தமிழர்களின் திருவிழாக்களில் தனிச் சிறப்புடையது திருக்கார்த்திகை தீபத் திருவிழா. தமிழர் தெய்வங்கள் என்று கொண்டாடப்படும் முருகன், சிவன், திருமால் மூவரோடும் தொடர்புடையதாக இந்தத் திருவிழா அமைந்திருப்பதாலேயே இத்தகைய சிறப்பு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபடும் மரபு பல குடும்பங்களில் இன்றைக்கும் இருக்கிறது. கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் தீபம் ஏற்றி ஒவ்வொரு தமிழரும் வழிபடுகின்றனர். இந்த மரபு எப்போது தொடங்கியது? எங்கெல்லாம் இந்த விளக்கேற்றும் முறை பின்பற்றப்பட்டது?
குன்றத்தின் உச்சியில் விளக்கேற்றுவது தமிழர் நாகரிகத்தில் என்றைக்குத் தொடங்கியது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்குத் தொன்மை கொண்டது. அதனால்தான் திருஞானசம்பந்தர், 'தொல்கார்த்திகை நாள்' என்று பாடுகிறார்.
நம்மிடம் இருக்கும் தமிழின் மிகப் பழைய நூல் தொல்காப்பியம், 'வேலின் நோக்கிய விளக்குநிலை' என்று குறிப்பிடுகிறது. இதற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர், இது கார்த்திகை மாதம்; கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு கீழும் மேலும் வலமும் இடமும் திருபரந்து சுடர் ஓங்கிக் கொழுந்துவிட்டு எழுவதைக் குறிப்பதாக உரை எழுதுகிறார்.
புறநானூறு, அகநானூறு, நற்றிணை என சங்க இலக்கியங்களில் கார்த்திகை தீபத்திருவிழா பழம்பெரும் விழாவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 'எரி', 'என்னும்' சொற்களால் கார்த்திகையை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கார்த்திகை தீபத்தை 'அழல்குட்டம்' என்கிறது புறநானூறு.
சிலப்பதிகாரம் கார்த்திகையை 'அழல்' என்கிறது. சீவக சிந்தாமணி, 'குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை பைந்தார்' எனக் கூறுகிறது. நீதி இலக்கியமான பழமொழி நானூறு, 'குன்றின்மேலிட்ட விளக்கு' என்று திருப்பரங்குன்றத்தில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபத்தைச் சொல்கிறது.
கார்த்திகை நாளில் குன்றத்தில் விளக்கு ஏற்றப்பட்டது. முருகன் வழிபாடு சிறப்புடன் நடைபெற்றது என்பதைக் கந்தபுராணம் உறுதி செய்கிறது. சிவபெருமான் திரிபுரங்களை எரித்து விண்ணுக்கும் மண்ணுக்குமாக ஜோதிவடிவாக நின்ற நாள் என்பதால், வான்முட்டும் அளவில் உயர்ந்த மலை உச்சியில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்றப்படுகிறது என்கின்றன சைவ இலக்கியங்கள்.
சிவன் லிங்க வடிவில் மலையாகவே இருப்பதால் மலையின் உச்சியில் விளக்கேற்றி வழிபடும் முறை இருந்ததை சிவப்பிரகாசர், 'கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து கண்டவர் அகத்திருள் அனைத்துஞ் சாய்த்து நின்றெழுந்து' என்று பாடுகிறார்.
இதனால் இரு உண்மைகள் தெளிவாகின்றன. முருகனுக்குப் பரங்குன்றத்தின் உச்சியில் விளக்கேற்றி விழா எடுப்பர். மலையை சிவனின் வடிவமாகக் காணும் இடங்களில் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவர். திருவண்ணாமலையிலும் இதே முறை பின்பற்றப்படுவதை பார்க்கிறோம்.
தமிழரின் முல்லைநிலத் தெய்வமான திருமால், கார்த்திகை மாதத்தில் கண் விழிப்பதாக நற்றிணை பாடுகிறது. திருமால் பிரம்ம யாகத்திற்காகத் தானே தீப்பிழம்பான விழாவே கார்த்திகை தீபவிழா. இன்றைக்கும் காஞ்சியில் விளக்கொளி பெருமாள் என்றே பெருமாளை வணங்குகிறார்கள்.
நம்முடைய சமயத்தில் கடற்கரைகளில், மலைகளில் உள்ள கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை. மலைக்கோயில்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. திருப்பரங்குன்றம், பழனிமலை தொடங்கி சபரிமலை, திருமலை என்று கேதார்நாத், பத்ரிநாத், வைஷ்ணவி தேவி கோயில், அமர்நாத் குகைக் கோயில் வரை நெடுகிலும் நாடு முழுவதும் மலைக் கோயில்கள் இருக்கின்றன.
ஆன்மிகக் காரணங்கள் மட்டுமன்றி அறிவியல் காரணங்களும் இப்படி கோயில் அமைப்பதற்கு உள்ளன. சங்க காலத்தில் கோயில்களே இல்லை என்று தமிழ் இலக்கியம் அறியாதவர்கள் வாதிடுகின்றனர். 'மன்றம்' என்று கோயில்களை தமிழ் இலக்கியம் சொல்கிறது. பல வகையான விதிமுறைகளைக் கொண்ட கோயில்கள் இருந்துள்ளன.
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னனைப் பாடும்போது சிவபெருமான் நகர்வலம் வரும்போது மட்டும் உன் தலை வணங்க வேண்டும் என்று வாழ்த்துகிறார் புறநானூற்றில் புலவர் காரிகிழார். இறைவன் நகர்வலம் வருவது எனில் கோயிலில் உற்சவம் நடக்கும் பொழுது மன்னன் வந்து வணங்குவான் என்று பொருள்.
அப்பர் சுவாமிகள் பலவகையான கோயில்கள் இருந்ததைக் கூறுகிறார். அவருக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராஹமிஹிரர் 20 வகையான கோயில்கள் இருந்ததாக அவற்றின் அமைப்பை விளக்குகிறார்.
மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் எளிதில் மாறுவதில்லை. காலத்தால் மாற்ற முடியாத நம்பிக்கைகளாக இறை நம்பிக்கைகள் நிலைபெறுகின்றன. மரபுகளாகத் தொடர்கின்றன. அரசியல் மாற்றங்கள், ஆட்சி மாற்றங்கள், படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள் என்று வரலாற்றில் நாம் காணும் பல மாற்றங்களால் இந்த நம்பிக்கைகள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனால் மறைந்து போவதில்லை.
ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்தின் வழக்கமாக அவை பழக்கத்தில் இருக்கின்றன. ஆலயங்களில் காலத்திற்கேற்ப அதனை சுருக்கிக் கொள்கிறார்களேயன்றி நிறுத்துவதில்லை. திருப்பரங்குன்றம் அந்நிய படையெடுப்புகளால் பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கென தீபஸ்தம்பம் இருக்கிறது. ஆனாலும், பல ஆண்டுகளாக அங்கே தீபம் ஏற்றப்படவில்லை. பிள்ளையார் கோயில் அருகில் ஏற்றப்பட்டு வருகிறது. விளக்கேற்றும் மரபு மாறவில்லை; ஆனால், இடம் மாறியிருக்கிறது.
13-ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூர் படையெடுத்து வந்த காலத்தில் திருப்பரங்குன்றம் பாதிப்புக்குள்ளானது; இங்கே பாண்டியர்களுக்கும் முகலாயருக்கும் போர் நிகழ்ந்ததாகவும் வரலாறு. தமிழகத்தின் மீது படையெடுத்து ஆதிக்கம் செலுத்த வந்த சிக்கந்தரின் சமாதி அங்கே இருப்பதாகவும், இல்லை சிக்கந்தரின் சமாதி கோரிப்பாளையத்தில் இருக்கிறது என்றும் கருத்துகள் நிலவுகின்றன. எப்படியாயினும் நெருக்கடிகளைக் கடந்து கார்த்திகை தீபத் திருவிழாவும் முருகன் வழிபாடும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
தமிழர் தெய்வமாம் முருகனின் திருப்பரங்குன்றத்தைக் காக்க இன்றைக்கும் காவல் வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் வம்சாவளியாக இந்தக் காவல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலில் இன்றைக்கும் அவர்களுக்கு அதற்கான மரியாதை வழங்கப்படுகிறது. சிவலிங்கமாக அமைந்துள்ள இந்த மலையை, முருகனின் படைவீடான திருப்பரங்குன்றத்தைக் காக்க இவர்களில் உயிர்த்தியாகம் செய்தவர்களும் உண்டு.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி
யில் திருப்பரங்குன்ற மலையின் உரிமை குறித்த மோதல்கள் தொடங்கின. அதுவரையில் முருகன் கோயிலுக்குச் சொந்தமான திருப்பரங்குன்றம் மலை தங்களுக்குச் சொந்தமானது என்று சிக்கந்தர் சமாதியுடன் இணைந்த தர்கா நிர்வாகம் உரிமை கோரியதைத் தொடர்ந்து பிரச்னை வலுத்தது. பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்ட பிரிட்டிஷ் காலனி ஆட்சி, அந்த மோதலை சாதகமாகப் பயன்படுத்தி இரு சாராருக்கும் இடையே பிரிவினையை வளர்த்து ஆதாயம் கண்டது.
பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு நடைபெற்றது. அப்போது (1923-ஆம் ஆண்டு) திருப்பரங்குன்றம் மலை, கோயிலுக்குச் சொந்தமானது என்று மதுரை கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 1931-இல் இந்தத் தீர்ப்பை எதிர்த்து லண்டனில் மேல்முறையீடு செய்யப்பட, அங்கும் திருப்பரங்குன்றம் மலை, கோயிலுக்குத்தான் சொந்தமானது என்று உறுதிப்படுத்தப்பட்டது.
1939 முதல் 1945-ஆம் ஆண்டு வரை இரண்டாம் உலகப் போர் காலத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தீபம் ஏற்றுவதற்கு அனுமதி மறுத்த நிலையில் தீபம் ஏற்றுவதை நிறுத்தவில்லை; இடமாற்றம் செய்து தீபம் ஏற்றி விழா கொண்டாடப்பட்டது. கோயிலின் முன் மோட்ச தீபம் ஏற்றுவதற்காக உள்ள இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றத் தொடங்கினர். தொடர்ந்து இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் மலையின் மீது சிவன் கோயில் இருக்கிறது. இது பாடல்பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்று. திருஞான சம்பந்தராலும் சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் பாடப்பெற்றது. இங்கு மலையே சிவலிங்க வடிவம் என்று சிவன் கோயில் தல வரலாறு சொல்கிறது. அப்படியானால் சிவனின் முடியில் அதாவது, மலை உச்சியில் தீபம் ஏற்றுவது முறையாகும்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றி திருக்கார்த்திகையைக் கொண்டாடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு அளித்துள்ளது. நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் மலையை ஆய்வு செய்து மலை உச்சியில் உள்ள தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பு நடைமுறைப்
படுத்தப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
கோயில்கள் பாரதத்தின் அடையாளம். மக்கள் நம்பிக்கையின், கலாசாரத்தின், பண்பாட்டின் இருப்பிடம். இந்த அடையாளங்கள் நமக்கான அங்கீகாரம். அதை இழக்கும் போது அதனுடன் இனத்தின் அடையாளத்தையும் சேர்த்தே இழக்
கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.