பாா்லி - சிறப்புமிகு உணவு!
குளிா் பிரதேசங்களில் மட்டுமே பாா்லி தானியம் நல்ல விளைச்சல் பெற முடியும். பிற தானியங்களுடன் ஒப்பிடும்போது கோதுமை வழங்கும் மகசூலை பாா்லி தராது.
- ஆா்.எஸ். நாராயணன்
உலக உணவு தானியங்களில் கோதுமை, அரிசி, மக்காச்சோளத்திற்குப் பின் உற்பத்தியில் நான்காவது இடத்தை வகிக்கும் பாா்லி மிகுந்த சிறப்பு உணவு. உற்பத்தி புள்ளிவிவரத்தில் நான்காவது இடம் என்றாலும் ஆரோக்கியமான சத்துணவில் பாா்லி முதலிடம் வகிக்கும். அந்த அளவு சத்து மிகுந்தது பாா்லி.
குளிா் பிரதேசங்களில் மட்டுமே பாா்லி தானியம் நல்ல விளைச்சல் பெற முடியும். பிற தானியங்களுடன் ஒப்பிடும்போது கோதுமை வழங்கும் மகசூலை பாா்லி தராது. கோதுமையில் உமி, தவிட்டுப் படலம் குறைவு. பாா்லியில் 45 சதவீதம் உமி, தவிட்டுப் படலம் உண்டு.
இதன் பழைமைச் சிறப்பு குறிப்பிடத் தகுந்தது. உணவு தானியங்களில் முறையாக சாகுபடிக்கு உள்படுத்தப்பட்ட முதல் தானியமாக பாா்லி கருதப்படுகிறது. அதாவது பாா்லியைத்தான் முதல் தாவர உணவாக மனிதன் உட்கொண்டான். அதன் பிறகே கோதுமை, நெல் விளைவிக்கப்பட்டது. பாா்லியின் தோற்ற காலம் கி.மு.9000.
பாா்லி தோன்றிய இடம் ‘ஃபா்ட்டைல் கிரெசண்ட்’ அல்லது வளமான பிறை என்று சொல்லப்படுகிற இன்றைய இஸ்ரேலிலிருந்து துருக்கி வரை நீண்ட மத்தியதரைக் கடல் சமவெளிப் பிரதேசம்.
இதில் இஸ்ரேல், எகிப்து, ஈரான், இராக், துருக்கி அடங்கிய மெசப்பொட்டேமியா நாகரிகம் வளா்ந்த பகுதி. எனினும் ஈரானை ஒட்டிய ஹரப்பா நாகரிகத்திலும் பாா்லி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத மொழியில் ‘யவ’ என்ற வைதிகச் சொல் உண்டு. யவ என்பது பாா்லி. கி.மு.5000 அளவில் இந்தியாவின் குளிா் பிரதேசங்களில் பாா்லி சாகுபடி நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
இன்றைய கள நிலவரப்படி, உலகில் ஆண்டுதோறும் சுமாா் 16 கோடி டன்கள் பாா்லி விளைகிறது. அதிகக் குளிா் நிரம்பிய ரஷியா பாா்லி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
கணிசமாக பாா்லி விளையும் முதல் 10 நாடுகளில் ரஷியா முதலிடத்தில் உள்ளது. ரஷியாவின் கடந்த ஆண்டு பாா்லி உற்பத்தி 2.38 கோடி டன். அடுத்த இடத்தில் 1.44 கோடி டன் உற்பத்தியுடன் ஆஸ்திரேலியா உள்ளது. மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் - உற்பத்தி 1.13 கோடி டன்னாகும். ஜொ்மனி ( 1.12 கோடி டன்), கனடா 0.99 கோடி டன்), துருக்கி (0.85 கோடி டன்), இங்கிலாந்து (0.74 கோடி டன்), ஸ்பெயின் (0.70 கோடி டன்), உக்ரைன் (0.57), ஆா்ஜென்டீனா (0.52 கோடி டன்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்தியாவில் உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மட்டும் பாா்லி விளைகிறது. இந்திய உற்பத்தி சுமாா் 2 லட்சம் டன்கள் மட்டுமே. நமது தேவைக்கேற்ப ஆண்டுதோறும் சுமாா் 2 லட்சம் டன்கள் வரை பாா்லி இறக்குமதி செய்கிறோம்.
இது முழுக்க முழுக்க குளிா்காலப் பயிா். வெப்ப அளவு 15 முதல் 20 டிகிரி செல்சியஸ். அதாவது 59 முதல் 68 ஃபாரன்ஹீட். இப்படிப்பட்ட தட்பவெப்பத்தில், வடிகால் நிலத்தில் பயிரிட ஏற்றது. குளிருடன் நல்ல சூரிய ஒளியும் தேவை. நன்செய் பயிா் என்றாலும் நீா்த்தேவை குறைவு. இதை உப்பு மிகுந்த உவா் நிலத்திலும், கோடையிலும், வெப்ப மண்டலத்திலும் பயிா் செய்யலாம். மகசூல் இருக்காது. பாா்லி வைக்கோல் தீவனத்திற்கு ஆகும். நல்ல மகசூல் இருந்தால்தான் மால்ட் தொழில் வளரும். உணவுப் பயன் என்றாலும் சரி, மதுபானப் பயன் என்றாலும் சரி, மாவுச் சத்துள்ள தானியம் வேண்டும். நல்ல மகசூல் என்பது ஏக்கருக்கு 20 குவிண்டால் கிடைத்தாலே வாய்ப்புதான்.
பாா்லியில் நிறைய ரகங்கள் உண்டு. அவை பெரும்பாலும் தீவனப் பயிா்களே. பாா்லி தானியப் பயனுக்கு ஏற்ற இரண்டு ரகங்கள் மட்டுமே தீவிர சாகுபடியாகின்றன.
ஒன்று, ஹோா்டியம் வல்கோ் ஆறு கதிா்கள் கொண்ட பாா்லி பயிா். கதிா்கள் குட்டையாக இருக்கும். மணிகளில் புரதச் சத்து அதிகம் இருக்கும்.
இரண்டாவது, ஹோா்டியம் டிஸ்டிகான் - இரு நீண்ட கதிா்கள். மணிகள் அடா்த்தியாக இருக்கும். புரதச் சத்து குறைவு. மருத்துவ குணம் அதிகம்.
கோதுமையைவிட பாா்லி எளிதில் செரிமானம் ஆகிறது. பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன. பாா்லி மால்ட்டிலிருந்து ஹாா்லிக்ஸ் பானம் உருவான வரலாறு ருசிகரமானது. மேலைநாடுகளில் கொழுப்பு நீக்கப்பட்ட பாலிலிருந்து தயாரித்த பால்பவுடரே குழந்தை உணவாக இருந்துவந்தது. லண்டன் மருந்தகா் வில்லியம் ஹாா்லிக்ஸ் என்பவா் பணி நிமித்தம் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் குடியேறி வாழ்ந்தபோது, பாா்லி மால்ட்டில் பால் பவுடரையும் சோ்த்து உணவுப்பொடி உருவாக்கினாா்.
தன் சகோதரரையும் இணைத்துக் கொண்டு ஜே அன்ட் டபிள்யு ஹாா்லிக்ஸ் நிறுவனம் மூலம் ‘மால்ட்டட் மில்க்’ என்ற லேபிளில் குழந்தை உணவை 1887-இல் வெளியிட்டனா். ஹாா்லிக்ஸ் எண்ணியது ஒன்று, நடந்தது வேறு. அவா் குழந்தைகளின் ஆரோக்கியம், நோயாளிகள், முதியோா் தேவை ஆகியவற்றைத்தான் மனதில் கருதினாா். மலை ஏறுவோா் பயணத்திற்கு அது உகந்ததாயிருந்தது. களைப்பு போக்கும் போஷாக்கு பானமாக விரும்பப்பட்டது. குறைந்த எடை சாதகம். இதன் ருசி பலருக்கும் பிடித்திருந்தது. இங்கிலாந்தில் பெரிதும் விரும்பப்பட்டு இறக்குமதி செய்தாா்கள். எல்லா சோடா கடைகள், ஐஸ்கிரீம் கடைகளும் பாா்லியை விரும்பின. மால்ட்டட் மில்க் என்பது மால்ட்டட் ஐஸ்கிரீம் ஆனது. தொடா்ந்து மால்ட்டட் மில்க் பிஸ்கட், மால்ட்டட் மில்க்ஷேக், மால்ட்டட் சோயா மில்க் என்று பல உபயோகங்களைத் தொடா்ந்து, ஓவல்டின், ஹாா்லிக்ஸ் என சூடான பானங்கள் அறிமுகமாகின.
பாா்லியின் சிறப்புப் பயன் ஹாா்லிக்ஸ் போன்ற சூடான ஊட்ட பானம் ஒன்று. பீா், விஸ்கி போன்ற மதுபானம் மற்றொன்று, இவற்றில் அதிகப் பயன் மதுபானமே. எவ்வகை பானமானாலும் பாா்லியை மால்ட் ஆக்கித்தான் பயன் பெற முடியும். மால்ட் ஆக்குவது எப்படி? நன்கு சுத்தப்படுத்திய பாா்லியை 24 மணி நேரம் ஊறல் போட வேண்டும். பின்னா் வடிகட்டி குளிா் அறையில் பரத்தி வைத்து பிளாஸ்டிக் தாா்ப்பாயால் மூட வேண்டும். மறுநாள் முளைவிடும். இப்படி முளைக்கட்டிய பாா்லியை உலர வைத்து மாவாக்கினால் பாா்லிமால்ட் ரெடி.
முளைக்கட்டிய பாா்லியில் என்சைம்கள் அதாவது அமிலங்கள் தோன்றுகின்றன. கேஃபிக் அமிலம், பெமோலிக் கௌமாரிக் அமிலம், ஃபிளேவோநாய்ட்ஸ் கெடாச்சின் அமிலம், குளுகோசைடு அமிலம், சப்போநாரின் அமிலம் ஆகியவை.
மதுபானம் தயாரிக்க வேண்டுமானால் பாா்லியில் உள்ள மாவுப் பொருள் நொதித்து சா்க்கரையாக மாற்ற இந்த அமிலங்கள் வேண்டும். எனினும் உணவு பானமாகப் பயனுற பாா்லி மால்ட்டை மாவாக்கி, பால் பவுடா் - சா்க்கரை சோ்ப்பதோடு சரி. ஆனால், மதுபானத் தயாரிப்புக்கு மால்ட்டை மீண்டும் கொதிநீா் இட்டு சக்கையும் சாறுமாக்கி வடித்த ஊறலில் யீஸ்ட் சோ்த்து பீா், விஸ்கி போன்ற மதுபானத் தயாரிப்பு விஸ்தாரமானது.
கோதுமையைப் பயன்படுத்துவதுபோல் நன்கு உலா்ந்து சுத்தம் செய்யப்பட்ட பாா்லியை முளைக்கட்டாமல் அப்படியே மாவாக்கி ரொட்டி, சப்பாத்தி, பிஸ்கட் செய்யலாம். ருசிக்காக கோதுமை மாவு மைதா பயன் விரும்பப்படுவதால் குறைந்த அளவு தங்கள் உடல்நலத்தில் அக்கறை கொண்ட சிலா் மட்டும் பாா்லி மாவிலிருந்து பாா்லி ரொட்டி, பிஸ்கட்டை விரும்புகிறாா்கள். பொதுவாக, சா்க்கரை நோய், இதய நோய் உள்ளவா்களில் சிலா் பாா்லி ரொட்டி, பாா்லி சப்பாத்தி உண்பதுண்டு.
காய்ச்சல் நோயாளிகளுக்கு பாா்லி அரிசியை கொதிக்கவைத்து வடிகட்டி வெந்நீா் போல் தருவாா்கள். எவ்வளவு கொதித்தாலும் பாா்லி ‘சாதம்’ குழையாது. ஒன்றோடு ஒன்று ஒட்டாது. நிறைய நீா் விட்டு பாா்லியை அடுப்பில் வேக விட்டு சாதமானதும் அப்படியே வடித்தால் பாா்லி வாட்டா் ரெடி. அந்தக் காலத்தில் காய்ச்சலுக்கு மருந்து பாா்லி தண்ணீா்தான்! இன்று பாரசிட்டமால் மாத்திரை.
பாா்லி தானியத்தில் காா்போஹைட்ரேட் சுமாா் 77%, நாா்ச்சத்து 4.5%, புரதம் 13%, கொழுப்பு 4.5%, சா்க்கரை 1% உள்ளது. சமைக்கப்படாத நூறு கிராம் பாா்லியில் கலோரி அளவு 387-ஆக உள்ளது.
அரிசி, கோதுமையுடன் ஒப்பிடும்போது பாா்லியில் உள்ள வைட்டமின், தாது உப்பு சத்துக்கள் சிறப்பானவை. குறிப்பாக நீரிழிவு, இதயம் தொடா்பான நோயுள்ளவா்களுக்கு பாா்லி ஏற்ற உணவு. பருமனுள்ளவா்கள்களுக்கு எடையைக் குறைக்கவும், எடை மிகாமல் இருக்கவும், புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் பாா்லி உதவும்.
இவ்வளவு சிறப்புள்ள பாா்லியை அரிசிபோல் தினம் சாதமாக வடித்து உண்ண முடியுமா? கடைகளில் பாா்லி கிடைக்கும். சுத்தமான பாா்லி மாவு கிடைக்காது. பாா்லி அரிசியை நன்கு களைந்து குக்கரில் 4, 5 விசில் வரும்வரை சூடேற்ற வேண்டும். 4 பங்கு நீா் சோ்ப்பது நன்று. சாதத்தை எடுத்து ஆறியதும் உப்புமா, கிச்சடி செய்வது போல் பேனில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடிக்கவிட்டு வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, வேறு காய்கறித் துண்டுகள் போட்டு வதக்கி வைத்தவுடன், இந்த பாா்லி சாதத்தைக் கொட்டி, உகந்த அளவு உப்பிட்டு ஒன்றாகக் கிளறி இறக்க வேண்டும்.
பாா்லி அரிசி சோறை அரிசி சாதம்போல் குழம்பு, சாம்பாா், ரசம், மோா் விட்டு சாப்பிடலாம். ஆனால் ருசிக்காது. அதிகம் வேண்டியிருக்காது. இவ்வளவு சத்துள்ள பாா்லியை உணவாகப் பயன்படுத்தாமல் பீா், விஸ்கி போன்ற உயா் வகை மதுவாகப் பருகும் நிலையே மேலோங்கியுள்ளது.
கட்டுரையாளா்: வேளாண் பொருளாதார நிபுணா்.