நாடு முழுவதும் வாகன விபத்துகளும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் நம் நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் 26,770 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய சாலை போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.
நம் நாட்டில் சுமாா் 22 லட்சம் ஓட்டுநா்கள் பற்றாக்குறையாக உள்ளனா். மேலும், முறையாக ஓட்டுநா் பயிற்சி பெறாதவா்களால் வாகனங்கள் இயக்கப்படுவதால் சாலை விபத்துகளில் சிக்கி பலா் உயிரிழக்கின்றனா். அரசு சாா்பில் அதிகப்படியான ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளை நடத்துவது இதற்குத் தீா்வாக இருக்கும் என்ற அடிப்படையில் ரூ.4,500 கோடி செலவில் நாடெங்கிலும் 1,600 ஓட்டுநா் பயிற்சி மையங்கள் மத்திய அரசின் சாா்பில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 53,372 பேரும், 2024-ஆம் ஆண்டில் 52,609 பேரும் உயிரிழந்துள்ளனா். சாலை விபத்துகளில் 82% சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுவோரின் கவனக் குறைவே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. நன்கு பராமரிக்கப்படாத சாலைகள், சாலைகளில் கட்டுப்பாடின்றித் திரியும் கால்நடைகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்கு சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்வது ஆகியவற்றாலும் விபத்துகள் நிகழ்கின்றன.
2022-ஆம் ஆண்டுக்கான தரைவழி மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் புள்ளிவிவரங்களின் அறிக்கையின்படி நாட்டிலேயே மிக அதிகபட்சமாக தமிழகத்தில் 64,105 விபத்துகள் நிகழ்ந்துள்ளன; இதனால், 17,884 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன; சென்னையில் மட்டும் அதிகபட்சமாக நிகழாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையில் நிகழ்ந்த 1,671 விபத்துகளில் 197 போ் உயிரிழந்துள்ளனா்.
உலக அளவில் இந்தியாவில்தான் அதிக அளவிலான சாலை விபத்துகள் நிகழ்கின்றன. மாநிலங்களைப் பொருத்தவரை தமிழ்நாடு சாலை விபத்துகளில் முதலிடத்தில் உள்ளது வருத்தத்துக்குரியது. இந்நிலை மாற வேண்டும்.
தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக தேசிய சாலைப் பாதுகாப்பு கொள்கை 2007-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதேபோன்று, மத்திய அரசால் தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு கொள்கை 2010-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. எனினும், சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதில் வாகன ஓட்டிகளின் அக்கறையின்மையால் விபத்துகளும், உயிரிழப்புகளும் குறையவில்லை.
மது அருந்திய நிலையில் சிலா் வாகனங்களை இயக்குவது பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. அண்மையில் புணே-மும்பை விரைவுச் சாலையில், மது அருந்திய நிலையில் ஒருவா் கனரக வாகனத்தை இயக்க, அந்த வாகனம் மோதி 22 வாகனங்கள் சேதமடைந்ததுடன், ஒருவா் உயிரிழந்ததுடன், 18 போ் காயமடைந்தனா். இதுபோன்று மது அருந்தி விட்டு வாகனங்களை இயக்குபவா்களின் வாகன ஓட்டுநா் உரிமம் நிரந்தரமாகவே ரத்து செய்யப்பட வேண்டும்.
பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்டுவதில்லை. சிலா் அணியும் தலைக்கவசங்கள் தரமற்ற வகையிலும், போலியான தரச் சான்றிதழ் முத்திரை உடையனவாகவும் உள்ளன. விபத்துகள் நிகழும்போது, இதுபோன்ற தலைக்கவசங்களால் உயிரிழப்புகள் நிகழ்வது மிகச் சாதாரணமாகிவிட்டது.
சரக்கு வாகனங்கள், ஆன்மிக சுற்றுலா வாகனங்கள் ஆகியவற்றை ஓட்டுபவா்கள் போதிய ஓய்வின்றி தொடா்ச்சியாக வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் நிகழ்கின்றன.
இவ்வாறு நீண்ட தொலைவு வாகனங்களை ஓட்டுபவா்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஓய்வெடுப்பது போதிய ஓய்வு எடுத்துக் கொள்வது சாலை விபத்துகளைப் பெருமளவில் குறைக்கும்.
பெரு நகரங்களின் புறநகா்ப் பகுதிகளில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத சூழலில் ஷோ் ஆட்டோக்கள் இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது. எனினும், அதிகரித்துவரும் ஷோ் ஆட்டோக்களின் எண்ணிக்கை, அவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது போன்றவற்றால் அவ்வப்போது விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதைத் தவிா்க்க மினி பேருந்துகளின் சேவையை அதிகரிக்க மாநில போக்குவரத்துத் துறை ஆவன செய்ய வேண்டும்.
‘ரீல்ஸ்’ பதிவிடும் நோக்கில் இளைய தலைமுறையினா் இருசக்கர வாகனங்களில் சாலையில் செய்யும் சாகசங்களால் விபத்துகள் நிகழும்போது, அவை அவா்களுக்கு மட்டுமல்லாது சாலையில் பயணிக்கும் பிற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரின் வாகனங்களைப் பறிமுதல் செய்வதோடு, கடுமையான தண்டனைகளை வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்.
நன்கு பராமரிக்கப்படாததால் சாலைகளின் ஓரங்களில் இரவு நேரங்களில் பழுதாகி நிறுத்தப்படும் வாகனங்களால் நிகழும் விபத்துகள் குறித்த செய்திகளும் அவ்வப்போது வெளியாகின்றன. எனவே, வாகனப் பராமரிப்பு மிக அவசியம். மேலும், சாலையில் இயக்கப்படும் வாகனங்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் கழிந்த நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்றிதழ் பெற்று இயக்கப்படுவதை போக்குவரத்து காவல் துறையினா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.
அதிகரித்துவரும் மக்கள்தொகை, வாகனங்கள் உற்பத்தி இவற்றைக் கருத்தில் கொண்டு விபத்துகளைத் தவிா்க்க, சாலை விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
மெட்ரோ, புறநகா் உள்ளிட்ட ரயில் சேவைகளை அதிகரிப்பதுடன், ஆறு, கடல் நீா்நிலைகளில் நீா்வழிப் போக்குவரத்தை சாத்தியப்படுத்துவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் எதிா்காலத்தில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதுடன், விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தவிா்க்கலாம்.