ஸ்ரீவாஸ் சகஸ்ரநாமம்
பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் குஜராத்தின் அகமதாபாதில் உள்ள கிஃப்ட் சிட்டி, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற இந்திய பெருநகரங்களில் தங்கள் வளாகங்களை அமைக்கும் திட்டங்கள், இந்திய உயர் கல்வித் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளன. உலகளாவிய கல்வி மையமாக உருவெடுக்கும் இந்தியாவின் லட்சிய பயணத்தில் இது ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
அதேநேரம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் இந்திய வருகை, ஒரு முக்கியமான விவாதத்தை எழுப்புகிறது. இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் இந்திய மாணவர்களுக்கு அறிவைப் போதிக்கும் இடங்களாக மட்டுமே இருக்குமா? அல்லது இந்தியக் கல்வி முறையிலிருந்தும், நமது கலாசாரத்திலிருந்தும் அவர்களும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்களா? அதாவது, இருதரப்புக்கும் பரஸ்பரம் கற்றுக்கொள்ளும் தளமாக அவை மாறுமா? என்பதுதான் அது.
இந்திய உயர் கல்வித் துறையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் காலடி வைப்பதற்கு வழிவகுத்த பின்னணியிலிருந்து தொடங்குவது, இந்தப் புதிய அத்தியாயத்தின் நோக்கத்தையும் தாக்கத்தையும் மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும்.
உலகத் தரவரிசையில் சிறந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்கலாம் என்ற தொலைநோக்குத் திட்டத்தை "2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை' முன்மொழிந்தது. இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 2023-இல் இதற்கான விரிவான விதிமுறைகளை வகுத்தது.
இந்த விதிமுறைகளில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சில முக்கியச் சலுகைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம், அவை தங்கள் சொந்த நாட்டு வளாகங்களில் வழங்கும் பட்டங்களுக்குச் சமமான பட்டங்களை இந்தியாவிலும் வழங்க முடியும். மேலும், ஊழியர்களை நியமிப்பது, நிதி நிர்வாகம் மற்றும் கல்விக் கட்டணங்களை நிர்ணயிப்பது போன்ற முக்கிய விஷயங்களில் அவற்றுக்குக் கணிசமான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.
இதன் பின்னணியில் ஒரு முக்கிய நோக்கம் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்கும்போது, அதே தரமான கல்வியை மாணவர்கள் உள்நாட்டிலேயே பெற முடியும். இதன்மூலம், மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கான செலவைக் குறைத்து, உள்நாட்டு உயர் கல்வித் துறையை வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்த நோக்கம் மிகவும் பாராட்டுக்குரியது என்றாலும், இதில் சில முக்கியக் கவலைகள் உள்ளன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் நாடுகளில் உலகளாவிய புகழ் பெற்றிருப்பதற்குக் காரணம், அங்குள்ள வலிமையான ஆராய்ச்சி சூழலும், புத்தாக்க கலாசாரமும்தான். ஆனால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் சாதாரண வளாகங்களைத் தொடங்கும்போது, அவை மாணவர் சேர்க்கைக்கான மையங்களாக மட்டும் செயல்படக்கூடிய ஆபத்து உள்ளது. அப்படி நடந்தால், அந்தப் பல்கலைக்கழகங்களின் தனித்துவமான ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் பண்புகளை இழந்து, வெறும் கற்பித்தல் நிறுவனங்களாகச் சுருங்கிவிடும்.
மற்றொரு கவலை, இந்தியா கல்விச்சந்தையாக மட்டுமே பார்க்கப்படலாம் என்பதுதான். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியச் சூழலை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், தங்கள் சொந்த நாட்டின் பாடத்திட்டங்களை அப்படியே இங்கே திணித்தால், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் அறிவு மரபுகளையும், தனித்துவமான கலாசார செழுமையையும் அவை புறக்கணிக்கக்கூடும். இதன் விளைவாக, இந்திய மாணவர்களுக்குத் தேவையான உள்ளூர் அறிவும், சமூகப் புரிதலும் கிடைக்காமல் போகலாம். இது ஒரு முழுமையான கல்வி வளர்ச்சிக்குத் தடையாக அமையும்.
இந்தப் பல்கலைக்கழகங்கள் உலகத் தரத்துடன், அதேநேரத்தில் இந்தியச் சூழலுக்குப் பொருத்தமான வகையில் தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ந்து வரும் சவால்களை மையமாகக் கொண்ட முனைவர் பட்டப் படிப்புகளுக்கு நிதி ஒதுக்கி, அவற்றை ஊக்குவிக்க வேண்டும். இதில், வெளிநாட்டு மற்றும் இந்தியப் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு வழிகாட்டலாம்.
அதேபோல், வெளிநாட்டு மற்றும் இந்திய வளாகங்களுக்கு இடையே பேராசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். இது இரு தரப்பிலும் அறிவைப் பரிமாறிக் கொள்ள உதவும். இந்தியப் பல்கலைக்கழகங்களின் திறனை மேம்படுத்த, அவர்களுடன் இணைந்து தொழில்முறை மேம்பாட்டுப் படிப்புகளை உருவாக்கலாம். இது இந்தியாவின் ஒட்டுமொத்த கல்வித் தரத்தை உயர்த்த உதவும்.
வெறும் கற்பித்தல் நிறுவனங்களாக மட்டும் இல்லாமல், ஆழமான ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உருவாக வேண்டும். இதற்காக, அவர்களின் பாடத்திட்டம் இந்திய சூழலுக்கேற்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இந்திய அறிஞர்களுடன் இணைந்து பாடத்திட்டத்தை உருவாக்குவதன் மூலம், காலனித்துவ காலத்துச் சிந்தனைகளின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, நமது இந்தியாவின் பழைமையான மற்றும் வளமான அறிவு மரபுகளை அதில் இணைக்க முடியும்.
மேலும், மாணவர்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களைப் பிரதிபலிக்கும் இந்தியக் கதைகளையும், உதாரணங்களையும் பாடத்திட்டத்தில் சேர்ப்பது அவசியமாகும். இது மாணவர்களுக்கும் பாடத்துக்கும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும்.
இந்த முயற்சி, இந்திய கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தங்களின் சொந்த நாடுகளில் உள்ள கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி முறைகளை மேம்படுத்திக்கொள்ளவும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு வாய்ப்பை வழங்குகிறது.
அடிப்படையில், இந்தியாவை ஒரு வணிக மையமாகவோ அல்லது விநியோகத் தளமாகவோ மட்டும் பார்க்காமல், அறிவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் ஒரு முக்கிய ஆதாரமாகவும் கருத வேண்டும். இதன்மூலம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்திய கல்விச்சூழலில் தங்களைப் பொருத்திக்கொள்வதுடன், சர்வதேச அளவில் ஒரு புதிய அறிவுப் பரிமாற்றத்தையும் உருவாக்க முடியும்.
இதை உறுதிப்படுத்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கை, வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், வேறு சில முக்கிய அளவீடுகளையும் பின்பற்ற வேண்டும்.
உள்ளூர் பேராசிரியர்களை அதிக அளவில் பணியமர்த்துவது, அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது, இந்திய வளாகங்களை உலகளாவிய ஆராய்ச்சி அமைப்புடன் இணைப்பது மற்றும் இந்தியப் பேராசிரியர்களுக்குத் தொழில்முறை வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற இலக்குகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அடைய வேண்டும்.
மேலும், இந்திய மற்றும் வெளிநாட்டு ஆசிரியர்கள் இணைந்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை மற்றும் அதன் தாக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து அறிவுப் பரிமாற்ற கூட்டுறவுகளை ஏற்படுத்துவதற்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மாணவர்களின் திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சி சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மிக முக்கியமாக, பாடத்திட்டத்தில் இந்தியாவின் பாரம்பரிய அறிவு மற்றும் தத்துவம் எந்த அளவுக்குச் சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் அளவிட வேண்டும். இது கல்வி முறையில் நிலவும் காலனித்துவச் சிந்தனைகளை நீக்க உதவும். இத்தகைய நடவடிக்கைகள், இந்திய வளாகங்கள் சாதாரண கிளைகளாக இல்லாமல், உண்மையான ஆராய்ச்சி மற்றும் கல்வி மையங்களாக மாறுவதை உறுதி செய்யும்.
சர்வதேச அரங்கில் இந்தியா ஒரு முன்னணி சக்தியாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, தெற்குலக நாடுகளின் குரலாகவும் திகழ்கிறது.
இந்தச் சூழலில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்குவது வணிக வாய்ப்பு மட்டுமல்ல; உலகளாவிய கண்ணோட்டத்துடன், உள்ளூர் சூழலுக்குப் பொருத்தமான ஒரு புதிய உயர் கல்வி முறையை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்பும் ஆகும்.
சரியான திட்டமிடலுடன், இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகங்கள், வளரும் நாடுகளுக்கு இடையே அறிவுப் பரிமாற்றத்தையும், கூட்டு ஆராய்ச்சிகளையும் ஊக்குவிக்கும் மையங்களாக மாற முடியும். எதிர்காலக் கல்வியின் மையங்களாக இந்தப் பிராந்தியங்கள் உருவாகி வருவதால், இது மிகவும் முக்கியமானது.
ஆராய்ச்சி, உள்ளூர் தேவைகளுக்கேற்ற பாடத்திட்டங்கள் மற்றும் காலனித்துவ சிந்தனையில்லாத கல்வி முறை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன்மூலம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனைவரையும் உள்ளடக்கிய, உலகளாவிய தரங்களைக் கொண்ட ஒரு புதிய கல்வி மாதிரியை உருவாக்கலாம். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே ஒரு புதிய
வழியைக் காட்டும்.
கட்டுரையாளர்:
பிரிட்டன் க்ளாஸ்கோ
பல்கலைக்கழகப் பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.