வருகின்ற தேர்தல் தமிழ்நாட்டு அணிக்கும், தில்லி அணிக்குமான தேர்தல்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டு அணிக்கும், தில்லி அணிக்குமான தேர்தல் என்று திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து...
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டு அணிக்கும், தில்லி அணிக்குமான தேர்தல் என்று திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் இளைஞரணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, சார்பு அணிகள் மீது தலைவர் வைத்துள்ள எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நம் உழைப்பு இருக்க வேண்டும்! கடந்த 11-ஆம் தேதி கடலூர் மாவட்டம், அதன்பிறகு பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம், இன்று தருமபுரி. இப்படி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என் பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். அரசு நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி, கழக நிகழ்ச்சிகள், சார்பு அணிகளின் சந்திப்பு நிகழ்ச்சிகள், இப்படித் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள். இவை எல்லாவற்றிலும் கலந்துகொண்டுதான் இன்று உங்களையெல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன்.
ஐந்துக்கு ஐந்து வெற்றி
இப்படித் தொடர்ந்து நான்கு நாட்களாகச் சுற்றுப்பயணத்தில் இருப்பதனால், நிச்சயம் ஒரு சோர்வு ஏற்பட்டது. ஆனால், உங்களைப் பார்க்கும்போது அந்தச் சோர்வெல்லாம் இப்பொழுது காணாமல் போய்விட்டது. உங்களையெல்லாம் பார்ப்பதற்கு இன்னும் எத்தனை கிலோமீட்டர் வேண்டுமானாலும் பயணம் செய்து போகலாம், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பயணம் செய்து செல்வதற்கு நான் தயார். ஏனென்றால், நீங்க காட்டக்கூடிய அந்த அன்பு, அந்த எழுச்சி, அந்த உற்சாகம், அது ஒரு பூஸ்ட் சாப்பிட்ட மாதிரி ஒரு எனர்ஜி தானாகவே அது கொடுத்துவிடுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்துக்கு ஐந்து வெற்றி பெற்று, தலைவரின் கைகளில் நீங்கள் ஒப்படைக்க வேண்டும். அதுதான் உண்மையான நினைவுப் பரிசு. அதை நிச்சயம் செய்வீர்கள் என்ற அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், தருமபுரி மாவட்டம் மிக ஆபத்தான ஒரு மாவட்டம். உற்சாகம், வரவேற்பு எல்லாம் நன்றாக இருக்கும். இந்த முறை விட்டுவிடக் கூடாது. விட்டுவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதே உற்சாகத்துடன் அடுத்த 40 நாட்கள் நாம், நம் தேர்தல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
இரண்டு நாட்களில் தேர்தல் தேதி அறிவிப்பு
இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும் என்று செய்திகள் வருகின்றன. அதற்கு முன்பு எந்த மாவட்டத்துக்குச் சென்றாலும் இளைஞர் அணி நிர்வாகிகளைச் சந்திப்பது வழக்கம், அவர்களோடு கலந்துரையாடுவது என் வழக்கம். ஆனால், தலைவர் இந்த முறை, ``நீ இளைஞர் அணியை மட்டும் பார்க்கக் கூடாது, எல்லா அணிகளையும் சேர்த்துதான் நீ பார்க்க வேண்டும். எல்லா அணிகளையும் பார்க்க வேண்டும் என்றால், நேரில் சென்று பார்க்க வேண்டும்’’ என்று தலைவரின் அறிவுறுத்தலின் பெயரில் உங்களையெல்லாம் சந்திப்பதற்கு நான் இங்கு வந்திருக்கிறேன். ஏனென்றால், தலைவர் சார்பு அணிகள் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நம்பிக்கை மட்டுமல்லாமல் எதிர்பார்ப்பும் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை நாம் நிச்சயம் நிவர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை, உங்கள் சார்பாக எனக்கும் இருக்கிறது. தலைவரின் நம்பிக்கையைக் காப்பாற்றுகிற வகையில் நம் உழைப்பு இருக்க வேண்டும்.
திமுகவில் அணிகள் யூத் விங், ஸ்டூடண்ட் விங், ஐ.டி விங், இன்ஜினீயர் விங் இப்படி நம் அணிகளை ஆங்கிலத்தில் சொல்கிறோம். ஆங்கிலத்தில் அணிக்கு ‘விங்ஸ்’ என்று சொல்கிறோம், அதைத் தமிழில் மொழிபெயர்த்தால் ‘சிறகுகள்’ என்று அர்த்தம். இன்று திமுக வெற்றி மேல் வெற்றி பெற்று உயர உயரப் பறந்துகொண்டிருக்கிறது என்றால், அதற்கு மிக மிக முக்கியமான காரணம் நம் விங்ஸ், நம் சிறகுகள் நீங்கள்தான்.
பயிற்சிக்களம்
சார்பு அணி என்பது ஒரு பயிற்சிக்களம் மாதிரி. எடுத்த உடனே எல்லாரையும் முதன்மை ஆட்டத்தில் ஆட விட்டுவிட மாட்டார்கள். அதற்கு முன்னால் கொஞ்சம் பயிற்சி இருக்க வேண்டும். அப்படித்தான் நம் சார்பு அணிகளில் நாம் பணியாற்றுவது, நமக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய மிகப் பெரிய பொறுப்புகளுக்கான ஒரு முன்னோட்டம். அதற்கான அனுபவத்தை நாம் அணிகளில் இருந்து நம் பணிகள் மூலம் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று சார்பு அணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய பல பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மாவட்டச் செயலாளர்களாக, பொறுப்பாளர்களாக, அமைச்சர்களாக, மேயர்களாக, துணை மேயர்களாக, உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் இன்று பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஏன் இன்று தமிழ்நாட்டிற்கு முதல்வரைத் தந்தது திமுக இளைஞர் அணி என்ற ஒரு சார்பு அணிதான். பொதுச் செயலாளரைத் தந்தது மாணவர் அணிதான். எனவே, சார்பு அணிதானே என்று நாம் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. சார்பு அணி என்பதால், தாய்க் கழகத்தின் மேல் நாம் சார்ந்து இருக்கிறோம் என்று அர்த்தம் கிடையாது. அதை மாற்றுகிறோம், தாய்க் கழகம்தான் நம் மேல் சார்ந்து இருக்கிறது, நம் உழைப்பின் மேல் சார்ந்து இருக்கிறது என்ற நிலைமையை உருவாக்கும் வகையில் உழைக்க வேண்டும்.
களப்பணியில் கவனம் செலுத்துங்கள்
உங்களுக்கெல்லாம் நான் ஒரே ஓர் உறுதிமொழி கொடுக்கிறேன், சார்பு அணியில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டீர்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கான அங்கீகாரத்தைச் சரியான நேரத்தில் தலைவர், உங்களுக்கு நிச்சயம் வழங்குவார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் களப்பணியில் கவனம் செலுத்துங்கள்.
தமிழ்நாட்டுக்கும் தில்லிக்குமான தேர்தல்
வருகின்ற தேர்தல், தலைவர் ஏற்கனவே சொன்னது மாதிரி மிக மிக முக்கியமான தேர்தல். தமிழ்நாட்டுக்கும் தில்லிக்குமான தேர்தல். இந்தத் தேர்தலில் நம் பிரச்சாரம் எப்படி இருக்க வேண்டும்? இன்னும் 40 நாட்கள்தான் இருக்கின்றன. எவ்வளவு திட்டங்களைச் செய்திருக்கிறோம், சில திட்டங்களை மட்டும் உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மகளிருக்கான விடியல் பயணத் திட்டம்
தலைவர் முதல்வராகப் பொறுப்பேற்று முதல் நாள் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். இன்று இந்த 5 ஆண்டுகளில் 920 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறார்கள். இன்று பல்வேறு மாநிலங்களில் இந்தத் திட்டத்தை அவர்களும் பின்பற்றுகிறார்கள். இந்த தருமபுரி மாவட்டத்தில் கோடிக்கணக்கான பயணங்களை விடியல் பயணத் திட்டம் மூலம் மகளிர் பயன் பெற்றிருக்கிறார்கள்.
முதல்வர் காலை உணவுத் திட்டம். இன்று ஒவ்வொரு நாளும் 21 லட்சம் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அரசுப் பள்ளியில் படித்து, எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும் சரி, அவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை மாதம் ரூ.1,000 நான் தருகிறேன் என்று நம் முதல்வர் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். மாணவியாக இருந்தால் `புதுமைப்பெண் திட்டம்’, மாணவனாக இருந்தால் `தமிழ்ப் புதல்வன் திட்டம்’. 12 லட்சம் மாணவ, மாணவிகள் இதில் பயனடைந்திருக்கிறார்கள்.
10 லட்சம் இலவச மடிக்கணினிகள்
நம் தலைவர் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினித் திட்டத்தை அறிவித்து, ஒரே மாதத்தில் கொடுத்து முடித்துவிட்டோம். அதற்கு இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
`கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’. இன்று ஒரு கோடியே 32 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 கொடுத்திருக்கிறோம். இந்தத் திட்டத்தை, சட்டமன்றத் தேர்தலைக் காரணமாகக் காட்டி எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று சங்கிக் கூட்டம் முயற்சி செய்தது. நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார்கள். சில மாநிலங்களில் நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால், தலைவர் அந்தச் சூழ்ச்சியையெல்லாம் இன்று உடைத்தெறிந்து, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதம் என மூன்று மாதத்துக்கும் சேர்த்து 3,000, கோடைகாலச் சிறப்பு நிதியாக 2,000 என்று மொத்தம் ரூ.5,000, ஒரு கோடியே 32 லட்சம் மகளிருக்கு, ஒரு கோடியே 32 லட்சம் குடும்பங்களுக்கு ஒரே தவணையில் கொடுத்துவிட்டார்.
ரூ.2,000 ஆக உயர்வு
தலைவர் இன்னொரு வாக்குறுதி கொடுத்திருக்கிறார், மகளிர் நம்புகிறார்கள் நிச்சயம் செய்வார்கள் என்று. ``மகளிர் உரிமைத் தொகையை இப்போது ரூ.1,000 கொடுத்துக்கொண்டு இருக்கிறேன், மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடன், அந்த ரூ.1,000 உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவேன்" என்கிற வாக்குறுதியையும் கொடுத்திருக்கிறார்.
தருமபுரி திட்டங்கள்
தருமபுரி மாவட்டத்தில் எத்தனையோ திட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. ரூ.58 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை - அரூர் சாலையை நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்தியுள்ளோம். ரூ.65 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை அதில் மின் இணை உற்பத்தி நிலையத்தை ஆரம்பித்திருக்கிறோம்.
ரூ.85 கோடி மதிப்பீட்டில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் மின் இணை உற்பத்தி நிலையத்தை ஆரம்பித்திருக்கிறோம். பென்னாகரத்தில் முதல்வரின் மினி ஸ்டேடியம், நல்லம்பள்ளி வட்டத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சமூக நீதி கல்லூரி விடுதி. இப்படி எத்தனையோ பணிகளை இந்தத் தருமபுரி மாவட்டத்துக்கு மட்டும் செய்திருக்கிறோம்.
உரிமையைப் பறிக்கிறார்கள்
இப்படித் தொடர்ந்து பல திட்டங்களைச் செய்வதனால்தான் இன்று இந்தியாவிலேயே நம் தமிழ்நாடு வளர்ந்து வருகின்ற மாநிலங்களில், வளர்ச்சி விகிதத்தில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருக்கிறது. முதலிடத்தைப் பிடித்திருக்கிறோம். இதற்கெல்லாம் ஒன்றிய அரசு நமக்கு உதவி செய்ததா? ஒரு மாநில அரசுக்கு என்னென்ன தர வேண்டுமோ அதெல்லாம் தருகிறதா? இல்லை. அதற்கு நேர்மாறாக நம் நிதி உரிமையைப் பறிக்கிறார்கள். கல்வி உரிமையைப் பறிக்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையை, சென்ற ஆண்டு கொண்டு வந்தார்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள்.
ஆனால், முதல்வர் பார்த்தார், இந்தப் புதிய கல்விக்கொள்கையில் என்னென்ன இருக்கிறது? புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டோம் என்றால், மீண்டும் இந்தித் திணிப்பைக் கொண்டு குறுக்கு வழியில் வருகிறார்கள். மீண்டும் சமஸ்கிருதத்தைத் தமிழ்நாட்டுக்குள் நுழைக்கப் பார்க்கிறார்கள். மீண்டும் குலக்கல்வித் திட்டத்தை நம் தமிழ்நாடு மாணவர்கள் மேல் திணிக்கப் பார்க்கிறார்கள். முதல்வர் சொல்லிவிட்டார், ``நிதி கொடுக்கத் தேவையில்லை, நான் என் தமிழ்நாட்டு மக்கள் மேல் எந்தக் காலத்திலும் இந்தப் புதிய கல்விக் கொள்கையைத் திணிக்க மாட்டேன்" என்று சொன்ன ஒரே முதல்வர், முதல் முதல்வர் நம் முதல்வர். இன்று மற்ற மாநில முதல்வர்கள் பார்க்கிறார்கள், ``ஆமாம் புதிய கல்விக் கொள்கையில் இவ்வளவு பிரச்னை இருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் சொன்னது சரி’’ என்று இன்று மற்ற மாநில முதல்வர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நிதி உரிமை, மொழி உரிமை இப்படி எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு இருக்கிறது மத்திய அரசு.
படிப்பதற்கு முன் பாராட்டு
சமீபத்தில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தார்கள். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை முழுமையாகப் படித்து முடிக்கக்கூட இல்லை. அந்தத் திட்டத்தில் ‘தமிழ்நாடு’ என்று பெயரே இல்லை. தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் இல்லை, எந்தத் திட்டமும் இல்லை. பட்ஜெட்டை முழுமையாகப் படித்து முடிப்பதற்கு முன்னாலேயே இங்கிருந்து எடப்பாடி பழனிசாமி, ``மிகச் சிறந்த பட்ஜெட்’’ என்று பாராட்டுகிறார். இதை எதிர்க்க வேண்டிய, கேள்வி கேட்க வேண்டிய அவரும் சேர்ந்துகொண்டு பா.ஜ.க-வுக்கு கூஜா தூக்கிக்கொண்டு இருக்கிறார்.`ஜாடிக்கு ஏற்ற மூடி’ என்று கேள்விப்பட்டிருப்போம். இன்று மோடிக்கு ஏற்ற ஓர் அடிமையாகத்தான் இந்த எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்.
இனி அடிக்கடி வருவார்கள்
10 நாட்களுக்கு முன்பு, மதுரைக்கு பிரதமர் மோடி வந்தார். பிரதமர், அமித்ஷா இனி அடிக்கடி வருவார்கள். தேர்தல் வந்துவிட்டால் அவர்களுக்குத் தமிழ்நாடு பக்கம் வந்துகொண்டே இருப்பார்கள். 10 நாளைக்கு ஒருமுறை வந்துகொண்டே இருப்பார்கள். 10 நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்தார்கள். அவர் வந்தபோது அந்த மாநாட்டு நிகழ்ச்சியின் முகப்பில் தந்தை பெரியாரின் புகைப்படம் இருந்தது. மோடி வருகிறார் என்று தெரிந்த உடனே, அவருக்குப் பிடிக்காது என்று தந்தை பெரியாரின் படத்தையே அங்கிருந்து நீக்கிவிட்டார்கள். மதுரையில் இந்த நிலைமை. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடந்ததைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் சிரித்தார்கள். மதுரையில் பெரியார் புகைப்படத்தை எடுத்தார்கள், திருச்சியில் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தையே எடுத்துவிட்டார்கள். அந்த நிலைமையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
அதிமுகவை பாஜக முழுங்கித் தின்றுவிடும்
நான் நிச்சயம் சொல்கிறேன் இந்தத் தேர்தல் முடிந்தவுடனேயே அ.தி.மு.க என்ற கட்சியையே பா.ஜ.க முழுங்கித் தின்றுவிடும். இன்று பீகாரில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று மக்கள் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். பிகார் மாநிலத்தின் 10 முறை முதல்வர் நிதிஷ்குமார், சென்ற தேர்தலில் அவர்தான் வெற்றி பெற்றார். பா.ஜ.க-வுடன் கூட்டணி. இன்று அவரின் நிலைமை என்ன? அவரை ஒதுக்கிவிட்டு, அவரை எம்.பி ஆக்கிவிட்டு இன்று பா.ஜ.க அங்கே ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 10 முறை வென்ற நிதிஷ் குமாருக்கே அந்த நிலைமை என்றால், நம் `பாதம் தாங்கி’ பழனிசாமிக்கு என்ன நிலைமை என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். நிச்சயம் மிக விரைவில் அதிமுகவில் இருக்கக்கூடிய அதிமுக பெயரில் ‘அண்ணா’வை எடுத்துவிட்டு அங்கே அமித்ஷாவின் பெயரை அதிமுக-வில் சேர்த்துவிடுவார்கள். அதிமுக கொடியில் இருக்கக்கூடிய அண்ணாவின் புகைப்படத்தை எடுத்துவிட்டு அங்கே விரைவில் அமித்ஷாவின் புகைப்படத்தை வைத்தாலும் வைத்துவிடுவார்கள்.
இப்போது நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் தேர்தலுக்கு இன்னும் 40 நாட்கள் இருக்கின்றன, இந்த 40 நாட்கள் நம் பணியை நாம் சரியாகச் செய்துகொள்ள வேண்டும். அதிமுக-வின் கூட்டணி அது எப்படி அமைந்த கூட்டணி என்பதை யோசித்துப் பாருங்கள். கொஞ்சம் பின்னோக்கி 4 மாதங்களுக்கு முன்பு அந்தக் கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள் ஒவ்வொருவரும் என்ன பேசினார்கள் என்று யோசித்துப் பாருங்கள். சென்ற தேர்தலின்போது ஒருவர் சொன்னார், ``எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கவுன்சிலர் ஆவதற்குகூடத் தகுதி இல்லை’’ என்று சொன்னவருடன்தான் இன்று கூட்டணி வைத்திருக்கிறார்கள். இன்னொருவர் என்ன சொன்னார், ``அ.தி.மு.க-வோடு கூட்டணி வைப்பதற்கு நான் வீட்டில் தூக்கு மாட்டிச் செத்துவிடுவேன்’’ என்று ஒருவர் சொன்னார். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இன்று கூட்டணி வைத்திருக்கிறார்கள். ஏன்? ஒவ்வொருவர் மேலும் சி.பி.ஐ, இ.டி, ஐ.டி என்று வரிசையாக வழக்குகள் இருக்கின்றன். இதையெல்லாம் வைத்து தி.மு.க-வையும் மிரட்டப் பார்த்தார்கள். ஆனால், அவர்களின் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுகிற ஆள் தி.மு.க-வின் உடன்பிறப்புகள் கிடையாது. பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்றால், நிச்சயம் முதுகெலும்பு உள்ள ஒரு முதலமைச்சரால்தான் முடியும், நம் கழகத் தலைவரால் மட்டும்தான் பா.ஜ.க-வை எதிர்க்க முடியும். இதை, தமிழ்நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
பிரசாரப் பணிகள்
நம்மிடம் நம் அரசின் சாதனைகள் இருக்கின்றன. திமுக கொள்கைகள் இருக்கின்றன, இவற்றையெல்லாம் மக்களிடம் நீங்கள் கொண்டு சேருங்கள். ஒவ்வொருவரும் மக்களோடு தொடர்ந்து தொடர்பில் இருங்கள், நேரடித் தொடர்பில் இருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 50-லிருந்து 60 பேரை ஒவ்வொரு நாளும் சந்தித்து உங்களின் பிரசாரத்தைக் கொண்டு சேருங்கள். பேசும்போது மிகவும் கவனமாகப் பேச வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது உங்களின் கட்டுப்பாட்டில், உங்களின் செல்வாக்கில் 100 பேர் உங்களின் வாக்காளர்கள் நீங்கள் சொல்கிற ஆளுக்கு அவர்கள் வாக்களிக்கிறார்கள் என்றால், உங்களின் வளர்ச்சியை யாராலும் தவிர்க்கவோ தடுக்கவோ நிச்சயம் முடியாது. அதை நிரூபித்துக் காட்ட வேண்டிய நேரம் இந்தத் தேர்தல் நேரம். அதை நாம் செய்து காட்ட வேண்டும். உங்களுக்குள் அந்தப் பணிகளைப் பிரித்துக்கொள்ளுங்கள். இளைஞர் அணி, நாங்கள் இளைஞர்களை எல்லாம் சந்தித்து நம் பிரசாரத்தைக் கொண்டு போகிறோம். இளைஞர்களை ஈர்க்கின்ற வகையில் நம் பிரசாரப் பணிகள் இருக்கும்.
மாணவர் அணியினர் வந்திருப்பீர்கள். உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய மாணவர்களை எல்லாம் சந்தித்து, இந்த ஐந்து வருடத்தில் மாணவர்களுக்கு இந்த அரசு என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதைக் கொண்டு சேருங்கள்.
ஐ.டி விங் வந்திருப்பீர்கள். ஐ.டி விங் ஏற்கனவே சமூக வலைதளத்தில் சிறப்பாகச் செய்துகொண்டு வருகிறீர்கள். இன்னும் தீவிரமாக நீங்கள் செயல்படவேண்டும். நீங்களே சின்னச் சின்ன வீடியோக்களைப் பதிவு செய்து, யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யுங்கள். நம்மிடம் உண்மையான வரலாறு இருக்கிறது, தரவுத்தளம் இருக்கிறது, எண்கள் இருக்கின்றன. உண்மையை மட்டும் பேசுவோம். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஊடகமாக மாற வேண்டும்.
அதே மாதிரி சட்டத்துறை, லீகல் விங் வந்திருப்பீர்கள். தேர்தல் என்று வந்துவிட்டால் சட்டத்துறைதான் கழகத்தின் மிகப் பெரிய ஒரு பலம். வேட்புமனுத் தாக்கலில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடிந்து சான்றிதழ் வாங்கும் வரை உங்களின் பணி மகத்தான பணி.
சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு குழு வந்திருப்பீர்கள். அடிமை அதிமுகவும் பாசிச பாஜகவும் சிறுபான்மை மக்களுக்கு என்னவெல்லாம் துரோகம் செய்திருக்கிறார்கள், அவர்களுக்கு தி.மு.க-தான் என்றைக்குமே ஒரு காவல் அரணாக இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் பேசுங்கள்.
அதே மாதிரி மருத்துவர் அணி, பொறியாளர் அணி, எல்லாம் வந்திருப்பீர்கள். உங்களின் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் குழு உருவாக்கி அதில் தகவல்களைச் சொல்லுங்கள். அரசின் திட்டங்களை எடுத்துக்கொண்டு சேருங்கள்.
விவசாயத்துக்கென்று தனி பட்ஜெட்
விவசாய அணியைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பீர்கள். நம் அரசு விவசாயிகளுக்குச் செய்கிற நலத்திட்டங்களை அதில் பதிவு செய்யுங்கள். ஏனென்றால் வரலாற்றிலேயே விவசாயத்துக்கென்று தனி பட்ஜெட்டைக் கொண்டு வந்த அரசு நம் திராவிட மாடல் அரசு, நம் முதல்வர்.
ஆதி திராவிடர் நலக்குழுவைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பீர்கள். ஆதி திராவிடர்கள், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு நம் அரசு எப்படியெல்லாம் செயல்படுகிறது, என்னவெல்லாம் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் தொகைத் திட்டம் - இப்படி ஒரு திட்டம் இருக்கிறது. அதாவது, ஆதி திராவிடர்கள், பழங்குடியின மக்கள் வெளிநாடு சென்று படிப்பதற்கான திட்டத்தையும் நம் அரசு இன்று சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளது.
விளையாட்டு மேம்பாட்டு அணி வந்திருப்பீர்கள். உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களை எல்லாம் சந்தியுங்கள். இந்த ஐந்து வருடம் விளையாட்டுத் துறைக்கு என்னவெல்லாம் திட்டம் செயல்படுத்தியிருக்கிறோம்? அடித்துச் சொல்லுங்கள், விளையாட்டு வீரர்களுக்கு எந்த அரசிலும் இல்லாத அளவுக்கு வரலாற்றிலேயே முதன்முறையாக 300 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை நம் முதல்வர் கொடுத்திருக்கிறார்கள். சென்ற அ.தி.மு.க-வின் 10 வருட ஆட்சியில் இரண்டு பேருக்குதான் விளையாட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பைக் கொடுத்திருந்தார்கள். 12,500 கிராம ஊராட்சிகளுக்கு, `கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’ கொடுத்திருக்கிறோம். எல்லா ஊர்களுக்கும் மினி ஸ்டேடியத்தைக் கட்டிக்கொடுத்திருக்கிறோம். விளையாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம்.
வணிகர் நலன் காக்கிற அரசு
வர்த்தகர் அணி நிர்வாகிகள் வந்திருப்பீர்கள். உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய வியாபாரிகள், அவர்கள்தான் நேரடியாகப் பொதுமக்களுடன் தொடர்பில் இருக்கிறவர்கள், தினமும் சந்திக்கிறவர்கள். அவர்களைச் சந்தித்துப் பேசுங்கள். கடை உரிமையாளர்களிடம் நம் அரசு வணிகர்களின் நலன் காக்கிற அரசு என்பதை எடுத்துச்சொல்லுங்கள்.
முக்கியமாக இங்கு மகளிர் அணி சகோதரிகள் வந்திருப்பீர்கள். மற்ற அணிகள் எல்லாம் என்ன பிரச்சாரம் செய்தாலும் வீட்டு வாசல் வரைக்கும்தான் போக முடியும். ஆனால், மகளிராகிய உங்களுக்கு ஒரு சாதகமான அம்சம் இருக்கிறது. சமையலறை வரைக்கும் நீங்கள் சென்று உங்க உரிமையோடு உங்களின் பிரச்சாரத்தை நீங்கள் செய்யலாம்.
எந்தப் பணி செய்தாலும் ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களிடம் பேசிவிட்டு, அவர்களின் அனுமதியை வாங்கிவிட்டு, அவர்களோடு ஆலோசனை செய்து, உங்களின் பணிகளை நீங்கள் செய்யுங்கள். அதுவும் இங்கு ஒன்றிய, நகரச் செயலாளர்கள் எல்லாம் வந்திருப்பீர்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு சிறிய வேண்டுகோள். அணிகளில் இருக்கிறவர்கள் இப்போது புதிதாக அரசியலுக்கு வந்தவர்களாக இருப்பார்கள். முதல் தலைமுறை அரசியல்வாதியாகக்கூட இருப்பார்கள். அவர்கள் ஆர்வக்கோளாறில் ஏதாவது, ஒரு சிறிய தவறு தெரிந்தோ தெரியாமலோ செய்துவிட்டால்கூட, தயவு செய்து அவர்களைத் தண்டிக்காதீர்கள். ஏதாவது, தவறு செய்தால் அவர்களை நீங்கள் அழைத்து உங்களின் பணி எப்படி இருக்க வேண்டும் என்று வழிநடத்துங்கள். ஏனென்றால், உங்களுக்கு அணிகளில் பணியாற்றிய அனுபவம் இருக்கும். எனவே, அணி நிர்வாகிகளை நீங்கள் நல்ல முறையில் வழிநடத்தி அவர்களிடமிருந்து வேலை வாங்குங்கள்.
நான் இன்று இங்கு ஒரு துணை முதல்வராகவோ, விளையாட்டுத் துறை அமைச்சராகவோ, சட்டப்பேரவை உறுப்பினராகவோ வரவில்லை. நானும் உங்களைப் போல ஓர் அணியின் செயலாளர் என்ற அந்த உரிமையுடன் உங்களை எல்லாம் பார்க்க வந்திருக்கிறேன்.
ஆரோக்கியமான போட்டி
நமக்குள் அடுத்த 40 நாள், ஒவ்வொரு அணிக்கும் ஓர் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். வர இருக்கக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அணியின் பணி நம் வெற்றிக்கு மிக மிக முக்கிய காரணமாக இருந்தது என்று நமக்குள் ஓர் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். எனவே எந்த அணி கட்சியின் வெற்றிக்காகப் பெரும்பாடுபட்டது என்று போட்டி போட்டுக்கொண்டு பணியாற்ற வேண்டும்.
ஒரு போர் வந்துவிட்டது என்றால், எல்லாரும் ஒரே நேரத்தில் சண்டை போட்டால் நிச்சயம் தோல்வி வந்துவிடும். ஒரு நல்ல குழு என்ன செய்வார்கள் என்றால், திட்டம் தீட்டி, தந்திரங்களை வகுத்துப் பணியாற்ற வேண்டும். அதே மாதிரி நம் அணிகள் ஒவ்வொன்றும் தந்திரங்களை வகுத்துச் செய்தோம் என்றால், வர இருக்கக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல் என்ற மிகப் பெரிய போரில், நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இந்தத் தேர்தல் தமிழ்நாட்டு அணிக்கும், டெல்லி அணிக்குமான தேர்தல். நாம் மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும், என்றைக்குமே தமிழ்நாடு டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான் என்பதை, தமிழ்நாட்டு மக்கள் நிரூபிப்பார்கள். நாம் நம் சாதனைகளை, கொண்டு சேர்க்க வேண்டும். அதிமுக ஆட்சி வந்தது என்றால் மீண்டும் தமிழ்நாட்டுக்கு என்னவெல்லாம் பிரச்னை வந்துவிடும் என்பதை ஞாபகப்படுத்த வேண்டும்.
தலைவர் நமக்குக் கொடுத்திருக்கக்கூடிய இலக்கு 200. ‘வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு’ என்று சொல்லியிருக்கிறார் தலைவர். நாம் சரியாகப் பணியாற்றினோம் என்றால் 200 அல்ல, 234 தொகுதியிலும் நிச்சயம் வெற்றி பெற்று காட்ட வேண்டும். பாசிஸ்டுகள் மறுபடியும் தமிழ்நாட்டுக்குள் காலடி வைத்துப் பார்க்க முடியாது என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். நாம் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி என்று பெயர்களால் பிரிந்திருந்தாலும் என்றைக்குமே நாம் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்த கலைஞர் அணி. நம் தலைவர் பெயரிலான ‘தலைவர் அணி’ என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும்.
இந்தத் தருமபுரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகளில் ஐந்துக்கு ஐந்து வெற்றி பெற்று இந்தத் தொகுதியிலும், இந்த மாவட்டத்திலும் மீண்டும் உதயசூரியன்தான் வெற்றிச் சின்னம் என்பதை நாம் நிரூபித்து காட்ட வேண்டும்.
உதயசூரியன் என்பது வெறும் சுவரில் வரைகிற சின்னம் கிடையாது. நம் உயிருடன், உணர்வுடன் கலந்து இருக்கக்கூடிய சின்னம் உதயசூரியன். பேரறிஞர் அண்ணா கண்டெடுத்த சின்னம் உதயசூரியன். முத்தமிழறிஞர் கலைஞர் நம்மிடம் கொடுத்துவிட்டுச் சென்ற சின்னம் உதயசூரியன். நம் தலைவர் நமக்குத் தொடர்ந்து வெற்றியை மட்டுமே கொடுத்துக்கொண்டு இருக்கும் சின்னம் உதயசூரியன். அந்த உதயசூரியன் சின்னத்தை மனதில் வைத்துக்கொண்டு நம் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள். திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், நம் தலைவர் இரண்டாவது முறையாக மீண்டும் முதல்வர் பொறுப்பில் அமர வேண்டும் என்றால், அதற்கு இங்கு வந்திருக்கக்கூடிய தருமபுரி மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நாம் அனைவரும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.
ஒவ்வோர் அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அவரவர் சார்ந்திருக்கக்கூடிய பகுதியில், வாக்குச்சாவடியில் அதிகமான வாக்குகளை நாம் சேகரித்து வாக்கு வித்தியாசத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.