"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று தமிழையே தனது மூச்சாகக் கொண்டு முழு வீச்சில் தன்னை தமிழ்த் தொண்டுக்காக அர்ப்பணித்த உன்னத புருஷர் பாரத அன்னையின் தவப்புதல்வர் மகாகவி பாரதியார்.
அகவை முப்பத்து ஒன்பதே ஆண்டு இந்தப் பூவுலகில் வாழ்ந்து சிந்தனைக்கும் எட்டாத அளவில் கவிதை மழை பொழிந்து தமிழுலகை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திய மகான் பாரதி.
மனித வர்க்கத்துக்கு உய்வு கலையும் கவிதையும்தான். பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தம் கவிதைதான். தரணியில் உள்ள எல்லாவற்றையும் தனக்கு அங்கங்களாக கொண்டிருக்கும் கவிதையை கடவுள் என்று போற்றிட வேண்டும். ஒப்புயர்வில்லாத கவிதையைப் பாடியவர் சுப்பிரமணிய பாரதியார் என்கிறார், பாரதியார் சரிதையை உலகுக்கு வடித்து கொடுத்த "வ.ரா'.
அடிமைகளாக திக்குத் தெரியாமல் முடங்கியிருந்த தமிழ் சமுதாயத்தை தனது கவிதைகள் மூலம் தட்டி எழுப்பி,"கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல்'என்ற வள்ளுவர் வரிகளுக்கேற்ப சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டார்.
அச்சமே மடமை; அச்சமில்லாமையே அறிவு. அச்சத்தின் வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்; மிச்சத்தை பின் சொல்வேன்; சினத்தை முன்னே வென்றிடுவீர், மேதினியில் மரணம் இல்லை என்ற பாரதியின் முழக்கம் நெஞ்சுக்கு உரமூட்டும்.
விபத்துகள் வரும்போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் மூடன்தான். விபத்துகள் வரும்போது எவன் உள்ளம் நடுங்காமல் துணிவு
டன் அதைப் போக்க முயற்சிக்கிறானோ அவனே ஞானி. ஹரி ஓம் என்று எழுதத் தெரியாத போதிலும் அவன் ஞானிதான். துணிவே தாய்; அதிலிருந்துதான் கல்வி முதலிய மற்றெல்லா நன்மைகளும் பிறக்கின்றன. இதையேதான் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், "எல்லா தலைமைப் பண்புகளிலும் முதன்மையானது துணிச்சல், மற்ற எல்லாப் பண்புகளும் அதைச் சார்ந்துதான் உள்ளன' என்று
மக்களுக்கு சூளுரைத்து இரண்டாம் உலகப் போரில் வெற்றி கண்டார்.
பொருள் ஒரு பொருட்டே அல்ல என்று வேத வாழ்க்கை வாழ்ந்தவர் பாரதி. பல மொழிகளில் பரிச்சயம். வேதங்கள், சாஸ்திரம், சங்கீதம், தத்துவங்கள், உலக சரித்திரம் மற்றும் பல கலைகளில் ஆழ்ந்த அறிவாற்றல் அவரது கவிதைகளில், கட்டுரைகளில் வெளிப்படுகின்றன. பாரதியாரின் தத்துவப் பாடல்கள் அவரது ஆழ்ந்த ஆன்மிகப் பற்று, ஜாதி, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்த்துகிறது. ஒரு தத்துவ பாடலில்...
"நானெனும் பொய்யை
நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில்
செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும்
ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்
சோதி நான்'
உலக இயக்கம் எல்லாம் மாயை; ஆத்ம ஞானம் ஒன்றே மெய் என்பதைத் தெளிவுபட எடுத்துரைக்கிறார்.
சங்க இலக்கியங்களைப் படித்தால் அதைப் புரிந்து கொள்ள உரை தேவை. திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை; அதைப் புரிந்து கொள்ள கோனார் உரை என்று அந்தக் கால தமிழ் சொல்லாட்சி உயர்ந்த நிலையில் இருந்தது. சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு அந்நியர் அதுவும் வேற்று நாட்டின் மன்னர்களின் சாதாரணப் படைப் பிரதிநிதிகள் ஆட்சியில், தமிழ் மொழி ஆட்சிப் பீடத்திலிருந்து சிதைந்தது மறுக்கலாகாது. சரளமான நயம் அளாவிய தமிழை மீட்டெடுத்தவர் வள்ளலாரும் பாரதியாரும். வள்ளலாரின் ஆன்மிகத் தமிழால் ஈர்க்கப்பட்டார் பாரதியார். தேசிய சிந்தனை, நாட்டுப் பற்று, சுதந்திரப் போராட்டம், உலக நடப்புகள், சமுதாய நல் மதிப்பீடுகளை மக்களுக்கு தனது ஒப்பிலா தமிழ் நடை மூலம் உணர்த்தியவர் பாரதி.
பாரதியின் சாதனை சாதாரண மனிதர்கள் குறித்து சாதாரண மொழியில் பாடியதுதான். சாதாரணத்தின் அசாதாரணத்தை, எளிமையின் ஏற்றத்தை உணர்த்தியதுதான் பாரதியின் இலக்கியப் புரட்சி. அவர் பயன்படுத்தியது இலக்கியத்தின் சொற்களல்ல; இதயத்தின் சொற்கள்.
அவருடைய கவிதை வெறும் சொற்சிலம்பமல்ல, சத்தியத்தின் உணர்ச்சிக் கோவைஎன்ற பேராசிரியர் கா.செல்லப்பன் பதிவு சத்தியமானது.
பாரதியின் சொற்றாடல் அபரிமிதமானது; தேன் மதுர தமிழுக்கு மேலும் சுவை ஊட்டுவன. "நெஞ்சில் உறுதி வேண்டும், வாக்கினில் இனிமை வேண்டும், கனவு மெய்ப்பட வேண்டும், எங்கு நோக்கினும் வெற்றி, பாரத சமுதாயம் வாழ்கவே, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' - எளிமையான தமிழ் பசுமரத்து ஆணி போல் மனதில் பதிய வைக்கும் நடை பாரதிக்கே உரித்தானது.
அவரது கவிதைகள் எல்லாவற்றிலும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் வாழ்க்கையில் வெற்றி பெறத் துணிவோடு செயல்படுதல், விடா முயற்சி, கடமையாற்றுதல், சமூக நல்லிணக்கங்களைப் பேணுதல் போன்ற நம்பிக்கையூட்டும் பரந்த உலக நோக்கு, சமய சன்மார்க்க கருத்துகள் நிரம்பியிருக்கும். வயது சாதனைக்குத் தடையில்லை என்பதை அவரது ஞான வரிகள் தெளிவுபடுத்துகின்றன.
"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?'
பாரதி கடமை வீரர். "வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம், அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்' என்ற பாடலில் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்று உழைப்பை முன்வைக்கிறார்.
உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் சக்தி பாரதி. இந்தியா மட்டுமல்ல, அவரது பார்வை படாத இடமே இல்லை என்ற வகையில் ரஷிய புரட்சி, பிஜி தீவில் கரும்புக் காட்டில் பெண்களின் துயரம், உலகில் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் கவிதைகளாகவும் கட்டுரைகள் மூலமாகவும் பகிர்ந்து கொண்டார்.
பாரதி கவிதைகளில் வள்ளுவம் உள்ளது, கம்பர் இருக்கிறார், மதங்களைக் கடந்த ஆன்மிகம் உள்ளது; உலகத்தையெல்லாம் காட்டித் தருகிறது பாரதி புத்தகம். அதனால் "இஸ்லாமியருக்கு எப்படி திருக்குர்ஆனோ, கிறிஸ்தவர் களுக்கு எப்படி பைபிளோ, மார்க்சிஸ்டுகளுக்கு எப்படி தாஸ் காபிடலோ அதுபோல் தமிழர்களாகிய நம் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய புத்தகம் பாரதியாருடையது. நாம் எல்லோருமே பாரதியாரின் வாரிசுகள்' என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
பயம் எனும் பேய்தனை அடித்தோம்-பொய்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுலக அனைத்தையும் அமுதமென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்
என்று விலகாத வறுமையிலும்,
இல்லாமையிலும் வேத வாழ்க்கை வாழ்ந்த பாரதியைப்போல் நாமும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீஅரவிந்தர்.
1919-ஆம் ஆண்டு வறுமையை ஓரளவாவதுப் போக்க நிதியுதவிகேட்டு, எட்டயபுரம் மன்னருக்கு கடிதம் எழுத நெருங்கிய நண்பர்கள் தூண்டியபோது, முதலில் மறுத்த பாரதி முடிவில், வெறும் கடிதம் எதற்கு? கவிதையே எழுதுகிறேன் என்று சீட்டுக்கவி ஒன்று எழுதினார்.
வியப்புமிகும் புத்திசையில் வியத்தகும்
என் கவிதையினை,
வேந்தனே நின் நயப்படும் நின் சந்நிதியில்
நான் பாட
நீ கேட்டு நன்கு போற்றி ஜயப்பறைகள்
சாற்றுவித்து
சாலுவைகள் பொற்பைகள் ஜதிபல்லக்கு
வயப்பரிவாரங்கள்
முதற் பரிசளித்து பல்லூழி வாழ்க நீயே
கவிஞருக்கே உரித்தான கர்வத்துடன் சீட்டுக்கவியில் தான் சுமக்கும் தமிழை பகுமானப்படுத்த அளித்த கோரிக்கைஎட்டயபுரம் மன்னர் பார்வைக்குச் சென்றதா என்று தெரியவில்லை. ஆனால், கடிதம் அனுப்பிய இரண்டே ஆண்டுகளில் பாரதியார் உயிர் பிரிந்தது. ஜதிபல்லக்கில் வலம் வருவதுபோக வெறும் மூங்கில் கட்டிலில் கவிஞரது பூத ஊடல் விரல் விட்டு எண்ணக்கூடிய நண்பர்கள் புடை சூழ தகனம் செய்யப்பட்டது.
ஒவ்வொரு பாட்டிலும், பேச்சிலும், மூச்சிலும் தன் நாட்டுக்காகவும் மக்களுக்கும் மொழிக்கும் என்றே கோரிக்கை வைத்துப் போராடியவன் பாரதி. அவர் தனக்கின்றி தன் கவிதைகளுக்காக தமிழுக்காக வைத்த கோரிக்கை நிறைவேறவில்லை.
புவியனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்துத் தமிழ் மொழியை புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும் வசையென்னால் கழிந்ததன்றோ! என்று தன்னம்பிக்கையோடு சொன்ன அந்த மகத்தான கவிஞரின் வேண்டுகோள் நிறைவேறவில்லை என்ற வசை கழிய வானவில் பண்பாட்டு மையம் முயற்சியில் கடந்த 32 ஆண்டுகளாக பாரதி கடைசி காலத்தில் வாழ்ந்த திருவல்லிக்கேணியில் அவரது பிறந்த நாளன்று பாரதி உருவச் சிலையை ஜதிபல்லக்கில் சுமந்து விழா எடுக்கப்படுகிறது.
நிகழாண்டு மகாகவி பாரதியார் கனவு முழுமையாக மெய்ப்பட தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் டிசம்பர் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகல ஜதி
பல்லக்கு ஊர்வலத்தோடு பாரதி திருவிழா தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து மூவாயிரம் மக்கள் அமரக்கூடிய வசதிகளுடன் அமைக்கப்பட இருக்கும் எட்டயபுரம் அரண்மனை மைதானத்தில் மகாகவி பாரதியாரின் சிலை திறக்கப்பட உள்ளது. பாரதியார் கவின்மிகு கவிதைகள் மூலம் தமிழர் நெஞ்சில் நிறைந்திருப்பார், எண்ணங்கள் ஆயிரம் வளர்த்து தமிழர்களின் சிந்தனை ஜதிபல்லக்கில் பவனி வருவார்.
கட்டுரையாளர்:
முன்னாள் காவல் துறை தலைவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.