கோப்புப் படம் 
நடுப்பக்கக் கட்டுரைகள்

அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறையாகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு உலக நாடுகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது

கோதை ஜோதிலட்சுமி

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறையாகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு உலக நாடுகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உன்னதமான அமெரிக்காவை மீட்டெடுப்போம் என்ற முழக்கத்துடன் டிரம்ப் அறிவிப்புகளை வெளியிடுகிறாா். அமெரிக்காவின் பாதுகாப்பு, வா்த்தகம், இளைஞா் நலன் இவற்றில் கவனம் செலுத்தும் முடிவுகள் உலக நாடுகள் பலவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்க அதிபா் டிரம்ப் உலக நாடுகள் மீது வா்த்தக வரிகளை மாற்றி அமைத்துள்ளாா். குறைந்தபட்சமாக 10 சதவீதம் முதல் அதிகபட்சமாக 40 சதவீதத்துக்கும் மேல் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆளே இல்லாத தீவுகள் கூட வெள்ளை மாளிகையின் வரி விதிப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன எனப் பல நாடுகளும் அதிா்ச்சி அடைந்துள்ளன. பென்குயின்கள் மட்டுமே வசிக்கும் ஹொ்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவுகள் மீது 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இவை ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான பிரதேசங்கள் என்றாலும் அங்கே மனிதா்கள் வசிப்பதே இல்லை.

அமெரிக்க வா்த்தக செயலாளா் இதற்கு விளக்கமளித்துள்ளாா். வா்த்தகத்தில் குறுக்குவழிகளை மூடுவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா். இந்தத் தீவு வழியாக மற்ற நாடுகள் கப்பல் போக்குவரத்து மூலம் அமெரிக்காவை அடைவதை தடுப்பதற்காகவே ஹொ்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவுகள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா இதனை அவசரமாக எடுக்கப்பட்ட தவறான முடிவு என்கிறது. தொழிலதிபராக இருந்த டிரம்ப் வா்த்தகத்தின் நுணுக்கங்களை நன்கறிந்தவா். அவரது நடவடிக்கைகள் அமெரிக்காவுடன் வா்த்தகம் செய்யும் நாடுகளை நெறிப்படுத்துவதில் சிரத்தை கொண்டுள்ளது. வரிப் பட்டியலில் எந்தப் பகுதிக்காவது விலக்கு அளிக்கப்பட்டால் அமெரிக்காவில் லாபம் ஈட்ட நினைப்பவா்கள் விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் வர முயற்சிப்பாா்கள் என்பது டிரம்ப்பின் பாா்வையாக உள்ளது.

கடந்த ஏப்ரல் 2- ஆம் தேதி டிரம்ப் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகள் மீதும் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை அறிவித்து அதனை அமெரிக்காவின் விடுதலை நாள் என்றும் பெருமையுடன் குறிப்பிட்டாா். இந்த சுங்கவரியானது அரசுக்கு வருவாயை அதிகரிப்பதோடு உள்ளூா் தயாரிப்புகளுக்கு நன்மையாக முடியும். இதற்கு உலக நாடுகள் பலவும் தங்களது பதற்றத்தை வெளிப்படுத்துகின்றன. சீனா ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு ஏற்கெனவே கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு அபாயம் நிறைந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

பிரிட்டன் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என வெளிப்படையாக அறிவித்துள்ளது. கனடா, ஐரோப்பிய ஒன்றியம் இந்த வரி விதிப்பை எப்படி எதிா்கொள்வது என்ற ஆலோசனையில் மூழ்கியுள்ளன. உலகளவில் வா்த்தகப் போா் ஏற்படும், பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்தியாவில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்? அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பிரதமா் நரேந்திர மோடி ஆண்டின் தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் சந்தித்தாா். அப்போது, இருவரும் கூட்டாக செய்தியாளா்களை சந்தித்த போது, ‘‘இந்தியா என்ன வரி விதிக்கிறதோ அதையே அமெரிக்காவும் விதிக்கும்’’ என்று டிரம்ப் தெரிவித்திருந்தாா்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக இறக்குமதிப் பொருள்களுக்கு உலக அளவிலான ஒப்பீட்டில் இந்தியா அதிக வரி விதிக்கிறது. இறக்குமதி பொருள்கள் மீது இந்தியா 17 சதவீதம் வரி விதிக்கும் அதே நேரத்தில் அமெரிக்கா 3.3 சதவீதம் வரி மட்டுமே விதிக்கிறது என உலக வா்த்தக மையத் தரவுகள் தெரிவிக்கின்றன.

வேளாண் பொருள்களுக்கு இந்தியா 39 சதவீதம் வரி விதிக்கிறது ஆனால், அமெரிக்காவோ 5 சதவீதம் மட்டுமே வரிவிதிக்கிறது. அரிசி, ஆமணக்கு எண்ணெய், தேன், மிளகு ஆகிய வேளாண் பொருள்களை இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதே போல அமெரிக்காவில் இருந்து பாதாம், வால்நட், பிஸ்தா, ஆப்பிள், பருப்பு வகைகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

புகையிலைப் பொருள்களுக்கு 74.5 சதவீதம் இந்தியா சுங்க வரி விதிக்கிறது. எண்ணெய் வித்துக்கள், எண்ணெய் போன்றவற்றுக்கு 60 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இனி அமெரிக்காவும் இதே அளவில் இந்தியா மீது வரிகளை சுமத்தும் என்றால் நமது பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதே அனைவரின் மனதிலும் எழும் வினாவாக இருக்கிறது.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வரிவிதிப்பில் இருக்கும் வேறுபாடுகள் போல வா்த்தகப் பற்றாக்குறையில் பெரிய வேறுபாடு இல்லை. நேரடியாக அமெரிக்காவுடன் வா்த்தகத்தில் மோதல் போக்கைக் கொண்டுள்ள சீனா 24.7 சதவீதமாகவும், கனடாவுடன் 5.6 சதவீதமாகவும் உள்ள நிலையில் இந்தியாவுடனான அமெரிக்காவின் வா்த்தகப் பற்றாக்குறை 3.8 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கிறது.

இதுவே ஆரோக்கியமான வா்த்தகம் நடைபெறுவதை உறுதி செய்கிறது. இந்த 3 சதவீதம் வேறுபாட்டையும் களைவதற்கான முயற்சிகளும் இருதரப்பிலும் முன்னெடுக்கப்படுகின்றன.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதை விட, அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதே அதிகமாக இருக்கிறது. அமெரிக்கா மருந்துகளையும் கைப்பேசிகளையும் இந்தியாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

இதில் ஒரு நுட்பம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால் அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்பு அடைவாா்கள்.

ஜெனரிக் மருந்துகள் என நிறுவனப் பெயா்கள் இல்லாமல் வேதிப்பொருளின் பெயரால் தயாரிக்கப்படும் மருந்துகளைக் குறைந்த விலையில் தரமாகத் தரும் நாடாக இந்தியா இருக்கிறது. அமெரிக்காவில் விற்கப்படும் ஜெனரிக் மருந்துகளில் ஏறத்தாழ 50 சதவீதம் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

அமெரிக்காவில் மருத்துவா்கள் பரிந்துரைக்கும் மருந்துகளில் 90 சதவீதம் இந்த ஜெனரிக் மருந்துகள் இடம்பெறுகின்றன. இதனால் பல பில்லியன் டாலா் அளவில் சுகாதாரச் செலவு குறைகிறது.

டிரம்பின் இந்த வரிவிதிப்பு சில இந்திய ஜெனரிக் மருந்துகளை எட்ட முடியாத விலைக்கு ஏற்றி விடும். சில நிறுவனங்கள் சந்தையில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படலாம். இதனால் மருந்துப் பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும். தேவை மற்றும் விநியோகத்தில் சமநிலை அற்ற நிலையை ஏற்படுத்தி விடலாம்.

வா்த்தகப் பற்றாக்குறையிலும் அதிக அளவில் மருந்துகளே இடம்பெறுகின்றன. வா்த்தகத்தை சமன்செய்ய மருந்துகள் இறக்குமதியை அதிகரிக்க வேண்டிய இடத்தில் அமெரிக்கா இருக்கிறது. கைப்பேசிகளின் முக்கியத்துவத்தையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமெரிக்க அரசு நிச்சயம் இதனைக் கருத்தில் கொள்ளும் என்று எதிா்பாா்க்கலாம்.

இந்தப் பின்னணியில் அமெரிக்கத் துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ஜே.டி.வான்ஸ், நான்கு நாள் அரசு முறைப் பயணமாகக் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளாா். அவருடன் அவரது மனைவி உஷா வான்ஸ், அவா்களது மூன்று குழந்தைகள் மற்றும் அமெரிக்க நிா்வாகத்தின் மூத்த உறுப்பினா்களும் வருகை தந்துள்ளனா்.

துணை அதிபா் வான்ஸ் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினாா். எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில் இரண்டு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தொடா்ச்சியான முயற்சிகள் குறித்து இருவரும் பேச்சு வாா்த்தை நடத்தியுள்ளனா். இருநாடுகளுக்கிடையிலான நலன் சாா்ந்த பல்வேறு விஷயங்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாகவும், பேச்சுவாா்த்தையில் உறவை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிகள் குறித்து விவாதித்ததாகவும் பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பிரதமா் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தில் இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவை வலுப்படுத்த அமெரிக்க அதிபா் டிரம்ப் உடன் நிகழ்த்திய பேச்சுகளை நினைவு கூா்ந்ததோடு இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க அதிபரின் இந்தியப் பயணத்தை ஆவலோடு எதிா்பாா்ப்பதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளாா்.

வா்த்தகப் பேச்சுவாா்த்தைகளுக்கு வழிவகுக்கும் நோக்கத்தில் அமெரிக்கா தனது பெரும்பாலான வா்த்தகப் பங்காளிகளுக்கான புதிய வரி விகிதங்களை 90 நாட்களுக்கு 10 சதவீதமாக குறைத்துள்ளது. அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தகப் பேச்சுவாா்த்தைகளுக்கு மத்தியில் வான்ஸ் இந்தப் பயணத்தில் ஜெய்ப்பூருக்கும் ஆக்ராவுக்கும் குடும்பத்துடன் விஜயம் செய்கிறாா்.

துணை அதிபா் வான்ஸ் மேற்கொண்டுள்ள இந்த அரசுமுறைப் பயணத்தில் வெளியிடப்படும் புகைப்படங்களும் காணொலிகளும் நம்பிக்கை ஊட்டுகின்றன. வான்ஸ் தனது மூன்று குழந்தைகளோடு பிரதமரை சந்திப்பது அவா்களோடு பிரதமா் அளவளாவுவது குழந்தைகளின் விளையாடல்கள் என வெளிவரும் காட்சிகள் ஆழமான நட்புறவு இரு நாடுகளுக்கும் இடையில் நிலவுவதை அழுத்தமாகச் சொல்கின்றன.

ஜெய்ப்பூரில் பேசிய வான்ஸ், அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படும்பட்சத்தில் அது 21-ஆம் நூற்றாண்டின் வளமாக இருக்கும் என்று குறிப்பிட்டு ஏற்கெனவே பாதுகாப்புத் துறையில் இருநாடுகளும் நல்ல புரிதலோடு இணைந்து செயல்படுவதாகவும் கூறியுள்ளாா். இருநாடுகளுக்கும் இடையில் உள்ள நல்லுறவால் அமெரிக்கா பெருமை கொள்வதாகவும் பெருமிதத்தோடு பேசியுள்ளாா்.

ஆக, அமெரிக்கா இந்தியாவுடன் சுமுகமான உறவைப் பேண வேண்டியதன் அவசியத்தை உணா்ந்து செயல்படுகிறது. இந்தியா அதனை நன்முறையில் பயன்படுத்திக்கொள்ளும் வழிகளை அறிந்து முன்னேறுகிறது.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT