செப்டம்பர் 11, 1893 அன்று சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் உரையாற்றினார். அவர் சர்வ சமயப் பேரவையில் பேசிய முதல் வாக்கியத்திற்கு அரங்கில் இருந்த 4,000 பேர் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள். இது ஓர் அரிய வரலாற்று உண்மை.
முன் பின் தெரியாத ஒருவருக்கு அதுவும் அப்போது அடிமை நாடாக இருந்த இந்தியாவிலிருந்து சென்ற ஒருவருக்கு இவ்வளவு மரியாதை கிடைத்தது இந்தியர்களாகிய நமக்குப் பெருமை.
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை என்பது உலக தரத்தில் வழங்கப்பட்ட சிறிய, சிறந்த சொற்பொழிவு ஆகும். அந்த உரையில் சுவாமிஜி 3.5 நிமிஷங்கள் மட்டுமே பேசினார். பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள் உள்ளது போல், சிகாகோ உரையில் 18 வாக்கியங்கள் உள்ளன. அந்த உரை 472 வார்த்தைகள் மட்டுமே கொண்டவை.
சுவாமிஜி உரையாற்ற 5 அல்லது 6 நிமிஷங்களே வழங்கப்பட்டிருந்தன. "சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ்' ஆஃப் அமெரிக்கா என்ற அவரது முதல் வாக்கியத்திற்குப் பார்வையாளர்கள் வழங்கிய கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.
அந்த உரையின் இன்னொரு சிறப்பம்சம்; சர்வ சமயப் பேரவையில் சமயத் தலைவர்கள் பலரும் தங்கள் மதத்துப் பெருமையை மட்டும் சொல்லிவிட்டுச் சென்றார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தரோ, எல்லா மதங்களின் சாரமாக உள்ள மனிதநேயத்தையும் இறையருளில் அனைவரும் வாழ்வது எவ்வாறு என்பது பற்றியும் உரையாற்றினார்.
அந்த மாநாட்டில் பேசிய பலரும் எங்கள் மதத்தை விட்டால் மக்களுக்கு வேறு கதி இல்லை என்ற வகையில் பேசினார்கள். விவேகானந்தரோ, அனைவரையும் அரவணைக்கும்படி உலக மக்கள் எவ்வாறு இருக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார்.
சர்வதேச அரங்கில் சர்வதேசத் தரத்தில் சர்வதேசங்களுக்கும் வேண்டிய அடிப்படை ஆன்மிகக் குணங்களை சுவாமிஜி வழங்கினார். அதிலிருந்து ஓர் உன்னதக் கருத்தைப் பாருங்கள்:
பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாகப் பற்றியுள்ளன; இவை இந்தப் பூமியை நிரப்பியுள்ளன; உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்று இருப்பதைவிடப் பன்மடங்கு உயர்நிலை எய்தியிருக்கும் என்று சுவாமி விவேகானந்தர் முழங்கினார். பிறகு, உலகின் ஒப்பற்ற சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விவேகானந்தர் விளக்கினார்:
...இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும், "உதவி செய், சண்டையிடாதே; ஒன்றுபடுத்து, அழிக்காதே; சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்' என்று எழுதப்படும் என்று சர்வ சமயப் பேரவையில் முழங்கினார்.
இவ்வாறு சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைகள், அனைத்து மதங்களின் உன்னதங்கள் அகிலத்துக்குப் பயன்பட வேண்டும் என்று தாயுள்ளத்துடன் அறைகூவல் விடுத்தார்.
ரோட்டரி கிளப்பிற்கு இப்படி ஓர் ஊற்றுக்கண்! 1893- ஆம் காலகட்டத்தில் சிகாகோவில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த பால் ஹாரிஸ் மக்களைக் கூர்ந்து கவனித்தார். பல வாய்ப்புகள் இருந்தும் மக்கள் நல்லபடியாக வாழ்வதை விட்டு, பூமிக்குப் பாரமாக வாழ்வதைக் கண்டு வருந்தினார். மக்கள் ஒருவருக்கொருவர் அன்பையும் அறிவையும் பகிர்ந்துகொள்ளாமல் சுயநலவாதிகளாகப் பிழைப்பதையும் கவனித்தார். மனித உறவுகள் மேம்பட வேண்டும், மக்கள் தலைமைப் பண்புடன் விளங்க வேண்டும் என்று ஹாரிஸ் தீவிரமாகச் சிந்தித்தார்.
தொண்டு, நட்பு, தலைமைப் பண்பு ஆகியவை அனைவரிடமும் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் 1905- இல் தொடங்கியதுதான் ரோட்டரி கிளப். அந்த அமைப்பு இன்று சர்வதேச ரோட்டரி சங்கங்களாக விரிந்து சுமார் 12.5 லட்சம் உறுப்பினர்கள் அதில் உள்ளனர். "சர்வீஸ் அபெüவ் த செல்ஃப்'' - "தன் நலனைவிடத் தொண்டே முக்கியம்' என்பது ரோட்டரி கிளப்பின் நோக்கம்.
அந்தக் காலகட்டத்தில் (1893-1896) சிகாகோவில் பிறந்து வளர்ந்த பால் ஹாரிஸ் விவேகானந்தரின் உரைகளை நேரடியாகக் கேட்டிருக்கலாம். பத்திரிகைகள் மூலமாக வாசித்திருக்கலாம். சிந்தனைத் தேடலுடன் அவற்றை அவர் நிச்சயமாக உள்வாங்கியிருக்க வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்தன. சுவாமிஜியின் ஆழமான ஆன்மிக உணர்வுகள் ஹாரிஸ் மீது செல்வாக்குச் செலுத்தி இருக்கலாம் என்பதை ஊகிக்க முடிகிறது. இது இந்திய பாரம்பரிய சிந்தனைக்கு உலக அளவில் கிடைத்த ஒரு மகத்தான வெற்றி என்று ஒவ்வோர் இந்தியரும் கருதலாம்.
லயன்ஸ் கிளப்பிற்கும்.....!இதே போன்று, சுவாமி விவேகானந்தர் உரையாற்றி 20 ஆண்டுகள் கழித்து மெல்வின் ஜோன்ஸ் என்ற லட்சிய மனிதரால் 1917-ஆம் ஆண்டில் சிகாகோவில் அரிமா சங்கம் (லயன்ஸ் கிளப்) தோன்றியது.
லயன்ஸ் கிளப்பின் உறுப்பினர்களுக்கு நான்கு குணங்கள் அவசியம் என்கிறார் மெல்வின் ஜோன்ஸ் என்ற சிகாகோவாசி. 1.மன உறுதி; 2.சக்தி; 3.செயல்திறன்; 4.நம்பகத்தன்மை.
சர்வதேச அரிமா சங்கம் இன்று உலகின் 203-க்கும் மேற்பட்ட நாடுகளில் 45,000 சங்கங்களோடு செயல்பட்டு வருகிறது. நலிந்தோருக்கான நலதிட்டங்களைச் செய்வது அரிமா சங்கத்தின் தலையாய நோக்கம். கட்சிகள், அரசியல், பிளவுபடுத்தும் ஜாதி, மதக் கொள்கைகள் இச்சங்கத்தில் விவாதிக்கப்பட மாட்டாது.
சுவாமி விவேகானந்தர் 1893 முதல் 1896 வரை நான்காண்டுகள் உலக சகோதரத்துவம், மனிதனின் தெய்விகத் தன்மை, மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வது, தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை, தலைமைப் பண்புகள் போன்றவற்றைப் பற்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல இடங்களில் சிந்தனைகளை விதைத்தார்.
ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் சுவாமிஜி சுற்றுப்பயணம் செய்து மேற்கூறிய பண்புகள் மற்றும் மனிதனின் தெய்விகத் தன்மைகளை மனிதகுலம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சுவாமி விவேகானந்தர் பறைசாற்றினார். சுவாமிஜி அன்று வெளிப்படுத்திய ஆன்மிக ஆற்றல் மக்கள் அனைவரும் சேர்ந்து ஆன்மிக ரீதியில் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு உயர்ந்திட வழிவகுத்தது.
வரலாற்றை உற்று நோக்கினால், விவேகானந்தர் அங்கு உரையாற்றியபோது பால் ஹாரிஸ் மற்றும் மெல்வின் ஜோன்ஸ் ஆகிய இரண்டு இளைஞர்களும் அவரது கருத்துகளை உள்வாங்கி இருப்பார்கள்; சுவாமிஜியின் சிந்தனைச் செல்வாக்கு அவர்களுக்குள் சென்றிருக்கும்.
அதனால் ரோட்டரி சங்கம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆகிய இரண்டு விருட்சங்களுக்குமான விதை விவேகானந்தரிடமிருந்து வந்தன என்றால் அது நம்பகமான ஒன்றாக இருக்கும்.
மனிதகுலத்துக்குச் சேவை செய்வதற்கு யாரெல்லாம் தயாராக இருந்தார்களோ, அவர்களுக்கெல்லாம் சுவாமிஜியின் சக்தி சென்றது; அவர்கள் மூலமாக உலகம் உன்னதத்தைக் கண்டு வருகிறது.
விவேகானந்தர் வித்திட்டார்; ரோட்டரி மற்றும் அரிமா சங்கங்கள் போன்றவை விருட்சமாயின என்பது ஆழ்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய ஒரு தலைப்பு.
சாரமாக, ரோட்டரி கிளப் "யுனைட்ஃபார் குட்'- "நல்லவற்றுக்காக இணையுங்கள்' என்கிறது. சுவாமி விவேகானந்தரோ, 'யுனைட் ஃபார் காட்'- "கடவுளுக்காகக் கூடி அனைவரும் தெய்விகமானவர்கள் என்பதை உணர்வோம்' என்கிறார்.
ரோட்டரி மற்றும் லயன்ஸ் கிளப்புகள், உலக சமூக ஒற்றுமையை முன்னெடுத்தன. சுவாமி விவேகானந்தரோ உலக ஆன்மிக ஒற்றுமையை, ஆன்மநேயத்தை வலியுறுத்தினார்.
மதங்களின் பெயரால் உலக அளவில் வியாபாரம், குறுகிய மதவெறி இன்று உலகத்தில் ஒரு தொழுநோயாக நம் பூமியை வாட்டி வதைக்கிறது. அந்த மதவெறியைப் பயன்படுத்திக் கொண்டு ஆயுத விற்பனை அட்டகாசமாக பணக்கார ஆதிக்க நாடுகளில் நடைபெறுவதையும் நாம் பார்க்கிறோம். சிகாகோ உரையின் சாரமான செய்தியாக சுவாமி விவேகானந்தர் கூறியது:
".....பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன; ........அவற்றுக்கு அழிவுகாலம் வந்துவிட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் தொடக்கத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் (ஆயுதங்களாலும்) பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவுமணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்....'
மேற்கூறிய கருத்தை 132 ஆண்டுகளுக்கு முன்பு, சுவாமிஜி செப்டம்பர் 11-ஆம் தேதி சிகாகோவில் கூறி அருளினார். அவர் அன்று உரைத்தது இன்றும் பொருத்தமாக உள்ளது.
2001-இல் நியூயார்க்கில் செப்டம்பர் 11 -இல் இரட்டை கோபுரத் தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைப் பயங்கரவாதிகள் அநியாயமாகக் கொன்று குவித்தது இப்போது நம் நினைவிற்கு வரும். அது போன்ற கொடூரங்கள் இனியும் நிகழாதிருக்க நம் கண்முன் இனி இரண்டு செப்டம்பர் தேதிகள் தெரியட்டும். முதல் செப்டம்பர் 11, 1893-இல் நிகழ்ந்தது விவேகானந்தருடையது; அடுத்து 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11(இரட்டை கோபுர தாக்குதல்) என்பது விவேகம் இல்லாதவர்களுடையது. முன்னது உலகை உயர்த்துவது; பின்னது உலகைச் சிதைப்பது.
கட்டுரையாளர்:
தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம்,
தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.