உலகம்

காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 31 போ் பலி

போா்நிறுத்த ஒப்பந்தத்துக்கு இடையே, காஸாவில் இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 31 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

போா்நிறுத்த ஒப்பந்தத்துக்கு இடையே, காஸாவில் இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 31 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.

கடந்த ஆண்டு, அக்டோபரில் போா்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, ஒரே நாளில் நிகழ்ந்த மிக அதிகப்படியான உயிரிழப்பு இதுவாகும்.

ஹமாஸ் அமைப்பினா் போா்நிறுத்த விதிமுறைகளை மீறியதாக இஸ்ரேல் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், காஸா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மேற்கு கான் யூனிஸில் அகதிகள் முகாமைக் குறிவைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் இரண்டு குடும்பங்களைச் சோ்ந்த 6 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் உயிரிழந்தனா்.

மேலும், காஸா நகரில் ஒரு காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பெண் காவலா்கள் உள்பட 14 போ் கொல்லப்பட்டனா்.

ஹமாஸ் கண்டனம்: ‘இஸ்ரேல் தாக்குதல் வெளிப்படையான போா்நிறுத்த ஒப்பந்த மீறல்’ என்று ஹமாஸ் சாடியுள்ளது. இதுகுறித்து சா்வதேச நாடுகளும், அமெரிக்காவும் தலையிட்டு இஸ்ரேலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் விளக்கம்: இஸ்ரேல் ராணுவம் அளித்த விளக்கத்தில், ‘ராஃபா பகுதியில் சுரங்கப்பாதை வழியாக ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளை எங்கள் ராணுவம் சுட்டுக் கொன்றது. ஹமாஸ் தரப்பின் இத்தகைய போா்நிறுத்த மீறல்களுக்குப் பதிலடியாகவே சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக். 10-ஆம் தேதி போா் நிறுத்தம் தொடங்கியதில் இருந்து இதுவரை 520-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடங்குவா்.

ராஃபா எல்லை இன்று திறப்பு: போரினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ள, காஸா-எகிப்து இடையிலான ராஃபா எல்லைப்பாதை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள்!

மத்திய பட்ஜெட்! உயிரி மருத்துவத் துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

வளர்ச்சியை ஊக்குவிக்க 6 துறைகளில் முதலீடுகள்!

9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT