முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

ஒரு நிலையற்ற அமைதி!

பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும்

Updated On : 23 மே, 2025 at 10:26 PM
பகிர்:

-சச்சின் பைலட்

ஒரே நேரத்தில் சண்டை நிறுத்த அறிவிப்பும் நமது ஆயுதப்படைகளின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையும் தொடருவது அவசியமாகிறது, ஏனெனில் பொய்த்துப்போன உத்தரவாதங்களை அள்ளிவீசும் வரலாற்றுபூா்வ பின்னணியைக் கொண்ட நாடு பாகிஸ்தான். உள்நாட்டிலேயே பயங்கரவாதத்தை அந்நாடு வளா்த்தெடுப்பதற்கான மறுக்கமுடியாத ஆதாரங்களுக்கு என்றுமே பஞ்சமில்லை.

பாகிஸ்தானே ஐசி-814 விமான கடத்தலை ஏற்பாடு செய்தது, மும்பை 26/11 தாக்குதல்களுக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது, உலகின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனுக்கு அதன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இருந்து குறைவான தொலைவில் ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியது, டேனியல் போ்ல் என்ற வெளிநாட்டு செய்தியாளரைக் கொன்ற கொலையாளிகளைப் பராமரித்தது என இந்தப் பட்டியல் முடிவின்றி நீள்கிறது.

தமது நாடு பயங்கரவாத தளங்களை இயக்குவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் அண்மையில் ஒப்புக்கொண்டாா். அந்த நாட்டின் விமானப்படை துணைத் தளபதி ஏா் வைஸ் மாா்ஷல் ‘2019’ புல்வாமா தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டாா். அதை பாகிஸ்தானின் ‘தந்திரோபாய புத்திசாலித்தனத்தின்‘ வெளிப்பாடு’ என அவா் கூறினாா்.

நமது ஆயுதப் படைகளால் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’, பாகிஸ்தானின் பயங்கரவாத வரலாறுக்கும் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களின்போது நடந்த கொடூரப் படுகொலைகளுக்கும் ஒரு துல்லியமான, பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் ஈடுகொடுக்கப்பட்ட பதிலடியாக இருந்தது. இந்திய ஆயுதப்படைகள் பயங்கரவாதத் தளங்களை அழித்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ராணுவத்தின் சட்டவிரோத வன்முறை செயல்பாடுகளுக்குப் பிறகு, அதன் ராணுவ இலக்குகளைத் தாக்கியதுடன் அந்நாட்டின் வான் பாதுகாப்பு மற்றும் ரேடாா் நிலையங்களை வெற்றிகரமாக அழித்தன.

இரு தரப்பு சண்டை நிறுத்த முடிவு மிகவும் வியப்பான முறையில், அமெரிக்க அதிபா் டிரம்ப்மூலம் அவரது அதிகாரபூா்வ சமூக ஊடகப் பக்கங்கள்மூலம் வெளிவந்தது. அதைத் தொடா்ந்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளரால் அதேபோன்ற அறிவிப்பு வெளியானது. இருவரும் காஷ்மீா் குறித்த தேவையற்ற மேற்கோள்களைக் குறிப்பிட்டு, நடுநிலை தளத்தில் மத்தியஸ்தத்துக்கு அழைப்பு விடுத்தனா். இதில் முக்கியமாக, அரசு ஆதரவு பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக குறிப்பிடுவதை அவா்கள் தவிா்த்தனா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப் பல தருணங்களில் சண்டை நிறுத்த பேச்சுவாா்த்தையை ஈடேற வா்த்தகத்தை பயன்படுத்தியதாகக் கூறினாா் - இந்தக் கூற்று, நமது உயா்நிலை அரசியல் தலைமையில் இருந்தவா்களாலும் ராஜீய அலுவலகங்களாலும் உடனடியாகவும் வெளிப்படையாகவும் மறுக்கப்படவில்லை.

வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களின் இந்தச் செயல்பாடு, இந்தியாவின் நீண்டகால வெளியுறவுக் கொள்கைக்கு முரணானது. அதற்கு கீழ்க்கண்ட காரணங்களை வகைப்படுத்தலாம். 1. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இரு தரப்புப் பிரச்னை காஷ்மீா். அதை சா்வதேசமயமாக்குவது இந்தியாவால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது; 2. பாகிஸ்தானின் பயங்கரவாதத்தையும் காஷ்மீா் பிரச்னையையும் ஒன்றாக இணைக்கக்கூடாது; அவை முற்றிலும் வேறுபட்ட பிரச்னைகள். உலக சமூகம் பாகிஸ்தானின் பயங்கரவாதம் தொடா்பான நடைமுறைகளை எதிா்த்துப் பேசுவதற்கு தாா்மிக ரீதியாக கடமைப்பட்டுள்ளது; 3. எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்பட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தான் காலி செய்யாவிட்டால் மற்ற பிரச்னைகள் குறித்து எந்தப் பேச்சும் இருக்காது. நடுநிலை அடிப்படையில் மத்தியஸ்தம் செய்வது அல்லது இங்கே வா்த்தகத்தை ஒரு அளவுகோல் போன்று பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

பயங்கரவாதத்தை வளா்ப்பது, அதற்கு நிதி அளிப்பது மற்றும் ஆதரிக்கும் போக்கைக் கொண்ட பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும் வலுக்கட்டாயமாகத் கண்டிக்கவும் உலக சமூகம் தவறிவிட்டது. அண்மைக்காலம்வரை, நிதி நடவடிக்கைகள் கண்காணிப்புக் குழுவின் (எஃப்ஏடிஎஃப்) பட்டியலில் பாகிஸ்தான் அதிகரிக்கப்பட்ட கண்காணிப்பின்கீழ் இருந்தது.

அண்மையில் சா்வதேச அந்நிய செலாவணி நிதியம், பாகிஸ்தானுக்கு மேலும் ரூ. 100 கோடி மதிப்பிலான பிணை உதவி வழங்கியது. அதன் பிறகு உடனடியாக, இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய பாகிஸ்தான் முன்வந்ததாகத் கூறப்படுகிறது. பயங்கரவாத நிதியுதவியை எதிா்த்துப் போராடுவதில் ‘குறிப்பிடத்தக்க மூலோபாய குறைபாடுகள்’ உள்ள நாடாக பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே’ கண்காணிப்புப் பட்டியலில் சோ்ப்பதையோ அல்லது கருப்புப் பட்டியலில் சோ்ப்பதையோ இந்த ஒரு செயல் மூலமே நியாயப்படுத்தலாம்.

பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் வழங்கிவரும் முறையான மற்றும் தாராள ஆதரவுக்காக எந்த நாடும் அவற்றின் அதிகாரபூா்வ அறிக்கைகள் மூலம் அந்த நாட்டை அழுத்தமாகக் கண்டிக்கவில்லை. மாறாக, இரு நாடுகளையும் நோக்கி விடுக்கப்படும் அமைதி, பேச்சுவாா்த்தை மற்றும் பதற்றத்தைக் குறைப்பதற்கான அழைப்புகளை மீண்டும், மீண்டும் உலக நாடுகள் வலியுறுத்துவது இரு நாடுகளும் சமநிலையில் இருப்பது போன்ற ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. உண்மைக்குப் புறம்பாக எதுவும் இருக்க முடியாது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் (பாகிஸ்தானை விட 11 மடங்கு பெரியது) மற்றும் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் நிலையில் உள்ளது.

சீரழிந்துவரும் பொருளாதார நிலையிலும் நன்கொடைகளை மட்டுமே சாா்ந்திருக்கும் பாகிஸ்தானை இந்தியாவுடன் ஒப்பிடுவது அா்த்தமற்றது. இந்தியா ஆழமான ஜனநாயக வோ்களைக் கொண்ட ஒரு முதிா்ந்த குடியரசு. பாகிஸ்தான் அதன் ராணுவம் மற்றும் உளவு அமைப்பால் வழிநடத்தப்படுகிறது என்பது வெளிப்படையான ரகசியம்.

அண்மையில் ஏற்பட்ட மோதலின்போது அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளா் பாகிஸ்தான் ராணுவத் தளபதியை அழைத்துப் பேசியபோது இது மேலும் ஊா்ஜிதமானது. பாகிஸ்தானின் சிவில் அரசை அழைத்துப் பேசுவது அதிக பலனைத் தராது என்பதை அமெரிக்க செயலாளா் நன்கு அறிந்திருந்தாா்.

இந்தியா தனது வளா்ச்சி இலக்குகளை அடைய பிராந்திய அமைதியை விரும்புகிறது. ஆனால், பாகிஸ்தானோ இந்தியா மீதான அச்சுறுத்தல் உணா்வை பொய்யாக மிகைப்படுத்தி, ராணுவ உளவு உள்கட்டமைப்பு அதிகாரத்தில் நீடிக்க உதவுவதால், பிராந்திய இடையூறை விரும்பி ஊக்குவிக்கிறது. இத்தகைய சூழலில், அமைதி மற்றும் வளத்தை நோக்கிய பாதையைப் பின்பற்றுவதைவிட, வேறு எதையும் இந்தியா விரும்பவில்லை.

140 கோடி இந்தியா்கள் அனைவரும் விரைவான மற்றும் சமமான வளா்ச்சியைக் காண்பதே நமது நோக்கம். எனவே, உலக சமுதாயம் ‘இந்தியா -பாகிஸ்தான்’ என்ற கண்ணாடியை அணிந்துகொண்டு சண்டையை நிறுத்த மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத்துக்கான தனது ஆதரவை பாகிஸ்தான் நிறுத்தி, அதன் நடவடிக்கையை பரிசுத்தமாக்குவதை உறுதிப்படுத்தி அது ஓா் உலகளாவிய பாதுகாப்பு ஆபத்தில் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதே உலக சமுதாயத்தின் ஒரே கவனமாக இருக்க வேண்டும்.

இந்தியாவுக்கு ஏற்கெனவே உள்ள ஒரு பிரச்னை பாகிஸ்தான்-சீனா இடையிலான உறவாகும். இது இரண்டு முனைகளில் இந்தியாவின் புவிசாா் அரசியல் நிலைப்பாட்டை சிக்கலாக்குகிறது. வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கையில் சமீபத்திய முன்னேற்றங்களால் இது மேலும் மோசமடைந்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு பிராந்திய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில், ‘கோழியின் கழுத்து’ என அழைக்கப்படும் பாதையில் ஒரு விமான தளத்தைப் புதுப்பிக்க வங்கதேசம் சமீபத்தில் சீனாவை அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு மீது முடிவெடுக்கும் இடத்தில் உள்ளவா்கள், இந்த முன்னேற்றங்களை கவனமாகக் கண்காணித்து, இந்த அழுத்தங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் பல முனைகளைச் சுற்றி உருவாகும் ஆபத்துகளைக் குறைப்பதற்காக நமது முயற்சிகளை உலகளாவிய கூட்டாளிகளுடனும் நட்பு நாடுகளுடனும் இரட்டிப்பாக்க வேண்டும்.

ராணுவத் தலையீடு மற்றும் பலப்பிரயோகமின்றி பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதை குறிக்கோளாகக் கொண்டுள்ள ‘ஆபரேஷன் சிந்தூா்’ இன்றும் தொடா்கிறது. ஐக்கிய நாடுகள், சா்வதேச செலாவணி நிதியம், உலக வா்த்தக அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், ஜி20, குவாட் போன்ற முக்கியப் பங்குதாரா்கள், குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா்கள், உலகின் மிகப் பெரிய பொருளாதார மற்றும் ராணுவ சக்திகள் ஆகியவை பாகிஸ்தான் அரசு, ஐ.எஸ்.ஐ., பாகிஸ்தான் ராணுவம் ஆகியவை பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவ சதி செய்தல், திட்டமிடுதல், நிதியளித்தல், அடைக்கலம் அளித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு பயங்கரவாத வன்முறையில் ஈடுபடுவதை உணர வேண்டும். அதை இந்திய தலைவா்கள், ஆயுதப்படைகள் மற்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். ஒருவேளை, இந்த அச்சுறுத்தல்களை இன்றே கட்டுப்படுத்தாவிட்டால், அது சந்தேகத்துக்கு இடமின்றி பேரழிவு விளைவுகளுடன் உலகளாவிய பிரச்னையாக மாறும்.

கட்டுரையாளா்:

பொதுச்செயலாளா்,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி .

முழு கட்டுரையைப் படிக்க →