ஞாயிறு கொண்டாட்டம்

எல்லோரும் புத்தகம் எழுத வேண்டும்

அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன்.

சோம வள்ளியப்பன்

அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு பேசியபோது. 'எல்லோரும் எழுத வேண்டும்'' என்று வலியுறுத்திச் சொன்னேன். அன்றிரவே எனக்கு மருத்துவர் ஒருவரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. உங்கள் பேச்சைக் கேட்டதும் எனக்கும் ஊக்கம் கிடைத்தது. அவசியம் நானும்  புத்தகம் எழுதப் போகிறேன். மறுநாள், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மற்றொரு பெரும் ஆளுமையிடமிருந்து அலைபேசி அழைப்பு.

'ஆம். நீங்கள் சொல்வது உண்மைதான். நான் புத்தகம் எழுதியிருக்க வேண்டும். எழுதப் போகிறேன்.''

நான் ஆற்றிய அந்த சிறு உரையின் சாரம் இதுதான்:

'இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சேரும் முன்பே மகாத்மா காந்தி, லியோ டால்ஸ்டாய் எழுதிய 'பட்ங் ந்ண்ய்ஞ் ள்ர்ய் ர்ச் எர்க் ண்ள் ஜ்ண்ற்ட் ஹ்ர்ன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்திருக்கிறார்.  அது, அன்பு,  வன்முறை இல்லாமல் இருப்பது மற்றும் அநீதி இழைப்பவர்களை அவர்களை வெறுக்காமல் எதிர்ப்பது ஆகியவற்றைச் சொல்லும் நூல். அந்தச் சிந்தனையும் அணுகுமுறையும் மகாத்மாவைக் கவர்ந்திருக்கின்றன.

மகாத்மா காந்தியும் டால்ஸ்டாயை கடிதம் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார்.  இருவருக்குமிடையே  பல கருத்து பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்த காந்தியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம், அவருடைய அகிம்சை வழி ஒத்துழையாமைப் போராட்டம். 

காந்தி அவருடைய நம்பிக்கைகள், வழிமுறைகள் குறித்தெல்லாம் நிறைய எழுதியிருக்கிறார். அவற்றை எத்தனையோ நபர்கள் படித்தார்கள். அப்படிப் படித்தவர்களில் ஒருவர், அமெரிக்காவின் மார்டின் லூதர் கிங் ஜூனியர்.

அமெரிக்காவில் கருப்பர்களுக்கு சம உரிமை வழங்கப்படாமல் இருந்த நிலையில், கருப்பினத்தவர்களின் தலைவர் மார்டின் லூதர் கிங் ஜூனியர்,  அகிம்சை வழியில் போராடினார். அவரைப் பின்பற்றுபவர்களையும்  அப்படியே போராட வைத்தார். அவரைப் பின்பற்றியவர்கள் நடத்திய புகழ்பெற்ற மாண்டிகோமேரி,  பேருந்துப் பயண  பகிஷ்கரிப்புப்  போராட்டமெல்லாம் அப்படிப்பட்டதுதான்.  கருப்பின மக்களுக்கு சம உரிமை கிடைத்தது.

ஆக, இந்தியா விடுதலைக்கு மட்டுமல்ல; அமெரிக்க கருப்பின மக்களின் விடுதலைக்கும் ஒரு விதத்தில் புத்தகங்கள்தான் காரணம். எழுத்துக்கு அந்த வலிமை உண்டு. எழுத்துகள் மூலமாக செய்திகள், தகவல்கள் தவிர யோசனைகளும் உணர்வுகளும் கிடைக்கின்றன. பேச்சு கேட்பவரோடு போய்விடும். கேட்கும் நேரத்துக்குப் பிறகு  காதில் வாங்கிய அனைவருக்கும் அத்தனையும் நினைவிருக்காது. அதை ஒலிப்பதிவு அல்லது ஒளிப்பதிவு செய்தால்கூட அவை எத்தனை பேரைச் சென்றடையும்? வேண்டியபோது அவர்களால் எடுத்து, இயக்கிக் கேட்க முடியாது.

ஆனால், புத்தகங்கள் எழுதியவர்கள் காலத்துக்குப் பிறகும் நிற்கும். எத்தனை முறை வேண்டுமானாலும், எத்தனை பேர் வேண்டுமானாலும் ஒரே விதமாகத் தெரிந்து கொள்ளலாம்.  அதே அளவு அல்லது கூடுதல் உணர்வு கூடப் பெற முடியும். 

திருவள்ளுவர், கம்பர், வில்லியம் ஷேக்ஸ்பியர், லியோ டால்ஸ்டாய், லாவோ டிசு, ரவீந்திரநாத் தாகூர், சார்லஸ் டிக்கன்ஸ், பாரதியார், கண்ணதாசன், சாணக்கியர்  என்று இந்த உலகில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து மறைந்தவர்கள் விட்டுவிட்டுப் போயிருக்கிற படைப்புகள்தான் எவ்வளவு! அவையெல்லாம் எவ்வாறு நிலைத்திருக்கின்றன! அவர்கள் எழுதியவற்றை  எத்தனை தலைமுறைகளாக மக்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்! 

இந்தப் பெரிய படைப்பாளிகள் எழுதிய காலத்தில் அல்லது அவர்களுக்கு பிறகு அல்லது அவர்களுக்கு முன்பு கூட இன்னும் பலரும் இதே அளவு சிந்தித்து இருக்கலாம். அவர்களைக் காட்டிலும்கூட சிறப்பாகச்  சிந்தித்திருக்கலாம்.  ஆனால், அப்படி யாரும் சிந்தித்தார்களா அனுபவப்பட்டார்களா என்றெல்லாம் நமக்குத் தெரியாது.  அவர்கள் சிந்தனைகள் நம்மை வந்து அடையவில்லை.  காரணம்,  அவர்களெல்லாம் எதையும் எழுதி வைத்துவிட்டுப் போகவில்லை. அவர்களோடு மறைந்துவிட்டன. எழுதப்படுபவை மட்டுமே காலம் தாண்டியும் மற்றவர்களுக்குக் கிடைக்கின்றன.

கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும்  வேறு சில இடங்களிலும் செய்த அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கும் சில ஆயிரம் ஆண்டுகள் பழைமையான  பானை ஓடுகள், தங்க நகைகள், நெற் குதிர்கள்  போன்றவற்றை  வைத்து, தமிழர்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகுந்த நாகரிகத்தோடும் பண்பாடுடனும்  வாழ்ந்திருக்கிறார்கள் என்று பெருமைப்படுகிறோம்.

ஆனால்,  அவ்வாறு மக்கள் பயன்படுத்திய பொருள்களை வைத்து மட்டுமா? நாகரிகத்தையும் பண்பாட்டையும், குறிப்பாக அதற்குக் காரணமான மக்களுடைய சிந்தனையையும் அணுகுமுறைகளையும் புரிந்து கொள்ள, நிறுவ முடிகிறது? 

முக்கியமாக அவற்றோடு இணைந்து போகக்கூடிய சங்க இலக்கியங்கள், பல தொன்மையான தமிழ்ப் படைப்புகளும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவை நமது நம்பிக்கையையும் பெருமையையும் உறுதிப்படுத்துகின்றன. 

தமிழர்கள் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுகிறவர்கள்;  விருந்துக்குச் சென்ற இடத்தில் நஞ்சை கொடுத்தாலும் நாகரிகம் கருதி அதை உட்கொள்வார்கள்;  வண்டுகள்  கலவி  செய்வதை கூட தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைக்கக் கூடிய  மென்மையான மனம் கொண்டவர்கள்; எதிரிநாட்டினர் மீது போர் என்றாலும்கூட  போரில் புண்பட்டவர்கள், முதியோர், இளையோர் மீது படைக்கலன் செலுத்தக் கூடாது  என்று நினைப்பவர்கள் என்றெல்லாம் நமக்கு தெரிய வருவது எப்படி? 

'பகுத்துண்டு பல் உயிர் ஓம்பி வாழ்தல்'; 'பெயக் கண்டும் நஞ்சுண்ட அமைவது' போன்ற குறட் பாக்கள் மற்றும் 'மணி நா யாத்த மான் வினைதேரன்'  என்ற சங்க இலக்கிய பாடல்கள் மூலம்தானே! 

இப்படி ஒன்றா, இரண்டா?  எத்தனை ஆயிரம் பாடல்கள்!  எத்தனை ஆயிரம் குறட்பாக்கள்!   எல்லாம் தாங்கள் அனுபவித்ததை, சிந்தித்ததை, பார்த்ததை எழுதி வைக்க வேண்டும் என்று சிலர் முடிவு செய்ததால்,  முயற்சி எடுத்து எழுதி வைத்ததால்தானே! சமகாலத்தில் எளிதாகத் தெரியும், முக்கியமற்றதாகப் படும் நிகழ்வுகள்   கூட, பிற்காலத்தவருக்கு  முன்பு  நிகழ்ந்தவற்றை காட்டும் கால கண்ணாடியாக அமையும். 

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்றில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்று கூட இல்லை. 30, 50 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிவைக்கப்பட்டவை கூட தற்போது படிக்கிறபோது சமூக மாற்றங்களை உணர வைப்பவனவாக இருக்கிறது.

மறைந்த  எழுத்தாளர் கு.பா. ராஜகோபாலன் எழுதிய 'கனகாம்பரம்' என்ற கதையில்,  சில தசாபதங்களுக்கு முன் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதும், கந்தர்வன் எழுதிய 'துண்டு' என்ற கதையின் மூலம் எளியவர்களின் உழைப்பு எவ்வாறு சுரண்டப்பட்டது என்பதும் தெரிய வருகிறது.  இவையெல்லாம் படைப்புகளாக எழுதி வைக்கப்பட்டுவிட்ட காரணத்தினால் தெரிந்து கொண்டோம். நமக்குப் பின்வரும் தலைமுறையினரும் தெரிந்து கொள்வார்கள்.  மானுடம் எப்படி வேகமாக மாறி வருகிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள். 

கற்பது, சிந்திப்பது, எழுதி வைப்பது, எழுதி வைக்கப்பட்டிருப்பவற்றைப் படிப்பது

சிந்திப்பது  போன்றவையெல்லாம் ஆறறிவு மனிதர்களுக்கு மட்டுமே  சாத்தியம்.  ஆனால்,  அனைத்து மனிதர்களும்  செய்வதில்லை. நீங்கள் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். 

உலகின் பல்வேறு பகுதிகளில்  வாழ்பவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு துறைகளில் பணிபுரிகிறார்கள். விதவிதமான மனிதர்களைச் சந்திக்கிறார்கள். விரும்பியதைப் பெறுகிறார்கள் அல்லது அவற்றை எதிர்ப்பவர்களைச் சமாளிக்கிறார்கள்.  அப்படியாக விதவிதமான வாழ்க்கை அனுபவங்களைப் பெறுகிறார்கள். அந்த அனுபவங்கள், சிந்தனைகள் வீணாகலாமா? அவை குறித்து பதிவு செய்தால் மற்றவர்களுக்கு படிக்க கிடைக்கும்தானே!  மேலும் சிந்திக்கவும் செயல்படவும்  உதவியாக இருக்கும்தானே!

ஒருவருடைய சிந்தனைகளும் அனுபவங்களும் ஏன் காணாமல் போக வேண்டும்? பகிர்ந்து கொண்டால் என்ன? எத்தனையோ நபர்களுடைய   சிந்தனை, உழைப்பு ஆகியவற்றின் காரணமாகத்தான் நாம் இன்று  குறிப்பிட்ட வசதியோடும் பாதுகாப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எத்தனையோ  நபர்கள் எழுதியதைப் படித்திருக்கிறோம். சிந்தனைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

ஒருமுறை தாமஸ் ஆல்வா எடிசன், 'எனக்கு முன்னால்  சிந்தித்த எத்தனையோ  அறிவியலாளர்களின் தோளில் நின்றுகொண்டு தான் நான் என் வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன்'' என்று கூறினார்.

நாம் பெற்றவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டாமா?  பகிர்ந்துகொள்வது என்பது பொருள்களை மட்டுமா? சிந்தனையும்தானே. எனவே கேட்கிறேன், எழுதுங்கள். 

இந்த உலகம் நமக்கு எத்தனையோ வாய்ப்புகள் கொடுக்கிறது. பார்க்கிறோம், கேட்கிறோம், அனுபவப்படுகிறோம். அந்த அனுபவங்கள், சிந்தனைகள் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும். அவற்றை பதிவு செய்யாமல் இருப்பது சோம்பல் மட்டும் அல்ல. சமகாலத்தவர்க்கும் வருங்காலத் தலைமுறையினருக்கு செய்யும் துரோகம்.

'ரைட்டர்ஸ் ப்ளாக்' போன்ற மனத்தடைகளைத் தாண்டுங்கள். எழுதுங்கள். அது பலன் உள்ளதா, இல்லாததா,  சிறப்பானதா  இல்லையா என்பதையெல்லாம் காலம் முடிவு செய்யும். தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்க, எழுத்து பண்பட்டுவிடும்.

'எழுத்து தெய்வம். எழுதுகோலும் தெய்வம்' என்றார்  மகாகவி பாரதியார்.  சமுதாயத்துக்கு நல்லதை எழுதுங்கள்.  உங்கள் மனதுக்கு  சரியெனப்பட்டவற்றை  எழுதுங்கள். பொறுப்போடு எழுதுங்கள்.  தமிழில் எழுதுங்கள் சுத்தமான  தமிழில், பிறமொழி கலவாமல் எழுதுங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூருவில் வேகமாக வந்த கார் பேருந்து மீது மோதல்: இளைஞர்கள் 5 பேர் பலி

இரவு 9 வரை மழை..! இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா?

”நீதி கிடைத்த இடங்களில் நினைவுச்சின்னம்!” வாச்சாத்தி ஆவணப்படம் திரையிடல் நிகழ்வில் கமல்ஹாசன் பேச்சு!

உக்ரைனுக்கு விரைவில் நல்ல செய்தி! ஸெலென்ஸ்கி - அமெரிக்க அமைச்சர் சந்திப்பின் பின்னணி

அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார் விஜய்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT