முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக "கேரள பாதுகாப்பு பிரிகேட்' என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் வழக்குரைஞர் ரசூல் ஜோய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், அதனால், அதைப் பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் மத்திய மற்றும் தமிழ்நாட்டு அரசுகளுக்கு முன்னறிவிப்பு கொடுத்துள்ளது.
1963-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 62 ஆண்டு காலத்துக்கும் மேலாக பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை முழுமையாக இடித்துவிட்டு புதிய அணை கட்டவேண்டும் என்று கேரள அரசும், கட்சிகளும் இடைவிடாது குரல் எழுப்பி வருகின்றன. 1963-ஆம் ஆண்டில் கேரளத்தின் புகார்களை விசாரிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர் பெரியாறு அணைக்கு நேரில் வந்து தமிழகம் மற்றும் கேரள தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து அணை பலமாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
1978-ஆம் ஆண்டில் மீண்டும் இதே புகாரை கேரளம் எழுப்பியபோது, மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும், உயர் அதிகாரிகளும் அணையைப் பார்வையிட்டு வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும், கேரள மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக ரூ.12.5 கோடியில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்தப் பணி முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கும் படியும் அறிவுரை கூறியது அந்தக் குழு. அதைத் தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தைக் குறைப்பதுடன் மராமத்துப் பணிகளைத் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப்பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது.
எனவே, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து, மீண்டும் ஒருமுறை அணையின் வலிமையைச் சோதிக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அந்தக் குழுவும் அணையை நேரடியாகப் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது.
மேலும், இந்த பிரச்னையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும், வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரியவருவதாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கேரள அரசைக் கண்டித்தது.
அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டதனால், 1980-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பெரியாற்று நீரைக் கொண்டு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெற்றது. அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டதன் விளைவாக 38,000 ஏக்கர் நிலம் தரிசு நிலமாக மாறியது.
இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86,000 ஏக்கராகும். ஆற்றுப் பாசன நீரை இழந்து ஆழ்துளைக் கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53,000 ஏக்கராகும்.
இதன் விளைவாக, தமிழக உழவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.55.80 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின் உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு ரூ. 75 கோடியாகும். ஆகமொத்தம் ஆண்டுக்கு ரூ.130.80 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 45 ஆண்டுகளாக மொத்த இழப்பு ரூ.5,886 கோடியாகும்.
09.12.2011 அன்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மீண்டும் அணை பலவீனமாக இருப்பதாக மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், "அணை உடைந்து அதன் விளைவாக ஏற்படும் உயிர்ச் சேதத்துக்கும், பொருள் சேதத்துக்கும் நாங்கள் பொறுப்பல்ல' என உச்சநீதிமன்றத்தையே மிரட்டும் அளவுக்குச் சென்றது. எனவே, உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
இந்தக் குழு பெரியாறு அணையை முழுமையாகப் பரிசோதனை செய்வதற்காக மத்திய நீர் ஆணையம், மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையம், இந்திய புவியியல் அளவுத் துறை, பாபா அணு ஆராய்ச்சி மையம், மத்திய மண் மற்றும் கட்டுமான ஆராய்ச்சி நிலையம் போன்ற அமைப்புகளின் சேவையைப் பயன்படுத்தியது. இந்த அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் பெரியாறு அணை நீருக்குள் மூழ்கி பல்வேறு விதமான சோதனைகளை மேற்கொண்டும், நவீன சாதனங்களைப் பயன்படுத்தியும் தாங்கள் அறிந்த உண்மைகளை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் குழுவினரிடம் அளித்தனர். இந்தக் குழுவின் ஆய்வுப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1.38 கோடி கொடுத்துள்ளது.
நீதிபதி ஆனந்த் குழு அணை வலிமையாக இருப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டு, அதை உச்சநீதிமன்றத்திடம் அளித்தது. அந்த அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மராமத்துப் பணியில் மீதமுள்ளவற்றை முடிக்கும் வரை 142 அடி உயரத்துக்கு நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்தது. ஆனால், பேபி அணையை வலுப்படுத்தும் பணியைச் செய்வதற்கு தமிழகத்தை அனுமதிக்கக் கேரள அரசு கடந்த 19 ஆண்டுகளாக மறுத்து வருகிறது.
அணை பலவீனமாக இருக்கிறது என்று கூறும் கேரள அரசியல்வாதிகள், அணையை வலுப்படுத்த அனுமதிக்க மறுக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் ஆணைக்குப் பிறகும் இன்றுவரை மீதமுள்ள மராமத்துப் பணிகளைச் செய்வதற்கு தமிழகத்தை அவர்கள் அனுமதிக்கவில்லை. உச்சநீதிமன்றமோ அல்லது இந்திய அரசோ கேரள அரசின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டிக்க முன்வரவில்லை.
நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20% மின்சாரம் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. கேரளத்தின் இறைச்சி தேவையில் 90% தமிழகத்திலிருந்து அனுப்பப்படுகிறது. நாள்தோறும் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு அனுமதி பெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511 மி.க.மீ. நீர் தேவை. இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப் பொருள்கள், கால்நடைகள் உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ அதிகமாகச் சுரண்டுகிறது.
முல்லைப் பெரியாற்றில் உற்பத்தியாகும் நீர்ப்பிடிப்பு பகுதியின் மொத்த பரப்பளவு 601 ச.கி.மீ. ஆகும்; இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114 ச.கி.மீ. ஆகும்; அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் ஐந்தில் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.
பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீரில் அளவு 4,867.9 மி.க.மீ. ஆகும். கேரளத்தின் விவசாயத்துக்கும், தொழிலுக்கும் குடிநீருக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2,254 மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2,313 மி.க.மீ. ஆகும்.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால், நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீ. ஆகும். அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34% நீரை மட்டுமே நமக்குத் தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் அதற்கும் பிடிவாதமாக மறுக்கிறது.
கேரளத்தில் பாய்ந்தோடும் பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடி ஆறு, பெரியாறு ஆகிய ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தமிழ்நாட்டின் எல்லைக்குள் இருக்கும் பரப்பளவு 2,588 ச.கி.மீ. ஆகும். தமிழகத்தில் இருந்து 2641 மி.க.மீ. நீர் பாய்ந்தோடி மேற்கண்ட ஆறுகளில் கலக்கிறது. நமது எல்லைக்குள் இருக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அணை கட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழ்நாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு நாம் செய்வதற்கு முனைந்தால் சட்டப்படி கேரளத்தால் தடுக்க முடியாது.
பெரியாறு அணை கட்டப்பட்டு 130 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தைக் கேரளம் முன்வைக்கிறது. புதிய அணை கட்டவேண்டும் எனக் கேரளம் வற்புறுத்துவதற்கு உண்மையான காரணம் பெரியாறு அணையின் உடன்பாடு 999 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். புதிய அணை கட்டப்பட்டால் இந்த உடன்பாடு செல்லாததாகிவிடும். புதிய அணையின் மூலம் புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாட்டுக்கு விதிக்கலாம் என அவர்கள் கருதுகிறார்கள். புதிய அணையிலிருந்து நமக்குப் போதுமான நீரைக் கேரளம் தருமா? என்பது ஐயத்துக்கு இடமானது.
இதற்கிடையில், கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பொறியாளர் ஒருவர் பெரியாறு அணை பிரச்சனைக்குத் தீர்வு காண ஒரு யோசனையை கூறியுள்ளார். அது வருமாறு:
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில்களை வெற்றிகரமாக அமைத்துத் தந்து "மெட்ரோ மனிதர்' என அனைவராலும் போற்றப்படும் பொறியியல் அறிஞரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான இ.ஸ்ரீதரன் என்பவர், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் அரிய அறிவுரை வழங்கியுள்ளார். 28.08.24 அன்று கோழிக்கோட்டில்
"பெரியாறு அணையின் அச்சமும் எதிர்காலமும்' என்னும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றில் அவர் பேசும்போது, பின்வரும் திட்டத்தை தெரிவித்தார்.
பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு நீரைக் கொண்டு செல்லும் அணையின் 100 அடி நீர்மட்டத்தில் புதிதாகக் குகை கால்வாய் ஒன்றை வெட்ட வேண்டும். அந்தக் கால்வாய் 4 கி.மீ. நீளமும் 6 மீ. அகலமும் கொண்டதாக அமைய வேண்டும். இவ்வாறு அமைத்தால் அணையில் சேரும் மிகை நீர் இந்தக் கால்வாய் வழியாகத் தமிழகம் சென்றுவிடும். எனவே, வெள்ளப் பெருக்கின் போதெல்லாம் அணைக்கு எத்தகைய ஆபத்தும் நேரிடாது என அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதற்கு மேலும் அணையின் வலிமை குறித்து ஐயம் ஏற்பட்டால், அணையை வலிமைப்படுத்தும் வகையில் கான்கிரீட் தூண்களும், சுவர்களும் எழுப்பப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த அறிவுரைக்காவது கேரள
அரசியல்வாதிகள் செவிசாய்ப்பார்களா?
கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.