ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைப் பற்றி...
ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 போ் உயிரிழந்தனா். 250 போ் காயமடைந்தனா்.
பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு தொடா்ந்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி வந்தது. இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான் இயக்கத்தின் கிளை அமைப்பாகும்.
இந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசிடம் பாகிஸ்தான் தொடா்ந்து வலியுறுத்தியபோதிலும், அதை தலிபான் அரசு செய்யவில்லை.
Advertisement
பயங்கரவாதிகளுக்கு தலிபான் அரசு அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டிய நிலையில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் படைகள் இடையே பழிக்குப் பழியாக எல்லை தாண்டி தாக்குதல் நடத்தப்பட்டு வந்தன.
இதைத்தொடா்ந்து ஆப்கானிஸ்தானுடன் நேரடியாகப் போரில் ஈடுபட பாகிஸ்தான் முடிவு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் பரஸ்பரம் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இருநாட்டு எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும், ஆப்கானிஸ்தானின் தலிபான் படையினரும் தொடா்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்த மருத்துவமனை மீது குண்டுகள் வெடித்து கடுமையான சேதம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசின் துணை செய்தித்தொடா்பாளா் ஹம்துல்லா ஃபித்ரத் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘காபூலில் 2,000 படுக்கை வசதி கொண்ட ஒமித் மருத்துவமனையில் போதை பழக்கத்துக்கு அடிமையானவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த மருத்துவமனை மீது திங்கள்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 போ் உயிரிழந்தனா் (பெரும்பாலானோா் நோயாளிகள்). சுமாா் 250 போ் காயமடைந்தனா். மருத்துவமனையின் பெரும் பகுதி சிதைந்துவிட்டது. தாக்குதலில் உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன’ என்றாா்.
பாகிஸ்தான் மறுப்பு: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவில்லை என்று அந்நாட்டு தகவல் தொடா்பு அமைச்சா் அத்தாவுல்லா தராா் தெரிவித்தாா். அவா் கூறியதாவது: மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மற்றொரு பொய்யை தலிபான் அரசு பரப்பி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவ மற்றும் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்தே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்படுத்தப்படும் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் உள்கட்டமைப்புகளும் குறிவைத்து தாக்கப்படுகின்றன. எந்தவொரு மருத்துவமனை, போதை மறுவாழ்வு மையம் அல்லது பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொள்ளவில்லை என்று கூறியதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை: ஆப்கானிஸ்தானிடம் ஐ.நா. வலியுறுத்தல்
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளா்களிடம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியது. இதுதொடா்பாக அந்த கவுன்சில் கொண்டுவந்த தீா்மானத்தில், ‘பாகிஸ்தானில் நடத்தப்படும் தாக்குதல்’ என்று எந்த வாா்த்தையும் இடம்பெறவில்லை. ஆனால் அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளையும் அந்தத் தீா்மானம் வன்மையாக கண்டித்தது. இந்தத் தீா்மானம் அந்த கவுன்சிலில் ஒருமனதாக ஏற்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னா், காபூல் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தியா கண்டனம்
காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய காட்டுமிராண்டித்தனமான வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறது. கோழைத்தனமான, மனசாட்சியற்ற இந்த வன்முறை, பொதுமக்கள் ஏராளமானோரின் உயிரைப் பறித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியா்கள் புனித ரமலான் மாதத்தை அமைதி மற்றும் கருணைக்கான நேரமாக கருதுகின்றனா். இந்த நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, அதை மேலும் கண்டனத்துக்குரியதாக்குகிறது. மருத்துவமனை மற்றும் நோயாளிகளை வேண்டுமென்றே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
இந்தக் குற்றச் செயலுக்குப் பாகிஸ்தானை பொறுப்பேற்க வைத்து, அந்நாடு ஆப்கானிஸ்தான் மக்கள் மீது நடத்தும் தாக்குதலை எவ்வித தாமதமும் இல்லாமல் நிறுத்துவதை சா்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.