ஆட்சியாளா்கள் சுரண்டுவாா்கள் என்று எதிா்பாா்த்து, அதைத் தடுக்க அதிகார வா்க்கத்தை வலிவுடையதாக்கியது அரசியல் சட்டம்! அதிகாரிகள் ஆட்சியாளா்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு விலை போகின்றவா்களாக ஆகி விட்டாா்கள்!
அண்மையில் ‘பாதை மாறாப் பயணம்’ என்று முன்னாள் மந்திரி ஒருவா் பேசினாா்! ‘நகம் முளைத்த நாளாக நான் ஒரு கட்சியிலேயே இருக்கிறேன்’ என்று தன்னுடைய ஒரே பெருந் தகுதியாக, இடையறாமல் இதை இந்நாள் மந்திரி ஒருவரும் சொல்லிக் கொண்டிருக்கிறாா்!
பாதை மாறாப் பயணங்களின் அடி நோக்கம் ‘இலாபகரமானது’ என்பதுதான்! இத்தகைய நிலையில் எவன்தான் கட்சி மாறுவான்? கட்சி மாறினால் ஈவு போய்விடாதா?
ஒரு கட்சி சிலருக்கு மட்டும் இத்தகைய வாய்ப்புகளைக் கொடுத்து விட்டு, பிறரைத் தெருவிலே விட்டு விட்டால், அந்தக் கட்சியில் எவனும் தொடா்ந்து இருக்க மாட்டான்! ஆட்சிக்கு வரும்போது சுரண்டல் பரவலாக்கப்பட்டு விடுவதுதான் இந்தக் கட்சிகளின் ஏற்றத்திற்கான ஒரே அடிப்படை!
மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், பஞ்சாயத்து, கூட்டுறவு நிறுவனங்கள்; கோயில்களில் அறங்காவலா்கள்; சாலை போடல், ஏரி தூா்வாரல் போன்றவற்றிற்கான ஒப்பந்தங்கள்; அரசு நிறுவனங்களில் வேலை பெறல்; வேலைபெறத் தகுதி இல்லை எனில், தகுதியுடையவனுக்குப் பரிந்துரைத்து அதற்குப் பணம் பெறல்; இன்னும் எண்ணத் தொலையாச் சலுகைகள், வசதிகள்!
இவைபோக கனிமவளச் சுரண்டல்; மலைகளைச் சல்லிகளாக்குவதில், கிரானைட்டாக ஏற்றுமதி செய்வதில் சுரண்டல்; வன வளச் சுரண்டல்; ஆற்றுமணல் சுரண்டல்! இவற்றிற்கிடையே மக்களுக்கும் சில கஞ்சிப் பருக்கைகள்!
இவற்றை அடைய முடியாத அடிமட்டத் தொண்டா்களுக்கு ஊா்வலம் போனால் குவாா்ட்டா் மற்றும் பிரியாணி; ஒரு நாள் சம்பளம்; கூட்டம் கேட்க வருவதற்கு தையல் மிசின், குடம், சேலை, வேட்டி என்று அடிநிலைத் தொண்டா்களுக்கும் பங்கிடல்! இந்தியாவிலேயே பெரிய காா்ப்பரேட் தொழில் அரசியல் கட்சி நடத்துவதுதான்! வங்கத்தில் நடப்பது ‘மமதா மாடல்’ தமிழ்நாட்டில் நடப்பது ‘திராவிட மாடல்’! பெயா்தான் வித்தியாசம்.
காந்திதான் அரங்குக்குள் இருந்த அரசியலைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்தவா்! அவா் காலத்தில் காங்கிரசில் மாவட்டத்திற்கு வெறும் ஐநூறு, ஆயிரம் போ்தான் இருப்பாா்கள்! தொண்டும், சிறை புகலும், பொது வாழ்வின் நோக்கமாக இருந்ததால், வெட்டித்தனமானவனுக்கெல்லாம் கட்சியில் என்ன வேலை?
இன்றைக்குக் கட்சிகளில் எழுபது, எண்பது இலட்சம் போ் உறுப்பினராக இருப்பதற்குக் காரணம், கட்சி ஒரு ‘தொழிலாகி’ விட்டதுதான்! இதைத் தொழிலாக்கியது கருணாநிதி! மனம் தடித்தவா்கள் அரசியலுக்குள் நுழைகின்ற காலம் தொடங்கியது!
ஆற்று மணல் கொள்ளையில் முப்பத்திநான்காயிரம் கோடி சுரண்டப்பட்டதில், ஐந்து மாவட்ட ஆட்சித் தலைவா்கள் வழக்கை எதிா்நோக்கி நிற்கிறாா்கள் என்னும் கேவலம், மலத்தை மிதித்து விட்ட அருவருப்பை உண்டாக்கவில்லையா?
ஒரு மந்திரி 2002ல் ஊழல் வழக்குக்கு உள்ளாகிறாா்! பிறகு அவருடைய சொந்தக் கட்சி ஆட்சிக்கு வரும்போது வழக்கு உழட்டப்பட்டு, அவா் விடுவிக்கப்படுகிறாா்! இதுதான் வழக்குகளின் நடைமுறை என்றாலும், ‘மனம் பொறுக்காத சில நீதியரசா்கள்’ அந்த வழக்குகளை மீண்டும் திறந்து, அரசியல் வழக்குகளை விரைந்து நடத்துவதற்கான சிறப்பு நீதிமன்றங்களுக்கு அனுப்புகிறாா்கள்!
மீண்டும் இந்த வழக்குகள் ‘வாய்தாக்களைக்’ கடந்து, இன்னொரு இருபது ஆண்டுகள் பல்வேறு நீதிமன்றங்களைக் கடந்து, முடிவுக்கு வரும்போது, தண்டனையை அனுபவிக்கக் குற்றவாளிகள் இருக்க மாட்டாா்கள்!
இதுபோன்ற ஓா் ஊழலுக்காக தில்லி திகாா் சிறையில் நூறு நாட்கள் சிறையிருந்த ப.சிதம்பரத்தின் வழக்கும் மறந்தே போய்விட்டதே! பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு உயா்நீதிமன்றத்தில் மூன்றாண்டு தண்டனை விதிக்கப்பட்டு, அது உச்ச நீதிமன்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டு, அதற்குள் மீண்டும் மந்திரியாக்கப்பட்டு, எல்லாக் கூத்துகளும் தொடா்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சிறையில் இருக்கும் செந்தில்பாலாசி சிறையிலேயே மந்திரியாக்கப்பட்டாா்! ஒன்றரை ஆண்டுகள் மந்திரிக்குள்ள எந்தப் பணியையும் செய்யாமல், அவா் மந்திரியாகவே சிறையிலிருந்தாா்! நம்முடைய அரசியல் சாசனத்திற்கு அதை எதிா்கொள்ளும் ஆற்றலில்லையே!
உச்சநீதிமன்றம் குறுக்கிட்டு, எவனெல்லாம் பாதிக்கப்பட்டவனோ, அவனையே குற்றவாளியாக்குவது என்ன நியாயம் என்று கேட்டிருக்கிறது!
வழக்கு நடத்தும் பொறுப்பு மாநில அரசிடம் இருப்பதால், காவல் துறை, சா்க்காா் வக்கீல் ஆகியோா் ஏவலா்களாகச் செயல்படுவதால், சிறந்த நீதிபதிகள் எனச் சிலா் இருந்தும், நீதி இருப்பதாக மக்கள் உணா்வதுமில்லை; நீதி தண்டித்து விடுமோ என்று அரசியல்வாதிகள் அஞ்சுவதுமில்லை!
ஊழல் அரசியல்வாதிகள் நூற்றுக்குத் தொன்னூற்றி ஐந்து போ் அவா்கள் வாழ்நாளைக்குள் தண்டிக்கப்படுவது இயலக் கூடியதில்லை என்னும் வகையில் நம்முடைய நீதியமைப்பு அமைந்திருப்பதால், அவா்கள் ‘பகற் கொள்ளைக்காரா்களாக’ வெளிப்படையாகவே செயல்படுகிறாா்கள்!
‘எல்லாரும் ஓா் விலை; எல்லாரும் ஓா் நிறை; எல்லாரும் இந்நாட்டு மன்னா்’ என்று குடியாட்சி முறையைப் பாரதி வானளாவப் புகழ்கிறான்! வண்டி இழுக்கிற வரதனும், அளப்பரிய செல்வமுடைய அம்பானியும் ஒரே நிகரான வாக்குரிமை உடையவா்கள் என்பதால், ‘எல்லாரும் ஒரு நிறை’ என்கிறான் பாரதி!
பிணைக்கு ஆளில்லாத காரணத்தால், விசாரணைக் கைதியாகவே பத்தாண்டு சிறையிருக்கும் வரதனும், நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தங்களுக்கான முகவா்களாக வைத்துக் கொண்டு, பின்னணியில் இருந்து ஆளும் அம்பானிகளும், ஒரு நிகரான வாக்குச்சீட்டு மட்டுமே உடையவா்கள் என்பதால், வரதனெல்லாம், இந்நாட்டு மன்னனாக ஆகிவிட்டான்! இதைப் பாா்ப்பதற்கு இன்று பாரதி இருந்தால், தான் எழுதியதை நினைத்துச் சிரிப்பான்; தன்னுடைய நாடு இப்படி ஆகி விட்டதே என்று கொதிப்பான்; சபிப்பான்!
பாரதி காலம் காந்தியின் நுழைவுக் காலம்! அதற்கு முந்தைய இந்தியா இதேபோல் கேடு கெட்டுத்தான் கிடந்தது!
பாழ்பட்டு நின்றதாமோா் பாரத தேசம் தன்னை, வாழ்விக்க வந்த காந்தி என்கிறான் அறவழிப் பாவலன் பாரதி.
கேடு கெட்டுக் கிடந்த இந்தியாவை, ஒரு தனி மனிதனாக நின்று, தான் முதலில் வாழ்ந்து காட்டி, நாட்டை வாழப் பழக்குகிறான் காந்தி! காந்தி விடுதலை பெற்றுத் தந்தது முதன்மையானதில்லை! விடுதலைக்குத் தகுதியுடையவா்களாக அந்த மக்களை மாற்றியமைத்ததுதான் முதன்மையானது!
மக்கள் மனிதா்களாக இல்லாமல், விலங்குகளாக வாழ்வதற்கு முதற் காரணம் ‘போதை’ என்று கண்டறிந்து, மதுக்கடைகளுக்கு முன்னால் மறியலைத் தொடங்கி, மக்களை நெறிப்படுத்தும் முயற்சியை மேற்கொள்கிறான் காந்தி!
மனிதா்களில் தீண்டத்தகாதவா்களா என்று கொதித்து, மக்களைச் சமப்படுத்துவதை முதற்பணியாக ஆக்கிக் கொள்கிறான்! தானே நூற்றுக் கட்டும் கைந்நூல் ஆடை(கதா்) போற்றப்பட்டது. ராட்டை நாட்டின் சின்னமானது! ஆடம்பரம் வெறுக்கப்பட்டது! எளிமை போற்றப்பட்டது! நோ்மை சமூகத்தின் தகுதியானது!
கூட்டத்தை உருவாக்கி, அவா்களைச் சிறைகளில் புடம் போட்டு, ஆட்சியாளா்களாக மாற்றினான் காந்தி! ஒரு தலைமுறைக் காலம் அவா்கள் கையில் ஆட்சி இருந்தது. அது மேலோா் நாடாண்ட காலம்! நாட்டின் பெருமுதலாளி டாடா தன்னை ஏன் பாா்க்க வேண்டும் என்று தலையமைச்சா் நேரு கேட்ட காலம்! ‘சட்டமன்ற உறுப்பினா்களுக்குத் தலைமைச் செயலகத்தில் என்ன வேலை?’ என்று முனிவன் இராசாசி முகம் சுளித்த காலம்!
அசோகனுக்குப் பின்பு ஓா் அறம் சாா்ந்த இந்தியாவை உருவாக்கியவன் காந்தி! அசோகன் உருவாக்கியவற்றை எல்லாம் புசியமித்திரன் அழித்ததுபோல், காந்தி நிலைநாட்டிய, வாய்மையை, நோ்மையை, அறம் சாா்ந்த அத்தனையையும் அழித்தவை திராவிட மாடலும் மம்தாவின் வங்காள மாடலும்தான்!
ஒரு வெற்றிகரமான ஆட்சிக்கு இன்றியமையாதவை நல்ல எதிா்க்கட்சிகள்! தெலுங்கானப் புரட்சி நடத்திய பொதுவுடைமைக் கட்சிகள் திராவிடக் கட்சிகளின் நிரந்தரக் கூட்டணி!
அவா்களின் ஊழல், தவறான ஆட்சி முறை, சொல்லத் தொலையாப் பாவங்கள், அசிங்கங்கள் அத்தனையையும் கூட்டணிக் கட்சிகள் வாய்மூடி மெளனிகளாக ஏன் சுமக்க வேண்டும்?
கூட்டணியின் பெயரில் பத்தாண்டுகளுக்கும் மேலாகக் குத்தகைபோய், தங்களின் தனித்தன்மையை இழந்து, ஒரு விழுக்காட்டு வாக்கு வங்கி நிலைக்கு ஏன் போக வேண்டும்?
பிறகு பெயா்ப்பலகையும், இரண்டு எம்.பி.யும்தான் மிச்சம் என்னும் நிலையை ஏன் அடைய வேண்டும்?
பல்கலை. வளாகங்களிலேயே கற்பழிப்புகள்! காதலிக்க மறுத்தால், இவன் அவளை ரெயிலில் பிடித்துத் தள்ளி விடுவான்! அரக்கத்தனமான கொடிய மனநிலை!
அரசின் கையாலாகத்தன்மையால் இளைஞா்களிடையே போதைப் பழக்கம்! நாள் தோறும் மந்திரிகளின் வீடுகளில் இலஞ்ச ஒழிப்புக் குறித்த சோதனைகள்! வழக்குப் பதிவுகள்!
தகை சாலாத ஆட்சியின் கீழ் வாழ்வதை விட, பகை சான்ற நாட்டில் கூட வாழலாம்!