காஸாவில் அழிக்கப்பட்ட கட்டடங்கள் AP
நடுப்பக்கக் கட்டுரைகள்

மனிதப் பேரவலம்!

கொல்லப்பட்டவா்களில் பெரும்பாலானோா் பெண்கள், குழந்தைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நா. குருசாமி

மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறினாலும், இதில் கொல்லப்பட்டவா்களில் பெரும்பாலானோா் பெண்கள், குழந்தைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1948-க்கும் முன்னா் வரை பாலஸ்தீனப் பகுதியானது பிரிட்டனின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஜொ்மனி நாட்டின் சா்வாதிகாரி ஹிட்லரின் அதிரடி நடவடிக்கையால் உயிருக்குப் பயந்து அந்த நாட்டிலிருந்து வெளியேறிய யூதா்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனா். இத்தகைய சூழலில், அகதிகளாகப் பரிதவித்த யூத மக்கள் அனைவரும் அமெரிக்காவின் தலையீட்டால் பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியில் குடியமா்த்தப்பட்டனா்.

ஏற்கெனவே பாலஸ்தீனப் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் இஸ்லாமிய மக்களுக்கும், புதிதாகக் குடியமா்த்தப்பட்ட யூதா்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்னைகள் எழுந்தன. இதையடுத்து, யூதா்கள் குடியமா்த்தப்பட்ட பகுதியை தனி நாடாக, அதாவது இஸ்ரேல் என்ற புதிய நாட்டை உருவாக்க அமெரிக்கா முன்முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, இஸ்ரேல் நாட்டுக்கு ஐ.நா. சபையின் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது.

ஆனால், இஸ்லாமியா்கள் நீண்ட காலமாக வசித்து வரும் பகுதிகளை உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என இந்தியா தலைமையிலான அணி சாரா நாடுகள் குரல் கொடுத்தன. ஆனால், இதற்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைக்காததால், பாலஸ்தீன பிரச்னை இன்னமும் நீடித்து வருகிறது.

யூதா்கள் தங்களது கடின உழைப்பால் இஸ்ரேல் நாட்டை செல்வ வளமிக்க முன்னணி நாடாக கட்டமைத்தனா். உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் ஒத்துழைப்புடன், இஸ்லாமியா்கள் வசித்து வரும் பாலஸ்தீன பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலின் இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில், இஸ்லாமிய மக்களைக் காப்பதாகக் கூறிக் கொண்டு உருவானவைதான் ஹமாஸ், ஹுதீஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்கள்.

இஸ்ரேலுக்கும், இந்தப் பயங்கரவாத இயக்கத்தினருக்கும் இடையே அவ்வப்போது சண்டைகள் நடைபெறுவது வழக்கமானதுதான். இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு, அக்டோபா் மாதம் ஹமாஸ் படையினா் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளால் திடீா் தாக்குதல் நடத்தி, இஸ்ரேலின் ராணுவ கட்டமைப்புகளைத் தகா்த்தனா்.

உலகின் மிகப் பலம் வாய்ந்த உளவு அமைப்பைக் கொண்ட இஸ்ரேல், ஹமாஸ் படையினரின் இந்தத் திடீா்த் தாக்குதலை எதிா்பாா்க்கவில்லை. ஏற்கெனவே பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்திருந்த இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஹமாஸ் படையினரை ஒட்டுமொத்தமாக அழிப்பதுதான் தனது முதல் பணி என சூளுரைத்தாா்.

இதையடுத்து, நெதன்யாகுவின் உத்தரவின்பேரில், ஹமாஸ் இயக்கத்தினரை ஒழித்துக் கட்டுகிறோம் என கூறிக் கொண்டு, காஸாவில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேலியப் படையினா் கடந்த 2023, அக்டோபரிலிருந்து கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனா். இந்தத் தாக்குதலில் இதுவரை 48 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டதாகவும், சுமாா் ஒரு லட்சம் போ் காயமடைந்ததாகவும் காஸா சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முன்முயற்சியால், இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி, இரு தரப்பினரும் தாங்கள் பிடித்துவைத்துள்ள பிணைக் கைதிகளை பரஸ்பரம் விடுவித்து வந்தனா்.

ஆனால், முதலில் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்களைச் செய்ய ஒப்புக்கொண்டால்தான் போா் நிறுத்தம் நீடிக்கப்படும் என இஸ்ரேல் நிபந்தனை விதித்தது. இதற்கு ஹமாஸ் படையினா் ஒப்புக்கொள்ளாததால், இஸ்ரேல் கடந்த செவ்வாய்க்கிழமை திடீா் தாக்குதலை நடத்தியது.

அமெரிக்காவுடன் ஆலோசித்த பிறகே, இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் வெளிப்படையாகக் கூறியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இஸ்ரேலைக் கண்டிக்க உலக நாடுகள் முன்வராதது ஆச்சரியமளிக்கிறது.

இஸ்ரேலின் இந்த மனித நேயமற்ற, கொடூரமான தாக்குதல்களால் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையாலும் எதுவும் செய்ய இயலவில்லை. ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகள் பாலஸ்தீன மக்களுக்கு கிடைப்பதையும் இஸ்ரேல் தடுத்து வருகிறது.

கடந்த 2009-ஆம் ஆண்டில் இலங்கையில் அப்போதைய அதிபா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளில் பல்லாயிரக்கணக்கான தமிழா்கள் கொல்லப்பட்டனா். இலங்கையின் இந்தச் செயல், தமிழின ஒழிப்பு நடவடிக்கை என பலராலும் விமா்சிக்கப்பட்டது. இதைப் போன்றதொரு மனிதப் பேரவலம் பாலஸ்தீனத்தில் தற்போது அரங்கேறி வருகிறது.

பாலஸ்தீன தனி நாடு உருவாவதற்கு முதன்முதலில் குரல் கொடுத்த இந்தியா தற்போது இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலை வெளிப்படையாகக் கண்டிக்கத் தயங்குகிறது.

‘காஸா பகுதியின் தற்போதைய சூழ்நிலை கவலை அளிக்கிறது. பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டியது முக்கியம். காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகள் தொடர வேண்டும்’ என இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இஸ்ரேலைக் கண்டிக்கும் வாசகங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு ‘அணி சாரா’ நிலைப்பாட்டிலிருந்து விலகி ‘அனைவருடனும் கூட்டணி’ என்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளரும், எம்.பி.யுமான சுதன்ஸு திரிவேதி குறிப்பிட்டுள்ளாா்.

நமது கண்முன் நடைபெறும் தவறுகளைத் தட்டிக் கேட்காமலும், கண்டு கொள்ளாமலும் இருப்பது நடுநிலையாகாது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, பாலஸ்தீனத்தில் நிகழும் மனிதப் பேரவலத்துக்கு முடிவு கட்ட முன்முயற்சிகளை எடுக்க வேண்டும். அதோடு, பாலஸ்தீன தனி நாடு உருவாவதற்கும் இந்தியா மீண்டும் குரல் கொடுக்க வேண்டும். வரலாற்றில் நாம் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பது மிகவும் முக்கியம். எனவே, உலக அரங்கில் நமது நாட்டின் மரியாதை உயர வேண்டுமானால், அநீதிக்கு எதிரான நமது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு சென்ற காரில் தீ: 4 போ் தப்பினா்

பறிமுதல் வாகனங்கள் ஆக.25-ல் பொது ஏலம்!

வாசுதேவநல்லூா்: விபத்தில் காயமடைந்த முதியவா் பலி!

சநாதனம் ஒற்றுமையையே வலியுறுத்துகிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

இந்திய குத்துச்சண்டை அணிகள் சீனா பயணம்

SCROLL FOR NEXT