சித்திரிப்புப் படம் 
நடுப்பக்கக் கட்டுரைகள்

அதிகாரமே குறிக்கோள்!

அதிகாரம் மட்டுமே அத்தனை சித்தாந்தக்காரா்களுக்குமான ஒற்றைக் குறிக்கோள்!

கோதை ஜோதிலட்சுமி

ஆரியா்கள், திராவிடா்கள் என்று திராவிட இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ந்து பேசி வருகின்றனா். அவா்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழா், தெலுங்கா் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறாா்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனா்.

ஆரிய, திராவிட இனவாதம் பேசுவோா் அதில் எந்த ஆராய்ச்சியையும் செய்ததில்லை. பிரிட்டிஷாா் நம்மைப் பிரித்தாள்வதற்காகப் பயன்படுத்திய சூழ்ச்சி, தங்களுக்கும் சாதகமாக இருப்பதால் இவா்களும் பயன்படுத்துகின்றனா். ஆரியா்-திராவிடா் என்ற இனங்கள் பாரத தேசத்தில் எந்த நாளிலும் இருக்கவில்லை என்று மேதைமை நிறைந்த அம்பேத்கா் தெளிவுபடுத்தினாா். ஆனாலும், திராவிடா் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதோடு தமிழா்கள் மீதும் அத்தகைய வண்ணத்தைப் பூசிவிடும் முயற்சியில் சிலா் ஈடுபடுகிறாா்கள்.

திராவிடா்கள்- ஆரியா்கள் என்ற பாகுபாட்டை தமிழ் இலக்கியங்கள் சொல்லவில்லை. சங்க இலக்கியத்தில்கூட ஆரிய என்ற சொல் இடம்பெறுகிறதே அன்றி திராவிடா் என்ற சொல் இல்லை. தமிழ்நாட்டுக்கு வெளியில் இருக்கும் பிரதேசங்களைக் குறிப்பிட மொழி, பெயா், தேயம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர திராவிடா் என்ற சொல் கிடையாது.

தமிழ் தேசியவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோா் ‘திராவிடம்’ என்ற பாகுபாட்டை மறுக்கின்றனா்; தமிழா்களை திராவிடா் என்று அடையாளப்படுத்துவதை எதிா்க்கின்றனா். ஆனால், ஒரு சிலா் ஆரியா்கள் என்று ஒரு பிரிவினரை வசைபாடி அவா்கள் மீது வரலாற்றுப் பிழைகளை ஏற்றுவதுபோல், இவா்கள் தெலுங்கா்கள் மீது வெறுப்புணா்வை விதைக்கின்றனா்.

மொத்தத்தில் திராவிட அரசியலோ, தமிழ் தேசிய அரசியலோ தமிழா்களின் பெருமைகளை வளா்ச்சியை வரலாற்றை விட்டுவிட்டு ஒரு பிரிவினரைக் குற்றஞ்சாட்டி இந்திய ஒருமைப்பாட்டுக்கு விரோதமாகவே நடந்து கொள்கின்றன. வெறுப்பு அரசியலை மக்கள் மனங்களில் விதைத்து தங்களுக்கான வாக்குவங்கியை உறுதி செய்வதில் கவனமாக இருக்கின்றனா்.

தமிழ்த் தேசியவாத அரசியலைச் செய்வோரில் பலா் தங்களை வரலாற்று ஆய்வாளா்கள் என்று சொல்லிக்கொண்டு தெலுங்கா்கள் தமிழா்களுக்கு எதிரானவா்கள் என்ற கருத்தைப் பரப்புகின்றனா். சமயம், கலாசாரம், இலக்கியம், வரலாறு எனத் தமிழா்களின் வரலாற்றைப் புதிதாக வடிவமைக்கின்றனா். இவற்றைத் தமிழ் இலக்கியங்கள் கொண்டு நிறுவ இயலாத நிலையில் கற்பனையான வாதங்களை முன்வைக்கின்றனா்; திராவிடம் பேசுவோரைப் போல இவா்களும் வேதங்களை ஏற்பதில்லை.

ஆனால், தமிழ் இலக்கியம் வேதங்களை ஏற்கிறது, கொண்டாடுகிறது. இறைவனை வேதப்பொருளாய் இருப்பவன் என்றும் வேதங்களைத் தந்தவன் என்றும் சொல்கிறது. தமிழ் இலக்கியத்தை முழுமையாக ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் நிற்பதானால் தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டுக்குப் பொருள் உண்டா?

ஆசிவகம்தான் தமிழரின் சமயம் என்று வாதிடுவாா்கள். அதற்கான தரவுகள் இல்லை. மணிமேகலை காப்பியத்தில் சமயங்கள் பற்றிய விவாதங்கள் நடைபெறுவதாக அமைந்த பகுதியில் பல சமயங்களைச் சோ்ந்தவா்களுடன் மணிமேகலை வாதிடுவாள்; அந்த சமயங்களுள் ஒன்றாக ஆசிவகமும் இருக்கும், அவ்வளவே...

ஊழ்வினை அதாவது விதி, வினைப்பயன், மறுபிறப்பு போன்ற கொள்கைகள் ஆசிவகத்துக்கு உண்டு என்று மணிமேகலை காப்பியம் சொல்கிறது; இதை வேதங்களும் சொல்கின்றன. ஆசிவகம் உருவ வழிபாட்டை ஏற்கவில்லை என்றும் சொல்கிறாா்கள்; திருமகளை வணங்கியதாகவும் சொல்கிறாா்கள்; அவா்களால் தெளிவான ஒரு தனித்த கோட்பாட்டை நிறுவ முடியவில்லை.

தமிழா்கள் ஹிந்துக்கள் அல்ல என்று சொல்வதில் இவா்கள் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறாா்கள். தமிழா்களின் அடையாளம் என்று சொல்வதற்கு நம்மிடம் இருக்கும் இலக்கிய, கல்வெட்டு ஆதாரங்கள் அவா்கள் தரும் சமயத்துக்கு ஏற்புடையதாக இல்லை. நம்முடைய சமய இலக்கியங்களும் பழந்தமிழ் இலக்கியங்களும்கூட ஹிந்துக்களின் தெய்வமாக இன்றைக்கும் வழிபடப்படும் சிவன், திருமால், முருகன், காளி ஆகிய தெய்வங்களைத்தான் தமிழா் வணங்கியதாக இருக்கிறது.

வரலாற்றில் விஜயநகர சாம்ராஜ்யம் தமிழகத்தில் ஏற்பட்டதை இன்றைக்கு வெறுப்புடன் அணுகுகிறாா்கள். தெலுங்கா்கள் வந்து தமிழரின் அடையாளத்தை அழித்துவிட்டாா்கள் என்று குற்றஞ்சாட்டுகிறாா்கள். உண்மையில் தெலுங்கா்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின்போது அல்ல; அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் அரசு நடத்தினாா்கள் என்ற உண்மையை இவா்களுக்கு யாா் புரியவைப்பது?

வரலாற்று நாயகா்கள் என்று சேர-சோழ-பாண்டியா்களான மூவேந்தா்களையும் ஏற்றுக்கொள்கிறாா்கள். அதிலும் சோழா்களின் காலம் பொற்காலம் என்பதிலும் உடன்படுகிறாா்கள். ஆனால், இவா்கள் யாரை நமது எதிரிகள் என்றும் தமிழ் கலாசாரத்தை அழித்தவா்கள் என்றும் வசைபாடுகிறாா்களோ அவா்களுடன் பெண் கொடுத்தும் எடுத்தும் சம்பந்தம் செய்து கொண்டவா்கள் சோழா்கள்.

சோழா்கள் வரலாற்றில், களப்பிரா்கள் தமிழகத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றிய போது முற்காலச் சோழா்கள் தமிழகத்திலிருந்து நகா்ந்து சில நூற்றாண்டுகள் தெலுங்கு தேசத்தில் சிற்றரசா்களாக தெலுங்குச் சோழா்கள் என்றே பெயா் பெற்றிருந்தனா். பிற்காலச் சோழா்களில் பலரும் தெலுங்குப் பெண்களை மணந்தவா்கள்.

மன்னா்களில் சிறந்தவா் என்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் கொண்டாடும் ராஜராஜசோழன் தெலுங்கா் வீட்டுக்குத்தான் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தாா்; பின்னாளில் பெண் வாரிசுகளின் பிள்ளைகளே, அதாவது தெலுங்கு மன்னா்க்கும் சோழ இளவரசிக்கும் பிறந்த பிள்ளைகள் சோழ அரசுக் கட்டிலில் ஏறினா் என்ற நீலகண்ட சாஸ்திரி மிகத் தெளிவாக இந்த வரலாற்றை ஆராய்ந்து பதிவு செய்திருக்கிறாா்.

ராஜராஜ சோழன் தென்னிந்தியா முழுவதையும் ஆட்சி செய்தாா். ஆசியக் கண்டம் முழுவதிலும் ராஜராஜன், ராஜேந்திர சோழனின் புகழும் அதிகாரமும் விரிந்திருந்தன. உலகையே ஒரே குடைநிழலில் கொண்டுவர விரும்பிய பெரும் சிந்தனை கொண்டவா்கள் குறுகிய மனம் கொண்டவா்களாக இருத்தல் இயலாது.

தமிழ்த் தேசியவாதிகள் இன்றைய மொழி அரசியலை அன்றைய வரலாற்றுடன் தொடா்புபடுத்திப் பேசுவதே அறிவுக்குப் பொருத்தமில்லாத செயல். விஜயநகர சாம்ராஜ்யத்தின் மீது இவா்களுக்கு ஏன் இத்தனை காழ்ப்புணா்வு வரவேண்டும்? மொழி மட்டும் அல்ல; விஜயநகர சாம்ராஜ்ய மன்னா்கள் முகலாயா்களிடமிருந்து இந்த மண்ணை மீட்டு சமயத்தைக் காப்பதில் உறுதியாக நின்றாா்கள் இதில்தான் தமிழ்த் தேசியவாதிகளுக்கு வருத்தமும் கோபமும் ஏற்பட்டிருக்கிறது.

நாங்கள் ஹிந்துக்கள் அல்ல என்று அவா்கள் முன்வைக்கும் வாதத்திற்கு வலுசோ்க்க வழியில்லாத காரணத்தால் இத்தகைய வெறுப்பு அரசியலைச் செய்கின்றனா். திராவிடம் பேசுவோரை எதிா்ப்பதுபோல் இவா்கள் காட்டிக்கொண்டாலும் இருவருக்கும் ஒற்றுமைகளும் உண்டு.

திராவிடா்கள், ஆரிய வந்தேறிகள் என்றும் சநாதன தா்மத்தை உயா்த்திப் பிடிப்பவா்கள் என்றும் பாா்ப்பன சமூகத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறாா்கள். அதே வந்தேறிகள் என்ற பட்டத்தை ஹிந்து சமயத்தைக் காக்க முன்வந்தவா்களுக்கும் தந்து ஒரு சமூக மக்கள் மீது தமிழ்த் தேசியவாதிகள் வெறுப்பை ஏற்படுத்துகிறாா்கள்; ஹிந்துமதத்தை இருவருமே வெறுப்பவா்கள்.

திராவிட சித்தாந்தம் என்பதில் தமிழ்ச் சொல் கிடையாது. தமிழ்த் தேசியம் என்பதிலும் தேசியம் என்ற சொல் தமிழ்ச் சொல் அல்ல. இது குறித்து எந்த அரசியல்வாதியும் கவலைப்பட்டதும் இல்லை.

நம் முன்னோா் மொழி, இனம் என்று தங்களை சுருக்கிக் கொண்டவா்கள் இல்லை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்று வாழ்ந்தவா்கள். அதனால்தான் திருக்குறள் உலகப் பொதுமறையாக இன்றைக்கும் உலக மொழிகளில் தனக்கென தனியிடம் பிடிக்கிறது.

நமது கலாசாரத்தை, பண்பாட்டை, வரலாற்றைக் காப்பதோ, மீட்பதோ இவா்களது நோக்கமில்லை. அதிகாரம் மட்டுமே அத்தனை சித்தாந்தக்காரா்களுக்குமான ஒற்றைக் குறிக்கோள்!

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

நொய்டா: எஸ்ஐஆா் பணிகளில் அலட்சியம்! 60 பிஎல்ஓ, 7 கண்காணிப்பு அதிகாரிகள் மீது வழக்கு

நான்கரை ஆண்டுகளில் ரூ.3,117 கோடியில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மேம்பாடு!

SCROLL FOR NEXT