்டு ஒரு கூட்டாட்சியை, குறைந்த அதிகாரத்துடன் இந்திய அரசைக் கட்டி, அதிக அதிகாரத்தை மக்களுக்குத் தந்து செயல்பட வைத்திருந்தால் நம் முன்னோர்கள் கண்ட கனவு நனவாகி உலகம் வியக்கும் நாடாக மாறியிருக்கும். உலகுக்கே வழிகாட்டும் தர்ம ஜனநாயகத்தைக் கொண்ட நாடாக மக்கள் மாற்றியிருப்பார்கள்.
அதற்காக நடைபெற வேண்டிய மக்கள் பங்கேற்புச் செயல்பாடுகளை எந்த இடத்திலும் நடைபெறாமல் 75 ஆண்டுகால மேலோட்டமான ஜனநாயகமும், சுரண்டும் நிர்வாகமும், பார்த்துக் கொண்டன. அரசு என்பது "நம் அரசு' என்று எண்ணமற்று, அது நம் எஜமானன் என்று அஞ்சி வாழும் சிந்தனைச் சூழலும் மக்களை முடக்கிப் போட்டு, அரிசிக்கும் பருப்புக்கும் எண்ணெய்க்கும் பொது விநியோகக் கடையில் காத்திருக்கும் பயனாளிக் கூட்டமாக வைத்துவிட்டன நம் ஆட்சியும் நிர்வாகமும் அரசியலும்.
நம் சுகாதாரம் இன்று மருந்துக் கம்பெனிகளின் கையில், நம் கல்வியானது கல்வித் தொழிற்சாலைகளின் சந்தையின் கையில், நம் உணவு உணவுச் சந்தையின் கையில் என அனைத்தையும் இழந்து போராடக் கூட சக்தியற்ற நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதற்கான அடிப்படைக் காரணம், சுதந்திரம் அடைந்த நாட்டில் மக்கள் தங்கள் வாழ்வியலைக் கட்டமைக்க அனைத்துத் தளங்களிலும் பங்கேற்று நாட்டின் முன்னேற்றத்தில், சமூக மேம்பாட்டில், கிராம மேம்பாட்டில், நம் குடும்ப முன்னேற்றத்தில் செயல்பட வேண்டிய பொறுப்பு மிக்க குடிமக்களை உணவுக்கே அரசை நம்பி வாழும் பயனாளியாக வைத்திருப்பது சோகத்தின் உச்சம்.
இவை அனைத்தும் இந்திய நாட்டின் படித்த வர்க்கத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் தெரியாமல் இல்லை. தெரிந்ததுதான். இருந்தாலும், ஏன் மாற்ற முயலவில்லை என்றால், இவர்கள் அனைவருக்கும் நல்ல சுகபோக வாழ்க்கை அமைந்துவிட்டது.
அன்று வெள்ளையர்கள் சுரண்டியதை இன்று நம்மவர்கள் செய்வதை வேடிக்கை பார்க்கும் மனோபாவத்தை நம் படித்த வர்க்கமும் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் செய்கின்றனர். அப்படியென்றால் நம் நாட்டில் எந்த மேம்பாடும் நடைபெறவில்லையா என்று கேட்கத் தோன்றும்.
ஆம், நடந்துள்ளது. நல்ல அரசமைப்புச் சாசனம், ஏழை மக்களைப் பாதுகாத்து மேம்படுத்த தனிச் சட்டங்களும் திட்டங்களும் உருவாக்கப்பட்டன. அத்துடன் மக்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களை மத்திய அரசும் மாநில அரசுகளும் உருவாக்கி நடைமுறைப்படுத்தின. அறிவியல் தொழில் நுட்பம் எல்லையற்று வளர்ந்தன. கல்விச்சாலைகள், பொது அடிப்படை வசதிகள் பெருமளவில் உருவாக்கப்பட்டன.
ஆனால், இவையெல்லாம் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களை சென்றடைந்ததா என்ற கேள்விக்கு யாராலும் ஆம் என்று கூற இயலாது.
பதவியானாலும் சரி, திட்டங்களானாலும் சரி, அவற்றைப் பிடித்து தங்களை வளமாக்கிக் கொள்கின்றனர் ஒரு சிலர்.
எனவேதான் இந்த சூழலை ஆய்வு செய்து பார்த்துவிட்டு, மத்திய அரசு ஒரு முடிவெடுத்தது, அதிகாரத்தைப் பரவலாக்கி மக்களுக்கு நெருக்கமான ஓர் அரசை அரசமைப்புச் சாசனத்தின் மூலம் உருவாக்க வேண்டும் என்று.
இந்த புதிய அரசு மக்களை ஆளுகையிலும், மேம்பாட்டுப் பணிகளில் பங்காளராக பங்கெடுக்க வைத்து, இதுவரை ஒதுக்கப்பட்டிருந்தவர்களின் மேம்பாட்டை உறுதி செய்தது. வீதியில் ஒப்பாரி வைத்து தண்ணீர் வேண்டும், சாலை வேண்டும், வசதிகள் வேண்டும் என்று முழக்கமிட்டவர்களை, உரிமைகளுடன் அரசை மக்களுக்குப் பணி செய்ய வைக்க அதிகாரமிக்க கிராம சபையில் கருத்தாக பதிய வைக்க அதிகாரத்தைத் தந்தது.
அடிப்படை மேம்பாட்டுப் பணிகளை உரிமைகளாக்கித் தந்துள்ளது மத்திய அரசு. இந்த முடிவுக்கு மத்திய அரசு ஏன் வந்ததென்றால், நாடு சுதந்திரமடைந்த நாளிலிருந்து மக்களைப் பங்கேற்க வைக்க எத்தனையோ முறை முயன்றது. முடியவில்லை. காரணம், அதிகாரத்தை மத்திய, மாநில அரசுகள் வைத்துக் கொண்டு மக்களைப் பங்கேற்கக் கூறினால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைப் புரிந்துதான் புதிய உள்ளாட்சியை அரசாக உருவாக்கினர்.
ஆனால் இவ்வளவு அதிகாரங்களைக் கொண்ட ஓர் மக்கள் அரசு 25 ஆண்டுகளில் தன் அதிகாரங்களைக் கையிலெடுத்து அதன் கடமைகளை நிறைவேற்ற இயலவில்லை. காரணம், இந்தப் புதிய உள்ளாட்சி மக்களை மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்தி மக்கள் தேவையைப் பூர்த்தி செய்து அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வரத் தேவையான ஆற்றலும், திறனும், பார்வையும் உள்ளாட்சித் தலைவர்களிடம் உருவாக்கவில்லை.
அதேபோல் பொதுமக்களிடமும் உருவாக்கவில்லை. இந்தப் பணியைச் செய்யாமல் கிராமங்களில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது. எனவே இதற்கான புரிதலை ஏற்படுத்தி நம் உள்ளாட்சித் தலைவர்களையும் மக்களையும் தயார் செய்வதுதான் இன்றைய தலையாய கடமையாகும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.