"பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க, அஷ்ட ஐஸ்வரியங்களோடும் நீடு வாழ்க ' என வாழ்த்துவது இந்திய மரபு. வளமான வாழ்க்கை உயர்ந்தது என்ற சிந்தனை இருப்பதாலேயே அப்படிப் பெரியோர்கள் ஆசி வழங்குகிறார்கள். செல்வச் செழிப்போடு வாழ்கிறவர்கள் சமுதாயத்தில் மதிப்புடன் நடத்தப்படுகிறார்கள்.
பட்டினத்தடிகள் வாழ்வில் ஒரு சம்பவம் உண்டு. பட்டினத்தடிகள் மன்னர்களுக்கே பொருளுதவி செய்யும் அளவிலான செல்வந்தர். செல்வத்தைச் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரது வளர்ப்புப் பிள்ளை, "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்று சொன்னதைக் கேட்ட விநாடியில் அனைத்துச் செல்வங்களையும் விடுத்து துறவியாகிறார். கோயில் மண்டபங்களில் அமைதியாய் வாழ்கிறார். பிச்சையெடுத்து உண்கிறார்.
இதனை அறிந்த மன்னர் பட்டினத்தடிகளைத் தேடி வருகிறார். கோயில் மண்டபத்தில் அமர்ந்திருந்த அடிகளை வணங்குகிறார். மன்னரைக் கண்டு புன்னகைக்கிறார் அடிகள். மன்னர் கூப்பிய கைகளோடு "ஐயா, தாங்கள் இப்படிச் செய்யலாமா?, இப்படி துறவுகொள்வதால் தங்களுக்கு என்ன கிடைத்தது?, எதை அடைந்தீர்கள்? என்று வினவுகிறார். மலர்ந்த முகத்துடன் அடிகள், "நான் இருக்க நீர் நிற்க' , என்று பதில் சொல்கிறார்.
அதாவது அரசனாக நாடாள்பவர் துறவிக்கு முன்னே பணிந்து நின்று வணங்குவது என்ற மரியாதை துறவின் தனிச்சிறப்பு. செல்வத்தோடு வாழ்வது சிறப்பு என்று ஆசி வழங்கும் தேசத்தில் எந்தச் செல்வமும் எனக்குத் தேவையில்லை என்று துறந்துவிட்ட ஒருவரை எல்லாவற்றினும் உயர்வான உன்னத நிலையில் வைக்கிறோம்.
"துறவு மேற்கொள்பவர் தனது உறவுகளை, உறவுக்கான பொறுப்புகளைத் துறந்து வெளியேறுகிறார். என்றாலும் அவரை தேசம் கொண்டாடுகிறது ஏன்? எதனால் செல்வந்தர்களை, அரசாள்பவர்களைவிடத் துறவி உயர்ந்தவர்? எதன் அடிப்படையில் துறவி இத்தகைய மரியாதையைப் பெறுகிறார்?
துறவி எதனிடத்திலும் பற்றுகொள்ளாமல் புலன்களை அடக்கி மனநிறைவு கொண்டவராக மனிதர்கள் மட்டுமல்லாது, அனைத்து ஜீவன்களையும் சமமாகப் பார்க்கிறார். எல்லா உயிர்களையும் ஒன்றெனக் காணும் பார்வை அவருக்கு வாய்க்கப் பெறுகிறது.
இன்றைய நவீன யுகத்தில் "சமூகநீதி ' என்ற சொல் பெரிதும் பேசப்படுகிறது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பதே சமூகநீதி. இந்தக் கோட்பாட்டைத் தனது மனநிலையாகக் கொண்டவரே துறவி. அதனால்தான் சமுதாயத்தில் துறவி பெருமதிப்பு பெறுகிறார். சமுதாயத்தின் உயர்ந்த கனவாக இருக்கும் லட்சியத்தை அடைந்து விட்டவர்கள் என்பதே துறவிகளின் சிறப்பு.
துறவிக்கு உற்றார்-உறவினர் இல்லை. எவர் மீதும் விருப்பு-வெறுப்பு இல்லை. யார் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வார்கள். எவரையும் அவமதிக்க மாட்டார்கள். மற்றவர்களிடம் விரோதம் கொள்ள மாட்டார்கள்; மாறாக அன்பைக் காட்டுவார்கள்.
ஜாதிப் பாகுபாடுகளும், உயர்ந்தவர்- தாழ்ந்தவர், ஏழை-பணக்காரர் என்ற வேறுபாடுகளும் இல்லாத தூய்மையான மனதோடு நாடி வருவோருக்கு வழிகாட்டுவார்கள். அனைவரையும் சமமாக நடத்துவதோடு தன்னை எவர் எப்படி நடத்தினாலும் சமநிலை மாறாமல் இருப்பார்கள்.
துறவு என்பதே கடுமையான பாதை. பழங்காலத்தில் துறவு மேற்கொண்டதைவிட அறிவியல், நுகர்வுக் கலாசார யுகத்தில் துறவு இன்னும் கடுமையானது. உடை முதல் உணவு வரை கட்டுப்பாடுகள், விரதங்கள் என்று வாழவேண்டும்.
துறவு மேற்கொள்ளும் போது திரிதண்டம் என்ற ஒன்றை தனது குருவிடம் இருந்து துறவி பெற்றுக்கொள்கிறார். மூன்று விஷயங்கள் அதில் அடங்கியிருக்கின்றன.
மெüனம்தான் வாக்கின் தண்டம்; பலனில் பற்று கொள்ளாமல் செயல்களில் ஈடுபடுவது உடலின் தண்டம்; பிராணாயாமம் செய்வது மனதின் தண்டம். இந்த மூன்று தண்டங்களைக் கைக்கொண்டு தனக்கென இருப்பதையெல்லாம் வேண்டாமென ஒதுக்கி தன்னையே இந்த உலகுக்காக ஒப்புக்கொடுக்க வேண்டும். ஆக, துறவு என்பது இருப்பதையெல்லாம் துறப்பது மட்டுமல்ல, அனைத்தையும் அரவணைத்து ஒன்றென ஏற்றுக்கொள்வது.
சமுதாயம் அடைய விரும்பும் சமத்துவத்துக்கான உதாரணமாகவும் வழிகாட்டியாகவும் துறவி இருப்பதால் சமூகநீதிப் பார்வையை துறவியிடமிருந்து கற்றுக்கொள்வது எளிது. இந்தப் பார்வை மட்டும் போதுமா? ; இந்த மண்ணில் அவர்களுக்கென கடமைகள் இல்லையா? ; பொறுப்புகள் இருக்கின்றனவா?
ஆம். பொறுப்புகளும் கடமையும் ஒரு சாமானியனைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கின்றன. துறவிக்கு வேதம் கூறியுள்ள அன்றாடக் கடமைகள் கிடையாது. ஆனால், சொல்- செயல்- சிந்தனை அனைத்தும் உலக நன்மைக்கானதாக மட்டுமே என உழைக்கிறார்கள்.
நமது தேசத்தின் துறவிகள் வரிசை எண்ணிலடங்காதது. நம் நினைவுக்கு வரும் சிலரை நினைத்துப் பார்த்தாலே இதன் உண்மை விளங்கும். ஆதிசங்கரர் தனது குழந்தைப் பருவத்திலேயே துறவு மேற்கொண்டவர். இந்த தேசம் முழுவதும் நடையாய் நடந்து மக்கள் மனங்களில் இருந்த குழப்பங்களை விலக்கி தெளிவு ஏற்படுத்தினார். பாரதத்தின் நான்கு திசைகளிலும் மடங்களை நிறுவி தேசிய சிந்தனையை ஆன்மிகத்தின் வாயிலாக ஏற்படுத்திய பெருமகனார் இவரே.
இவரது சித்தாந்தம் உலகம் முழுவதையும் ஒன்றாகப் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது. அனைத்து உயிர்களும் இறைவனின் வடிவம் என்று போதிக்கிறது. இந்த போதனைகளைப் புரிந்துகொண்டால் ஆதிசங்கரரின் தொண்டு சமூகநீதியை நிலைநாட்டுவதற்கானது என்று உணரலாம்.
ராமானுஜரை எடுத்துக்கொண்டால் அனைவரும் இறைவனை அடையத் தகுதி கொண்டவர்கள் என்று தான் அறிந்த மெய்ஞ்ஞானத்தை உலகுக்கே பொதுவில் வழங்க முன்வந்தவர். ஜாதியால், இனத்தால் மட்டுமல்ல, மொழியால்கூட வேற்றுமை வரக்கூடாதென்று கோயில் வழிபாட்டில் வடமொழி, தமிழ் இரண்டையும் சமமாகப் பார்க்க வழிசெய்தவர். ஆன்மிகம் மனங்களின் இணைப்புக்கான மார்க்கம் என்று வாழ்ந்துகாட்டியவர்.
சுவாமி விவேகானந்தர், அத்வைதக் கருத்தை ஏற்று உலகம் முழுவதும் சுற்றிவந்து பாரதத்தின் ஆன்மிகத்தை அனைவரும் பெற உழைத்தார். தனது உழைப்பின் பயனை ஏழ்மை நிலையில் இருந்த பாரதப் புதல்வர்கள் பயன்பெறத் தந்துவிட்டு காவி உடை மட்டுமே சொந்தமெனக் கொண்டிருந்தார். நூற்றாண்டு கடந்த பின்னும் அவரது உழைப்பு இன்னும் பல்லாயிரம் மக்களைச் சென்றுசேர்கிறது.
தேசத்தின் மேன்மை, மனிதகுலத்தின் உயர்வு பற்றி மட்டுமே சிந்தித்தவர். பாகுபாடு என்பதே இல்லாத சமுதாயம் ஆன்மிகத்தின் வழியாக மட்டுமே சாத்தியம் என்பதை உரக்கச் சொன்னவர். சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டவர். தேசபக்தியில் தன்னைக் கரைத்துக் கொண்டவர். அதனால் வீரத்துறவி என்று அழைக்கப்பட்டவர். சொல்லப்போனால், துறவியர் அனைவருமே வீரர்கள்தான். மனதை வென்று ஆசைகள் இல்லாமல் வாழ்வதே வீரம் மிக்க செயல்தானே.
சுவாமி சித்பவானந்தர், வசதியான குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் துறவியானார். சமுதாயத்தின் மீது அவர் கொண்டிருந்த அக்கறையே அவரைத் துறவு நோக்கி நகர்த்தியது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வியும் ஆன்மிகமும் சென்று சேர்ந்துவிட்டால் சமுதாயத்தில் சமநிலை ஏற்படும் என்ற உறுதியோடு செயல்பட்டவர். அதற்காக மக்களைச் சந்தித்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர். ஏழை, எளியோருக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவியவர். தன்னலம் கருதாத இந்த உழைப்பு துறவிக்கு மட்டுமே உரியது.
இதிகாசங்கள், வேதாந்த நூல்கள், பகவத்கீதை, திருவாசகம் ஆகியவற்றுக்கான உரைகள், சிறுவர் கதைகள், தத்துவ விளக்கம் என 130-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி ஆன்மிகத்தை எளிய மக்களும் புரிந்துகொள்வதற்கான பணி செய்தவர். இவரின் பாகுபாடற்ற அனைவருக்குமான பார்வை சமுதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.
காஞ்சியில், மகாசுவாமிகள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் தனது துறவினால் ஆன்ம பலம் கொண்டு தன்னை ஜகத்குருவாக உயர்த்திக்கொண்டதோடு தேசத்திற்கும் தொண்டாற்றினார்கள். மகாசுவாமிகளின் பணிகளை சமுதாயத்துக்கானது, ஆன்மிகத்துக்கானது, தர்மத்துக்கானது என வகைப்படுத்தலாம். கிராமப்புறங்களில் பள்ளிகள், மருத்துவமனைகள் தொடங்கி, எளிய மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே வளர்ச்சி என்பதை உணர்த்தினார்கள்.
ஆன்மிகப் பாதையில் துளி அளவு முன்னேறினாலும் உலகமே அமைதி காணும் என வழிகாட்டினார்கள். தன்னைப் பின்பற்றுவோரை கோயில்களில் பிடிஅரிசி தரச்சொல்லி இல்லாதவரின் பசியாற்றும் பொறுப்பு இருப்பவர்களுக்கு உண்டு என்று பயிற்றுவித்தார்கள். வேதம் வகுத்துத் தந்த இந்த தர்மத்தைக் காப்பாற்றினால் தர்மம் நம்மைக் காக்கும் என வேத பாடசாலைகளை ஏற்படுத்தினார்கள்.
நமது தேசத்தில் துறவிகள் பொறுப்புகளை செயல்பாடுகளைத் துறந்ததில்லை. மாறாக, அனைவரின் பொருட்டு மானுட சமுதாயத்தை தங்கள் நிழலில் இளைப்பாற்றியும் உயர்த்தியும் வந்திருக்கிறார்கள். அமைதியும், சகோதரத்துவமும் மலர உழைத்து வருகிறார்கள். சமுதாய ஒற்றுமை, சமூகநீதி என்பன இவர்களது வாழ்க்கைமுறையாக இருக்கின்றன. "சர்வே ஜனா சுகினோ பவந்து' என எல்லாருக்குமான சிந்தனை கொண்டவர்கள். எல்லாரும் இன்புற்று வாழ்வதற்காக துறவிகள் தங்கள் இன்பங்களை, சுகங்களைத் துறந்துவருகிறார்கள்.
இந்தத் துறவிகளே நம் தேசத்தின் பலம். அவர்களின் ஆன்மசக்தியும் வழிகாட்டுதலும் தொன்றுதொட்டு தொடர்ந்து வருவதாலேயே எத்தனை இடர்ப்பாடுகள் வரினும் நம் மக்கள் தர்மத்தின் பாதையில் அமைதியாய் வாழ்கிறார்கள்.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.