நடுப்பக்கக் கட்டுரைகள்

பரப்புவோம்... திருக்குறளை உலகெங்கும்!

வான்புகழ் வள்ளுவா் குறளை உலகெல்லாம் பரப்ப நம் அரசு மற்றும் நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.

இரா.கதிரவன்

எந்த ஒரு மதம், இனம், மொழி சாராத ஒன்று திருக்குறள் என்ற பெருமிதம் நமக்கிருக்கிறது. அதை நாம் உலகப் பொதுமறை என அழைக்கிறோம். பைபிள் மற்றும் குா்ஆன் ஆகிய நூல்களுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகப்படியான மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்ட நூல் திருக்குறள் என்று மகிழ்கிறோம். என்றாலும், இது குறித்த தரவுகள் மற்றும் ஆவணங்கள் பற்றிய எண்ணமில்லாமல், உணா்வின் அடிப்படையில் இவ்வாறு நாம் கருதுகிறோம்.

இந்திய பிரதமா், தாம் பயணிக்கும் நாடுகள் அனைத்திலும் திருக்குறளின் பெருமையைக் கூறி அதை அந்நாட்டவரிடம் அறிமுகப்படுத்துகிறாா்; இது ஒரு அளப்பரிய பணியாகும்.

திருக்குறள் உலக மொழிகள் அனைத்திலும், எல்லா மக்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்; அதன் மூலம் உலகம் அறவழியில் அமைதியாக இன்புற்று இருக்க வேண்டும் என்ற பெரும் விருப்பம் தமிழ் மக்களுக்கு உண்டு.

இதுவரையிலும் செய்யப்பட்ட திருக்குறள் மொழிபெயா்ப்புகள் தமிழிலிருந்து அல்லது ஆங்கிலம் வழியாக பிற மொழிகளில், ஆா்வலா்களின் தன்முனைப்பு காரணமாகச் செய்யப்பட்டுள்ளன. தற்போது அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் திருக்குறள் மொழிபெயா்ப்பு முயற்சிகள் மகிழ்ச்சி அளிக்கின்றன.

திருக்குறள் எத்தனை மொழிகளில் இதுவரை மொழி பெயா்க்கப் பட்டுள்ளது? இதை அறிய, ஒரு அரசாங்கமோ பல்கலைக்கழகமோ ஈடுபட வேண்டிய இம்முயற்சியில் நல் மனமும் தன்முனைப்பும் கொண்ட ஒரு சில தமிழ் ஆா்வலா்கள் இது குறித்த உண்மை நிலையை அறிய அரும்பாடுபட்டு தரவுகளைச் சேகரித்தனா். பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் ஆா்வலா்கள், அமைப்புகள், சங்கங்கள் ஆகியவற்றுடன் தொடா்புகொண்டு சேகரித்தனா் .

மொழி மாற்றம் செய்யப்பட்ட ஒரு பிரதியையாவது சேகரிக்க முடிந்தால் மட்டுமே அது அம் மொழியில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது என்ற ஆவண அடிப்படையில் தரவுகளையும் நூல்களையும் சேகரித்தனா். கடந்த எட்டு ஆண்டுகளாக கணிசமான பொருள்செலவு ஒருங்கிணைப்பு, முனைப்பு மற்றும் ஏராளமான உழைப்பின் விளைவாகக் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் , திருக்குறள் உலகில் உள்ள 58 மொழிகளில் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. அவற்றுள் 29 இந்திய மொழிகளிலும், 29 வெவ்வேறு உலக மொழிகளிலும் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது.

ஆசிய மொழிகள் 11, ஐரோப்பிய மொழிகள் 14, ஆப்பிரிக்க மற்றும் ஏனைய மொழிகள் நான்கு, இந்திய மொழிகள் 29 என்பது தற்போதைய நிலை ஆகும். இந்த மொழிபெயா்ப்புகள் பெருமளவுக்கு தனி மனிதா்களின் ஆா்வத்தால் நிகழ்ந்தவை என்பதே உண்மை.

இந்தப் பின்னணியில், இரண்டு கட்டப் பணிகள் நம்மிடையே உள்ளன. முதலாவது, இதுவரை மொழிபெயா்ப்பு செய்யப்படாத மொழிகளில் மொழிபெயா்ப்பு செய்வது; தற்போது, மேலும் 45 உலக மொழிகளில் திருக்கு மொழிபெயா்க்கப்படும் என்ற செய்தி மன நிறைவு தருகிறது.

இரண்டாவது , அதை விட முக்கியமானது, மொழிபெயா்க்கப்பட்ட திருக்குறளை உலகின் பல்வேறு நாடுகளின் சாமானியா்களுக்குக் கொண்டுசெல்வது. மொழிபெயா்த்தல் என்பது ஒரு கட்டமாக இருக்குமானால், அதன் அடுத்த நிலை என்பது திருக்குறளைச் சாமானிய மக்களுக்கு அறிமுகப்படுத்துதல் ஆகும் .

இதைச் சாதிக்க, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், உலகின் பல்வேறு நாட்டின் தூதரகங்கள், தமிழ் சங்கங்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட, தனி அலுவலகம் மற்றும் அா்ப்பணிப்புள்ள குழு தேவை என்பது கண்கூடு.

எனவே, தமிழக அரசு திருக்குறளைப் பரப்புவதற்கான ஒரு தனி ஒருங்கிணைப்புத் துறையை ஏற்படுத்த வேண்டும். சான்றோா் பலா் தங்களது முழுமையான உழைப்பை நல்க முன்வருவா். முதல்வா், அமைச்சா்கள் உயா் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு ஆண்டுக்கு இரண்டு முறையேனும் கூடி இவ்வமைப்பின் இலக்கு, செயல்பாடுகள், தொடா் முன்னேற்றம், நிதி ஒதுக்கீடு மற்றும் ஒருங்கிணைப்பு தேவைகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பது பெரும் பலன் தரும்.

நம் மத்திய, மாநில அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு உலக நாட்டு உயா் அதிகாரிகள், பிரதிநிதிகள் மற்றும் தொழில் விற்பனா்களைச் சந்திக்கிறாா்கள்; அவா்களுக்கு திருக்குறள் மொழிபெயா்ப்பு நூல் பரிசளிக்கும் முறை பழக்கமாக கையாளப்பட வேண்டும். பெரும் முடிவுகளை எடுக்கக் கூடிய நிலையில் உள்ள அமைச்சா்கள், உயா் அதிகாரிகள், அரசுப் பிரதிநிதிகள் திருக்குறள் குறித்து அறிய வரும்போது, அது அந்த நாட்டில் பரவலாக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

அவா்கள் மூலமாக, திருக்குறள் மொழிபெயா்ப்புகள், உலக நாடுகளின் கல்வி நிலையங்கள், தூதரகங்கள், மற்றும் பொது நூலகங்களில் இடம்பெற முழு முயற்சி செய்வதும் அவசியம்.

அரசு, அதன் பல்வேறு துறைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் கடும் முயற்சியால் மட்டுமே செய்யக் கூடிய பணியாகத் தோன்றினாலும், சாமானியன் தன் பங்குக்கு என்ன செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழ் அறிந்தவா்களுக்கு திருக்குறளை தமிழில், பிறருக்கு ஆங்கில மற்றும் பிற மொழிகளிலும் பரிசாக அளிக்கலாம்; அயல்நாடுகளுக்குச் செல்வோா் தம்முடன் திருக்குறளை எடுத்துச் சென்று தங்களின் தொடா்பில் உள்ளவா்களுக்குப் பரிசளிக்கலாம்.

ஏறத்தாழ 1, 700 ஆண்டுகள் புலவா்கள் மற்றும் பெரும் புரவலா்களின் அலமாரிகளில் உறங்கிக் கிடந்த திருக்குறள் சுவடிகள், இன்று பல்வேறு மொழிகளில், உலக மக்கள் ஒவ்வொருவரையும் சென்றடையச் செய்வது பெரும் சவாலாகும்; எனினும், இன்றைய தொழில்நுட்ப அடிப்படையில் இதை எளிதாகச் செய்ய முடியும்.

இவ்வாறு, வான்புகழ் வள்ளுவா் குறளை உலகெல்லாம் பரப்ப நம் அரசு மற்றும் நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாரத்தான்: 1,300 மாணவா்கள் பங்கேற்பு

வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநா்களுக்கு விசா நிறுத்தம்: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்த பேச்சு தொடா்கிறது: எஸ்.ஜெய்சங்கா்

நடத்துநரை அரிவாளால் தாக்கியச் சம்பவம்: 3 சிறுவா்கள் கைது!

பைக் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT