பழங்குடியினர் (கோப்புப்படம்) 
நடுப்பக்கக் கட்டுரைகள்

விடுதலை வேள்விக்கு வித்திட்ட பழங்குடியினர்

இந்தியாவின் பழங்குடியின சமூகங்கள் தேசத்தின் சமூக மற்றும் கலாசார கட்டமைப்பை வடிவமைப்பதில் பெரும் பங்களிப்பு நல்கியிருக்கின்றன.

தினமணி செய்திச் சேவை

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் பழங்குடியின சமூகங்கள் தேசத்தின் சமூக மற்றும் கலாசார கட்டமைப்பை வடிவமைப்பதில் பெரும் பங்களிப்பு நல்கியிருக்கின்றன. வரலாறு முழுவதும் பழங்குடியினத் தலைவர்கள் தங்கள் நிலம், கலாசாரத்தைக் காப்பதற்காக காலனித்துவ ஆதிக்க அநீதிக்கு எதிராகப் புரட்சிகரமான இயக்கங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.

தங்களது பாரம்பரிய வாழ்க்கை முறையைச் சீர்குலைத்த ஆங்கிலேயரின் காலனித்துவ நிர்வாகத்திக்கும், அதற்கு உதவிய நில உடமையாளர்களுக்கும் எதிராக 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏராளமான பழங்குடியின சமூகங்கள் நாடு முழுவதும் கிளர்ந்து எழுந்தன. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பகவான் பிர்சா முண்டா வழிநடத்திய 'உலகுலன்' இயக்கம் முதல் அல்லூரி சீதாராமராஜு, டாண்டியா பில், வீர் குண்டதூர், ராணி கைடின்லியு, ராம்ஜி கோண்ட், ஷாகித் வீர் நாராயண்சிங், சித்து-கன்ஹூ உள்ளிட்டோரின் கடுமையான போராட்டங்கள் காலனித்துவ அதிகாரத்துக்கு உறுதியான பதிலளிக்கும் ஆற்றல் வாய்ந்த நடவடிக்கைகள்.

இதுபோன்ற போராட்டங்கள் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தது மட்டுமன்றி, தேச விடுதலைக்கான போராட்டத்தையும் வலுப்படுத்தின.

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15-ஆம் தேதியை பழங்குடியின கெளரவ தினமாகக் கொண்டாடவும், பழங்குடியின சமூகத் தலைவர்களையும், அவர்களது போராட்டங்களையும் நினைவுகூரும் தினமாகவும் கடந்த 2021-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பை வெளியிட்டார்.

பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வளமான பாரம்பரியம் மற்றும் போராட்டங்கள் குறித்த தகவல்களையும், பெருமையையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லும் நோக்கத்துடன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிர்சா முண்டாவின் 150-ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்டங்கள் இன்று நிறைவடைவதால் இந்தக் கொண்டாட்டங்கள் கூடுதல் சிறப்பைப் பெறுகின்றன.

அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த 12 மற்றும் 13-ஆவது மக்களவையில் உறுப்பினராக இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வாஜ்பாயின் பதவிக்காலத்தின்போது தான் பழங்குடியினர் விவகாரங்கள் என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பதவி ஏற்றுக்கொண்ட அதே நாளில், போற்றத்தக்க சுதந்திரப் போராட்ட வீரரான பகவான் பிர்சா முண்டாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது பிறந்த ஊரான உஹாட்டுக்கு நான் பயணம் செய்ததை இந்த நாளில் மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன். உஹாட்டுக்கு பயணம் செய்த முதல் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி அவர்கள் பெற்றதையும் இந்த நன்னாளில் நினைவு கூர்கிறேன். அது மரியாதை நிமித்தமான பயணம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையே பழங்குடி மக்களின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றிய தேசிய யாத்திரையாக அமைந்தது. குறிப்பாக, பாதிப்படையக்கூடிய பழங் குடியின மக்களைப் பாதுகாக்கும் பிரதமரின் ஜன்மன் திட்டத்தை, ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் பிரதமர் அறிவித்தபோது, அந்த நிகழ்வில் நானும் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

பழங்குடியின சமூகங்களில் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு அதிகாரமளித்து அவர்களைப் பாதுகாப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். பழங்குடியின சமூகங்களின் வளர்ச்சிக்காகத் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்த குடியரசுத் தலைவர்

திரௌபதி முர்மு அவர்கள் இந்தத் திட்டத்தின் கருத்தாக்கத்துக்குக் காரணம் என்று அப்போது பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

பழங்குடியின சமூக மக்களுக்கான கொள்கை வடிவமைப்பில் கடந்த 10 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பழங்குடியின மக்களின் நலனை மையமாகக் கொண்டு அவர்களுக்கு அதிகாரமளிப்பதாக இந்த மாற்றங்கள் இருக்கின்றன.

கடந்த 2023-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் பிரதமரின் ஜன்மன் இயக்கம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. குறிப்பாக, கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் 75 பழங்குடியினக் குழுக்களின் நலனை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம் ஒன்பது அமைச்சகங்களின் செயல்பாடுகளை ஒன்றிணைத்து அவர்களை வறுமைக்கோட்டுக்குக் கீழிருந்து விடுவித்து முன்னேற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

இதில் உறுதியான வீடு, சாலை இணைப்பு, இல்லங்களுக்குக் குடிநீர் இணைப்பு, மின்சார வசதி, சுகாதார வசதி, கல்வி போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் மற்றும் வளர்ச்சி மையங்கள் மூலம் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது உள்ளிட்ட 11 முக்கியப் பணிகள் மூலம் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படுகிறது.

2023-2024முதல் மூன்று நிதி ஆண்டுகளில் தனது இலக்கை அடைவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த இயக்கம் இரண்டாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. ரூ. 24,104 கோடி நிதி ஒதுக்கீட்டில், 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 207 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், சுமார் 48.18 லட்சம் பழங்குடியினரைச் சென்றடைகிறது.

மத்திய அரசின் மற்றொரு குறிப்பிடத்தக்க முயற்சி மண்ணின் மைந்தன் பழங்குடியினர் கிராம மேம்பாட்டு' பிரசாரமாகும். பகவான் பிர்சா முண்டாவின் பெயரில் அமைந்துள்ள மத்திய அரசின் இந்தத் திட்டம் வெற்றிகரமான திட்டமாகும். 17 மத்திய அமைச்சகங்களிலிருந்து 25 பணிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் சுமார் 63,000 பழங்குடியின கிராமங்களில் அடிப்படைத் தேவைகள் மற்றும் முழுமையான சமூகப் பொருளாதார மேம்பாட்டு வசதிகள் 100% வழங்கப்படுவதை உறுதி செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

பழங்குடியினரின் பொருள்களுக்கு புவிசார் அடையாளம் வழங்குவது, பழங்குடியின வர்த்தக மாநாடு மற்றும் அரசின் இதர முன்முயற்சிகள், பழங்குடியினச் சமூக மக்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கிய நேர்மறையான செயல்பாடுகள் நாட்டின் முதன்மை அங்கமாகப் பழங்குடியினச் சமூகங்கள் மாறுவதற்கு அரசின் இத்தகைய முயற்சிகள் வித்திட்டுள்ளன.

ஜார்க்கண்ட், தெலங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களின் ஆளுநராக நான் பொறுப்பு வகித்த போது பழங்குடியினச் சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டு அவர்களுக்கான உறைவிடப்பள்ளிகள் விரிவாக்கம் மற்றும் அதன் பலன்களை விரிவுபடுத்துவது தொடர்பாக மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சரிடம் கலந்தாலோசித்தேன்.

நாடு முழுவதும் 728 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளைத் தொடங்க அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இவற்றில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் 479 பள்ளிகள்மூலம் இந்தியாவில் ஏறத்தாழ 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

பழங்குடியினத் தலைவர்கள் குறித்த சம்பவங்களும், வரலாறுகளும் என்றென்றும் நிலைத்திருப்பதற்காக அரசு எடுத்துவரும் முயற்சிகள் மகிழ்ச்சியளிக்கின்றன. தலைசிறந்த 11 பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் அருங்காட்சியகங்களை நாடு முழுவதும் 10 மாநிலங்களில் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு அருங்காட்சியகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா நினைவுப் பூங்கா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் அருங் காட்சியகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் நானும் சென்றிருந்தேன். எண்ம (டிஜிட்டல்) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இந்த அருங்காட்சியகங்கள் துடிப்பான கல்வி மையங்களாகச் செயல்படுவதுடன், வரலாற்றின் பக்கங்களை நினைவுகூரும் வகையில் தேசிய ஒற்றுமை மற்றும் சுதந்திரத்துக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த பழங்குடியின நாயகர்களின் வாழ்க்கையை உயிர்ப்புடன் கண்முன்னே கொண்டு வருகின்றன.

சுதந்திரம் மற்றும் சுயமரியாதைக்கான போராட்டம் இந்தியாவின் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வனப் பகுதிகள் மற்றும் மலைப் பிரதேசங்களில் ஆழமாக வேரூன்றி இருந்தது என்பதை பழங்குடியினத் தலைவர்கள் மற்றும் அவர்களது போராட்டங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. அவர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் திடமான மனஉறுதி, நாடு முழுவதும் சமூக நீதி, சுற்றுச்சூழல் சமநிலை, மனித உரிமைகளுக்கான இயக்கங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.

மண்ணின் மைந்தன் பகவான் பிர்சா முண்டா 25 ஆண்டுகளே இந்த மண்ணில் வாழ்ந்தார் என்றாலும் அவர் விதைத்துள்ள தேச உணர்வு 2500 ஆண்டு

களுக்கும் மேலாக உத்வேகம் தருவதாக அமைந்துள்ளது. பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களோடு மண்ணின் மைந்தனான பிர்சா முண்டாவின் புகழ் காலத்தைக் கடந்து நிலைபெற்றிருக்கும்.

(இன்று பிர்சா முண்டா 150-ஆவது பிறந்த நாள் நிறைவு-

பழங்குடியினர் கெளரவ தினம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT