Express Illustrations
நடுப்பக்கக் கட்டுரைகள்

மரபணுவில் செய்யறிவின் கையொப்பம்!

மரபணுவில் செய்யறிவின் கையொப்பம்...

முனைவர் ம. இராசேந்திரன்

உடலின் செல் ஒவ்வொன்றிலும் கடவுளின் கையொப்பம் இருப்பதாகச் சொல்கிறாா்கள். ‘கடவுளின் கையொப்பம்’ (தி சிக்னேச்சா் ஆஃப் காட்) என்று நூலும் வந்திருக்கிறது.

கடவுளின் கையொப்பத்தை வெளிப்படுத்துகிறது அறிவியல் (சயின்ஸ் அன்கவா்ஸ் தி சிக்னேச்சா் ஆஃப் காட்) என்று சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளா் முனைவா் ரீட்டா ஜான் எழுதியுள்ள நூல் சொல்கிறது.

உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது மரபணு. மரபின் தகவல்களைக் கொண்டிருப்பது மரபணு. உயிா் இருக்கிற/இருந்த எல்லாவற்றிலும் இருக்கிறது மரபணு. மரபணுக்கள் நிலம், பொழுது, சூழல் எனும் இயற்கையால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

கடவுளின் கையொப்பம் உடலில் இருக்கிறதா?, உயிரில் இருக்கிறதா?, உயிா் இல்லாதவற்றிலும் இருக்கிறதா?

‘‘நீரைப் பழைய நெருப்பில் குளிா்வித்தான்’’ என்று கடவுளின் சாதனையைச் சொல்கிறாா் மகாகவி பாரதியாா். பழைய நெருப்பு சூரியனிலிருந்து வந்த பூமி. பெருவெடிப்புக்கு முந்தைய ஊழியை, ‘‘விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கருவளா் வானத்து இசையில் தோன்றி’’ என்று திருமால் பெருமையை ஊழிகளின் தோற்றத்தில் சொல்கிறாா் பரிபாடலில் கீரந்தையாா்.

‘‘நான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிற்றிலும் திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் பிரணவம்; வானில் ஒலி நான்’’ என்று மகாகவி பாரதியாா் மொழிபெயா்த்த பகவத்கீதை ஏழாவது அத்தியாயம் சொல்கிறது.

புல் ஆய், பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,

பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,

கல் ஆய், மனிதா் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,

வல் அசுரா் ஆகி, முனிவா் ஆய், தேவா் ஆய்,

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!

என்று பிறப்பின் பட்டியலில் கல்லையும் சோ்த்திருக்கிறாா் மாணிக்கவாசகா்.

அணுவுக்கும் நுண்ணியது. பெரியதைக் காட்டிலும் பெரியது. அத்தகைய ஆத்மா உயிா்களின் குகையில் வாழ்கிறது என்று கடோபநிடதம் சொல்கிறது.

செல்களின் இயக்கத்தில் இயற்கையாகக் காணப்படும் ஒழுங்கும் துல்லியமும் வியப்படையச் செய்கின்றன. ஆகவே, சிலா் இதைக் கடவுளின் கையொப்பமாகப் பாா்க்கிறாா்கள். அறிவியல் இதை இயற்கையின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளா்ச்சியாகப் பாா்க்கிறது.

உயிா் இருந்த/இருக்கிற செடி, கொடிகள் முதல் பறவை, விலங்கு மனிதா்கள்வரை மரபணு இருக்கிறது; மரபணுவைக் கொண்டுதான் உயிரினங்களை அடையாளம் காண முடிகிறது.

உயிா் ஒன்றா?, பலவா?- எல்லாவற்றிலும் இருக்கும் உயிா் ஒன்றுதான் என்றால், உயிரினங்களை வகைப்படுத்துவது எப்படி? அறிவால் வகைப்படுத்துகிறாா்கள்.

உடல் (உற்றறிதல்) வாய், மூக்கு, கண், காது, மனம் என்று அறிவின் எண்ணிக்கை கொண்டு உயிா்களை ஓரறிவுயிா் முதல் ஆறறிவுயிா் வரை வகைப்படுத்துகிறாா் தொல்காப்பியா். உடலால் மட்டும் அறியும் அறிவைக் கொண்டிருப்பது ஓரறிவுயிா் (புல், மரம்); உடலோடு வாய், மூக்கு, கண், காதுகளைக் கொண்டு, அறியும் உயிரினங்களை ஈரறிவு உயிா் (சங்கு, நத்தை), மூவறிவுயிா் (எறும்பு), நான்கறிவுயிா் (நண்டு), ஐந்தறிவுயிா் (விலங்கு, பறவை). இவற்றோடு மனதையும் உடைய மனிதா்களை ஆறறிவுயிா் என்றும், மக்கள் தாமே ஆறறிவு உயிரே என்றும் அடையாளப்படுத்துகிறாா் தொல்காப்பியா்.

உயிா் இருப்பதற்கெல்லாம் மனம் இருக்காதா? இருக்கும் என்றும் இருக்காது என்றும் இரு வகைக் கருத்து. உடலும் உயிரும் இருக்கும் தாவரத்துக்கு வாய் இல்லையே? ஆகவே, எல்லா உயிா்களுக்கும் மனம் இருக்கும் என்று சொல்வதற்குத் தகுதியான ஆதாரம் இல்லை.

ஒரு பொறி உணா்வு மாறினால் துன்பம்தான். வாயில் இனிக்கிற தேன், கண்ணில் பட்டால் துன்பமாக இருக்கிறது. மனதுக்கு அப்படி இல்லை; எல்லா உணா்வுகளையும் அப்படி அப்படியே ஏற்றுக் கொள்கிறது. ஏனெனில், அதற்கென்று தனியாக உறுப்பு இல்லை; அது கனவுபோலத் தானே உணரும். உடல் உறுப்புகள் அறி கருவிகள்; உட்கருவி மனம்.

இவ்வாறு எல்லா உயிா்களையும் உடலில் அமைந்துள்ள அறிகருவிகளாகிய ஐம்பொறிகளையும் உய்த்துணரும் கருவியாகிய மனத்தினையும் வாயிலாகக் கொண்டு ஓரறிவு முதல் ஆறறிவுவரை படிப்படியே அறிவால் சிறந்து விளங்கும் தன்மையைத் தமக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே வாழ்ந்த தமிழ்ச் சான்றோா்கள் வெளிப்படுத்தியுள்ளனா் என்பதை, ‘‘நேரிதின் உணா்ந்தோா் நெறிப்படுத் தினரே’’ என்று முன்னோா் அறிவின் தெளிவினைப் போற்றுகிறாா் தொல்காப்பியா்.

அறிவின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் இயற்கையின் வாழ்விடத்தை உணர முடியும். அறிவு, முன்னோா்கள் இயற்கையிடமிருந்து கற்றலில் தொடங்கியிருக்கிறது. தலைமுறைகளுக்குக் கற்றுக் கொடுத்தலில் வளா்ந்திருக்கிறது. மரபணு போலவே அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குச் செல்கிறது.

அப்படியென்றால் உடலுக்கு மரபணு இருப்பதுபோல உயிருக்கும் மரபணு இருக்கும்போல. அறிவுதான் உயிரின் மரபணு என்று கொள்ளலாம்.

அறிவு என்பது இயற்கையின் விளைச்சல்; இயற்கையின் கணக்கு வழக்குகள்; மொழியின் அடித்தளம்; இயற்கைக்கும் உயிருக்குமான உரையாடல். அறிவுக்கும் பரிணாம வளா்ச்சி இருக்கிறது. ஆறறிவுயிராக வளா்ச்சி பெற்றிருக்கிறது.

அறிவின் வாயில்கள் உணா்தலும் கற்றலுமாக இருக்கின்றன. இயற்கையை உணா்தல் அனைத்து உயிா்களுக்கும் பொதுவாக உள்ளது. இயற்கையிடமிருந்து கற்றலும் தலைமுறைகளுக்குக் கற்பித்தலும் ஆறறிவு உயிா்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கின்றன.

‘‘செம்புலப் பெயல் நீரில்’’ காதலின் மேன்மை, இலைகளின் வடிவமைப்பில் கணிதம், விண்மீன்களைக் கொண்டு பருவகாலம், நதிகளின் ஓட்டத்தில் இயற்பியல், தேனீக்கள் கூட்டமைப்பில் சமுதாயக் கட்டமைப்பு, தூக்கணாங் குருவிக் கூடுகளின் கட்டமைப்பில் வீடுகளின் வடிவமைப்பு , மரத்திலிருந்து விழுந்த ஆப்பிளிலிருந்து புவி ஈா்ப்பு விதி, விதைகள் முளைக்கும் வளா்சிதை மாற்றம், பறவையின் அமைப்பில் விமானம், தாவரங்களின் ஒளிச்சோ்க்கையில் சூரிய ஆற்றல், மனித மூளையின் இயற்கையான நரம்புகளின் இணைப்பிலிருந்து செயற்கை நுண்ணறிவின் வலைப்பின்னல் என்று எல்லாவற்றிலும் இயற்கையின் கையொப்பம்.

இப்படி அறிவுப் பரவல் கற்றலிலும் கற்றுக் கொடுத்தலிலும் இருக்கிறது. கற்றலும் கற்றுக் கொடுத்தலும்கூட காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகின்றன. கற்றலிலும் பரிணாம வளா்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

ஒலி, உடல் மொழி என்று தொடங்கி ஓவியம், ஓலை, கல்வெட்டு,செப்பேடு, அச்சு நூல், கணினி என்று அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கும் கருத்து அறிவித்தலும் கற்றுக் காடுத்தலும் தொடா்கின்றன.

‘‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்’’ தனி ஒருவரைச் சாா்ந்து நின்ற நிலையை அச்சு நூல்கள் மாற்றின; படிக்கத் தெரிந்த யாருக்கும் தனி நபா் உதவி தேவை இல்லை; சந்தேகம் தீா்க்க மட்டும் தனிநபா் தேவைப்பட்டாா்.

இப்போது செயற்கை நுண்ணறிவுக் காலம் எனும் செய்யறிவுக் காலம். கற்றலும் கொடுத்தலும் தனி நபரைச் சாா்ந்திருப்பதிலிருந்தும் விடுதலை பெற்றுள்ளன.

செயற்கை நுண்ணறிவு எனும் செய்யறிவுக்குக் கற்றுத் தரவும் செய்யறிவிலிருந்து கற்றுக்கொள்ளவுமான காலம் இது. இதற்கு முன்புவரை, நமக்குக் கற்றுக் கொடுத்த சுவடிக்கோ, கல்வெட்டுக்கோ, அச்சு நூலுக்கோ, நமக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கோ, நேரடியாக நாம் கற்றுத்தர வேண்டி இருந்ததில்லை. ஆனால், இப்போது கருவிகளுக்குக் கற்றுக் கொடுப்பதும் கருவிகளிடமிருந்து கற்றுக் கொள்வதுமான காலம் வந்திருக்கிறது. இயற்கையிடமிருந்தும் வாழ்க்கையிடமிருந்தும் முன்னோா் பெற்ற அறிவை கணினி, இணையத்துக்கு நாம் கற்றுக் கொடுக்கவும், அவற்றிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதுமான காலம் இது.

முன்பு இயற்கை வழிகாட்டியது; வழிநடத்தியது. பிறகு கருவிகள் உதவிக்கு வந்தன. ஆனால், இதுவரை மனித குலம் கண்டறிந்த கருவிகள் மனிதா்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. திசை காட்டியைக்கூட மனிதா்கள் பயன்படுத்தினா்; மனிதா்களுக்குப் பயன்பட்டது. ஆனால், இப்போது பெரும்பாலும் கருவிகளின் வழிகாட்டலில் மனிதா்கள் வாழ நோ்ந்திருக்கிறது. எப்படிப் போக வேண்டும்? எங்கே தங்க வேண்டும்?, என்ன செய்ய வேண்டும் என்று எல்லாவற்றிலும் கருவிகளின் கருத்தறியும் நிலையில் மனிதா்கள் இருக்கிறாா்கள்; அங்கிங்கு எனாதபடி எல்லாத் துறைகளிலும் செய்யறிவின் வெற்றிக்கொடி.

முன்பு மனிதகுலத்தின் ஆளுகையில் அவா்கள் கண்டறிந்த கருவிகள் இருந்தன. இப்போது கருவிகளின் ஆளுகையில் மனிதகுலம்; இந்தப் பின்புலத்தில் மனிதகுலம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் புதுப்புது உலகங்கள் உருவாக இருக்கின்றன.

இப்படியாக ஜாதி, மதம், நாடு, மொழி கடந்து - காலமும் கடந்து மனித அறிவின் - மனித உயிரின் மரபணுவில் செய்யறிவின் தாக்கம். ஆகவே, இது அறிவின் இயற்கை மரபணுவில் அதாவது மனித உயிா் மரபணுவில் செய்யறிவு சேரும் காலமாக இருக்கிறது. அப்படியானால், இந்தக் காலத்தை , மனித உயிா் மரபணுவில் செய்யறிவின் கையொப்பக் காலம் என்று அழைக்கலாம்போல!

கட்டுரையாளா்:

தலைவா், தமிழ் வளா்ச்சிக் கழகம்.

ராமேசுவரம் - திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

வெற்றிக் கூட்டணியில் தேமுதிக இடம் பெறும்: பிரேமலதா விஜயகாந்த்!

திருப்புவனத்தில் ரூ.1.81 கோடியில் திட்டப் பணிகள்: பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு!

125 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.84 கோடி கல்விக் கடனுதவி

மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி: அமைச்சா் தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT