கோப்புப் படம்  
நடுப்பக்கக் கட்டுரைகள்

தூய்மை...வாழ்க்கை...துயரம்!

ஓரிரு நாள்கள் தூய்மைத் தொழிலாளர்களின் செயல்பாடுகள் நின்றுவிட்டால் போதும், நகரங்களும் கிராமங்களும் குப்பைகளில் மூழ்கிவிடும்

சி. மகேந்திரன்

ஊர்தோறும் மலைமலையாக கழிவுகளைக் குவித்து வைத்திருப்பதுதான் உலகமயத்தின் மாபெரும் சாதனையாகும். தங்கள் கொள்ளை லாபத்துக்காக மக்களுக்கு ஆசையைக் காட்டி பொருளை வாங்க வைத்து, மிக விரைவில் அதை குப்பைக்கு கொண்டு செல்ல வைத்து விடுகிறது உலகமயத்தின் நுகர்வுக் கலாசாரம். ஓரிரு நாள்கள் தூய்மைத் தொழிலாளர்களின் செயல்பாடுகள் நின்றுவிட்டால் போதும், நகரங்களும் கிராமங்களும் குப்பைகளில் மூழ்கிவிடும்!

குப்பைகளை அகற்றி அனைவருக்கும் தூய்மையைத் தருவது யார்?, அபாயம் நிறைந்த கழிவுத் தொட்டிகளில் முதலில் கையை விட்டும் பின் காலை வைத்து ஆழம் பார்த்தும், கடைசியில் தலையை மூழ்க வைத்தும் அடைப்புகளை அகற்றுவது யார்?, இதில் உயிர் இழந்தவர்களை எத்தனை காலத்துக்கு நினைவில் வைத்துக்கொள்ளப் போகிறது நன்றி மறந்த இந்த உலகம்?

ஒன்றுமட்டும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை; குப்பை மேடுகளுக்குள்ளிருந்து, கைகளை உயர்த்திக் காட்டி இன்னமும் நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று அந்த மனிதர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பார்த்து யார்தான் கவலை கொள்ளப் போகிறார்கள்? இந்த மனிதக் கூட்டத்தின் நீதி, மனிதர்கள் வகுத்து வைத்திருக்கிற சமூகநீதிகளிலேயே முதன்மையானது என்பதை எப்போதுதான் நாம் உணரப் போகிறோம்?

சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திலேயே இவர்களுக்கான பணியை கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொடங்கி விட்டார்கள்; இந்தியா முழுவதும் இருந்து வெளிப்பட்ட அர்ப்பணிப்புப் பணி அது. தலைமறைவுக் காலங்களில் கம்யூனிஸ்டுகளுக்குப் பாதுகாப்பைத் தந்தவை, அன்றைய ஊரின் ஒதுக்குப் புறத்திலிருந்த தூய்மைத் தொழிலாளர்களின் எளிய குடியிருப்புகள்தான்.

கலைஞன் பதிப்பகத்தின் நிறுவனர் மாசிலாமணி 30 ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய தகவல் ஒன்று நினைவுக்கு வருகிறது: அது 1960}ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்ச்சி. சுற்றிலும் ஒரே கூட்டம்...அனைவருமே தூய்மைத் தொழிலாளர்கள்; அவர்களிடம் இருந்து தள்ளி ஒரு கூட்டம் இருக்கிறது } ஜீவா அவர்களைப் பார்த்து கேட்கிறார்: "உங்களைப் பெற்ற தாய், உங்களுடைய மலத்தை கையில் தொடுவதற்கு தயங்குகிறார்; இவர்கள் அந்த மலத்தை தலையில் சுமந்து செல்கிறவர்கள்; இவர்கள் உங்கள் தாயைவிட மேலானவர்கள் இல்லையா? ஏன் அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கிவைத்து, நீங்கள் மட்டும் தனியாக ஒதுங்கி நிற்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கே. டி.கே.தங்கமணி லண்டன் சென்று "பார் அட் லா' பட்டம் பெற்றவர்; மிக வசதி பொருந்திய குடும்பத்தில் பிறந்தவர். அவர் தன் வாழ்நாள் முழுவதும் தூய்மைத் தொழிலாளர் சங்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்; சட்டப்பேரவையில் தொடர்ந்து அவர் பேசி வருவதைக் கவனித்த அன்றைய முதல்வர் கருணாநிதி, "தூய்மைத் தொழிலாளர்கள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறீர்கள்; நான் என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டார். அதற்கு கே. டி.கே.தங்கமணி, "அவர்களுக்கு கடைநிலை ஊழியர் என்ற தகுதியையாவது தமிழக அரசு கொடுத்து நிரந்தரப் பணியாளராக்க வேண்டும்' என்றார். அதை அன்றைய முதல்வர் கருணாநிதியும் நிறைவேற்றித் தந்தார். ஆனால், இன்று ஒப்பந்தக் கூலிமுறை காரணமாக, அன்றைய முதல்வர் கருணாநிதியின் உத்தரவு தன் வீரியத்தை இழந்து விட்டது.

இன்றைய உலகமயப் பின்னணியில், தூய்மைத் தொழிலாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உரிமைகளை இழந்து வருகிறார்கள். தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட மகத்தான தலைவர்களின் வழிகாட்டுதலுடன் தாங்கள் போராடிப் பெற்ற உரிமைகளைதூய்மைத் தொழிலாளர்கள் முற்றிலுமாக இழந்து வருகிறார்கள்.

இன்றைய உலகமயத்தில் உலகின் பல நாடுகள் தூய்மைத் தொழிலாளர்களுக்கான ஊதியப் பாதுகாப்பில் பெரும் மாற்றத்தைச் செய்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் மருத்துவர்களுக்கு ஓரளவு இணையாக தூய்மைத் தொழிலாளர்கள் ஊதியம் பெறுகிறார்கள். ஆனால், நம் நாட்டில் அண்மைக்காலங்களில் தூய்மைத் தொழிலாளர்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள உழைப்புச் சுரண்டல் மிகவும் மூர்க்கத்தனமானதாக இருக்கிறது.

மத்திய-மாநில நிதிநிலை அறிக்கைகளில் சுகாதார மேம்பாட்டுக்காக பெரும் தொகை ஒதுக்கப்படுகிறது. இதில் பெரும் பகுதி ஒப்பந்ததாரர்கள் மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது; இவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடிவதில்லை. இவர்கள் யாருடைய செல்வாக்கில் செயல்படுகிறார்கள் என்பதும் தெரியவில்லை. இது கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரச்னையாக உருவெடுத்து வருகிறது..

அண்மையில் இரண்டு பெண்களை நான் சந்தித்தேன். ஒருவர் தருமபுரி மாவட்டம் இண்டூருக்கு அருகில் உள்ள ஒüவை நகரைச் சேர்ந்த எஸ்.மாதம்மாள் என்பவர். 15 ஆண்டுகளாக கிராம பஞ்சாயத்தின் குடிநீர் தொட்டியைக் கழுவி சுத்தம் செய்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பணியைச் செய்து வருகிறார். இவர் இரவு பகலென்று பாராமலும் விடுமுறை நாள்களிலும் இந்தப் பணியைச் செய்து வருகிறார். இவரது ஊதியத்தைக் கேட்டபோது நான் அதிர்ச்சி அடைந்தேன்; தண்ணீர் திறப்பதற்கும் நிறுத்துவதற்கும் ரூ.250, நீர்த் தொட்டியை கழுவி சுத்தம் செய்வதற்கு ரூ.350 என மொத்தம் மாதம் ரூ.550தான் ஊதியமாக அளிக்கின்றனர்.

இதைப் போல மற்றொருவர் சேலம் மேட்டூர் காவேரிபுரத்தைச் சேர்ந்தவர் தூய்மைப் பணியாளர் கே. மகேஸ்வரி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக தூய்மைப் பணியைச் செய்து வருகிறார். அவர் இப்போது பெறும் மாத ஊதியம் ரூ.5,000. தூய்மைப் பணியாளரின் பணி என்னவென்றால், நாள்தோறும் மக்கும் குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் தனித் தனியாகப் பிரிக்க வேண்டும்; எங்காவது கழிவுநீர் தேங்கிவிட்டால் அதை அகற்ற வேண்டும்.

கரோனா பெருந்தொற்றின் காலத்தை மறந்தாலும், அந்தக் காலத்தில் தூய்மைத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பை யாரும் மறக்க முடியாது. யாருமே நடமாட அஞ்சிய இடங்களில் அவர்கள் துணிச்சலுடன் சென்றார்கள். கரோனா பெருந்தொற்று என்று அடையாளப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு இவர்கள்தான் பாதுகாவலர்கள். எல்லா இடங்களும் தூய்மையோடு இருக்க இவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தேவையான உணவையும் இவர்கள்தான் கொண்டுபோய் சேர்த்தனர்.

இன்றைய தூய்மைத் தொழிலாளர்களின் வாழ்க்கை பல்வேறு எதிர்மறையான பிரச்னைகளைச் சந்திக்கிறது. நவீன முன்னேற்றங்களை மறுக்க முடியாது. மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப கழிவு மேலாண்மை நிறுவனங்கள் தொடங்கப்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றுதான். புதிய இயந்திரங்கள், புதிய தொழில் நுட்பம், புதிய விளம்பரங்கள் என்று பெரும் தொகை செலவு செய்வதையும்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவை அனைத்துக்கும் அடிப்படையான தூய்மைத் தொழிலாளர்கள் குறித்துக் கவலைப்படாமல் இருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?. இவர்கள்காலம்காலமாக செய்துவந்த வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. பணிச் சுமையைக் குறைத்து இவர்களுக்கு ஆபத்தில் உதவி செய்ய வேண்டிய நவீனத்துவம் இவர்களின் வேலை பாதுகாப்பைப் பறிக்கிறது.

இவர்கள் அரசு நிர்வாகத்தின் நேரடி உரிமை பெற்றவர்கள். காலம்காலமாக பெற்று வந்த பணி உரிமைகள் அனைத்தையும் இன்று முற்றாக இழந்து வருகிறார்கள். இவர்களை ஒப்பந்ததாரர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களின் உழைப்பை ஒப்பந்ததாரர்கள் எப்படி வேண்டுமானாலும் சுரண்டிக் கொள்ளலாம். அவர்களின் பணி நிரந்தரத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம். தங்களுக்குப் பணி நிரந்தரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்திலேயே பலர் இறந்து போயிருக்கிறார்கள்.

வளர்ந்துவரும் சமுதாயத்தில் தூய்மைப் பணியில் ஈடுபடுவோர், வேறு நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர். ஆண்களில் பலர் இளம் வயதிலேயே மரணமடைந்து விடுகிறார்கள்; போதையும் தொழில்சார் நோய்களும் இறப்புக்கு காரணமாகி விடுகின்றன; பல பெண்கள் கணவனை இழந்தவர்களாகி விடுகிறார்கள். இதனால் குடும்பங்கள் சிதைவடைகின்றன.

தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு கெüரவமான வாழ்க்கை கிடைப்பதில்லை; இவர்களது பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும். அதற்குரிய பொறுப்புகளை அரசும் சமுதாயத்தில் நல்ல உள்ளம் கொண்டவர்களும் ஏற்க வேண்டும்.

தூய்மைத் தொழிலிலும் கிராமப்புற குடிநீர் பணியிலும் ஈடுபடுபவர்களின் குழந்தைகளின் கல்வியில் தமிழக அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும். பல நலத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும், அது உரிய மக்களுக்கு முறையாக போய்ச் சேரும் ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.

தமிழகத்தின் புவியியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப, தூய்மைப் பணியாளர்கள், கிராமப்புற குடிநீர் தொழிலாளர்களின் வாழ்க்கையை பல கோணங்களில் ஆராய்ந்து, அவற்றை முறைசெய்து, அத்தகையோரின் வாழ்க்கையை சமுதாய சராசரி சமநிலைக்குக் கொண்டுவர வேண்டும்; இதற்கு ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும். இதற்கு முன்னர் சில முயற்சிகள் எடுத்தபோதிலும், அது பயன்தரும் விதத்தில் அமையவில்லை. சமுதாயத்தின் கடைக்கோடியில் விழுந்து கிடக்கும் இந்த மக்களின் வாழ்வாதார பிரச்னையை உடனடி கடமையாகக் கருதி அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவது அவசியம்.

கட்டுரையாளர்:

மூத்த தலைவர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

SCROLL FOR NEXT