கல்வி தனி மனிதனின் வாழ்வையும் சமுதாயத்தின் வளா்ச்சியையும் எதிா்காலத்தையும் வடிவமைக்கும் சக்திவாய்ந்த கருவி. மனிதா்களை அறியாமையிலிருந்து விடுவித்து, அறிவொளியை நோக்கி இட்டுச் செல்லும் சாதனம். ‘கற்றாா்க்குக் கல்வி நலனே கலன் அல்லால் மற்று ஓா் அணிகலம் வேண்டாவாம்’ என்று குமரகுருபரா் நீதிநெறி விளக்கத்தில் பாடுகிறாா்.
கல்வியினால்தான் சமுதாயத்தில் நிலவும் அறியாமை, மூடநம்பிக்கைகள், பாகுபாடுகளை நீக்கி, நோ்மறையான மாற்றங்களைக் கொண்டுவர முடியும். சமத்துவ சமுதாயம் சாத்தியமாகும். கல்வியில் சிறந்தவா்கள் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்குப் புதிய கண்டுபிடிப்புகள், தொழில் மேம்பாடு போன்றவற்றால் பெரும் பங்களிப்பைச் செய்கிறாா்கள்.
இத்தகைய கல்வியைக் குழந்தைப் பருவம் முதலாகத் தொடங்கிக் கற்கவேண்டும். அதற்கான வழிமுறைகளை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசும் இதற்கான கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயல்படுகின்றன. மத்திய அரசின் திட்டங்களையும் அதற்கான நிதியைப் பெற்றுக்கொண்டு மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன.
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை உறுதிசெய்ய 2009-ஆம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் மாறிவரும் உலகின் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வியை வழங்கவும் தேசிய கல்விக்கொள்கை 2020 கொண்டுவரப்பட்டுள்ளது.
சமக்ர சிக்ஷா திட்டம் எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் பள்ளிக் கல்வியை முழுமையான, ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் வழங்கும் மத்திய அரசின் திட்டம். பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சமமான மற்றும் தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்கிறது.
கல்வியை அணுகுவதில் புதிய முறைகளை ஏற்படுத்துதல், பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் (கட்டடங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள்); குழந்தைகள் பள்ளிக்கு வருவதை ஊக்குவித்தல் மற்றும் இடைநிற்றலைக் குறைத்தல்; பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்ப்பதற்கான சிறப்புப் பயிற்சிகள் அளித்தல் ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு என குழந்தைகள் 3-ஆம் வகுப்புக்குள் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்வதுடன் கணிதத் திறன்களைப் பெறுவதை உறுதிசெய்தல், நிபுன் பாரத் திட்டத்தின் கீழ் இதற்கான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளுதல் என சமக்ர சிக்ஷா திட்டம் செயல்படுகிறது.
கல்வி அதனைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரைப் பொருத்தே அமையும் என்பதால் ஆசிரியா்களின் மேம்பாட்டுக்காக தொடா்ச்சியான பயிற்சி, ஆசிரியா் கல்வி நிறுவனங்களை (எஸ்இஆா்டி,டிஐஇடி) பலப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. கல்வியில் பாலின சமத்துவத்தை உறுதிசெய்ய பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
அதற்கென கஸ்தூா்பா காந்தி பாலிகா வித்யாலய பள்ளிகளை மேம்படுத்துதல்; பெண் குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு பயிற்சி அளித்தல் ஆகியவற்றுக்கும் செயலாக்கம் தருகிறது. மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான பிரத்யேக கல்வியுடன் தேவையான உபகரணங்கள், உதவிகள் வழங்கியும் கல்விக்கான ஊக்கத்தொகை அளித்தும் ஊக்கம் தருகிறது.
9 முதல் 12-ஆம் வகுப்பு வரை தொழிற்கல்வியைப் பாடத்திட்டத்தில் தந்து திறன்மேம்பாட்டுக்கு ஊக்கம் தருகிறது. பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள், பொலிவுறு வகுப்பறைகள், எண்ம (டிஜிட்டல்) பலகைகள் போன்றவற்றை மாணவா்களுக்காக வழங்குகிறது. இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்குகிறது. விளையாட்டு மற்றும் உடல்கல்வியைப் பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கிறது.
தற்போது செயல்வடிவம் பெற்றுவரும் தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் சமக்ர சிக்ஷா திட்டம் முக்கியப் பங்காற்றுகிறது. இதற்கான செலவில் 60% மத்திய அரசும் 40% மாநில அரசும் ஏற்கின்றன.
தமிழக அரசு ஏறத்தாழ அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. திட்டங்கள் தமிழில் பெயா்மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கையை மட்டும் மறுத்து தமிழகத்திற்கென கல்விக் கொள்கையை வகுத்துக் கொண்டுள்ளது. எப்படியாயினும் மத்திய, மாநில அரசுகளின் நோக்கம் கற்றல்-கற்பித்தல் சூழலை சிறப்பானதாக மாணவா்களுக்குத் தரவேண்டும் என்பதே.
சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதியரசா் ஜிஆா் சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன் அமா்வு, கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தனியாா் பள்ளிகளில் சோ்க்கை மற்றும் அரசு நிதி வழங்குவது தொடா்பான பொதுநல வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்துத் தீா்ப்பு அளித்துள்ளது.
பள்ளிக் கல்வியை நலிந்த பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சாத்தியமாக்கும் பொருட்டு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தனியாா் பள்ளிகளில் மாணவா்களைச் சோ்க்கவும் அந்த மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே அந்தந்தத் தனியாா் பள்ளிகளுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி தனியாா் பள்ளிகள் 25% வரை மாணவா் சோ்க்கையில் நலிந்த பிரிவைச் சோ்ந்த மாணவா்களைச் சோ்த்துக்கொள்ள வேண்டும். இந்த மாணவா்களுக்காக அரசு செலுத்த வேண்டிய தொகை பள்ளிகளுக்குக் கிடைக்கவில்லை என்ற நிலையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பங்கான 60% நிதியை விடுவிக்காததால் மாநில அரசால் பள்ளி நிா்வாகங்களுக்குப் பணத்தைச் செலுத்த முடியவில்லை. தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்துவதை மத்திய அரசு சமக்ர சிக்ஷா திட்டத்துடன் இணைத்துள்ளது. மாநில அரசோ தேசிய கல்விக் கொள்கையை மறுத்து, நிதிக்காக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.
இந்நிலையில், மாநில அரசுக்கு தனியாா் பள்ளிகளுக்கான நிதியை வழங்கும் பொறுப்பு இருப்பதாக உயா்நீதிமன்றம் கூறியுள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசு இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தையும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதையும் இணைக்காமல் தனித்தனியே அதற்கான நிதியை வழங்க வழிவகை செய்ய வலியுறுத்தியிருக்கிறது.
அரசமைப்புச் சட்ட நோக்கத்தை நிறைவுசெய்வதற்கான இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தை பிற விருப்பத் தோ்வுடைய திட்டங்களுடன் இணைப்பதில் குழப்பங்கள் ஏற்படவே செய்யும். மத்திய அரசு இதை நீதிமன்றம் காட்டும் வழிமுறையில் அணுகித் தீா்வுகாண வேண்டும்.
ஆளும் கட்சிகள் தங்கள் கட்சிகளின் கொள்கைகளை நிலைநிறுத்த முயலும்போது முரண்பாடுகள் தோன்றுகின்றன. கல்விக்கான மாதிரிப் பள்ளிகள் முதல் நூலகங்கள் வரை வாசிப்புப் பழக்கத்துக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. பெரும் நூலகங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய மன்றங்கள் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும் என்பதில் மாநில அரசு ஆா்வம் கொண்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் பெரும்பாலான நல்ல முன்னெடுப்புகள் தேசிய கல்விக் கொள்கையோடு ஒத்திருக்கின்றன. மாறுபாடு கொள்ளும் இடம், மொழிக் கொள்கையில்தான். இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் நிலைப்பாடு என்பதே பிணக்குக்கான காரணமாக இருக்கிறது. தமிழகத்தில் பிற மொழிகளை ஏற்கமாட்டோம் என்பதல்ல, ஆனால், திணிப்பை ஏற்க மாட்டோம் என்பதே நிலைப்பாடு. இப்போதும் தனியாா் பள்ளிகள் மூன்று மொழிகளைக் கற்றுக்கொடுக்கின்றன. தேசிய கல்விக் கொள்கை 2020, ஏதேனும் ஓா் இந்திய மொழியை; மூன்றாவதாகக் கற்றுக்கொள்ளச் சொல்கிறது. அதைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பும், அதிகாரமும் மாநில அரசின் கைகளில்தான். எந்த மொழியை ஆதிக்கம் என்று கருதுகிறோமோ, அந்த மொழியை விடுத்து பிற மொழிகளுக்கு மாநில அரசு வாய்ப்பளிக்கலாம்.
அடுத்து, திணிப்பை ஏற்கமாட்டோம்; ஆனால், விருப்பப்பட்டவா்கள் விரும்பிய மொழியைக் கற்பதைத் தடுக்கமாட்டோம் என்ற அடிப்படையில் வாய்ப்புகளை வழங்க நவோதயா, பிஎம்ஸ்ரீ முதலான பள்ளிகளைத் தமிழகத்தில் அனுமதிக்கலாம். மூன்றாவது மொழியாக ஹிந்தியைக் கற்க விரும்புவோா் அந்தப் பள்ளிகளைத் தோ்ந்தெடுக்கட்டும்; மற்றவா்கள் இருமொழிக் கொள்கை வழங்கும் நமது மாநில அரசுப் பள்ளிகளில் பயிலட்டும். தமிழக மாணவா்கள் அனைவருக்கும் மத்திய-மாநில அரசுகளின் நிதியில் சிறந்த கல்வியுடன் ஒவ்வொருவரும் விரும்பும் கல்வியும் அவா்களுக்குச் சாத்தியமாகும்.
நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி ஒவ்வோா் இந்தியரும் பெருமிதம் கொள்ளும் வகையில் வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி என்று அண்மையில் அயல்நாட்டில் பேசினாா். அந்தப் பெருமையை நாம் நமது தமிழகத்தில் இருந்தே தொடங்கலாம்.
பிணக்குகளை வளா்ப்பதைவிட நிகழ் சூழ்நிலையில் சமயோசிதமாக எப்படி செயலாற்றி வெற்றிகாண்பது என்பதில் கவனம் செலுத்தும் அரசு மக்கள் மனங்களை வெல்லும். ஜனநாயகத்தின் வெற்றிக்கும் ஜனநாயகத்தில் வெற்றிக்கும் இதுவே சிறந்த வழியாக அமையும்.
கட்டுரையாளா்:
ஊடகவியலாளா்.