கோப்புப் படம்  
நடுப்பக்கக் கட்டுரைகள்

சட்டங்கள், ஆட்சிகள் யாருக்காக?

தினமணி செய்திச் சேவை

பழ.கருப்பையா

இந்தியாவின் வளர்ச்சி வலுவாக இருக்கிறது; பணவீக்கம் கீழ்நிலையில்; ரூபாயின் மதிப்பு நிலையாய் இருக்கிறது என நம்முடைய நிதியமைச்சர் நிர்மலா கையை உயர்த்திப் பேசலாம்! நிர்மலா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; தமிழ், ஆங்கிலம், இந்தி மூன்றும் தெளிவாகவும் சரளமாகவும் பேசக் கூடிய முதல் பெண் நிதியமைச்சர். அதிகமான நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்த பெருமைக்குரியவரும்கூட...

தமிழர்களான நிர்மலா அம்மையாரும், செய்சங்கரும் வேறு மாநிலங்களிலிருந்துதான் வண்டி ஏறித் தில்லிக்கு செல்கிறார்கள்! நிர்மலா அம்மையாரின் காலத்தில் பொருளாதார வளர்ச்சி நிலை வரிசையில் உலக அளவில் பதினொன்றாவது இடத்திலிருந்த இந்தியா, பல நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது என்றால் அது வியத்தகு வளர்ச்சிதானே! அது இந்த ஆண்டு சப்பானைப் பின்னுக்கு உட்காரச் சொல்லி, நான்காம் இடத்திற்கு முந்திக் கொண்டிருக்கிறது!

தமிழ்நாடு சுழிநிலையிலிருந்து ஒன்பது விழுக்காட்டு வளர்ச்சியையும், தன் நான்கு ஆண்டு கால ஆட்சியிலேயே பெற்று விட்டது என்பதுபோல முதல்வர் இசுடாலின் பேசும்போது, உலக அரங்கில் இந்தியா நான்காவது இடத்திற்கு வந்தது தன்னால்தான் என்று நிர்மலா அம்மையார் பேசக் கூடாதா?

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில் விளையாட்டு விதிகள் மாறி விட்டன. ஒரு சாதாரணக் கடையில், சாதாரணத் தோசை தின்பதற்கு ஐந்து ரூபாயிலிருந்து எட்டு ரூபாய் வரை, அடித்தட்டு மனிதன் வரிக் கொடுக்கும் கொடுமை இன்றைக்கு இருக்கிறது!

நடிகர் விசய், அண்ணாமலைக்கெல்லாம் "ஒய்' பிரிவு பாதுகாப்பு; அஃதாவது ஏறத்தாழ இருபத்தெட்டுப் பேர் கொண்ட படையின் பாதுகாப்புத் தேவைப்படுவதால், நாம் ஒவ்வொரு தோசையோடும் ரூபாய் எட்டு வரை வரிக் கொடுக்க வேண்டியதிருக்கிறது!

காலையில் விழித்தவுடன் கடைசித்தரத் தேயிலைத் தூளில் போடப்படும் அரை கிளாசு டீக்கும் தேயிலை வழியாக வரி; அதன் பின்னால் ஒரு பீடியை எடுத்து வாயில் வைத்தால் அதற்கும் வரி; அதைப் பற்ற வைக்கத் தீக்குச்சியை உரசினால் அதற்கும் வரி!

நம்முடைய பொருளாதார வளர்ச்சி அதிரத்தக்கதாக இருப்பதற்குக் காரணம் நம் நாட்டில் உழைப்பதற்கான கைகளின் பெருக்கம்தான்! நம் காலத்தில் இருநூற்றி நாற்பது கோடிக் கைகள்! மண் மட்டுமே வெட்டுகின்ற கைகள் அல்ல அவை. தொழிற் படிப்புப் பெருகிய நிகழ்கால வளர்ச்சி என்பதால், செருமனி, அமெரிக்கா, சப்பான், தென் கொரியா நாட்டின் வகை வகையான பெருமுதலாளிகள் தமிழ்நாட்டுக்கும் பிற மாநிலங்களுக்கும் படை எடுக்கிறார்கள்!

தென் கொரியாவில் சாம்சங் நிறுவனம் ஒரு இலட்சத்து முப்பதினாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்துப் பெறுகின்ற வேலையைக் காஞ்சிபுரத்தில் வெறும் இருபத்தைந்தாயிரத்துக்குப் பெற முடிகிறது. கூடுதலாக ஐயாயிரம் கேட்டால், தமிழ்நாடு அரசு குண்டாந்தடியைச் சுழற்றிக் காட்டும்!

ஆண்டுக்கு ஐம்பதினாயிரம் கோடி வருவாய் ஈட்டுகின்ற இந்திய வணிகக் குழுமம் ஆனாலும் சரி, கொரியனின் நிறுவனமானாலும் சரி, உழைப்புச் சுரண்டல்தான் உபரி மதிப்பாகிறது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை விட்டுச் சொந்த நாடான அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து 'ஐ' போன் உற்பத்தியை அங்கே செய்ய வேண்டும் என்றும், அப்படிச் செய்யத் தவறினால் அந்தப் பொருளுக்கு இருபத்தைந்து விழுக்காடு கூடுதல் வரிப் போடப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டினார்! தேசபக்தி, கூடுதல் வரி, அபராதம் என எதற்கும் மசியவில்லை ஆப்பிள் நிறுவனம்!

"மேக் இன் இந்தியா' என்று மோடி சொன்னதை "மேக் இன் அமெரிக்கா' என்று டிரம்ப் சொல்கிறார்! நாட்டுப்பற்று என்பதெல்லாம் உலக முதலாளி வர்க்கத்திற்குக் கிடையாது! "யாதும் நாடே' என்னும் புறநானூற்றுக் கொள்கைதான் அதன் கொள்கை!

எந்த நாட்டில் மக்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்குப் போதுமான கூலியோடு நிறைவடைகிறார்களோ, அந்த நாடே உலகப் பெருமுதலாளிகளின் நாடு! தொழிலாளர்களைச் செக்கிழுக்கும் மாடுகளுக்கு நிகராக நடத்துவார்கள்! உயிர் வாழப் போதுமான சோறு! குறைந்த நேர ஓய்வு! அவ்வளவுதான்!

அடிமை முறை நியாயமா?' என்று பழைய மன்னர்களிடம் கேட்டால், "போர்க்களத்திலேயே அவர்களைக் கொல்லாமல் விட்டது தங்களின் கருணைச் செயல்' என்று அடிமை முறைக்கு நியாயம் சொல்வது போல, முதலாளி வர்க்கம் தொழிலாளிகளை புதிய காலத்தின் அடிமைகளாகவே பார்க்கிறது!

ஒரு தென்கொரிய செருப்பு நிறுவனம், தமிழ்நாட்டில் கடையை விரிப்பதற்குத் தொழிலாளர்கள் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கோரியது! அதன் வேண்டுகோளின்படி 'நெகிழ்வுப் போக்குடையதாக மாற்ற, வேலை நேரம் ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணி நேரமாக மாற்றப்படுகிறது என்று மசோதா தாக்கல் செய்ய, அது நிறைவேறிச் சட்டமாகவும் ஆகியது! ஒரு சலசலப்புக்குப் பிறகு அந்தச் சட்டம் நீக்கப்பட்டது என்பது வேறு!

தொழிற் புரட்சிக்குப் பிறகு பேரறிவாளன் மார்க்சின் சிந்தனைகளில் மகிழ்ந்த உலகம், எட்டு மணி நேர வேலைத் திட்டத்தை ஏற்றது. மே நாள் என அது போற்றப்பட்டது.

இன்று நம்முடைய இன்போசிசு முதலாளி பன்னிரண்டு மணி நேர வேலையைப் பரிந்துரைக்கிறார். சப்பான் அப்படித்தான் முன்னேறியது என்கிறார்! தொழிலாளர்கள் தேசபக்தியோடு பன்னிரண்டு மணி நேரம் உழைக்க வேண்டும் என்கிறார்!

இன்றைக்கும் இருபது விழுக்காட்டினர் இரவு உணவு இல்லாமல் வெறும் வயிற்றோடு உறங்கச் செல்கின்றனர். வீடின்றித் தார்ப்பாயை ஊன்றிய கம்புகளுக்கு மேலே போட்டு, இனப் பெருக்கத்திற்கு மட்டும் இந்த மூடல்; மற்றபடி மரத்தடியில் சமைத்துண்டு வாழும் மக்கள், துறைமுகத்தில் மட்டுமே காணப்படும் காட்சியா என்ன? உலகில் ஏழை நாடுகளை வரிசைப்படுத்துகிறார்கள்; அதில் நாம் நூற்றி முப்பத்தாறாவது இடத்தில் இருக்கிறோம்!

அப்படியானால் அந்த நான்காவது இடம் என்பது என்ன? இந்தக் கடைசி இடம் என்பது என்ன? பணக்கார இந்தியா உலகில் நான்காவது இடத்தில்; பஞ்சைகளின்இந்தியா நூற்றி முப்பத்தாறாவது இடத்தில்!

தமிழ்நாட்டில் ஒரு கோடிக் குடும்ப அட்டைகள்; இருபது கிலோ அரிசி இலவசம்; பஞ்ச காலத்தில் திறக்கப்படுகின்ற கஞ்சித் தொட்டிகளுக்கு மாறாக, எல்லாக் காலங்களிலும் நிரந்தரமான புழுத்த அரிசித் தொட்டிகள்!

அதாவது இங்கே நிரந்தரமாக வயிற்றுக்கும் வாய்க்குமாக வாழ்வது மூன்றில் ஒரு குடும்பம்! இலவசப் பயணம்; இலவச வேட்டி சேலை; இலவசக் கரும்பு, வெல்லத்தோடு பொங்கல் வைக்கப்பணம்; குடும்பத் தலைவிக்கு உப்புப் புளி வாங்க மாதம் ரூபாய் ஆயிரம்; இது சாதனையா? ஒன்பது விழுக்காட்டு வளர்ச்சி தமிழ்நாட்டில்; மார்தட்டுகிறார் முதல்வர்!

தமிழனின் தலை வருமானம் ஒரு நாளைக்கு மூன்றே மூன்று டாலர்! அதனால்தான் இவ்வளவு இலவசங்கள் தேவைப்படுகின்றன! நாம் வெளியே பார்க்கும் பளபளப்பு மேட்டுக்குடியின் பளபளப்பு! ஒரு வளமான நாட்டில் மூன்றில் ஒரு குடும்பம் புழுத்த இருபது கிலோ இலவச அரிசியைச் சார்ந்திருக்க மாட்டாது! இது ஒன்றுதானா இலவசம்? இன்னும் எத்தனையோ? ஒரு பெருங் கூட்டம் கலகக்காரர்களாக மாறி விடாமல் தடுப்பதே இலவசங்களின் அரும் பெரும் நோக்கம்!

மேட்டுக் குடியினர்க்கும், இயல்பான மக்களுக்கும் உள்ள இடைவெளி இந்தியாவில் மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போன்றது என்கிறார் தாமசு பிக்கெட்டி!

மேட்டுக் குடியினர்க்கு உடைமையான தாறுமாறான சொத்துகள், அவர்களின் உடைமை மீது வெறும் இரண்டு விழுக்காடு வரி விதித்தால் ஏழைகளின் உலர்ந்த உதட்டை இன்னும் கொஞ்சம் ஈரமாக்க முடியும் என்கிறார் பிக்கெட்டி!

ஐநூறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாள்வதாக நாம் நினைக்கிறோம். அவர்களை நாம்தானே தேர்ந்தெடுக்கிறோம் என்றும் நினைக்கிறோம்! நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் முகவர்களே! அண்மையில் சிங்கப்பூர் அதிபர் இந்தியப் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிப் பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்று வெளிப்படையாகச் சொன்னார்! நாம் சீறினோம்! சீறி ஆகப் போவதென்ன?

தூத்துக்குடியில் பதின்மூன்று அப்பாவி மக்களைச் சுட்ட பதினேழு போலீசார் யாருக்காகச் சுட்டார்கள்? டெர்லைட் என்னும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காகத்தானே!

அன்றைய அரசு உத்தரவிடாத நிலையிலும், போலீசார் சுட வேண்டிய கட்டாயம் என்ன? மக்களின் கிளர்ச்சி கார்ப்பரேட் நிறுவனத்தை முடக்கி விடும் என்னும் காதலால் சுட்டார்கள்!

அந்த போலீசார் செய்தது கொலைக் குற்றம் என்று விசாரணை நீதிபதி சொன்ன பிறகும், இசுடாலின் அரசு கொலைக்கான பிரிவுகளில் எந்த போலீசின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை! வெறும் இடமாற்றமே செய்தார்கள்!

நம்முடைய உயர்நீதிமன்றமும் சுய அடிப்படையில் அந்த போலீசாரைச் சட்டத்தின் ஆட்சிக்கு உட்படுத்தவில்லை! பதின்மூன்று இன்பத் தமிழர்களின் உயிர்கள், டெர்லைட் நிறுவனத்தை நிறுத்துவதற்குச் செலுத்தப்பட்ட நேர்த்திக்கடன்!

போபாலில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனம் கக்கிய நச்சுவாயுவால் ஒரிருவர் இல்லை! ஊரே சுடுகாடாகிப் பல நாட்களுக்கு எரிந்தது.

அந்த அமெரிக்க கார்ப்பரேட் பெருமுதலாளி ஒரு தனி விமானத்தில் ஏறிப் பாதுகாப்பாக வெளியேறும் வரை இந்திய அரசு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது!

யாருக்காகச் சட்டங்கள்? ஆட்சி எல்லாம்!

கட்டுரையாளர்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை

தூய்மைப் பணியாளா் கொலை: மனைவி, கள்ளக் காதலன் கைது

திருமண நிதியுதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு

காா்த்திகேயபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

இந்தியா, சீனா மீது 100% வரி: ஐரோப்பிய யூனியனுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT